Jul 24, 2016

கபாலி- ரஜினி வெறும் அனுபவம் மட்டும் தானா?

முதலில் என் தலைவனுக்கு ஒரு சின்ன லவ் லெட்டர்.

அன்புள்ள ரஜினிகாந்த் தலைவா,

கபாலி எப்படி உன் வாழ்க்கைல பெரிய படமோ, அதே மாதிரி தான் எனக்கும். படத்துக்கு பெயர் கபாலி-னு செய்தி வந்த நாளேந்து, பொன்ன சந்தோஷம்! அதுக்கு அப்பரம் வந்த பரபரப்பான விஷயங்கள், “நெருப்பு டா” பாட்டு, கபாலி டீசர், கபாலி விமானம், கபாலி ரிலிஸ் நாள், முதல் நாளே டிக்கெட் கிடைக்குமா கிடைக்காதா-னு மன பதபதப்பு, டிக்கெட் ஆன்லைனில் புக் செய்ய முடியாம இண்டர்நெட் தவித்த போது, கூடவே சேந்து தவித்த நான், புக் செய்றதுக்கு 45 நிமிஷம் போராடிய போராட்டம், போராட்டத்திற்கு அப்பரம் கடைசியாக புக் செஞ்ச போது ஒரு சந்தோஷம் வந்துச்சு பாரு...., அதுக்கு அப்பரம் படம் பார்க்க போன போது திரையரங்கு வாசலில் டிக்கெட்-ட எடுத்து கொடுத்த போது கை கொஞ்சம் நடுங்கிச்சு. ஏன்-னு தெரில. ஆனா அந்த உணர்வு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. இப்படி கபாலி எனக்கு தந்த திருவிழா-மகிழ்ச்சி ஏராளம்.





நீ கபாலியாய் திரையில வந்தபோது, மனம்விட்டு, கத்தி அலறி ஆரவாரத்தின் உச்சிக்கு சென்று, மனசுல உள்ள வேலை கவலை, வீட்டு பிரச்சனை, மன இறுக்கும், மன அழுத்தும்- எல்லாரையும் மறந்து, எல்லாத்தையும் மறந்து, உலகத்தையே துறுந்து, உன்னைய அனாந்து பாத்தேன்!! உன்னைய அணுஅணுவாய் ரசித்தேன்!

கபாலி படம் வெளிவரத்துக்கு முன்னாடி சிலர், “என்ன பெரிய கபாலி கபாலி”னு சொல்லிகிட்டு திரியுறீங்க-னு என்னை போன்ற பலரை திட்டினார்கள். இப்படி திட்டிய வாய் தான் சில மாசம் கழிச்சு இதே கபாலிய டிவில போடும்போது, “
rajini is the real style king la!” -னு ஃபேஸ்புக்-ல ஸ்டேட்டஸ் போட்டு உச்சு கொட்டுவாங்க!

“ரஜினி ஒரு நடிகன் அல்ல.
அவன் ஒரு அனுபவம்.”
– டிவிட்டரில் படித்தது


இப்படிக்கு,
கபாலி டிக்கெட் வாங்கிய பிறகு
ஏழையான ரசிகை
காயத்ரி
****************************************************************
ஜினி வெறும் அனுபவம் மட்டும் தானா?
ரஜினி வெறும் அனுபவமாக மட்டும் இருப்பது தான் மிக பெரிய வருத்தம். ரஜினிக்குரிய “மாஸ்” இருக்கு, அவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார். பஞ் வசனம் இல்லை. மாற்றத்தை நோக்கி செல்கிறார். மகிழ்ச்சி. இளம் பெண்களோடு டூயட் பாடவில்லை. பிடிச்சுருக்கு, இந்த மாற்றம். இருந்தும், ரஜினி என்னும் நடிகனை காணவில்லை. இது ரஜினியின் தவறில்லை.

ரஜினியை சகாப்தத்தில் மகுடம் சூடி உட்கார வைத்தது நாம். சூப்பர் ஸ்டாராக அவரை வளர்த்துவிட்ட நாம், ஏதோ ஒரு தருணத்தில் நடிகன் ரஜினியை புரக்கணித்து விட்டோம். “சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு இன்று சிறகு முளைத்தது” பாடலில், தன் மகளை நினைத்து ஏங்கும் ரஜினியின் நடிப்பை கண்டு, அறியாத புரியாத வயதில் கண் கலங்கிய நான், இன்று அப்படி ஒரு மாபெரும் நடிகனை புதைத்துவிட்டோமோ என்று கலங்குகிறேன்.

கபாலி படத்தில் தன் மனைவியை பல வருடம் கழித்து பார்க்கிற தருணத்தில் காட்டிய நடிப்புக்கு இப்படம் சிறிது அளவும் தீணி போடவில்லை.



ரஞ்சித் கையில் கிடைத்த ரஜினி போல

பழமொழியையே மாற்றி எழுத வைத்த கபாலி படத்தின் தளம் தமிழ் சினிமாவுக்கு புதுசு. அப்படி யோசித்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த ரஞ்சித்-க்கு மிக பெரிய தைரியம் இருந்திருக்க வேண்டும். வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி.

மலேசியா தமிழர்களின் வாழ்வியலையை புட்டு புட்டு வைத்த படம் என்கிறார்கள். ஆமாம், உண்மை தான். நிறைய விஷயங்களை தொட்டு இருக்கிறார், ஆனால் அலசி ஆராய்ந்திருந்தால், தமிழனுக்கு, தமிழ் பட ரசிகனுக்கும், இனி படம் எடுக்க போகும் இயக்குனருக்கு, “அறை”யாக இருந்திருக்கும். பார்டா, படம்னா இப்படி இருக்கும்னு அறைந்திருக்க வேண்டிய படம்.


எனக்கு தெரிந்து முதன் முதலாக தமிழ் படத்தில் “லா” என்று பேச்சு வழக்கு சொல்லை கிண்டல் செய்யாமல் இருந்த முதல் படம் கபாலி. காடி, சரக்கு, பொன்ன, ஜோக்கா- என்று மலேசியா தமிழ் சொற்களை சேர்த்தால் தான் எதார்த்தம் இருக்கும் என்று தெரிந்த இயக்குனர், காட்சியமைப்பில் சுவார்ஸ்சியத்தை பற்றி கவலை கொள்ளாமல் போனது ஏனோ?

ரஜினி என்ற திடமான நூல், மலேசியா தமிழர்கள் பிரச்சனை என்ற முத்துக்கள்—இரண்டையும் கோர்க்க முடியாமல், உதிர்ந்து விழுந்ததை தான் 2.5 மணி நேரம் நான் பார்த்தேன்.

திரைக்கதையும் காட்சியமைப்பும்

இன்று காலையில் படித்த விஷயம்- “ரஜினி சிறையிலிருந்து வெளியே வரும்போது, கம்பிகளை பிடித்து இரு முறை ஏறுவார்”. இது குண்டர்கும்பலின் வழக்கமாம். தண்டனை முடிந்து வரும்போது, சம்பிரதாயமாக ஏதோனும் ஒரு விஷயம் செய்ய வேண்டுமாம். எவ்வளவு பெரிய சுவார்ஸ்சியமான செய்தி. ஆனால், காட்சியாக பார்க்கும்போது, இந்த பின்புலம் தெரியவில்லையே! தெரிந்திருந்தால், காட்சியாய், திரைக்கதைக்கு எவ்வளவு வலு சேர்த்து இருக்கும்.

இப்படி, நிறைய செய்திகள், வழக்கங்கள், பழக்கங்கள்- தனியாக நோட்ஸ் வைத்து படித்தா படத்தை ரசிக்க முடியும்?


கதை படத்துக்குள் இருக்க வேண்டும், படத்துக்கு வெளியே அல்ல.

சமீபத்தில் அமெரிக்காவில் 40 வருடங்கள் தண்டனை அனுபவித்த ஒருவர் வெளியே வந்த போது, கைபேசியை விசித்தரமாய் பார்த்து இருக்கிறார். 40 வருடங்களில் உலகமே எப்படி வளர்ந்து இருக்கு என்ற ஆச்சிரியம். 25 வருடங்கள் கழித்து வெளியே வரும் கபாலி முகத்தில், இந்த “உலகத்தை” புதிதாய் பார்க்கிறோம் என்ற உணர்வு ஏன் வரவில்லை?

குண்டர்கும்பல் பார்ட்டிக்கு தான் அதிக நேரத்தை செலவழித்தாரே ஒழிய கபாலி, மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு காட்டினார்? மத்த ரவுடிகளை அடிக்கிறார். அதை தவிர? சுட்டு தள்ளிய வித்ததை பார்த்தால், அவரே பாதி தமிழர்களை அழித்து இருப்பார் என நினைக்கிறேன்.

திரைக்கதை ஓட்டம் சோர்வு அடைந்ததற்கு இன்னொரு காரணம்- ரஜினியை எல்லா காட்சிகளில் காட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் சிக்கியது தான். மக்களின் பிரச்சனையை “voice over”ல் சொல்லாமல், காட்சியாக ஏன் காட்டவில்லை. சினிமா என்பது visual medium. அதை சுக்கு நூறாக்கியது ஏன்?

இந்திய சட்டம் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. ஆனால், “விசாரணை” படம் பார்க்கும்போது, அப்படி ஒரு தாக்கம். காட்சிக்கு காட்சி, இது தான் பிரச்சனை என்று தெள்ள தெளிவாக காட்டினார்கள். அந்த உணர்வு, கபாலி படம் தந்து இருக்க வேண்டியது. முடியாமல் போனது, ச்சே.... இது கோபமோ, ஆதங்கமோ இல்லை. கஷ்டமா இருக்கு. நல்ல கதை களத்தில், கபடி ஆடியிருக்க வேண்டிய கபாலி, குமுதவள்ளியை தேடியே காலத்தை கடந்துவிட்டது. ஒரு கட்டத்தில், கௌதம் மேனன் ஹீரோ போல் கித்தாரை தூக்கிட்டு, குமுதவள்ளியை தேட ஃரான்ஸ் போய்விடுவாரோ என அச்சம் வந்தது.

உண்மையான மலேசியா தமிழனை பற்றி படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தால், இந்த பட்த்தை பாருங்க!


வில்லன்களும் மற்ற நடிகர்களும்



டோங் லீ.... அதாங்க ஏழாம் அறிவு படத்தின் வில்லன். டோங் லீ பெரியப்பா மாதிரி டோனி லீ. இவர பார்த்த பயமா? எனக்கா? டேய்! நாங்களெல்லாம் மார்க் ஆண்டனியையும் நீலம்பரியையும் பார்த்த வளர்ந்துவங்க டா, டோனியல்லாம் ஒரு வில்லனா?? கிட்டதட்ட நூற்றி ஐம்பது வில்லன் கதாபாத்திரங்கள். யார் எந்த கும்பலே தெரியல? எங்க போறாங்க? எங்க வராங்க? எதுக்கு? ஏன்?- இந்த சின்ன அறிவுக்கு புரியல.

எனக்கு ராதிகா அப்தே நடிப்பு பிடிச்சிருந்துச்சு. அவர் வரும் காட்சிகளில் ஒளிப்பதிவும் பிரமாதம். மீனா, டைகர் நடிப்பு எல்லாம் அப்படியே மலேசியா இளையர்களின் பிரதிபலிப்பு! மகிழ்ச்சி.

ஆனால், இன்னொரு விஷயம் புரில?

பல வருடங்கள் கழித்து பார்க்கு தாய்க்கும் மகளுக்கும் ஏன் எந்த ஒரு பாச உணர்வும் இல்ல? அவர்கள் தனியே உட்கார்ந்து பேசுவது போல ஒரு காட்சிகூட இல்ல! அவர்கள் கோணத்தில் கதை நகர்த்தி இருந்திருந்தால், புதுசா இருந்திருக்கு வாய்ப்பு இருக்கு.

பிண்ணனி இசை
படத்தின் வில்லனே பிண்ணனி இசை தான். காட்சிகள் தொய்வுக்கு இதுவும் ஒரு காரணம். நெருப்பு டா பாடல் இசையை தவிர்த்து வேறு புதுசா ஒன்னுமில்லை. மலேசியாவின் ரொம்ப பிரபலமான இசைக்கருவி- உருமி மேளம். அதை கோயில் காட்சியில் மட்டும் பயன்படுத்தியத்துக்கு பதிலாய், மற்ற காட்சிகளிலும் பயன்படுத்த தவறியது மிக பெரிய குற்றம்.




உருமி மேளம் டா! கொஞ்சம் நேரம் கண் மூடி, சில காட்சிகளை ஓட்டி பாருங்க, உருமி மேளம் இசையோடு!! மரண மாஸ்! ரஜினிக்கு மட்டும் இல்ல! எடுத்து கொண்டு கதை களத்துக்கே சீமாசனமாய் அமைந்திருக்கும்.

கபாலிக்கு பிறகு என்ன?

படம் லாபத்தை தந்துவிட்டதாம். இருக்கட்டும்.
அடுத்து இயந்திரன் 2.0. அதுவும் லாபத்தை ஈட்டும். ரஜினிக்கு வயதாகும். இத சொல்ல எனக்கு வலிக்குது. ஆனாலும், ரஜினி ஓய்வு பெறும் காலம் வெகு தூரம் இல்ல. 



ஒரே ஒரு படம். 

“பா” ஹிந்தி படத்தில் நடித்த அமிதாப் கதாபாத்திரம் போல் ஒரே ஒரு படம்.

“பறவையோட இயல்பே பறக்குறதுதான். பறக்கவிட்டுப்பார், வாழ்வா சாவான்னு அது முடிவு பண்ணட்டும்.”- கபாலி

தல, நீ எப்போ பறக்க போற?