Apr 19, 2007

கூடல் நகர்-விமர்சனம்

என்னடா இந்த பொண்ணு விமர்சனம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுடுச்சுனு நினைக்க வேண்டாம். வேற எப்படி என்னோட மன கஷ்டத்த கொட்டுறது....:) நானும் இது ஒரு நல்ல படமுனு நம்பி போனேன். இப்படி நம்பவச்சு.... அத என் வாயால எப்படி சொல்றது. சரி சரி... என்ன படம்னு சிக்கிரம் சொல்லு அப்படினு நீங்க சொல்லறது என் காதுல கேட்குது!! அந்த படம்- சீனு ராமசாமி இயக்கிய 'கூடல் நகர்'. படத்தோட பேரு எல்லாம் நல்லாதான் இருக்கு. படம்தான்...ம்ம்ம்.... சொல்றேன்... சொல்றேன்...

பரத் இரட்டை வேடம். காதல் சந்தியா மற்றும் பாவனா. இவர்கள் நடித்த படம்தான் இது. மதுரையை தளமாக கொண்ட படம். அட இயக்குனர்களே, இனி எத்தனை தடவதான் இதே ஊருல படம் எடுப்பீங்க? சரி எடுக்குறீங்களே,,, அத சரியா எடுக்கவேணாம்? கதை.. ஒன்றுமே இல்லை. அண்ணனை கொலை செய்துவிடுவார் வில்லன் (ஏன்னா... வில்லனோட பொண்ணு பாவனா.. பாவனாவை காதல் செய்வார் அண்ணன் பரத்) அண்ணனை கொலை செய்தவரை கொலை பண்ணுவார் தம்பி பரத். தம்பி பரத் சந்தியாவை காதல் செய்யும்! இந்த கதை தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே எடுத்துக்கிட்டு வராங்க. அரைத்த மாவை அரைத்து அரைத்து புளித்து போச்சு!

நடிப்பு என்ற வகையில் பார்த்தால், பரத் நல்லாவே செய்யுறாரு. (தம்பி, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குதய்யா!) காதல் சந்தியா, முடிந்த அளவு நல்லா செய்ய முயன்று இருக்கிறார். சொந்த குரலில் பேசி இருக்கிறார் போல. ஏங்கோ படித்தேன் இப்படத்தில் நடித்த சந்தியா பழைய காலத்து சரிதாவை ஞாபகப்படுத்துகிறார் என்று. அப்படி எல்லாம் ஒன்று இல்லை மக்களே!! சரிதா நடிப்புக்கும் சந்தியா இப்படத்தில் நடித்ததற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு இருக்கு. சரிதா மாதிரி நடிக்க இன்னும் காலம் பிடிக்கும் சந்தியாவுக்கு!! இதில் பாவம் நம்ம பாவனா!! என்ன நினைச்சு படத்தில் நடிக்க ஒத்துகிட்டாங்கலோ. ஒரு முக்கியத்துவமே இல்லாத கதாபாத்திரம். சும்மா சுடிதாரிலும் நல்ல தாவணியிலும் வந்து போகிறார். வசனம்கூட 2 பக்கத்துக்கு மேல் தாண்டி இருக்காதுனு நினைக்கிறேன். இவருக்கு நடிப்பு சும்மார்தான் (அட நடிச்சாதானே..) இரட்டையர்களுக்கு அம்மா வேடத்தில் இந்து (நாடகங்களில் நடிப்பவர்). இவருக்கும் வயதான அம்மா வேடத்திற்கும் பொருத்தமே இல்லை.

இயக்குனர் ஒரு பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது "இந்த இரு பெண்களின் கதாபாத்திரம் நான் வாழ்க்கையில் சந்தித்த இரு பெண்களின் கதைதான்". இப்படி ரொம்ப ஓவர் பில்டப் கொடுத்து நம்பி போன எனக்கு வச்சார் பாருங்க ஆப்பு! முதல் பாதி ரொம்ப மெதுவாக நகர்ந்தது திரைக்கதை. இரண்டாம் பகுதியில் எதிர்பார்த்த மாதிரி திரைக்கதை போனதால்.. சுவார்ஸ்சியம் இல்லாமல் போச்சு! மதுரை பாஷையில் பரத் பேசும்போது பருத்திவீரன் கார்த்தி, காதல் பரத் ஆகியவற்றை ஞாபகம்படுத்தியது. விறுவிறுப்பு இல்லாமல் போன கதையினால் தோய்வு அடைந்தது திரைக்கதையும் படத்தை பார்த்துகொண்டிருந்த நானும்!!

பாடல்களும் ஓரளவுக்கு சும்மார். சபாஷ்-முரளி இசை. 'தமிழ் செல்வி' என்ற பாடல் அருமை. இருப்பினும் மற்ற பாடல்கள் 'டக்' ஔட்! பிண்ணனி இசை சிறப்பாக இல்லை. என்னதான் படம் சொதப்பலா இருந்தாலும் ஒரு சில காட்சிகள் என்னை கவர்ந்தது.

* பாவனா தூக்குமாட்டி இறந்துவிடுவார். அப்போது அவரின் மூன்று வயது தம்பி வந்து பார்க்கும். அதுக்கு என்ன நடக்குதுனு தெரியாமல் தூக்கில் தொங்கும் அக்காவை பார்த்து சிரிக்கும். ரொம்பவே யதார்த்தமான காட்சி!

* சந்தியாவை ,தம்பி பரத் பார்த்து ஜொல்லுவிடும்போது சந்தியா சொல்லும் "இந்தேரு, இதுலாம் ஒன்னு வச்சுக்காதே. எற்கனவே, இப்படி செஞ்ச நாலு பேர விலக்கமாத்தால அடிச்சுருக்கேன். வேணுனா போய் கேட்டுபாரு." இப்படி சொல்லும்போது சந்தியாவுக்குள் இருக்கும் அந்த காமெடியன் தெரிந்தது.

இதுபோன்று விரல்விட்டு எண்ணிவிடகூடிய ஒருசில காட்சிகளே உண்டு. நல்ல படம் பார்க்கலாம் என்று நினைத்தால் இப்படத்தை தவிர்ப்பதே சாலசிறந்தது. அப்பாடா, என் மனசு இப்பதான் பாரம் குறைஞ்சு இருக்கு!! வேலை வெட்டி., வெட்டி வேலை இல்லாதவர்களாக நீங்க இருந்தால்மட்டுமே படத்தை போய் பார்த்து 3 மணி நேரம் உங்களின் பொறுமையின் எல்லையை சோதித்து கொள்ளலாம்.(அப்பரம் ஏன் புள்ள, நீ போய் பார்த்தேனு கேட்காதீங்க... அழுதுடுவேன்:)

மொத்தத்தில்
கூடல் நகர்- நல்ல கதை, திரைக்கதை இல்லாமல் நம்மை அலையவிட்ட தேடல் நகர்!