Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

May 17, 2017

தேக்கா

கடை முதலாளி, “டேய் ரெண்டு முட்ட பொரோட்டவ எவ்வளவு நேரம் போடுவ? சீக்கிரம் போட்டு தொல!"  என அதட்டினார். 13  சதுர மீட்டர் அளவில் மட்டுமே இருந்த கடைக்குள்,  அடுப்பின் சூடு கையை எரித்தாலும்,  ஒரு மணி நேரமாய் பரோட்டா போட்டு கொண்டிருந்தார் சீனு. 





தேக்கா சந்தையில் அமைந்திருக்கும் பல உணவு கடைகளில் ராகுல்01 கடையும் ஒன்று. வீட்டுக்கு வீடு வாசபடி என்பதுபோல் தேக்கா உணவங்காடியில் பாதி கடைகளுக்கு மேல் பரோட்டா கடை தான். 

 "எங்க அந்த வீண போனவன்…இன்னும் வரலையா?” முதலாளியின் பொன் வார்த்தைகள் விழுந்தன. தனது பேரன் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கடை. தனது மகன் எடுத்து நடத்துவான் என்று ஆசையாக தொடங்கினாலும், வியாபாரம் தெரிந்தும், மகன் போக்கு சரியில்லை. கடையை இழுத்து மூட வேண்டிய சூழ்நிலை வந்த நிலைமையிலும் தொழில் விட்டு போக கூடாது என்பதற்காக, இந்த 68 வயதிலும் தினமும் அயராது உழைக்க வேண்டிய கட்டாயம். 

அன்று ஞாயிற்றுகிழமை காலை 8 மணி. பரோட்டா மாவு  பெட்டியில்  ஒன்றுக்கு  பின்னால்  ஒன்றாய்  அடுக்கி வைத்த  மாவு உருண்டை  போல் ஒன்றுக்கு பின்னால் ஒன்றாய்  5 பேர்  வரிசையாய்  நின்றுகொண்டிருந்தனர். 

"சாமிண்ணா இன்னும் வரல?" என சீனு கூறியபடி, ஒரு மாவு உருண்டையை மெல்லிசாய் தட்டி, நடுவில் முட்டையை உடைத்து ஊத்தினார். 

மாதம் கடைக்கு கட்ட வேண்டிய வாடகை பணம் $2300 வெள்ளி. இது மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமை. இந்த மாதம், கடையில் கேஸ் அடுப்பு பாதிப்பு ஏற்பட்டதால், அதற்கு செலவு. மலிக பொருட்கள் செலவு போக, வாடகை கொடுக்க பணம் தயாரான நிலையில் இல்லை. இந்த பயமும் ஒருவித எரிச்சலுடனும் முதலாளி கணக்கு புத்தக்கத்தில் கணக்கு எழுதி கொண்டிருந்தார். 

ரொம்ப நேரம் வரிசையில் காத்து கொண்டிருந்த மலாய் ஆடவர் ஒருவர் பொறுமையிழந்தார், "ஹாலோ அங்கிள், ப்ரப்பா லமா லகி லா?"

"wait லா அபாங். packing சுடா." என விறுவிறுவென்று பழுப்பு நிற பொட்டலத்தில் பரோட்டாவை மடித்து கொடுத்தார் முதலாளி. காலை மணி 8.45 ஆனது. ஞாயிற்றுகிழமை என்பதால்,  அடுத்த வரும் வாரத்திற்கு தேவையான மலிகை பொருட்கள் காய்கறி, மாமிச வகைகளை வாங்க வந்த கூட்டம் அதிகரித்த வண்ணமாய் இருந்தது. வாங்கிவிட்டு காலை உணவு உண்ணும் ஒரு சாரார் இருக்க, காலை உணவை சாப்பிட்ட பிறகு, பொருட்களை வாங்க போகும் ஆட்கள் இன்னொரு வகையை சேர்ந்தவர்கள். 

ராகுல்01 கடைக்கு மூன்று கடைகள் தள்ளி இருக்கும் பரோட்டா கடையில் மட்டும் எப்போதுமே கூட்டம். இந்த காட்சி, முதலாளிக்கு மேலும் எரிச்சலை ஊட்டியது. 


கூன்விழுந்த ஒரு சீன மூதாட்டி எங்கேயாவது அட்டைபெட்டியோ பேப்பரோ ஏதேனும் கிடைக்குமா என்று தேடுவார். அட்டைபெட்டிகளை சேகரித்து விற்றால் காசு கிடைக்கும் என்பதால்.  ராகுல்01 கடை அருகே வந்தார். மலிக பொருட்கள் அட்டைபெட்டிகள் இருந்தன. அதனை மடித்து, முதலாளி மூதாட்டியிடம் கொடுத்தார். 

மூதாட்டி அடுத்த கடைக்கு செல்ல முற்பட்ட போது, முதலாளி அவரிடம், பின்னாடி படிக்கட்டு ஓரமாய் நிறைய செய்திதாள் இருப்பதை சைகை மொழியில் தகவலைக் கூறினார். 

புரிந்து கொண்டு மூதாட்டி புன்னகையித்தபடி மெதுவாய் நகர்ந்து சென்றார். முதலாளி மற்ற மேசையில் உள்ளவர்களை கவனிக்க சென்றார். விடியற்காலையில் கடை திறக்க வர வேண்டிய சாமி, அப்போது தான் மெதுவாய் நடந்து வந்தார். தாமதமாய் வந்துவிட்டோம் என்ற பதற்றத்துடன் சாமி, கடைக்குள் நுழைந்து குழாய் தண்ணியில் கையை கழுவினார். 




வேர்வையை துடைத்தபடி சீனு, "அண்ணே, ஏனே லேட்டு? அவரு ரொம்ப நேரமா கத்திகிட்டு இருந்தார்ண்ணே." 

சாமி முகத்தில் படர்ந்திருந்த   கலக்கமும்  கவலையும் மேலும் ஒரு படி சென்றது.  

முதலாளி கடையை நோக்கி  வந்து கொண்டிருக்கிறாரா  இல்லையா  என  எட்டிப் பார்த்தவாறு சீனு,”என்னெண்ணே  யோசிக்கிறீங்க?” என்றான்.

சாமி தனது சட்டை பையிலிருந்த கோயில் பிரசாதத்தை எடுத்து நீட்டினார் சீனுவிடம் “எடுத்துக்கோ”

எண்ணெய் பிசுபிசுப்பும், முட்டை வாசமும், வெங்காய நெடியும், ச்சீஸ் வாடையும் கலந்திருந்த   சீனுவின் விரல், திருநீரை தொட்டது. திருநீரை நெற்றியில் பூசியவாறு சீனு,  “என்னண்ணே விசேஷம் இன்னிக்கு?” 

என் பொறந்த நாளு.” என்றார் சாமி. கோயில் பிரசாத பொட்டலத்தை, பரோட்டாவை பியித்துக் கொண்டு கொட்டிய 'மகாலட்சுமியை' போட்டு வைக்கும் மைலோ டப்பாவுக்கு பின்னால் ஒளித்து வைத்தார்.  

ஆச்சிரியத்துடன் சீனு, “அப்படியாண்ணே?”

 சாமியின் வலது கையை குலுக்கி பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொன்னான் சீனு.

இன்னொரு பரோட்டா மாவு உருண்டையைக் கையில் எடுத்த சீனு, “என்ன வயசண்ணே இருக்கும் உங்களுக்கு? நம்ம முதலாளி வயசு இருக்குமா?”

"தம்பி. எனக்கு வயசு 78…” 

கையில் 5 தட்டுக்களுடன் திரும்பி வந்த முதலாளி சாமியை பார்த்துவிட்டார் "நீ பண்ண வேண்டிய வேல இது!" 

கடும் கோபத்தில் இருந்த முதலாளி, கடைக்குள்  முன்னால் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிரம்பிய ஒரு பெரிய மங்கில் அனைத்து தட்டுக்களையும் போட்டார். போட்ட வேகமும், கூடவே கலந்த தெறித்த கோபமும் மங்கிலிருந்த தண்ணீரை வெளியே சிந்த செய்தது. 

தொடர்ந்து கொட்டினார் கோபத்தை, " நானே எல்லாத்தையும் பாத்தா, அப்பரம் நீ எதுக்கு வேலக்கு வர?" 

கூட்டமாக இருப்பினும் அதனைக் கண்டு கொள்ளாமல் அவர் சாமியைத் திட்டினார். கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த சில பேருக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. ஆனால், முதலாளிக்கு எந்த ஒரு கூச்சமும் இல்லை. எதுவும் பேசாமல், சிந்திய தண்ணீரை துடைக்க கீழே குனிந்தார் சாமி. 

"யோவ். என்ன இது?" சாமி கையிலிருந்த மஞ்சள் துணியை பார்த்து கேட்டார் முதலாளி. 

"இல்ல தொடைக்க தான்....." என இழுத்தார் சாமி.

"இந்த மஞ்ச துணி வச்சு எத தொடைக்கனும்னு சொல்லி இருக்கேன்." 

உள்ளே நின்று கொண்டிருந்த சீனு, "சாமிண்ணே அது தட்டு தொடைக்க. மத்ததுக்கு அந்த வெள்ள துணிய யூஸ்  பண்ணுங்க." 

அதற்குள், வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளக்கார பெண்மணி, “ஓன்  ப்ளேன்  ப்ராட்டா,  டூ  அனியன் ப்ராட்டா.”  என சொல்லிவிட்டு தான் அமர  போகும்  இடத்தைச் சுட்டி காட்டி, உணவை அங்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். 

”சீனு, ஒரு  கோசோங்,ரெண்டு வெங்காயம்” என்று ஆர்டரை மறுபடியும் கூவி கூறினார் முதலாளி.

வெள்ள துணியை கொண்டு சிந்திய தண்ணீரை சாமி துடைத்து எழுவதற்குள்  முதலாளி,”யோவ் சாமி அந்த  வெள்ளக்காரி  மேசை இருக்குல..,” என,தட்டு நிறைய பரோட்டாவை சாமி கையில் வைத்தார். 

வெள்ளைக்காரியிடம் உணவை பரிமாறிவிட்டு, அவர் பணத்தை சாமியிடம் கொடுத்தார்.  கொடுத்த காசை பல தடவை எண்ணினார் சாமி. கடைக்கு அருகே வந்து விலை பலகையை அனாந்து பார்த்து, "ஓரு கோசோங்….ஒரு வெள்ளி  10 காசு. வெங்காயம்…ஒரு வெள்ளி 40 காசு…அப்போ ரெண்டு  வெங்காயம்னா…ரெண்டு வெள்ளி 20 காசு….முன்னாடி…. வந்து… ரெண்டு வெள்ளி 20காசு….மொத்தம்..” என்று முணுமுணுத்தபடி குழம்பி போய் நின்றார்.


கடைக்கு திரும்பிய முதலாளி, “என்ன பண்ணிகிட்டு இருக்க நீ?” என்றார் அதிகார தோரணையில்.

சாமி, “இல்லண்ணே…இந்த காசு….” என்று இழுத்தார்.

“ஒரு கோசோங், ரெண்டு வெங்காயம். இது எத்தனனு உனக்கு தெரியல இன்னும்?” என்று சாமியின் கையில் இருந்த சில்லறை காசை வேகமாய் பிடிங்கினார்.

நொடியிலேயே காசை எண்ணிவிட்ட முதலாளி சாமியைப் பார்த்து, “மொத்தம்  மூனு  90.   அஞ்சு வெள்ளி கொடுத்திருக்கா. மிச்சம் எவ்வளவு கொடுக்கனும்?” என கேட்டார் சாமியிடம். கணக்கு அவ்வளவாய் பிடிப்படாத சாமி மேலும் குழம்பி போனார்.

சாமிக்கு பதில் தெரியவில்லை என்றதும் முதலாளிக்கு எரிச்சல் வந்தது, “ ஒரு வெள்ளி  10 காசு. இந்தா போய் குடு…” முதலாளி மேலும் திட்டிவிடுவாரோ என்ற அச்சத்துடன் அவ்விடத்தைவிட்டு வேகமாய் நடந்து வெள்ளைக்காரியிடம் மிச்சத்தை கொடுத்துவிட்டு  இன்னொரு மேசைக்கு பளாஸ்டிக்  பாத்திரம் ஒன்றில் மீன் கறியை ஏந்தியவாறு சென்றார்.

 மூதாட்டி ஏதோ ஒரு மேசையை தடவி கொண்டிருந்தார்.  மெதுவாய் ஒவ்வொன்றாய் அவர் தட்டுகளில் ஏதோ ஒன்றை தேடி கொண்டிருந்தார். ஒரு தட்டைப் பார்த்தார் மூதாட்டி. அந்த தட்டில் ஒரு பரோட்டா காய்ந்து இருந்தது. யாரோ முழுதாய் சாப்பிட்டு முடிக்காமல் அப்படியே விட்டு சென்ற தட்டு.

அதிலிருந்து ஒரு சின்ன துண்டு பரோட்டாவை கையில் எடுத்து நுகர்ந்து பார்த்தார். மறுபடியும் நுகர்ந்த பரோட்டா துண்டை அந்த தட்டில் போட்டார். அந்த தட்டை கையில் ஏந்தியவாறு ஒரு மறைவான இடத்திற்கு சென்றார். 

அந்த தட்டிலிருந்த பரோட்டாவை சாப்பிட ஆரம்பித்தார். இதனைப் பார்த்த சாமிக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அவரது மனம் ஏதோ செய்தது. இப்படிதான் தினமும் அந்த மூதாட்டி உணவு சாப்பிடுகிறாரோ என்று நினைத்து சாமியின் மனம் வேதனையில் புரண்டது.

மூதாட்டி நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தார் சாமி. சாமியை பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தார். பரோட்டா தட்டை மறைக்க முயன்றார். ஆனால், மூதாட்டியால் இயலவில்லை. சாமி சுற்றும் முற்றும் பார்த்தார். குறிப்பாக, முதலாளி பார்க்கிறாரா என்பதைக் கவனித்தார். முதலாளி தென்படவில்லை. சாமி, தனது கைகளிலிருந்த மீன் கறியை மூதாட்டியின் தட்டில் ஊற்றிவிட்டு, பக்கத்திலிருந்த குப்பையில் பளாஸ்டிக்  பாத்திரத்தைத் தூக்கிபோட்டார்.

புன்னகையித்தபடி மூதாட்டி “ம்ங் க்கோய் சாய், ம்ங் க்கோய் சாய் ” என அவருக்கு மட்டுமே புரிந்த மொழியில், கையை அசைத்து அசைத்து நன்றி கூறினார். எதுவும்  சொல்லாமல் விறுவிறு என்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார் சாமி.  

மீன் கறி கேட்டு ரொம்ப நேரம் ஆகியும் வராததால் சத்தம் போட்டுவிட்டு சென்றார் வாடிக்கையாளர்.அந்நேரம் பார்த்து, சாமி கடைக்குத் திரும்பினார். 

முதலாளி, “யோவ் சாமி! உனக்கு ஒரு வேலயும் உருபடியா பண்ண தெரியாதா? .ச்சே…உன்னையெல்லாம் வச்சுகிட்டு…. மீன் கறி எடுத்துட்டு போனீயே எங்க? ” என பரோட்டாவில் தெளித்த எண்ணெய் போல் வெடித்தார் முதலாளி.

மூதாட்டிக்கு உதவி செய்தேன் என்றால் திட்டுவாரோ என்ற சிந்தனை ஓடியது. முதலாளியின் குணம் தெரியும்.  தன் பிறந்தநாள் அன்று பொய் சொல்ல வேண்டாம் என்று நினைத்தார் சாமி. இந்த சின்ன விஷயம் பலகோடி குழப்பங்களைக் கொடுத்தது சாமிக்கு. உண்மையைச் சொல்லிவிடலாம் என்று சாமி வாயைத் திறக்க, முதலாளியின் சிவந்த கண்களைப் பார்த்தார்.

“கீழ…. ஊத்திடுச்சு.” சாமியின் வார்த்தைகள், போக்குவரத்தில் சிக்கிய முதலுதவி வண்டிபோல் தவித்தன.

நெற்றியில் அடித்துகொண்ட முதலாளி, “என்னது!!! கீ ஊத்திட்டீயா? அறிவு இருக்கா? சோத்த தானே திங்ற? ” என்றவர் தொடர்ந்தாற்போல் ஐந்து நிமிடங்களுக்கு திட்டி தள்ளிவிட்டார். கடவுள் படைத்த இரண்டு காதுகளின் முழு  அர்த்ததை புரிந்த வைத்திருந்த சீனு,எதையும்  கேட்டு  கொள்ளாமல் அன்றைய 210வது  பரோட்டாவை  போட்டு கொண்டிருந்தான்.


 வேல கேட்டு வந்து நின்னபோ வேல..கொடுத்தா நல்லாயிருக்கும்னு நினைச்சு உனக்கு வேல கொடுத்தேன் பாரு அது என் தப்பு தான்….” என்று திட்டுவதை நிறுத்தவில்லை முதலாளி. 

பக்கத்து கடையில் தே தாரேக் ஆற்றி கொண்டிருந்தவர் வெளியே வந்து, "ஹேய் மிஸ்டர் ப்ராட்டா, ரிலக்ஸ் லா!" என நக்கல் அடித்தார். அவரைப் பார்த்து முறைத்தார் முதலாளி. அதைப் பொருட்படுத்தாமல், அவர் முதலாளியின் முதுகில் விளையாட்டாய் இரண்டு அடி அடித்து விட்டு தே தாரேக் குவளையை வாடிக்கையாளரிடம் கொடுக்க சென்றார்.

"எனக்கு என்ன? வேல பாக்க ஆள் கிடைக்காதுனு நினைச்சுகிட்டு இருக்கீங்களா? ரெண்டு சின்ன பைலுக...மலேசியா பொடியனுங்க.... வேலக்கு வரேனு கேட்டு இருக்குதுங்க...அவனுங்கள வேலக்கு எடுக்க போறேன் லா நான்," என்று அவர் பாட்டிற்கு புலம்பி தீர்த்தார்.  வேலையை நிறுத்திவிடுவாரோ என்ற அச்சம் சாமியை தாக்கியது. இன்று, முதலாளியிடம் முன்பணமாக $50 வெள்ளி கேட்கலாம் என்று நினைத்திருந்த சாமிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தார். 

“யோவ் சாமி! நீ கிளம்பி போயிடு. என் கண்ணு முன்னால நிக்காத.” என்று கூறிவிட்டு கடைக்கு முன்னால் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார் முதலாளி. 

"+60...." என நம்பர் கொண்ட ஃபோன் அழைப்பு வர, அவர், "இந்த....அவனுங்களே கோள் பண்ணிட்டானுங்க," என உற்சாகத்துடன் கடைக்கு கொஞ்சம் தூரம் போய் பேச தொடங்கினார்.

 கடையிலிருந்து சீனு, “அண்ணே, நீங்க கொஞ்ச நேரத்துக்கு எங்கயாச்சும் போயிட்டு வாங்க. உங்கள இங்க பார்த்தாரு இன்னும் சத்தம் போடுவாரு.” என்றான்.

காற்சட்டை பாக்கெட்டில் இருந்த சீட்டு ஒன்றை நீட்டி சீனுவிடம், "வீட்டு சூரா வந்திருக்கு. மூனு மாசமா சேவா காசு கட்டுல...அண்ணே கிட்ட காட்டி....."

"ஐயோ இன்னிக்கு வேணாம்ண்ணே," சீனு மன்றாடினான்.

"நாளைக்குள்ள கட்டனும்னு போட்டுருக்கு...." 

"சாமிண்ணே, நீங்க போயிட்டு அப்பரம் வாங்க."


தேக்காவிலிருந்து 3.5கிலோ மீட்டர் துராத்திலிருக்கும் பெண்டிமியர் சாலைக்கு நடந்தே சென்றார். பெண்டிமியர் புளோக் 2ல் தான் சாமிக்கு வீடு. ஓரறை வீடு. தனியாக வாழும் சாமியின் வீட்டிலிருந்த ஒரே பெரிய பொருள்- தரையில் கிடந்த உறை மாற்றப்படாத மெத்தை. சுவரிலிருந்த காற்றாடி ஜன்னல் வழியே வந்த காற்று பட்டால் மட்டும் சுற்றியது.  மின்சார கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் இல்லை. 


சட்டையை கழட்டியபடி மெத்தையில் உட்கார்ந்தார்.  எதிரே மூன்று அடி கண்ணாடி .  யாரோ தேவையில்லை என்று எரிந்த கண்ணாடி அது. புளோக் கீழே கிடந்ததது. 


 அன்று கடையில் இழுந்த தன்மானம், வயதான காலத்தில் வேலை தேடி இழுந்த நிம்மதிகுண்டர்கும்பல் செயல்களில் ஈடுப்பட்டு பல வருடங்களாய் சிறையில் அடைக்கப்பட்டு இழுந்த வாழ்க்கை, வெட்டு குத்தில் இழுந்த இடது கை- இவை அனைத்தும் கண்ணாடியில் பிம்பாய் தெரிந்தன.  பச்சை குத்தப்பட்டிருந்த இடது தோள்பட்டையைத் தடவி கொடுத்தார். மெத்தையில் தலை சாய்த்து படுக்க சென்றபோது, கைபேசி மணி ஒலித்தது. 


சாமி வைத்திருந்த நோக்கியா X101ல், முதலாளியின் நம்பர் அவரைப் போலவே 'விளிச் விளிச்' என்று மின்னியது.

*முற்றும்*

Sep 10, 2014

டார்லிங் டம்மக்கு!

'உன் இன்மையை உணர்கிறேன்.'

இப்படிக்கு
நீச்சல் குளம் அருகே நிற்கும்
மிஸ்டர் அழகன்


என்று ஒரு சின்ன தாளில் கிறுக்கிவிட்டு, தாளை மடிக்கினான். நீச்சல் குளம் அருகே, பிள்ளைகள் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களில் ஊதா நிறம் சட்டை போட்டிருந்த குழந்தையை கூப்பிட்டான். அவள் பிஞ்சு கையில், எழுதிய கடிதத்தை மடக்கி ஒரு சாக்லெட்-யும் கொடுத்து, அவள் காதில் ஏதோ சொன்னான்.

அக்குழந்தையும் அவன் சொன்னதை கேட்டது. நீச்சல் குளம் முழுதும் சங்கீத் விழாவிற்காக  அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பலூன்கள் ஏராளமாய் கிடந்தன. கவனமாய் தாண்டிமெதுவாய் நடந்து சென்றது அக்குழந்தை. அழகாய் சென்று மருதாணி போட்டிருந்து கொண்டிருந்தவள் கையை இழுத்தது. அக்குழந்தையை தூக்கி முத்தமிட்டு என்ன என்று கேட்டாள் அமுதா. குழந்தை, கடிதத்தை கொடுத்துவிட்டு சிரித்தது. மறுபடியும் விளையாட ஓடிவிட்டது.


கடிதத்தை பிரித்து படித்தாள் அமுதா. ஆனால், அதனை கண்டு கொள்ளாமல்
தனது தோழிக்கு மருதாணி போடும் வேலையை தொடர்ந்தாள்.

மறுபடியும், இன்னொரு கடிதம் எழுதினான்-

'நான் சிகரெட் பிடிக்க போறேன்.' :))))

இப்படிக்கு
உன் இன்மையை தாங்காத
மிஸ்டர் அழகன்


மறுபடியும் குழந்தையை தூதுவிட்டான். குழந்தைக்கும் இந்த விளையாட்டு பிடித்தவளாய், ஓடி வந்து அமுதாவிடம் கடிதத்தை கொடுத்தது. அவள் பிரித்து படித்தாள். கடிதம் மேல் இருந்த பார்வை அவனை தேடும் பணியில் இறங்கியது.

"எங்க அமு போற?" என்று கையில் மருதாணியுடன் கேட்ட  மணப்பெண்ணிடம்,

அமுதா, "கொஞ்சம் நேரம் வேட் பண்ணு." என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு மெதுவாய் நகர்ந்தாள்.

"ஹாலோ மிஸ்டர் அழகன், என்ன இது?" என்றாள் அமுதா அவன் நிற்கும் இடத்தை கண்டுபிடித்தவுடன். யாருமே இல்லாத ஒதுக்குபுரமான இடம். நிலா வெளிச்சம் மட்டும் ஒளி வீசியது. 'டார்லிங் டம்மக்கு' இசை அரங்கத்தை நிரப்பியது.

புன்னகையித்தபடி நின்று கொண்டிருந்த விஜய், "காதல் கடிதம்."

"கண்றாவி!! அது என்ன இன்மை இன்மை....ஏதோ சின்மயி மாதிரி....." என்றாள் அமுதா, புருவங்களை சுருக்கி. அவள் பேசும்போது ஆடிய தோடும், குலுங்கிய பச்சை வளையல்களையும் கண்கொட்டாமல் பார்த்தான் விஜய்.

"நான் உன் இன்மையை உணர்கிறேன்-னா, i miss youனு அர்த்தம்." என கூறி கொண்டே அவளை நோக்கி நடந்தான்.

வாய்விட்டு சிரித்த அமுதா, "என்ன உனக்கு அதுக்குள்ள இன்மை, சின்மயி?? இங்க தானே இருக்கோம்."

"செம்ம boring di. " எரிச்சலுடன் விஜய் பேசிகொண்டே பின்தலையை சொரிந்தான்.

அமுதா, "this is our best friend's sangeet. how can you say it's boring?"

வேண்டுமென்றே மறுபடியும், விஜய் சற்று சத்தமாய், "boring" என அழுத்தி சொன்னான்.

அருகே சென்று அமுதா, அவனது கையை செல்லமாய் அடித்தபடி, "stop it vijay!"

"உனக்கு தான் indian functionsனா பிடிக்காத. அப்பரம் ஏன் வந்த?" என்றாள் அமுதா, புருவங்களை ஏற்றியவாறு.

இன்னும் பக்கத்தில் வந்த விஜய், "indian functions பிடிக்காது. ஆனா, indian girls பிடிக்கும். especially பச்சை வளையல் போட்டு இருந்தா..." என்றவாறு அமுதாவின் வலது கையை பிடித்து, அவளை சுவரோடு சாய்த்தான்.

"hoi! பொண்ணு கைய பிடிச்சு இழுத்துட்டான்னா, பஞ்சாயத்த கூப்பிடுவா?" புன்னகையித்து கொண்டே சொன்னாள் அமுதா.

ஒரு செண்டிமீட்டர் புன்னகையை பதிலாய் வீசினான் விஜய்.

அமுதா, "அது என்ன? சிகரெட் பிடிக்க போறேன்? சொன்ன promise எல்லாம் மறந்து போச்சா?

விஜய், "ஒரு கவித சொல்லட்டா?
                 smoking hot-aa நீ இருக்கும்போது
                 smoking எனக்கெதுக்கு?"


சொல்லி முடித்துவிட்டு சிரித்தான்.

அமுதா, "அட பாருடா!! fb statusஆ போடு மச்சி. லைக்ஸ் பிச்சிக்கும்!" என அவனது தலைமுடியை கலைத்தாள்.

அவனது சட்டை collarயை சரி செய்தவாறு, "இந்த லெட்டர்லாம் எழுதி இம்சை பண்ணாம, whatsapp me. இப்ப phoneல charge ஏறி இருக்கும்னு நினைக்குறேன்." என்றவுடன் அவ்விடத்தை விட்டு காலி செய்தாள்.

மறுபடியும்,

' ஐ லவ் யூ' என்று ஒரு தாளில் எழுதி, அக்குழந்தையிடம் கொடுத்தான்.

குழந்தை கடிதத்தை வாங்கி கொண்டு,

"அப்பா, i am tired. நீங்களே அம்மாகிட்ட கொடுத்திடுங்கோ" என்றது.


May 20, 2014

இது தாலி இல்ல, தங்க பதக்கம். (சிறுகதை)

இனி ஒரு நிமிடம்கூட நித்யாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கை பையிலிருந்த கைபேசியை எடுத்தாள். உடனே கௌதமிற்கு whatsapp message அனுப்பிவிட்டு தூக்கி எறிந்தாள் கைபேசியை.


நித்யா: this is not happening. I can't take this anymore!
கண்ணாடி முன்னாடி நின்று தன்னை பார்த்தாள். கைபேசி அலறியது. கௌதமிடமிருந்து பதில் வந்தது.

கௌதம்: என்ன ஆச்சு?

நித்யா: என்னால முடியல. i can’t even walk properly.

நித்யாவிற்கும் கௌதமிற்கும் இன்று கல்யாணம்.

இருவரின் குடும்பங்களின் மூன்றாம் தலைமுறையில் நடக்கும் முதல் கல்யாணம். ஆக, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், தெருவில் நடந்தவன், வழுக்கி விழுந்தவன், ஊட்டிக்கு போனவன், ஊட்டிவிட்டவன் என்று பாதி ஊரையே அழைத்து இருந்தனர் வீட்டின் பெரியவர்கள். 

ஜோடா அக்மர் படத்தின் செட்-களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு கல்யாண மண்டபம் அலங்காரத்தால் ஜொலித்தது. அழைப்பு அட்டையில் முகூர்த்தம் 7.30-8.30pm என்று தெளிவாக அச்சிடப்பட்டது. அதன்படி விருந்தினர் கூட்டம் தாமதிக்காமல் சரியாக இரவு மணி 8.25க்கு வர ஆரம்பித்தனர்.


கௌதமின் குறுந்தகவல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

கௌதம்: கொஞ்சம் adjust பண்ணிக்கோ.

நித்யா: this saree and accessories are literally killing me. Why the hell must I wear my great-grandma’s ottiyaanam? And I can’t even walk properly! Arggh!

கௌதம்: கொஞ்சம் நேரத்துக்கு தானே...

நித்யா: முடியாது! நீ மட்டும் வசதியா ஜிப்பாவுல இருக்க? தமிழ் கலச்சாரமா அது?

கௌதம்: சாரி! அடுத்த தடவ கல்யாணம் பண்ணிக்கும்போது, தமிழ் கலாச்சாரத்த காப்பாத்துறேன்!

நித்யா:
J J J you are crazy!! நானும் அடுத்த தடவ, netball shortsல கல்யாணம் பண்ணிப்பேன்.

கௌதம்: கொஞ்சம் decentஆ....??

நித்யா: ஒகே,
basketball shorts then.

கௌதம்: hahaha you are going crazy! Love you nitya!

********************************************************************

நமக்கு ஒரு நல்ல விஷயம் நடக்க போவது என்றால் மனதார வாழ்த்தி உண்மையாக ஆசிர்வாதம் செய்பவர்கள் குடும்ப உறுப்பினர்களை சேர்த்து மொத்தமாக 10 பேராக தான் இருக்க முடியும். மற்றவர்கள் எல்லாம் உணவுக்காகவும், வாங்கிய புதிய தங்க வளையலை காட்டவும், சைட் அடிக்கவும், தனது facebook profile pictureக்கு புகைப்படம் எடுத்து கொள்ளவும் தான் வந்து இருப்பார்கள்.

கல்யாண மண்டப மேடையில் பூஜைகள் ஆரம்பித்தன. இரண்டு மணி நேரமாக புகைக்கு முன்னால் உட்கார்ந்து இருக்க முடியவில்லை நித்யாவுக்கு. முதல் இரண்டு வரிசையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கும் அதே கதி தான்!! ஆர்வத்துடன் வந்த நித்யாவின் வெள்ளைக்கார தோழிகள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். தேவைக்கு அதிகமான புகைப்படங்களை எடுத்து முடித்த தோழிகள் ‘நாங்க கிளம்புறோம்’ என்று கை சைகயினால் நித்யாவுக்கு தகவல் சொன்னார்கள். தலையை மட்டும் ஆட்டினாள் நித்யா. பாவம்! இறும்பி கொண்டே சென்றனர் தோழிகள்.

தமிழ் கலாச்சாரப்படி நடக்கும் கல்யாணத்தில் புரியாத மொழியில் ஐயர் பூஜைகளை செய்து கொண்டிருந்தார். 30 பேருக்கு மேல் நிற்க முடியாத மண்டப மேடையில் 65 பேர் நின்றனர். மேடையில் யார் இருக்க வேண்டும் என்று இரு குடும்பங்களில் இடையே ஒரு போராட்டமே நடந்தது.

புகை மூட்டம் நித்யாவின் கண்களை குளமாக்கியது. நித்யா, தனது முழங்கையால் கௌதமின் கையை லேசாக இடித்தாள். Marathon பந்தயத்தில் ஓடுபவனைப் போல் வேர்த்து கொட்டிய கௌதம், அவள் பக்கம் திரும்பி பார்த்து ‘என்ன’ என்பதுபோல் கண்களால் கேட்டான். அவனது காது அருகே சென்ற நித்யா, “ this smoke is killing me. I need goggles.”
நித்யாவின் ‘ஷாருக் கான்’, ரோஜா படத்தின் தீவிரவாதி வாஸிம் கானை நேரில் பார்த்ததுபோல், கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

சிட்டி ரோபா போல ஒவ்வொரு பகுதியையும் செய்து அவளது உடம்பில் ஒட்டி வைத்ததுபோல் உணர்ந்தாள் நித்யா. தனது கழுத்தை மெதுவாய் திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தாள். தனது அம்மாவை தேடினாள் நித்யா. மேடையில் எங்குமே இல்லை.

விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் தேடியது நித்யாவின் கண்கள். அங்கும் இல்லை. தேடிய காரணத்தை கௌதமிடம் சொல்லலாம் என்று முடிவு எடுத்தவள், மறுபடியும் அவனது கையை இடிக்க முற்பட்ட போது, காதுகளை பிளக்கும் அளவுக்கு ஒரு இரும்பல் சத்தம்!

அந்த கூட்ட நேரிசலிலும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு பாட்டியின் இரும்பல் சத்தம் அனைவரையும் திகைக்க வைத்தது. விசு படங்களில் தோன்றும் பாட்டிபோல்,  இரும்பலுடன் போராடி கொண்டிருந்தார் அந்த பாட்டி.

நித்யாவின் அம்மா மேடைக்கு வந்தார். முகம் சோர்வாக காணப்பட்டது. குழப்பமாகவும் தோன்றியது அவரது முகம். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என நித்யாவின் மனம் புரண்டது. நித்யாவும், அம்மாவிடம் ஒன்று சொல்ல வேண்டும் என துடித்து கொண்டிருந்தாள். முதல் வரிசையில் இருந்த பாட்டியையும் காணவில்லை. ஒருவேளை பாட்டிக்கு ஏதோ ஆச்சோ என்று நினைத்து அவளின் மனம் தேவையில்லா சிந்தனைகளால் பந்தாடப்பட்டது.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த அம்மாவின் கால்களை தட்டினாள் நித்யா.
குனிந்தார் அவர். அவளின் அம்மா, “என்ன?” என்று கேட்டதும் அவரின் குரல் தழுதழுத்தது.

“என்ன ஆச்சு? ஏன் கண்ணு கலங்குது?” என வினாவினாள் நித்யா.

நித்யாவின் அம்மா, “ஆஸ்திரேலியா சித்தி....” என்று இழுத்தார். கண்ணீர் தாழை தாழையாக ஊற்றியது.

“என்ன ஆச்சு ஆஸ்திரேலியா சித்திக்கு?” மனம் படபடத்தது நித்யாவுக்கு. இருதயம் நின்று போவதுபோல் உணர்ந்தாள்.

நித்யாவின் அம்மா கண்ணீரை துடைத்து கொண்டு, “ ஆஸ்திரேலியா சித்திக்குFlight delay ஆச்சு. அவ இல்லாம இந்த கல்யாணம் நடக்குது....”

பெருமூச்சுவிட்ட நித்யா சுற்றி பார்த்தாள். அங்கு நின்று கொண்டிருந்த 65 பேர்களில் பாதி கூட்டம்-அவளது அம்மாவின் 5 தம்பிகளும், 4 தங்கைகளும் அவர்களதும் குடும்பங்களும். இதில் ஆஸ்திரேலியா சித்தி வரவில்லை என்ற கவலை! ஐயோ ராமா, இந்த கூட்டத்துல ஏன் என்னைய சேர்த்த என்று கவுண்டமணி போல் கத்த வேண்டும் என்று இருந்தது நித்யாவுக்கு.

தான் சொல்ல நினைப்பதை அம்மாவிடம் சொல்ல முடியாமல் தவித்த நித்யா, கௌதம் பக்கம் மறுபடியும் திரும்பினாள். ஐயர் சொல்லும் சில மந்திரங்களை மாப்பிள்ளையும் சேர்ந்து சொல்ல வேண்டும். அதனை பாதி புரியாமல் உளறிகொண்டிருந்த கௌதமை பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை நித்யாவுக்கு.

*******************************************************************************************************

கெட்டி மேளம் கொட்ட, ஆலங்கட்டி மழை கார் ஜன்னலில் விழுவதுபோல், விழுந்த அரிசியின் நடுவே, தாலி கட்டப்பட்டது. பிரசவ வலியில் 12 மணி நேரம் துடித்து, இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்த தாய் போல் கௌதமின் முகம் வாடியிருந்தது. அந்த வாடிய முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை. அதை கண்ட நித்யாவும் புன்னகையித்தாள்.

இத்தனை போராட்டங்களுக்கு இடையே நடந்த சம்பவத்தை எண்ணி பார்த்த நித்யா, கழுத்தில் தொங்கிய தாலியை தொட்டாள்.....
இது தாலி இல்ல. தங்க பதக்கம்!


காலில் விழுந்து கும்பிட்டு ஆசிர்வாதம் பெறும் பழக்கத்தை எவன் கண்டுபிடித்தான் என்று மனதில் திட்டிகொண்டே 23வது முறையாக குனிந்து எழுந்தாள் நித்யா. வாழ்த்து கூறவும், மொய் பணம் கொடுக்கவும் காத்திருந்த வரிசையை சற்று எட்டி பார்த்தாள். ரஜினி படத்துக்கு முதல் நாள் டிக்கெட் வாங்கும் வரிசைபோல் நீண்டு இருந்தது. அவளுக்கு கால் வலி ஆரம்பித்தது. தப்பித்து போகவும் முடியவில்லை.

அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியில் உணவு பரிமாறும் இடத்திலிருந்து நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அங்கேயும் அவ்வளவு கூட்டம். சாப்பாட்டுக்கு போகாமல் மண்டப்பத்தில் நின்று கூட்டத்தின் மேல் ஒரு தனி மரியாதை வந்தது நித்யாவுக்கு. வந்திருந்த சொந்தாக்கார்கள் பலர் யார் என்று தெரியாமலேயே சிரித்து முகத்துடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க வேண்டிய அவநிலையில் நித்யாவும் கௌதமும் நின்றனர். அதில் சிலர், நித்யாவை பிறந்த போது பார்த்ததாக கூறிவிட்டு, அவளது கன்னங்களை கிள்ளியதோடு அப்படியே பாதி make upயையும் அள்ளிவிட்டு சென்றனர்.

முதல் வரிசையிலிருந்து காணமல் போன பாட்டி மொய் கொடுக்க வந்தார். கட்டிப் பிடித்தார் நித்யாவை! ‘ஐயோ!’ என்று கத்த கூட முடியாமல் சமாளித்தார் நித்யா. ரொம்ப நேரமாய் அம்மாவிடம் சொல்ல நினைத்தது, அப்போது குத்தியது- சேலையில் உடைத்திருந்த இரண்டு safety pinகள் நறுக்கென்று குத்தியது நித்யாவின் இடுப்பில்.

பாட்டி, “நித்யா, அடிக்கடி மாப்பிள்ளைய இடிச்சுகிட்டு இருந்தே. கள்ளி! இப்படியே அன்னோனியமா இருக்கனும்” என்றார்.

நித்யா, “அன்னோனியமாவா? நான் இங்க அந்நியன் மாதிரி குமறிக்கிட்டு இருக்கேன் பாட்டி” என்று சொல்ல வேண்டும் என அவளின் மனம் கதறியது.

இருந்தாலும் சமாளித்த நித்யா, "சாப்பிட்டு போங்க பாட்டி!"

பாட்டி, "சாப்பிட்டு தான் மேல வந்தேன்." என்றவர் மறுபடியும் கன்னத்தை கிள்ளினார். 

‘என்னைய தாத்தாவா ஆக்கிடு.
என்னைய அத்தையா ஆக்கிடு.
என்னைய பாட்டியா ஆக்கிடு.’ என்று பல அநாகீரிய வாழ்த்துகளை செவிசாய்த்தனர் புதுமண தம்பிதியினர்.

நித்யாவுக்கு பசி வயிற்றை கிள்ளியது.

அதிகாலை மணி 1 என கடிகாரம் காட்டியது. 75 safety pinகளையும் கழற்றிபோட்டுவிட்டு சோபாவில் விழுந்தாள் நித்யா. தனது முட்டியில் போட்டிருந்த knee guardயை அவிழ்த்தாள். அதனைப் பார்த்த கௌதம், “எய் நிஜமா, knee guard போட்டு இருந்தீயா?” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

மண்டபத்தில் உணவு தீர்ந்துவிட்டது. நித்யாவுக்கும் கௌதமுக்கு பழத்தை மட்டும் கொடுத்து புது வீட்டுக்கு அனுப்பினார்கள். சாப்பாடு கிடைக்காத கோபத்திலும் இருந்த நித்யா, “பேசாத நீ!! I hate everyone. I hate the relatives. I hate the safety pins. I hate you.” என கத்தினாள்.

தொடர்ந்தாள் நித்யா, “அவன் அவன் எப்படி தான் ரெண்டு மூனு கல்யாணம் பண்றானோ? இனி சத்தியமா கல்யாணம் பண்ண மாட்டேன்.” என்று கோபங்களைக் கொட்டிவிட்டு, facebookல் குவிந்திருந்த 147 notificationsகளை பார்த்தாள்.

கௌதம், “நான் இன்னொரு தடவ பண்ணிப்பேன்.”

முறைத்தாள் நித்யா.

கௌதம், “பொண்ணு நீயா இருந்தா, இன்னொரு தடவ பண்ணிப்பேன்.” என கூறிவிட்டு புன்னகையித்தான்.

facebookல் இருந்த அவளது பார்வை அவன்மீது பாய்ந்தது. அவளும் பதில் புன்னகை வீசி, கௌதம் கன்னத்தில் ‘இச்’ வைத்தாள்.

அவளது கைபேசி மணி எழுப்பியது. அதனைப் பார்த்த நித்யா கதற ஆரம்பித்தாள். ஆஸ்திரேலியா சித்தியிடமிருந்து குறுந்தகவல்.

சித்தி: எய் புது பொண்ணு! நாங்க இப்ப தான் வந்து இறங்கி இருக்கோம். உன் வீட்டுக்கு இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவோம்.

“என்னால முடியாது! என்னால முடியாது! உன்னைய அப்பவே flight ticket 2 மணிக்கு எடுக்க சொன்னேன்.” என்றாள் நித்யா. அன்று அதிகாலை 5 மணிக்கு இருவரும் honeymoon போக இருந்தனர்.

“இந்த சொந்தக்காரன் விருந்து. மருந்து வேணாம்னு தான் கல்யாணம் முடிஞ்ச கையோட honeymoon கிளம்புறோம்!” என்று நெற்றியைச் சொரிந்தாள். சித்தி பேச ஆரம்பித்தார் என்றால், அவ்வளவு தான்.

கௌதம், “கல்யாணம் முடிஞ்சு வரத்துக்கு ஒரு மணி ஆகிடும். அதனால தான் 5 மணிக்கு டிக்கெட் புக் பண்ணேன். உன் சித்தி வருவாங்கனு எனக்கு எப்படி தெரியும்!” என்று சொன்னதும் நித்யா உடனே,

why are you arguing now?”

யாரு நானு?” என்று கௌதம் பதில் அளித்தபோது வீட்டின் வாசல் மணி ஒலித்தது.

 “oh shit!! சரி போய் கதவ தொற” என்றாள் நித்யா.
அவசரத்தில் இருவருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. கௌதம், மேசையிலிருந்து champagne பாட்டில்களை அள்ளிகொண்டு குப்பை தொட்டியில் போட்டான்.

“கௌதம், ப்லீஸ் கோ!!!” என்றாள்.

“அவங்க உன் சித்தி. நீ போ!” என்றான்.

வாசல் மணி மறுபடியும் ஒலித்தது.

நித்யா, “உன் சித்தினு, பிரிச்சு பேசுற?”

கௌதம், “ஐயோ! உன் சித்திய உன் சித்தினு சொல்லாம. என் சித்தினா சொல்ல முடியும்??"

இம்முறை வாசல் மணி மூன்று முறை தொடர்ந்தாற்போல் அடித்தது.

மேசையில் கிடந்த செய்தித்தாளை அவன்மீது கோபமாய் வீசிவிட்டு கதவை திறக்க சென்றாள் நித்யா. கதவு ஓட்டை வழி பார்த்தாள் நித்யா.

அங்கு சித்திக்கு பதிலாய், வேறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். குழம்பினாள் நித்யா. கதவை திறந்தாள்.

சிவப்பு சட்டையில் இருந்தவர், “coming from pizza delivery. 2 large chicken pizzas.”

*****************************************************************************
நள்ளிரவு.

உணவு சாப்பிட கீழே இறங்கிய போது, கடைசியாய் சாப்பிட்டு வெளியே வந்த ஒருவன், “சாப்பாடு எல்லாம் முடிஞ்சுட்டு.” என சொல்லிவிட்டு ஏப்பம்விட்டு சென்றான்.

அப்போது உடனே பிட்சாவுக்கு ஃபோன் போட்டான் கௌதம்!


*முற்றும்*