Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Apr 28, 2015

கண்ண தொறக்கனும் சாமி.......

சமீபத்தில் கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த சில விஷயங்கள் ரொம்ப நெருடலா இருந்துச்சு. இப்படி தான் நம்ம சாமி கும்பிடுறோமா என யோசிக்கும்போது சிரிப்பா இருக்கு!



1) சாமி கும்பிடாதே, பிச்சை எடு!நான் சின்ன வயதில் (ரெண்டு, மூணு வயதில்), மெழுகுவத்தி எரிவதை பார்த்தால், உடனே கை கூப்பி 'சாமி கும்பிடுறேன்' என கண்களை மூடி கொள்வேன். உண்மையிலேயே சாமியிடம் எப்படி கும்பிடுவது, என்ன செய்ய வேண்டும் என பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களா என தெரிவதில்லை.

சில நேரங்களில், பெற்றோர்களுக்கே உண்மையான வழிபாடு முறைகள் தெரிவதில்லை. 


போன வாரம், கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த ஒரு சம்பவம். ஒரு அம்மா, தனது பிள்ளையிடம் (அவனுக்கு கிட்டதட்ட 11 அல்லது 12 வயது இருக்கும்)..."சரியா கும்பிடு" என்றார். 

பிள்ளை: எப்படி மா கும்பிடுறது?

அம்மா: நான் நல்லா இருக்கனும். பரிட்சையில நல்லா செய்யனும். நல்லா மார்க் வாங்கனும். அடுத்த வருஷம் நல்ல ஸ்கூலுக்கு போகனும்-னு கும்பிடு டா!


நமது பிள்ளைகளிடம் ஏன் பிச்சை எடுக்க கத்து கொடுக்குறோம்?? 


2) இது நம்ம ஏரியா, உள்ள வராதே!

இத பத்தி ஏற்கனவே ஒரு தடவ சொல்லி இருக்கேனு நினைக்குறேன். கோயில்களில் ஏன் 'tourists are not allowed beyond this point" என்ற அறிவிப்பு பலுகை இருக்குனு தெரியல. போன வாரம் சென்ற கோயிலில் இல்லை. ஆனா, சில கோயில் வாசலிலே இருக்கு. சில கோயிலில் சாமி சிலை வரைக்கும் போகலாமா அதுக்கு அப்பரம் போக கூடாதாம்.


நம்ம தானே 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' னு பெருமையா மார்தட்டி கொள்கிறோம்.
எம்மதமும் சம்மதம் என்றும் நம்ம தானே சொல்லிகிட்டு இருக்கோம். அப்பரம் ஏன் இந்த பாகுபாடு.
உன் தண்ணி என் தண்ணி, உன் காற்று என் காற்று, உன் சாமி என் சாமி-னு சொல்லி ஏன் இந்த பிரிவினை?? எனக்கு புரியல.


- "ஓ அவங்க சுத்தமா குளிச்சிட்டு வந்து இருக்காங்களானு தெரியாது... அதனால உள்ள விட முடியாது?" அப்படினு ஒரு ஐயர் என்னிடம் பதில் சொன்னார்.  (வழிபடும் போகும் இந்துக்கள் அனைவரும் குளிச்சுட்டு வந்தாங்கனு உங்களால சொல்ல முடியுமா?)-


"ஓ....அவங்க கால் தெரியுற மாதிரி காற்சட்டை போட்டு வருவாங்க...." (நம்ம பொண்ணுக்கு முழு முதுகு தெரியுற மாதிரி சேலை அணிந்து வந்தால் தப்பு இல்ல??)

- "ஓ....அவங்க கண்டபடி புகைப்படம் எடுப்பாங்க." (யோவ், நம்ம ஆளுங்க, முழு படமே ரிலிஸ் பண்ணற அளவுக்கு கைபேசியில் வீடியோ எடுக்கலாம்....அது தப்பு இல்ல??)




3) முடி இல்ல, முடிவு எடுத்தேன். 

ரெண்டு  பக்தர்கள். 55 வயது ஆண்ட்டிஸ். தனது மகளின் திருமண பற்றி 'அனுமான்' சாமி பக்கத்துல நின்னு பேசிகிட்டு இருந்தாங்க.....இருந்துச்சுங்க!



ஆண்ட்டி 1: என் பொண்ணுக்கு மாப்பிள்ள பார்த்தோம்.

ஆண்ட்டி 2: from?

ஆண்ட்டி 1: பையன் கனடாவுல இருக்கான் (குரலில் சற்று பெருமை)

ஆண்ட்டி 2: முடிவு ஆச்சா?

ஆண்ட்டி 1: no, we rejected it.

ஆண்ட்டி 2: oh no. why?

ஆண்ட்டி 1: பையனுக்கு முடி இல்ல.

********************************************************************************
 கண்ண தொறக்கனும் சாமி இவங்க எல்லாரும் ஏன் இப்படி இருக்காங்க???
நல்ல புத்தியை கொடு சாமி. கண்ண சீக்கிரம் தொறங்க சாமி! 

Jan 28, 2013

முருகா? ஊறுகா? (தைப்பூசம் ஸ்பெஷல்)

தைப்பூசம் திருவிழா சிங்கையிலும் மலேசியாவிலும் ரொம்ப விமர்சையாக கொண்டாடப்படும். இந்த வருஷம் சனிக்கிழமை வந்ததால், யப்பா!!!! கூட்டம் கூட்டம் கூட்டம்!!! ஒரு முருகன் கோயில் இருந்து இன்னொரு கோயிலுக்கு கிட்டதட்ட 8கிலோ மீட்டர் நடக்கனும்.

சனி இரவு 11 மணி அளவில் பால் குடம் தூக்கி சென்றவர்கள் ஏராளம். அக்கா, பக்திமான் என்பதால் பால் குடம் தூக்கி சென்றார். தங்கைக்கு இந்த வருஷம் result வருவதால் அவரும் பால் குடம் தூக்கி சென்றார். நம்ம மட்டும் சும்மா இருந்தால், வீட்டில் சோறு கிடைக்காது என்பதால் நானும் தூக்கி சென்றேன் ஒரு பால் குடத்தை... பால் குஜாவை! அக்கா, தங்கை, அப்பா அனைவரும் தொடங்கும் இடத்தில் இருந்து நடக்க ஆரம்பித்தார்கள். அம்மாவால் அதிக தூரம் நடக்க முடியாது என்பதால் நானும் அவரும் பாதி வழியில் அவர்களுக்காக காத்து கொண்டிருந்தோம். (இதுக்கு தான்..இந்த பில்டப்- பா-னு கேட்காதீங்க!!)

பக்தி-விரதம்-பூஜை-நேர்த்திகடன் - இதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. ஆனால், கடவுள் நம்பிக்கை உண்டு. எனக்கு தெரிந்த ஒரே மந்திரம்
"போடா....அந்த ஆண்டவனே நம்ம பக்கம்". நான் கடவுளை வணங்குகிறேன் என்று காட்டி கொள்வதில் அதிகம் ஆர்வம் கிடையாது. இந்த அறக்கருத்துகளை சொன்னால், அரை விழும் என்பதால் 'ஊருடன் ஒத்து' வாழ்ந்தேன் தைப்பூசம் அன்று.

அக்கா, தங்கை, அப்பா நடந்து வரும்போது விடியற்காலை 2 ஆகிவிட்டது. கோயில் அருகே கூட்டநெரிசல் அதிகமானது. ரொம்ப நேரம் காத்து இருந்தோம்!

அப்போது நடந்து சில காமெடிகள்.

1) சரி வேண்டுதல் பெரிசா ஒன்னுமில்ல எனக்கு. இருந்தாலும், கடவுள்கிட்ட நல்ல ஆரோக்கியத்திற்காக வேண்டினேன். ஆனால், 2 மணி நேரத்துக்கு மேல் காத்து கொண்டிருந்தமையால் முதுகு வலியே வந்துவிட்டது!:))

2) கோயில் அருகே வந்தபோது விழா அமைப்பாளர்கள் 'பக்தர்கள் விரைவாக நேர்த்திகடனை செலுத்திவிட்டு போங்க.' என்றபோது பக்கத்தில் நின்றவர்கள்

'அடேங்கப்பா, முதல கோயில்குள்ள விடுங்க சாமி' என்றனர்.

3) 'ஓம் முருகா' என்று ஒருத்தர் ஒலிபெருக்கியில் சொன்ன போது, எங்கள் காதுகளில் 'ஓம் ஊறுகா' என்று கேட்க குபீர் சிரிப்பு வந்துவிட்டது.

4) பக்தர்கள் நடக்கும் பாதையில் ஒரு அறிவிப்பு பலகை- "மது அருந்திவிட்டு செல்ல வேண்டாம். புகை பிடிக்காமல் இருக்கவும்"

ஹாஹாஹா....பக்தி என்ற பெயரில் நீங்கள் அடிக்கும் கூத்துக்கு இது ஒரு பதிலடி!

5) இரண்டு வெள்ளைக்காரர்கள் கூட்டத்தில் மாட்டிகொண்டனர். சும்மா நடந்துவிட்டு கோயிலுக்குள்ள போகலாம்னு நினைச்சு இருப்பாங்க போலும். ஒரு மணி நேரத்துக்கு மேல் நின்றதால், தாங்க முடியாமல் அவர்கள் கூட்டத்தில் மோதி எப்படியோ 'தப்பி' சென்றனர்.

*********************
மனதை கடவுள் என்று நினைச்சு நல்லது பண்ணாலே தினம் தினம் தைப்பூச திருவிழா தான்!!

Jun 13, 2008

என் அறைக்கும் கடவுள் வருவாரா?

'அறை எண் 305ல் கடவுள்' படத்தை இரண்டு நாளைக்கு முன்னாடி தான் பார்த்தேன். ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவில் இல்லாவிட்டாலும், ஒரு சில கருத்துகள் எனக்கு பிடிச்சிருந்தது.


பிரகாஷ்ராஜ் கடவுள் வேடத்தில் நல்லாவே செய்துள்ளார். அவர் சொன்ன ஒரு விஷயம்- கடவுள் இதை செய்யனும் அதை செய்யனும் என்று மனிதர்களிடம் ஒரு போதும் சொன்னதில்லை. ஆனால், நாம் தான் தேவையில்லாமல் பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். கடவுளிடம் நான் கேட்க விருப்பப்படும் சில கேள்விகள்...


*வெள்ளிக்கிழமை ஏன் சைவமாக இருக்கனும்?


*சித்திரை மாதத்தில் பிள்ளை பிறந்தால் ஆகாது என்கிறார்களே, அது ஏன்?

*செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு புது காரியத்தை தொடங்கவேண்டாம் என்கிறார்களே, அது ஏன்?


*ஏன் புரட்டாசி மாதம் சைவமாக விரதம் இருக்கனும்?


என்னை பொருத்த அளவில், இதில் பல விஷயங்கள் மனிதர்களே உருவாக்கி கொண்டவை. ஆனால், அதற்கு ஏன் கடவுளுக்கு செய்கிறோம் என்கிறார்கள்? கடவுள் இப்படி செய்ய சொன்னாரா? என்பது தான் என் கேள்வி.


வெள்ளிக்கிழமை சைவமாக இருந்து கோயிலுக்கு சென்று வழிபட்டால், மனதிருப்தி கிடைக்கும், மனம் சந்தோஷம் அடையும் என்கிறார்கள் பலர். இது இவர்களின் நம்பிக்கை.


அதே போல, அதே வெள்ளிக்கிழமை, ஒரு அஞ்சப்பர் கடைக்கு சென்று ஒரு கோழி பிரியாணி உண்டால், எனக்கு மனதிருப்தி வருகிறது. மனம் சந்தோஷம் அடைகிறது. அப்ப, சந்தோஷம் இருக்கும் இடம் கடவுள் என்றால், இதுவும் கடவுள் இருக்கும் இடம் தானே!! இது என் நம்பிக்கை.


என் ஆதங்கம், என்னவென்றால், அவரவருக்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஒருவரின் நம்பிக்கையை இன்னொருவரின் மேல் திணிக்கவேண்டாம் என்பதே என் ஆசை. வீட்டுல இதை சொன்னால், பல கருத்து வேறுபாடுகள் வெடிக்கும். :))


நான் ஒரு பயங்கரமான அசைவ பிரியர். ஆனா, கொடுமை பாருங்க, நான் பிறந்தது புரட்டாசி மாதத்தில். வீட்டில் புரட்டாசி விரதம் இருப்பார்கள். சுத்த சைவமாக இருப்பார்கள். நான் பிறந்தது முதல் இன்றுவரை, எனக்கும் விருப்பமான உணவை(அசைவ உணவு) என் பிறந்தநாள் அன்று சாப்பிட்டதே இல்ல!! சிறு வயதாக இருந்தபோது, இதை நினைத்து ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கேன். இதை பத்தி சொல்லும்போது, நிறைய பேர் நினைக்கலாம் "இதலா சின்ன விஷயம்.. இதுக்கு போய்.. "




ஆனா, நினைத்து பாருங்க, நமக்கென்ற ஒரு நாள்(பிறந்த நாள்), அன்றுகூட விருப்பமான உணவை உண்ணமுடியவில்லை என்றால், விரதம் எதற்கு?? கடவுளின் பெயரால் விரதம் எதற்கு??


இப்படி பல கேள்விகளை வீசி, கடவுளிடம் பதில் வாங்க வேண்டும். அறை எண் 305ல் கடவுள் படத்தை பார்த்த பிறகு, என் மனதில் எழுந்த ஒரு கேள்வி,


"என் அறைக்கும் கடவுள் வருவாரா?"


படத்தில் பிரகாஷ்ராஜ் கடவுள் வேடத்தில் வந்தார் படத்தில், ஆனால் என் அறைக்கு வருவது என்றால், இந்த உருவத்தில்







அல்லது இந்த உருவத்தில் வரவேண்டும்! ஒகே கடவுளே? ஹிஹி..