Feb 24, 2009

அவள் என்னைவிட அழகு- பகுதி 2

பகுதி 1

"கவர்மெண்ட் வேலை தான்..." என்றேன் அவளிடம்.

"மதுரையில கலெக்ட்டோரோ!" என்றாள் மறுபடியும் சிரித்து கொண்டே. இந்த முறை அவளின் சிரிப்பை வெறுக்கவில்லை. கொஞ்சம் அதிகமாகவே ரசித்தேன்.

"நீங்க அடிக்கடி ஏன் சிரிக்குறீங்க?" என்றேன் நான். பைத்தியம் போல் சிரிக்கிறாள் என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன். "நீங்க நினைக்குற மாதிரி இல்ல..." என்றாள் அவள்.

"நான் உங்கள பைத்தியம் மாதிரி சிரிக்குறேன்னு நினைச்சுது உங்களுக்கு எப்படி தெரியும்" என்றேன் நான்.

"ஹாஹா... அதான் இப்ப சொல்லிட்டீங்களே." என்றாள் அவள் பேச்சு சாமர்த்தியத்தோடு!

ச்சே...என் வாயை கொடுத்து நானே கெடுத்து கொண்டேன் என்று எனக்கு அவமானமாய் இருந்தது. சிறிது நேரம் பேசவில்லை.

"என்ன மறுபடியும் மூட் அவுட்டா?" அவள் ஆரம்பித்தாள்.

"ரிலேக்ஸ் மேன்... ஏன் எப்ப பாத்தாலும் இப்படி சட்டுன்னு அமைதியா போயிடுறீங்க.... சிரிக்க கத்துக்கனும். அப்ப தான் வாழ்க்கைல கவலை நம்மள ரொம்ப சீண்டாது....யூ நோ... நம்ம சிரிக்கும்போது நம்ம உடம்பில் natural antihistamines வெளியாகும். அப்படியே T-cells எனப்படும் natural anti-biotic உருவாகும். அதனால நம்ம உடலுக்கும், முக்கியமா இரத்தத்திற்கும் ரொம்ப நல்லது." என்று முடித்தாள்.

யப்பாடா இவ்வளவு விஷயம் அறிந்தவளா! ஆச்சிரிய அளவு கூடியது.

நான் அவளிடம் கேட்டேன், "எப்படி நீங்க இவ்வளவு சகஜம் பேசுறீங்க, இவ்வளவு விஷயங்கள சொல்றீங்க....?" ஆச்சிரியத்தின் உச்சியில் நான்.

"அப்படின்னு இல்ல...நான் வர போது, டிடி ஆரிடம் கேட்டேன், இந்த கம்பார்ட்மெண்ட்ல வேற யாருச்சு இருக்காங்கலான்னு....அவர் தான் ஒருத்தர் இருக்காரு என்றார்... சரி ஒரு ஆண் என்றதும்... பரவாயில்ல பேச்சு துணைக்கு ஆள் இருக்காங்கன்னு சந்தோஷப்பட்டேன்.... ஆண்கள்கிட்ட கொஞ்ச சகஜமா பேசலாம்..." என்றாள், எனக்கு மேலும் ஆச்சிரியத்தை கொடுத்துவிட்டு.

"ஆண்களா? பொதுவா பெண்கள், பெண்கள் இருந்தா தானே பரவாயில்லன்னு நினைப்பாங்க..." என்று வினாவினேன் நான்.

"அப்படி இல்ல...சில பெண்கள் தேவையில்லாத personal கேள்விகள கேட்பாங்க...gossip
பண்ணுவாங்க.... எனக்கு பிடிக்காது. சில ஆண்கள் பக்கா ஜெண்டில்மேன் மாதிரி நடந்துப்பாங்க... உங்கள மாதிரி... நீங்க என்கிட்ட ஏதாச்சு கேட்டீங்களா பாருங்க?" அதே சிரிப்புடன் சொன்னாள் அவள்.

அவள் ஜெண்டில்மேன் என்று சொன்னதும் எனக்குள் ஒரு புத்துணர்வு பிறந்தது. இப்படி மனதளவில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டதில்லை இந்நாள் வரைக்கும்.

என் அம்மா இறந்துபோன போது அவரை கடைசியாக பார்க்கமுடியவில்லையே என்று துடித்தேன்... எனக்கு கண்கள் இல்லையே என்று தவித்தேன். அதே தவிப்பு இப்போது, பார்வதியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது.

"நம்ம இருக்கும்வரை மத்தவங்களுக்கு உதவியா இருக்கனும். முடிஞ்ச அளவு மத்தவங்க வாழ்க்கையில ஏதாச்சு ஒரு மாற்றத்தை கொண்டு வரனும்." என்றாள் அவள் கொஞ்சம் சீரியஸான குரலில். ஒரு நிமிடம் சிரித்து பேசுவார்கள்,
மறுநிமிடமே சீரியஸா பேசுவாங்க- பெண்களுக்கு மட்டுமே கைவந்த கலை.

"அப்போ... நீங்க social worker.ஆ?." அமைதியாய் நான். ஜன்னல் வழி வீசிய காற்றை சுவாசித்தவளாய் பதில் அளித்தாள்

"அட...not bad...கண்டுபிடிச்சுட்டீங்களே...." அவர் குரலில் தெரிந்தது ஒரு ஆனந்தம்.

"ஆமா.. ஹிம்ஸனா என்ற அமைப்பு ஒன்னு இருக்குது. சிறுவயது பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி கொடுமை செய்யப்படும் அவர்களை காப்பாற்றி அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை தருவதே இந்த அமைப்பின் நோக்கம். ஆனா.... ஒரு சோகம் என்னென்னா... அங்க இருக்குற பெண்கள் அனைவருக்குமே எய்ட்ஸ் நோய் இருக்கு....அவர்களுக்கு மருந்து செலவு, படிப்பு செலவு... இப்படி ஏகப்பட பணம் தேவை. அதுக்காக பல பெரும்புள்ளிகளை பார்த்து நிதி திரட்டனும். அதுக்கு தான் நான் உதவி செஞ்சுகிட்டு இருக்கேன்..." என்றாள் சோக கலந்த அக்கறை நிறைந்த குரலில்.

என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. எத்தனையோ பயணிகளை சந்தித்து இருக்கிறேன். ஆனால், இவளை போல் யாரும் இல்லை.

"நீங்க ரொம்ப கிரேட்ங்க..." என்றேன் நான் அவள் செய்யும் பணியை கேட்டு.

"இதலாம் சாதாரணம்... இன்னும் நிறைய செய்யனும்... செய்யலாம்..." தன்னடக்கத்துடன் அவள்.

நான் இதுவரைக்கும் எதாச்சு நல்லது செய்திருக்கேனா என்று நினைத்து பார்த்தேன். என்னை பற்றி தேவையில்லாமல் கவலைப்பட்டே எனது நாட்களை கடந்துவிட்டேன். சரி நான் ஒரு கண்தெரியாதவன் என்பதை சொல்லிவிடலாமா என்று மனம் துடித்தது. ஆனால், வில்லன் 'ஈகோ'வோ வேண்டாம் என்று தடுத்தது.

நான் போகும் ஊருக்கு மூன்று ஸ்டேஷன் முன்னால் தான் அவள் இறங்க வேண்டிய ஸ்டேஷன். இரண்டு மணி நேரத்தில் இரயில் அவள் இறங்க வேண்டிய ஸ்டேஷனை வந்து அடைந்தது.

"all the best for the rest of your journey in this train and life" என்று சொல்லிவிட்டு அவள் சென்றாள். நான் 'தேங்கஸ்' என்று சுருக்கமான ஒரு பதிலை சொன்னேன். அவள் இடத்தை காலி செய்யவும் இன்னொரு பயணி அவள் இடத்தை நிரப்பவும் சரியாக இருந்தது.

புதிய பயணி என்னிடம் "பாவம் சார்... இந்த பொண்ணு....இவ்வளவு அழகா இருந்தும், ஆண்டவன் இவளுக்கு கண் இல்லாம படைச்சுட்டானே." என்றார்.

என் உடம்பு முழுவதும் மின்னல் தாக்கிய ஓர் உணர்வு! வாய்விட்டு அழ வேண்டும் என்று இருந்தது. ஏன் இந்த உணர்வு? தெரியவில்லை.

மனதளவில்... அவள் என்னைவிட அழகு!

அவள் என்னைவிட அழகு- பகுதி 1

"காபி டீ, காபி டீ"
"இந்தியா டுடே, குங்குமம், குமுதம்"
"பை டா மச்சான், ஊருக்கு போனவுடனே லெட்டர் போடு"


இப்படி நான் நடந்து வருகையில் ஏராளமான சத்தங்கள். பிளாட்வோர்ம் ஏ இரயிலில் ஏற வேண்டும் நான். மெதுவாய் நடந்து சென்றேன் என் பெட்டியை எடுத்து கொண்டு. துணைக்கு ஒரு வெள்ளை ஸ்டிக்.


"எக்ஸ்கீயூஸ் மீ, இந்த கம்பார்ட்மெண்ட் சீட் நம்பர் எங்க இருக்கு. சாரி, எனக்கு கண்ணு தெரியாது. கொஞ்சம் உதவி பண்றீங்களா?" என்றேன் நான் என் பயணச்சீட்டை நீட்டி. எனக்கு மற்றவர்களிடம் உதவி கேட்க பிடிக்காது. எனக்கு கண்ணு தெரியாது என்பதால் மற்றவர்கள் என்மீது பரிதாபம் காட்டுவது பிடிக்காது. பரிதாபம் தானே, கருணை காட்டினால் என்ன தப்பா? என்று நீங்க நினைக்கலாம். சாரி, எனக்கு அதுவும் பிடிக்காது! நான் அப்படி தான்.


ஆனால், தவிர்க்க முடியாத சூழலில் இப்படி உதவி கேட்பதைவிட வேற வழியில்லை!


என் பயண சீட்டை பெற்று கொண்ட அவர் "ராமு....male..age 26" என்று பயண சீட்டு தகவலை கம்பார்ட்மெண்ட் வெளியே ஒட்டியுள்ள தகவலுடன் சரி பார்த்தார்.


என்னிடம் "சார், சரியான இடத்துக்கே வந்துட்டீங்க. நீங்க ரொம்ப லக்கி சார்" என்றான் என்னை கையைப் பிடித்து உள்ளே சென்றவன். அவன் 'லக்கி' என்று சொன்ன சொல் எனக்கு பிடிக்கவில்லை. நான் எந்த விதத்தில் அதிர்ஷ்டசாலி?


என் சீட் வரைக்கும் அழைத்து வந்தவன் "வேற எதாச்சு வேணுமா?" என்று கேட்டான். "நான் உன்கிட்ட வேற எதாச்சு கேட்டானே?" என்று சொல்லலாமா என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தை ஒலியுடன் வெளியே வரவில்லை. 'வேண்டாம்' என்பதுபோல் ஒரு சின்ன சிரிப்பு. அவன் கிளம்பிவிட்டான்.


பொதுவாக வியாழக்கிழமை இரவு அவ்வளவு கூட்டமாக இருக்காது. அதுவும் இது சீஸன் நாட்கள் இல்லை. ஆக, யாரும் இந்த கம்பார்ட்மெண்ட்டில் வரமாட்டார்கள். அதிக கூட்டம் பிடிக்காது. நான் கண் தெரியாதவன் என்பதால், எனக்கு எப்படி கண் போச்சு? நான் இப்போ எங்கே போகிறேன்?என்ன வேலை செய்கிறேன்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கும் கூட்டமும் கூச்சலும் எனக்கு பிடிக்காது.


பிறவியிலே கண் தெரியாதவன், ஊரிலுள்ள அக்கா வீட்டிற்கு செல்கிறேன். சென்னையில் கவர்மெண்ட் ஆபிஸ் ஒன்றில் வேலை பார்க்கிறேன்....போன்ற தகவல்களை இந்த இரயில் பெட்டியில் ஏறிய ஏராளமான பயணிகளிடம் சொல்லியிருப்பேன். இது போன்ற பேச்சுகள் வேண்டாம் என்று நான் ஒரு முடிவு எடுத்தேன்.


நான் கண் தெரியாதவன் என்பதை காட்டி கொள்ளவதில்லை. இரயிலில் ஏறி உட்கார்ந்தவுடனே 'sleep eye bags'யை எடுத்து மாட்டி கொள்வேன். நான் தூங்குவதுபோல இருக்கும். நிம்மதியான பயணமாக இருக்கும்!


இரயில் பயணம் தொடர்ந்தது. இந்த சத்தம் கேட்கும்போது எல்லாம், எனக்கு 'சிக்கு புக்கு ரயிலே பாட்டு' ஞாபகத்துக்கு வரும்! யாரோ பிரபுதேவாவாம், பார்த்ததில்லை. ஆனால், மற்றவர்கள் சொல்லி கேட்டுள்ளேன்- இந்த பாடலுக்கு சூப்பரா ஆடி இருப்பாராம்! இப்பாடலை மனதில் ஓடவிட்டேன்.


இரண்டு நிமிடம் கழித்து ஒரு சத்தம். யாரோ வருவது போல் இருந்தது. ஒருத்தர் என் கால் தடுக்கி விழ பார்த்தார். டக்கென்று காலை மடக்கி கொண்டேன். "ஓ சாரி..." என்றது ஒரு பெண்ணின் குரல்.


அவள் போட்டிருந்த செண்ட்டின் வாசம் கம்பார்ட்மெண்ட்டை கமகமக்க செய்தது. . molecules, diffusion of gas particles, travel of the particles- இப்படி சின்ன வயதில் படித்த ஞாபகம். எதிரில் உட்கார்ந்தாள் .செண்ட் வாசனை எதிர்லிருந்து வந்ததால் இந்த யூகம்! படித்தவற்றை இப்படி மட்டும் தான் பயன்படுத்திக்க முடியும்.


"so stuffy ah....!" என்றாள் பெட்டிகளை வைத்தவாறு. நான் எதுவும் பேசவில்லை. தூங்க முற்பட்டேன். தூங்க முடியவில்லை. அவள் செண்ட் வாசம் என் மனசு வரைக்கும் பரவியது. கொஞ்சம் நேரம் கழித்து அவள் "சார் தூங்கிட்டீங்களா?" என்றாள்.

"இன்னும் இல்ல" ஏன் உடனே பதில் சொன்னேன் என்று தெரியவில்லை. அவள் தொடர்ந்தாள், "அப்பரம் ஏன் இவ்வளவு நேரம் அமைதியா இருந்தீங்க?"

பதில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் நிலைமையையும் என் வாழ்க்கை கதையை சொல்லி பரிதாபத்தை தேடி கொள்ள விரும்பவில்லை. சின்ன வயது முதலே யாரிடமும் அதிகமாய் பேசியதில்லை என் அக்காவிடம் தவிர.

"என்ன சார், உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டா, இப்படி சர்சர்ன்னு பதில் சொல்றீங்க...சரவெடி மாதிரி" என்றாள் கிண்டலாய். அவள் நக்கல் பேச்சு என்னை வெறுப்பேற்றியது.

"ஒன்னுமில்ல....நான் கொஞ்சம் reserved type" என்றேன்.

அவள் சிரித்து கொண்டே, "ஹாஹா....போகுற ரயிலில் தான் reserve பண்ணி வைப்பாங்க....வாழுற மனசையுமா reserve பண்ணி வைப்பாங்க?"

அவள் பேச்சு எனக்குள் சின்னதாய் ஒரு புன்னகை பூவை பூக்க வைத்தது. இருந்தும் அமைதியாய் இருந்தேன். சிரிக்கவில்லை. ஆமா....நான் கடைசியாய் வாய்விட்டு சிரித்தது...எப்போது தெரியுமா...ம்ம்ம்ம்....அது வந்து...ம்ம்ம்....சரிவிடுங்க....எனக்கு ஞாபகமில்லை.. வாழ்க்கையில் நான் சிரித்த தருணங்கள் கொஞ்சம் தான்.

"பை த பை , என் பெயர் பார்வதி." என்றாள். அவள் கைநீட்டி ஹலோ சொல்கிறாளோ, நானும் பதிலுக்கு எங்கயோ கை நீட்டி, நான் ஒரு கண்தெரியாதவன் என்பதை அறிந்துவிடுவாளோ! ஏகப்பட்ட கேள்விகளை சமாளித்து, அவள் சொன்னதும் உடனே நான் இரு கைகளை வணங்கி,

"ஹாய்...நான் ராமு..."

என்னை காப்பாற்றிய,வணக்கம் சொல்லும் தமிழ் கலாச்சாரம்-வாழ்க!

"ராமு....நீங்க எங்க வேலை செய்யுறீங்க?"

அவள் 'சார்' என்பதிலிருந்து 'ராமு' என்று உரிமையோடு அழைத்தது எனக்கு ஆச்சிரியமாய் இருந்தது.....

(பகுதி 2)

Feb 23, 2009

என் வாழ்த்துகள் to AR ஜி! jai ho!!

the man who made every indian happy, the man who made every tamilan proud- that is AR!

எனக்கு அப்போது வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருந்தது காலையில். 10 மணி அளவில் அவ்வளவு ஸ் எம் ஸ் வந்து குவிந்தது எனக்கு! எல்லாம் ஏ ஆர் ஜெயித்த சந்தோஷம்!

மேடையில் தமிழில் பேசினார் என்பதை கேட்ட போது உள்ளம் வானம் வரை சென்றுவந்தது!

எனக்கு இசையில் ஆர்வம் வந்ததற்கும் keyboard வாசிக்க ஒரு inspirational sourceஆக இருந்தவர் ஏ ஆர்! அவருக்கு என் வாழ்த்துகள்!! jai ho!!

ஸ்லம்டாக் மில்லியனர் படம் குழுவினருக்கும் என் வாழ்த்துகள்!!

Feb 20, 2009

ரெண்டு பிள்ளைகளின் அம்மாவே, ஐ லவ் யூ!

வாங்கி வந்த செய்தித்தாளையும் காய்கறிகளையும் மேசையில் வைத்தார் சங்கர். பூஜை அறையில் ஒலித்து கொண்டிருந்த முருகன் சாமி பாடலை நிறுத்திவிட்டு, ஹாலில் இருந்த hi-fi setல் 'where is the party tonight' பாடலை போட்டார். பூனை உருட்டுவது போல் சிடிக்களை உருட்டி எடுக்கும் சத்தம் கேட்ட மாலதி சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார்,

"யாருது... அங்க? பூனை உருட்டற மாதிரி எத உருட்டிக்கிட்டு இருக்க?"

சங்கர் பதில் அளித்தார் "நான் தான் டி !" என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

மாலதி சமையலறையிலிருந்து எட்டி பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலைகளை தொடர்ந்தார்.

"அட நீங்களா? நான் சத்யாவோ, சாந்தியோ ஏதோ பண்றாங்கன்னு நினைச்சேன்.....அது இருக்கட்டும்.... என்ன சொன்னீங்க, டி யா?

அதற்குள் சங்கர் சமையலறையின் நுழைவு வாசலில் நின்று மாலதி பேசுவதை கேட்டார்.

"டி போட்டு பேசுற அளவுக்கு தைரியம் வந்தாச்சா...ம்ம்ம்...இன்னிக்கு 'டி' யும் கிடையாது, காபியையும் கிடையாது." என்று சொன்னபடி வெண்டைக்காயை வெட்டினார்.

"ஐயோ சாரி டி....ச்சி.. ஐ மின் சாரி மா...சும்மா கூப்பிட்டு பாத்தேன்.." என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு புன்னகையிட்டார்.

"ஆமா.... சத்யாவும், சாந்தியும் எங்க?" தொடர்ந்தார் சங்கர்.

"ரெண்டு பேரும் கீழே விளையாட போய் இருக்குதுங்க..." என்றபடி carrotயை வெட்ட ஆரம்பித்தார் மாலதி.

"ஓ...அப்படியே...இன்னிக்கு என்ன சமையல்?" வெட்டி வைத்திருந்த carrotயை வாயில் போட்டபடி கேட்டார் சங்கர்.

"சாம்பார்...வெண்டைக்காய் பொரியல், carrot salad."

"ம்ம்ம்.... கோழி, கருவாடு... இப்படி எனக்கு பிடிச்ச மாதிரி ஒன்னுமில்லையா..." இழுத்தார் சங்கர், மாலதி முகத்தை பார்த்தவாறு.

தன் வேலையில் மும்முரமாக இருந்தவள் சங்கரை ஒரு கணம் பார்த்து முறைத்து, "ச்சி.... வெள்ளிக்கிழமை போய்...இப்படி அசைவம் சாப்பிடுவாங்களா... ?"

மாலதி பக்கத்தில் நின்ற சங்கர், கொஞ்சம் அவள் பின்னாடி சென்று மாலதியை கட்டிபிடித்து கொஞ்சலுடன் கெஞ்சினார் " சாப்பாட்டுல அசைவம் வேண்டாம்... மத்ததக்கு அசைவம் கிடைக்குமா?" தன் கன்னத்தை மாலதி கழுத்தோரத்தில் உரசினார்.

"ஐயோ...ச்சே...விடுங்க... என்னது காலங்காத்தால...இப்படி பண்றீங்க?" என்று மாலதி சங்கரை பின்னாடி தள்ள முயற்சித்தார். ஒன்னும் அசைவதுபோல் தெரியவில்லை, சங்கர்!

"என்னைய கொஞ்சம் விடுங்களேன்...ப்ளீஸ்....இப்படி செஞ்சா என் வேலைய நான் எப்படி பாக்குறது?" மீண்டும் கெஞ்சினார் மாலதி.

"குழந்தைங்க வந்துட போதுங்க..."

"யாரு வந்தாலும் சரி.. உன்னைய விடுற மாதிரி இல்ல...." சிரித்தார் சங்கர்.

மாலதியின் காதோரம் நுகர்ந்தபடி கேட்டார் "ம்ம்....வாசம் தூக்குது மா... எப்படி மா இப்படி?"

"அத நீங்க hamam சோப் கம்பெனிக்காரன்கிட்ட கேக்க வேண்டிய கேள்வி" என்று மாலதி பதில் அளித்தவுடனே பிடியிலிருந்து மாலதியை விட்டு கைகளை அகல தட்டி சிரித்தார்.

"இது தான் மால்ஸ்... இது தான்... இந்த காமெடி சென்ஸ் தான்... உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது...not many women have this kind of comedy sense u know."

"வயத்து வலியில கத்துற மாதிரி ஒரு பாட்ட போட்டுவிட்டு வந்தீங்களே... அத செத்த நேரம் off பண்றீங்களா...கேக்க சகிக்கல...." மாலதி கடாயில் எண்ணெய் ஊற்றினார்.

"இது தான் மால்ஸ்... இன்னிக்கு ஹாட் சாங்... நீ சரியான பழைய பஞ்சாங்கம்." மாலதியின் கன்னத்தில் செல்லமாக தட்டினார்.

"ஓ... உங்களுக்கு இன்னும் புது மாப்பிள்ளன்னு நினைப்போ.... நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம்..." கடுகை எண்ணெயில் போட்டார் மாலதி.

"எனக்கு என்ன குறைச்சல்.... அழகான குடும்பம்...எப்போதுமே அழகா தெரியுற மனைவி...உன் அன்பு, பாசம்... ஒரு மனுஷனுக்கு வேற என்ன வேணும். "

குழம்பு வைக்க தேவையான பொருட்களை வரிசையாக கடாயில் போட்டு குழம்பு செய்து முடித்தார். நெருப்பு புகையை கைகளால் விலகிவிட்டு இரும்பினார். மாலதி தலையில் லேசாக தட்டி, அவள் கையை தன் நெஞ்சில் வைத்தார் சங்கர்.

"எனக்கு மட்டும் ஒரு time machine இருந்தா...... " என்றார் சங்கர்.

"இருந்தா...?" தன் புருவங்களை உயர்த்தி குழப்பத்துடன் மாலதி.

"உன்னைய மறுபடியும் பொண்ணு கேக்க ஆசை... இப்படி உன் கையை பிடிச்சுகிட்டே...."

சத்தம் போட்டு சிரித்தார் மாலதி. "இப்படி வேற உங்களுக்கு ஆசையா? போச்சு போ... உளற ஆரம்பிச்சுட்டீங்களா... நேத்திக்கு மொட்டைமாடிக்கு அவசரமா ஓடுனீங்களே பிரண்ஸ பாக்கனும்னு... தண்ணிகின்னி அடிச்சுட்டீங்களா என்ன?"

"இது உளறல் இல்ல காதல்!"

"சரி ரைட்டு... confirmமா அடிச்சு இருக்கீங்க!" என்று சிரித்து கொண்டே மாலதி சொன்னார். அவள் நகைச்சுவையாக பேசியதை ரசித்தார் சங்கர்.

"தண்ணிகின்னி ஒன்னும் அடிக்கல...நாங்க. இன்னிக்கு valentine's day ஆச்சே..அதுக்கு என்ன gift பண்ணி பொண்டாட்டிகளை மயக்கலாம்னு ஒரு discussion."

விளையாடிவிட்டு மேலே வந்த மூன்று வயது சத்யா தன் மழலை பேச்சால், " பாட்டி, எனக்கு பசிக்குது...." என்று வீட்டிற்குள் நுழைந்தான். தன் அக்கா சாந்தி கையில் ஒரு வாழ்த்து அட்டையுடன் "தாத்தா, this is for you. happy valentine's day." என்றாள்.

அவளை அப்படியே தூக்கி முத்தமிட்டு "thanks my little angel." என்றார் சங்கர்.

தொலைப்பேசி மணி ஒலித்தது. அதை எடுத்து பேசினார் மாலதி.

மறுமுனையில்,

"அம்மா, happy valentine's day. அப்பா உங்களுக்கு என்ன கொடுத்து அசத்தினாரு?" சிரித்தான் மாலதியின் மூத்த மகன்.

"அம்மா... இன்னிக்கு ஒரு special dinner outing at cvias resturant. it's valentine's day special. நம்ம எல்லாரும் போறோம். ஆபிஸ் முடிஞ்சு நானும் சுந்தரியும் அங்க வந்துடுறோம். தம்பிக்கிட்டையும் சொல்லிட்டேன். குழந்தைங்கள அழைச்சுட்டு அங்க வந்துடுங்க... see u later மா." சொல்லி முடித்தார்.

தன் மகன் ஏற்பாடு செய்து இருப்பதை சங்கரிடம் கூறினார் மகிழ்ச்சியுடன்.

"என்னங்க...நீங்க என்ன கொடுக்க போறீங்க" ஆசையுடன் மாலதி.

"எல்லாத்தையும் தந்தவளே, உன்கிட்ட ஒன்னே ஒன்னு தான் சொல்லமுடியும்." சங்கர் புதிர் போட்டார்.

"இரண்டு பிள்ளைகளின் அம்மாவே, இரண்டு குழந்தைகளுக்கு பாட்டியே...." சொன்னவர் மாலதியின் காது அருகே சென்று அமைதியான குரலில்

"ஐ லவ் யூ!" என்றார்.

*** முற்றும்***

Feb 16, 2009

கணக்கு பண்ணலாம் வாங்க...

ஆஸ்கார் விருதுகள் வரும் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு. (இங்க ஊர் டைம் படி) அடுத்த வாரம் காலேஜ் லீவு. சரி, நிம்மதியா, ஜாலியா உட்கார்ந்து பாக்கலாம்னு நினைச்சா...இன்னிக்கு maths professor

"students, we will have our extra lecture on monday 1030-1230" சொல்லி என் சாபத்தை வாங்கி கொண்டார்.

முக்கியமா ஆஸ்கார் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு காரணம்- ஸ்லம்டாக் மில்லியனேர். படம் தனிப்பட்ட முறையில் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இருந்தாலும் ஒரு ஆசை, ஸ்லம்டாக் மில்லியனேர் படம் ஆஸ்காரை தட்டி சென்றுவிடதா என்று! படத்தை பார்த்த என் சீன நண்பர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். 'இந்த வருஷம் கண்டிப்பா இந்தியா போகனும்' என்று அவர்கள் கூறும்போது, உள்ளூர ஏதோ ஒரு ஆனந்தம்!

இப்படம் 10 விருதுகளுக்கு nominate ஆகிவுள்ளது.

best adapted screenplay
cinematography
sound mixing
sound editing
film editing
best picture
directing
best original score
music- jai ho
music saya

கணக்கு பண்ணி பார்த்தால், ஒவ்வொரு பிரிவிலும் சில படங்கள் உள்ளன, ஆக probability படி பார்த்தால்.

best adapted screenplay- 20% chance of winning
cinematography- 20 % chance of winning
sound mixing- 20 % " "
sound editing 20%" "
film editing- 20% chance of winning
best picture- 20% chance of winning
directing- 20 % " "
best original score- 20% chance of winning
music- jai ho & music- o saya : 66 % chance of winning

ok am really excited abt it!!!! ஆனா என்ன, நேரடி ஒளிபரப்பை பார்க்க முடியாது :(

Feb 15, 2009

நான் கடவுள்- நான் தான் கடவுள்

நான் rowdy! நான் rowdy! நான் rowdy! என்று வடிவேலு சொல்வது போல் ஆகிவிட்டது இந்த 'நான் கடவுள்' படம். சொன்னாதான் புரியது மேட்டர்!

என்னய்யா படம் எடுக்குறான்! சத்தியமா ஒன்னு புரியல! இப்போ எல்லாம் தமிழ் படங்கள் பாக்கும்போது "ச்சே, இனி தமிழ் படங்களே பாக்ககூடாது'னு முடிவு எடுக்க வைக்கும் படங்கள் தான் அதிகமா வருது. அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டது நான் கடவுள். அப்பரம் ஏன் படம் பாக்குறேன்னு நீங்க கேட்பீங்க?

என்ன பண்ண, என் கிரரரரகம் இவயங்ககூட மாட்டிகிட்டேன்!!!

பிதாமகன் படத்துல சேர்க்க முடியாத காட்சிகள ஒன்று இணைத்து ஒரு படம் எடுத்தால், அதற்கு பெயர் ஒரு படமா? ஹீரோ லூசுத்தனமா ஓடுறது, பாய்றது...அடிக்கறது... ஏன் ஏன்? பாலா, why?

why blood? sammmmmeeeee blood!

ஒரு மண்ணும் இல்லாம படம் எடுக்குறாங்க. ச்சே, அதுக்கு பீச்சுக்கு போய் இருந்தாகூட ஏதாச்சு மண்ண பாத்து இருக்கலாம்!

பிச்சைக்காரர்களை காட்டியது மனதை நெகிழ வைத்தது. ஆனா, அத தவிர வேறு எதுவுமே இல்ல.

ஓ ஓ நாங்க எந்த கருத்தும் சொல்லவரல.... அப்படின்னு நீங்க சொல்வதை ஏத்து கொள்ள முடியாது. கடவுள் மாதிரி ஒரு controversial topic எடுத்துகிட்டாலே ஏதோ ஒன்னு சொல்லவறீங்க தான் அர்த்தம்!

சில படத்துல நடிச்சு கொல்றான்!
நீங்க, கடிச்சு கொல்றீங்க....

இப்படிப்பட்ட படங்கள பார்த்து இன்னும் உசுரோட இருக்கிற நாங்க தான் உண்மையான கடவுள்!

வாழ இயலாதவங்களுக்கு கொடுக்குற மரணம்- தவம்! இப்படம் சொல்லுது.

அப்போ....ம்ம்ம்... என் கணக்கு lecturer தான் நான் கடவுள்! ஏன்னா... எங்களுக்கு செய்ய முடியாதுன்னு தெரிஞ்சும் எங்களுக்கு assignment கொடுத்து கொல்றாரே, அப்போ அவர் தானே கடவுள்! ஹிஹிஹி....:)

Feb 11, 2009

உன் வெட்கங்களை வேடிக்கை பார்த்தேன்!

இனி
குளியலறையில் எதற்கு டி
துண்டும் சோப்பும்?
நீயும் உன் வெட்கங்களும்
போதுமே!


காலை, மதியம், இரவு
மூன்று வேளையும்
கொடுக்க வேண்டும்.
மருந்து இல்லடா விருந்து.
நான் சொல்வது
உன் உதடுகளுக்கும் விரல்களுக்கும்
புரியும்!நீ செய்த குறும்புகள்
மறுபடியும் என் வெட்கங்களை
தீண்டியது,
காலை வேளையில் நான்
தேடிய ஸ்டிக்கர் பொட்டு,
உன் உதட்டோரத்தில்
கண்டபோது!


'நீ இல்லாமல் நானில்லை
நான் இல்லாமல் நீயில்லை'
என்று மௌன மொழியில்
பேசிகொண்டன
நம் உதடுகள்.நீ இருக்கையில்
தலையணைக்கும்
போர்வைக்கும்
என்ன வேலை
படுக்கையில்?


காலையிலேயே உன் இம்சையை
ஆரம்பிக்கிறாயே,
வேலைக்கு நேரம் ஆச்சு
என்று என்னை விரட்டுகிறாய்.
நான் என்ன செய்ய?
ஆபிஸுக்கு கிளம்பும்போதும்கூட
நீ அழகாய்
இருக்கிறாயே!உன் தேகம் காகிதமானால்
என் உதடு பேனாவானால்,
நிச்சயம்
எழுதுவேன்டா
ஒரு கவிதை!


உன் கண்களும் என் கண்களும்
சந்தித்த வேளையில்
நம் விரல்கள்
சேர்ந்து கொண்டன.
உதடுகள், என்ன பாவம் செய்தன?
அதன் ஜோடியை
கொடுத்துவிடேன், ப்ளீஸ்!

நீ வெட்கப்பட்டு சிரிக்கும்போது
'அட இவனுக்குகூட
வெட்கப்பட தெரியுமா?
என்று என் வெட்கங்கள்
உன்னை பார்த்து
சிரிக்கின்றன!* இது என் 50வது காதல் கவிதை! :)

அனைவருக்கும் என் அன்பர் தின/காதலர் தின நல்வாழ்த்துகள்!

Feb 10, 2009

the real slumdog millionaire

அட இவ்வளவுதானா-ஸ்லம்டாக் மில்லியனேர்

முதலில் இந்த படத்தின் online linkயை எனக்கு கொடுத்து உதவிய வினையூக்கிக்கு மற்றும் சஞ்சய் அண்ணாவுக்கும் நன்றி!:)

பரபரப்புக்கு பஞ்சமில்லை. இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து தேடி கண்டுபிடித்து பார்த்தேன். படம் பார்த்தபிறகு 'அட ச்சே, இவ்வளவு தானா?' என்றது மனம்.

முதல் பாதி, அருமை. விறுவிறுப்பு இருந்தது. ஆனா, இரண்டாம் பாதியில் ரொம்பவே பாலிவுட் ஸ்டைல்! இரயில் நிலையத்தில் கிளைமெக்ஸ், அதுக்கு அப்பரம் ஒரு டான்ஸ்! அட பாவமே!

திரைக்கதை வித்தயாசமாக தோன்றினாலும், கொஞ்ச நேரத்திற்கு அப்பரம் சலிப்பை தட்டியது. ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன. உதராணத்திற்கு, தூப்பாக்கியை கண்டுபிடித்தவர் யார்? என்ற கேள்விக்கு, ஹீரோவின் அண்ணன் ஒரு முறை தூப்பாக்கி கொண்டு வில்லன்களை சுடுவதால், அதற்கு பதில் தெரியுமாம்! நம்ப முடியவில்லை!!!!

வசனங்கள் நல்லா இருந்துச்சு. குழந்தைகளின் நடிப்பு டாப்! ஏனோ தெரியவில்லை இக்குழந்தைகளுக்கு அதிகப்படியான விருதுகள் கிடைக்கவில்லை. சொல்ல போனால், இவர்களுக்கு தான் விருதுகள் வந்து குவிந்து இருக்க வேண்டும்.

ஒரு சில காட்சிகள் கைதட்ட வைத்தது. அமிதாப் பச்சன் வருகிறார் என்று ஊரே சத்தம்போடுகிறது. சிறு வயது ஹீரோ கழிவறையில் இருக்கிறார். ஆனால், அண்ணன் வெளியே உள்ள கதவை பூட்டிவிடுகிறார். வெறித்தனமான அபிதாப் பச்சனின் ரசிகரான ஹீரோ வெளியே வர முடியாமல் தவிக்கிறார்.

என்ன செய்வது என்று தெரியாமல், ஒன்றை முடிவெடுக்கிறார். கழிவறையில் கீழே தான் ஒரே வழி. ஆனால், அங்கு தான் பலரின் மலம் கிடக்கிறது. அதையும் பாராமல் ஹீரோ அதில் விழுந்து வெளியே வருகிறார், தனது ஹீரோவை பார்க்க! அசத்தலான சிந்தனை, நடிப்பு!

இப்படி ஒரு சில அருமையான காட்சிகள். அப்படியே documentary film ஸ்டைலில் படத்தை எடுத்து சென்று இருந்தால், சூப்பரா இருந்திருக்கும். (ஆனா...ஆஸ்கார் அளவுக்கு வந்திருக்குமோ தெரியுல...)

நாவலின் அடிப்படையில் வந்த கதை என்பதால், அந்த நாவலை படிக்க ஆர்வம் வந்துள்ளது.

ஆனா, இன்னொரு ஆச்சிரியம். இந்த படமா ஆஸ்காருக்கு போவுது?

அப்படி என்றால், மணிரத்னம் எடுத்த பாதி படங்கள் ஆஸ்காரை வென்று இருக்க வேண்டுமே! ஏ ஆரின் பிரமிக்க வைத்த எத்தனையோ பாடல்கள் இருக்க, இந்த படம் மூலம் அவருக்கு ஒரு ஆஸ்கார் கிடைக்க போவது என்று நினைத்தால், சந்தோஷ கலந்த வருத்தம் தான் மிஞ்சுகிறது.

சரி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை,

ஆஸ்காரை தொட்டுவிட்டது!- ஒரு இந்தியனாக எனக்கு பெருமை

ஏ ஆருக்கு ஆஸ்கார் கிடைத்தால், ஒரு தமிழனாக இன்னும் பெருமைப்பட்டு கொள்வேன்!:)

Feb 4, 2009

கிரிஷுக்கும் சங்கீதாவுக்கும் கல்யாணம்!


பாடகர் கிரிஷுக்கும் சங்கீதாவுக்கும் கல்யாணம்! கிரிஷுக்கு என்றே ஒரு பெரிய ரசிகை கூட்டம் இருக்குது இங்க. இவருக்கு கல்யாணம் ஆன பிறகு, நிறைய பொண்ணுங்க 'எங்கிருந்தாலும் நீ வாழ்க'ன்னு சோகமா பாடிகிட்டு திரியுறாங்க. அழுவாத குறை தான்!


ஆனா, கிரிஷ் அப்பாவுக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவு இஷ்டம் இல்லையாம். கல்யாணத்துக்குகூட வரவில்லை! (ஒரு படங்களில்கூட அவரை காணும்...)


ம்ம்...என்னமோ நடக்குது...மர்மமா இருக்குது!

Feb 3, 2009

சிலம்பரசனின் slumdog millionaire

ஐயோ ஐயோ... எனக்கு சிப்பு தான் வருது!

slumdog millionaire படம் தமிழாக்கம் செய்து, வரும் feb 14th வெளியீடு காண போகிறது. அதில் ஹீரோவுக்கு குரல் கொடுத்தவர் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடும் சிலம்பரசன்!

ஏன் இவர்? எதுக்கு? எப்படி? ஐயோ....அப்படின்னு தலையில் அடித்து கொள்பவர்களே, சாந்தி! சாந்தி!

ஆஸ்கார் விருது வாங்கும் தருவாயில் இருக்கும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சிலம்பரசன் இதில் வேற இருக்கிறார்...

ஆஸ்கார் மட்டும் ஜெயிச்சிட்டோம்... அப்பரம் அவ்வளவு தான்!என்னால தான் ஜெயிச்சிருக்கோம்ன்னு பேட்டி பேட்டியா கொடுத்தாலும் கொடுப்பாரே!:(