Dec 22, 2016

எங்கள் அண்ணன் ஜீவி, ஒரு Desi Hero!

என்ன தான் இந்த உலகமே எதிர்த்தாலும், எங்கள் அண்ணன், அதவாது Desi Hero, இந்த சின்ன வயதிலே இப்படிப்பட்ட மாபெரும் பட்டத்தை பெற்றது 'விசாரணை' படம் ஆஸ்கார்லிருந்து விடப்பட்ட துக்கத்தை போக்கியுள்ளது.  



எங்கள் தளபதியின் தத்துபிள்ளாய்
தாய்குலத்தின் செல்லபிள்ளை
தலயின் தங்கபிள்ளை , ஜீவி பிரகாஷ்! 

இவன் ர் பாடல் ஒன்னு சமீபத்தில் கேட்டுவிட்டு, தோழி ஒருத்தி இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லு என்று சவால் விட்டாள் அர்த்தமில்லாம.

எனக்கு சட்னு கோபம் வந்துட்டு. எப்படிப்பட்ட பாடலை புரியலேனு சொல்லிட்டா? 



அவளுக்கு விளக்கிகூறிய அர்த்தத்தை இங்கே பதிவு செய்துள்ளேன். 

இத்தாத்தா இத்தா 


இத்தா இத்தாத்தா



இத்தாத்தா இத்தா 


இத்தா இத்தாத்தா




இதை பிரித்து படிக்க வேண்டும்...



இத்தாத்தா-- இ + தாத்தா



இனி வருங்காலத்தில் நான் தாத்தாவாக 



போனாலும்,


இத்தா-- இ+ தா



இன்றுபோல் என்றுமே நீ



தாமாரை தான்.




 நீ அசி பீசுன்னா


நான் அட்டு பையந்தான்



நீ பிட்டு பிட்டா


சாண போட்டா

ஷார்ப்பானேன் நான்




அசி பீசு--- அசி என்றால் ATM.



பீசு-- மண்டை

ATM போல் உள்ள ஒன்னுமே இல்லாத மண்டை 


உடையவன் நான்,
அட்டு பையன்-- நான் ஒரு விளங்காத வெங்காயம்,
பிட்டு பிட்டா-- கொஞ்சம் கொஞ்சமா
சாண போட்டா--- இந்துத் தமிழர் இல்லங்களில் 


சாணம் இட்டு மெழுகுதல்என்ற வழக்கம் உள்ளது. 


அதாவது என்னை கழுவி கழுவி ஊத்தி,
ஷார்ப்பானேன் நான்--- நான் மனதளவில் உன்னால் 


பரிசுத்தமாக்கப்பட்டவன்



நீ டாலு கோல்டுதான்

நான் தார் ஷீட்டுதான்


நீ கட் அண்டு ரைட்டா



கண்ணடிச்சா த்தவளத்து நான்



டாலு கோல்டு--- ஜெய்பூர் அருகே உள்ள தங்க


சுரங்கபாதையின் பெயர் தான் டாலு.


ஆசியாவிலேயே மிக பெரிய சுரங்கபாதை, ஜீவி


வாய் போல்.


தார் ஷீட்டு-- சாலையில் போடப்படும் தார்.



கட் அண்டு ரைட்டா-- cut and right



கண்ணடிச்சா, த்தவளத்து நான்-- 



த்தவளத்து என்பவன் முகலாயர் ஆட்சி காலத்தில் 



இருந்த போர் படைவீரன். அவன் கிட்டதட்ட ஜீவி 


மாதிரி ஒரு முந்திரிகொட்டை. தான் ஒரு வீரன் 


என்றாலும், அந்த வேலைய விட்டுட்டு, அவ்வூரில்


நடக்கும் நாடக குழுவில் சேர்ந்து நடிக்க 


ஆரம்பித்தவன்.

தனக்கு தெரிந்த வேலையை செய்யாமல் மத்த 


வேலையில் இறங்குபவனை "த்தவளத்து" 


என்போம்.



சீனு சிலாக்கிதான்

டானு டுப்பாக்கிதான்

டார்லிங் உன்னால நான்


கன்பியூஸ் ஆனேனே.

சீனு சிலாக்கிதான்-- சிலாக்கியம் என்றால் சிறப்பு.
உன்னாலே ஒரு sceneகூட சிறப்பா வராம 

இருந்தாலும்,
டானு டுப்பாக்கிதான்-- இந்த Don ஒரு டப்பா


ஆகிபோனேனே!! (கவித கவித..)


டார்லிங் உன்னால கன்பியூஸ்-- darling, I am 


canfussed.



கானா கலீஜீம்மா

கும்மா குஜீலீம்மா

செம்ம லுக்குவிட்டா 


ஜில்பான்சும்மா


கானா கலீஜீம்மா--- சிப்பி இருக்குது முத்தும் 


இருக்குது



கும்மா குஜீலீம்மா--- திறந்து பார்க்க நேரம்


 இல்லடிராஜாத்தி



செம்ம லுக்குவிட்டா ஜில்பான்சும்மா-- 
சிந்தை

 இருக்குது சந்தம் இருக்குது

கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி


Nov 14, 2016

அச்சம் என்பது மடமையடா- மழை சாரலை ரசித்தபடியே கையில் ஒரு cappacino cup ஏந்தியவாறு...

ஜன்னல் ஓரமாய் நின்று, மழை சாரலை ரசித்தபடியே கையில் ஒரு cappacino cup ஏந்தியவாறு, உள்ளங்கையில் இதமாய்  காபி சூடு பரவ, அப்படியே இதழ் வரை கொண்டு போகும் காபி குவளையிலிருந்து ஆவி முகத்தில் படர, சூடு ஆற்றி குடிக்க, நுனி நாக்கில் சுவை படும்போது செம்மயா ஒரு உச்சபச்ச ஆனந்தம் ஒன்னு வரும் பாருங்க- அது தான் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் முதல் 50 நிமிடங்களின் சொர்க்கம். 

விண்ணை தாண்டி வருவாயா படத்தை 10 தடவ பார்த்து இருப்பேன். கௌதம் மேனனின் தீவிர ரசிகை இத கூட பண்ணலனா எப்படி? அதே 'ஹோசானா' தழுவுல் நிரம்பி வழிந்த முதல் 50 நிமிடங்களை அணுஅணுவாய் ரசித்தேன். அந்த 50 நிமிடங்களில் கிட்டதட்ட 4 பாட்டு வந்திருக்கும். ரகுமானின் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் ஒலி/ஒளி விருந்தாக இருந்தது.  பாகவதர் படம் மாதிரி, தொட்டதக்கெல்லாம் பாட்டு வந்தாலும்கூட , it is AR Rahman music man! அப்படினு மனசு பூரிப்பு அடைந்து படத்தை தொடர்ந்து பார்த்தேன், "my gautham is back!" என்று முணுமுணுத்தபடி. 




இடைவேளை வந்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் மாதிரி, அதுக்கு அப்பரம் படத்த காணும்.  'தள்ளி போகாதே' பாடல் ஆரம்பித்த காட்சியிலிருந்து, படம், கதை , திரைக்கதை- அனைத்தும் பிச்சி, கிழிஞ்சி, அவிழ்ந்து, உடைந்து ஒவ்வொன்றும் தள்ளி எங்கெங்கோ போச்சு! விண்ணை தாண்டி வருவாயா படத்துல ஒரு வசனம் வருமே- "காதல் நம்மள தாக்கனும். தலை கீழா போட்டு திருப்பனும்." இது தான் இரண்டாம் பாதில நடந்து கதை. இல்ல இல்ல. எனக்கு நடந்த சம்பவம்.

இரண்டாம் பாதில, ஏன் சண்டை? யாருக்கு சண்டை? எதுக்கு இந்த ஓட்டம்? யாரு இவங்களெல்லாம்? எங்க போறாங்க? இது எந்த ஊரு? என்ன நடக்குது?- தலை சொரிந்து பார்த்த அனுபவம் தான் இரண்டாம் பாதி. எந்த ஒரு தீவிர காரணமும் இல்லாமல் துரத்துவதெல்லாம், ஏற்ற கொள்ள முடியாத திரைக்கதை.

'kali' என்ற மலையாளம் படம். கிட்டதட்ட AYM மாதிரி தான். முதல் பாதி காதல், இரண்டாம் பாதி பரபரப்பு. இரவு நேரத்தில் சாலையோர கடையில் ஹீரோவும் ஹீரோயினும் சாப்பிட செல்ல, அங்க ரவுடிகளுக்கும் இவர்களுக்கும் சண்டை ஏற்பட, ரொம்ப இயல்பாய், யதார்த்தமாய், மனதை பதற வைக்கும் விதமாய் திரைக்கதையில் மின்னியது 'kali'. 
AYM கூட அப்படி அமைந்திருக்க வேண்டிய படம் தான். 


ஆனா, கௌதம் நம்மள பாட்ஷா தம்பி மாதிரி ஆகிட்டாரு!

"சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க...(நீ ஏன் இந்த மாதிரி படம் எடுத்தீங்க?)
சொல்லுங்க...."


500ரூபாய், 1000ரூபாய் நோட்டுக்களை தடை செய்த மாதிரி, கௌதம் படங்களில் 'voice over narration 'னை தடை செய்ய வேண்டும். ஆவூனா, பேசியே கதைய சொல்றாரு.   எண்ணெய் ஊற்றி தாளித்துவிடவும்-னு ஏதோ சமையல் குறிப்பு மாதிரி, கடைசில படத்தை ' voice over narration'ல் முடித்தது அநியாயம், கௌதம்.

A Director Makes Only One Movie in His Life. Then He Breaks It Into Pieces and Makes It Again.
- Jean Renoir





இந்த பொன்வார்த்தைகள் போல, கௌதம் தனது படங்களின் அடிப்படையாக வைத்து கொண்டாலும், இம்முறை ரொம்பவே சொதப்பிவிட்டார். இரண்டாம் பாதியில், சிம்பு ஒரு காட்சியில், மஞ்சிமா மோகனிடம், "I want to fight alone. I don't want you to come with me. you go back home. where do you want me to drop you?" என்கிறார். அட பாவி கிட்டதட்ட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரை தவிர மற்ற அனைவரையும் சுட்டு பொசுக்கிவிட்டு, இப்ப அந்த புள்ள எங்க போகும்??



கௌதம் பாணியிலே படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், "this is fucking messed up!" 

கௌதமே ஹரி மாதிரி படத்த எடுத்து வச்சு இருக்காரே? அப்போ, ஹரி எந்த மாதிரி வெறித்தனமா 'சிங்கம் 3' எடுத்து இருப்பார்னு நினைச்சு பார்த்தால் தான் கொஞ்சம் அச்சமா இருக்கு. 

அச்சம் என்பது மடமையடா- ஒரு தவறு செய்தால்...... அதை தெரிந்து செய்தால்......



Sep 26, 2016

PINK, தொடரி- இரண்டு படம், இரண்டு வித சாபகேடு.

ஒரே வாரத்தில் ரெண்டு படங்கள். இரண்டுமே ஏதோ ஒரு வகையில் சாபகேடுகள்.

பிங்- சமுதாயத்தின் சாபகேடு

தொடரி- நமக்கு தான்,நமக்கு தான்!

**************************************************

இந்த வருடத்தின் மிகச்சிறந்த ஹிந்தி படம் 'பிங்' என்று சொல்லலாம். இப்போது சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான சாபகேட்டை அப்படியே சித்தரித்த விதம்- எழுத்தாளர் ritesh shah.

வேலைக்கு போகும் மூன்று இளம்பெண்கள் டில்லியில், தனியாக வீடு எடுத்து தங்குகிறார்கள்- "ஐயோ, தனியாவா?"
Image result for pink film hindi
என்று  பலரின் மனதில் அச்சத்தை உண்டாக்கும் விதத்தில் தான் தற்போது நம்ம இந்தியா இருக்கிறது. இது யார் விட்ட சாபகேடோ? இல்ல யார் வளர்த்துவிட்ட சாபகேடோ?

பெண்கள் வெளியே சென்றது குற்றம்.

தெரியாத ஆண்களோடு சென்றது குற்றம்.

அங்கே ஒன்றாக இரவு உணவு சாப்பிட சென்றது குற்றம்.

இப்படி குற்றங்களை பெண்களின் மீது சுமத்திய பின் அவர்களுக்கு என்ன ஆகிறது என்பதை, ஒவ்வொரு காட்சியில், நாமே நம்மை அரைந்து கொள்ளும்படி இருந்தது படம்.

இதலாம் நாம் தினமும் செய்தியில் படித்தாலும், திரைப்படமாக பார்க்கும்போது, ஏற்படும் ஒரு பயம் கலந்த கலவரம் நமக்குள் புகுந்து கொள்வது தான் படத்தின் மிகப்பெரிய பலம், மிகப்பெரிய வெற்றி.

பெண்களுக்கு எதிரான குற்றம், சொல்ல முடியாத வலியை தருவது ஒரு பக்கம் என்றால், அதை எதிர்த்து போராடி, சட்டபடியாக ஜெயிப்பது அதைவிட வலி மிகுந்தது என்பதை 'பிங்' படத்தில் வரும் கோர்ட் காட்சிகள் சிறந்த உதாரணம். வசனங்கள் சாட்டையடியாக நம் மேல் விழுகிறது. இதை, மிக அழகாக எடுத்து சென்ற திரைக்கதை தான் முக்கிய ஹீரோ.
Image result for taapsee pannu pink

தாப்சி:

'அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா' - 

வெறும் பாடல்வரிகளுக்கு மட்டும் தாப்சியை பயன்படுத்திய தமிழ் சினிமாவிலிருந்து, வந்த ஒரு திறமைசாலி தான் என்பதை நிருபித்து இருக்கிறார். மிகவும் பெருமையாக இருந்தது அவரின் நடிப்பை பார்க்கும்போது.

அமிதாப்:

தியெட்டரில் 4வது வரிசையில் தான் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன். அங்கிருந்து ஸ்கீரினுக்குள் குதித்து, அமிதாப்-பை கட்டி அணைக்க வேண்டும் என இருந்தது. நடிகராக இல்லாமல், ஒரு நம்பிக்கையாக ஜொலித்தார். இந்த கேடுகெட்ட உலகத்தில், இப்படி யாராவது ஒருத்தர் நமக்காக இருப்பார் என்பதை நடிப்பு மூலம் காட்டியதற்கு, கொடி நன்றிகள்.


'இந்த virgin பையன் சாபம் உன்ன சும்மா விடாதுடி' என்று கேவலமாக மார்தட்டி கொண்டிருக்கும் ஹீரோக்கள் நிறைந்த தமிழ் சினிமாவிலிருந்து எவ்வளவு தூரம் ஹிந்தி சினிமா பக்குவப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு சான்று இதோ 'பிங்' படத்தில். ரொம்ப முக்கியமான காட்சி.

அமிதாப்: are you a virgin?

தாப்சி: *முழிப்பார்*

அமிதாப்:  answer me yes or no. don't shake your head. 


பார்ப்பவர்களின் மனதில் எந்த ஒரு சலனமும் ஏற்படாத வகையில் அமைந்த வசனம்!

படத்தில் வந்த கோர்ட் காட்சிகள் அனைத்தும் ஒரே டேக் தானாம். 6 கேமிராக்களை வைத்து படமாக்கப்பட்டதாம். அமிதாப், ஒவ்வொரு காட்சிக்கும் 2 அல்லது 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பவர். ஆனால், தாப்சி அப்படி இல்லை. இயல்பாக உணர்வுகள் வர வேண்டும் என்பதற்காக இந்த ஒத்திகையும் இல்லாமல், பேசிய வசனம் தான் மேற்கோள் காட்டிய காட்சி. அமிதாப் கேள்விக்கு, தாப்சி இயல்பாய் பயந்து முழிக்க, அமிதாப் குரலை உயர்த்தி பேசிய வசனம் தான் அது. இது எதுவுமே எழுதப்படவில்லை. தானாக பேசிய வசனம்.



'பிங்' படத்திற்காக எழுதுப்பட்ட கிளைமேக்ஸ் வேறு. தங்களது எதிராக எல்லாம் ஆதாரங்களும் இருப்பதால், கேஸ்சை தோற்றதாக தான் முதலில் இருந்ததாம். ஆனால், மக்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் இருக்க வேண்டும் என்பதற்காக, மாற்றியமைக்கப்பட்டது கிளைமேக்ஸ்.

எனக்கு இரண்டுமே பிடித்திருக்கும். ஆக மொத்தத்தில், 'பிங்' போன்ற படங்கள் தான் குடும்பங்கள் கொண்டாட வேண்டிய வெற்றி படங்கள்.

*************************************************************

தொடரி- சினிமாவின் சாபகேடு

ஒன்னு, ரெண்டு நல்ல தமிழ் படங்கள் வரும். யப்பா, தமிழ் சினிமா வேற ரேஞ்சுல போய்கிட்டு இருக்கு என்று சந்தோஷப்பட்டு முடிப்பதற்கு, 'தொடரி' போன்ற படங்கள் வந்து அந்த சந்தோஷத்தை தரமட்டம் ஆகிடும்.

தமிழ் படங்களில் நாயகிகளை 'லூசு'த்தனமாக காட்டுகிறார்கள் என்று குற்றச்சாட்டை இப்படத்தில் மீண்டும் நிருப்பித்து இருப்பது ஒரு வருத்தம் என்றாலும், பிரபு சாலமன் படத்திலா இப்படி என்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சி.

ரயில் எதை நோக்கி போகிறது என்பதைகூட யூகித்துவிடலாம், ஆனால் கதை எந்த பக்கம் போகிறது என்பது அறியாமலேயே நாமும் தள்ளாடி போகிறோம்.

ஊடகங்களை கிண்டல் செய்தது சரி. ஏதோ ஒரு வகையில் காமெடி என்று வைத்து கொள்ளலாம். அது என்ன 'மலையாள திமிர்' என்று அப்பட்டமாக சொன்னதெல்லாம் எந்த வகையில் சரி, பிரபு சேட்டா?

கதைக்கும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பிரபு சாலமான, கிளைமேக்ஸ் நேரத்தில் ரயில் மேல பாட்டு வைத்தார்? இது யார்விட்ட சாபகேடு, சேட்டா?

குழந்தைகளாலும் ரசிக்க முடியாத கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட 'தொடரி' படம் பார்த்து என்னாலயும் எந்த வகையில் ரசிக்க முடியவில்லை.

Sep 10, 2016

இருமுகன்- படமே தண்டனை

"ஒ பட் லூ
ஏ எட் லூ
பட் லா லூ....."

இப்படி தான் ஹாரிஸின் பிண்ணனி இசையில் வார்த்தைகள் வந்த விழ, ஒன்னும் புரியல. படமே அதே மாதிரி தான். ஒன்னும்...ம்உம்...

இப்பலாம் படம் பிடிக்கல-னு சொல்ல முடிய மாட்டேங்குது! சொன்னா, உலக போர் தொடங்கும் அளவுக்கு சண்டைக்கு வராங்க! அதான் புரியல-னு எழுதுனேன். படம் மேல தப்பில்ல. படம் புரியும் அளவுக்கு எனக்கு தான் அறிவும் முதிர்ச்சியும் பத்தல்ல.

கெம்ஸ்ட்ரி பத்தல்ல
கதைக்கும் எனக்கும் கெம்ஸ்ட்ரி பத்தல்ல. காலேஜ் படிக்கும்போதே நான் கெம்ஸ்ட்ரி வகுப்பு இருக்கும்போது, பக்கத்து காலேஜ் கெண்டீன் போய்டுவேன். இப்படிப்பட்ட என்னை இந்த படத்துக்கு அழைச்சுட்டு போனதெல்லாம் பெரிய தப்பு. அதுவும் 'லவ்' கதாபாத்திரம் chemical equation சொல்லும்போதெல்லாம் யப்பா சாமி, exit எங்கப்பா??

விக்ரமும் நயன் தாராவுக்கும் உள்ள கெம்ஸ்ட்ரி- சுத்தம்! விறுவிறுப்பான காட்சிகளாக இருந்தாலும் சரி, காதல் காட்சிகளாக இருந்தாலும் சரி. அவங்க காதல் முழுக்க காரில் உட்கார்ந்து வசனம் பேசிய கொள்றாங்க.... தள்றாங்க! நான் எந்த மாதிரி ஃபீல் கொடுத்து இந்த காட்சிகளையெல்லாம் பாக்கனும்னு எனக்கு தெரியல.

Image result for இருமுகன்
ஹேல்லன்னா பாட்டுக்கு கொடுத்த பில்-டப்புக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. நயன் தாரா அழகும் ஒளிப்பதிவாளரின் கை வண்ணமும் தான் கண்ணுக்கு குளிர்ச்சி.

தண்ணீர்ல கண்டம் இல்ல, மலேசியாவில் தான்.

நம்ம ஆளுங்க கொஞ்ச காலத்துக்கு இந்த மலேசியாவ பின்புலம் வச்சு படம் எடுப்பதை தவிர்க்கலாம்னு - சிவகாமி கம்பியூட்டர் சொல்லுது. இருமுகன் படத்தில் சில காட்சிகளும் நடிகர்களும் 'கபாலி' படத்தை நினைவுப்படுத்துகிறது.

இந்த ரித்விக்காவா, யாருச்சும் காப்பாத்துங்களேன் பா??

மலேசியா காவல்துறையை சரமாரியாக கிண்டல் செய்வதை அவங்க எப்படி எடுத்துக்கு போறாங்க? கபாலி படத்தை சென்சார் செய்தது போல் இப்படத்தை செய்திருந்தால், ரொம்ப மகிழ்ச்சி. படம் சீக்கிரமா முடிஞ்சு இருக்கும்.

இதில் என்ன ஒரு விஷயம் எனக்கு பிடிச்சுருந்துச்சுனா, முடிந்தவரை live locationல படமாக்கப்பட்டது தான். லிட்டில் இந்தியா என்று கூறபடும் bricksfield, யதார்த்தம்.

7ஆம் அறிவும், ஸ்பீடும். 

சீரியஸ் காமெடி- இருமுகனின் sci-fi என்று சொல்லப்படும் பலவும் சீரியஸ் காமெடியாக அமைந்ததே தான் படத்தின் பலவீனம். 7ஆம் அறிவு படத்தில், ஸ்ருதி எப்படி நரம்பை சொரிந்துவிட்டால், DNA activate ஆகும் என டக்கால்ட்டி வேலை செஞ்சிதே அதே மாதிரி, இங்க ஸ்பீடு மாத்திரை நுகர்ந்தால், 5 நிமிடத்துக்கு தன்னை மறந்து இருப்பாங்களாம்?

அதை நுகராமலேயே படத்த பார்த்துட்டு நாங்க மயக்கத்துல தான் டா இருந்தோம்!

இதுகூட பரவாயில்ல. நயன் தாரா சொல்லும் பாருங்க ஒரு flashback. ஸ்பீடு மாத்திரை சாப்பிட்டு பிறகு, மண்டைக்கு பின்னாடி கிடந்த நினைவுகள், 4 வருஷமா access  பண்ணாத நினைவுகள்னு ஏதோ அப்பாத்தா பீரோ பின்னாடி கிடந்த பழைய photo album  மாதிரி சொன்ன போது வந்துச்சு பாருங்க குபீர் சிரிப்பு. இது தான் யா படத்துலே மிக பெரிய காமெடி.

எதுக்கு மச்சான், இந்த 'லவ்'?

லவ் கதாபாத்திரம் cross-dresser என்பவர். பொதுவாக transgender, gay, cross-dresser- என பலர் உள்ளனர். இவர்கள் போன்றோர்களுக்கு வித்தியாசங்கள் உண்டு. எத்தனை பேருக்கு இது தெரியும்?

Image result for இருமுகன்

இயக்குனர் ஒரு பேட்டியில், லவ் கதாபாத்திரம் 'transgender' இல்லை என்றார். சரி, ஆனா ஏன் படத்தில் தேவையில்லாமல் பெண்கள் உடை மாற்றும் இடத்திலிருந்து 'லவ்' நடந்து வரும் ஒரு காட்சி. என்ன தான் சொல்ல வரீங்க?

"இந்த உலகத்துக்கே நீ ராஜா நான் ராணி" என்ற வசனம் எதை குறிக்கிறது? படத்துக்கும் இந்த வசனத்துக்கும் என்ன பொருத்தம்?

தமிழ் சினிமாவில் இதுவரை cross-dresserகளையும் திருநங்கைகளையும் சரியாய் சித்திரத்தது இல்லை. இப்படமும் அப்படியே அமைந்துவிட, தானும் ஒரு சராசரி இயக்குனர் என்பதை நிருபத்திவிட்டார் ஆனந்த் ஷங்கர்.

'லவ்'- வின் பின்புலம் என்ன? அவர் ஏன் இப்படி ஆனார் என்பது கதைக்கு தேவையில்லாமல் இருக்கலாம். சரி ரைட்டு. இப்படி 'ஸ்பீடு' மருந்து தயாரிக்கும் ஒருத்தர் சும்மா ஒரு விஞ்ஞானியாக இருந்திருக்கலாமே? cross-dresserஆக இருக்க வேண்டிய அவசியம்?

ஹாரிஸ் ஜெய்ராஜ் இசை, நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

Image result for ninnukori comedy

விக்ரம்

என்ன தான் உயிர கொடுத்து நடித்தாலும், சரியா அமைய மாட்டேங்குது-னா, ஐ எம் சாரி சார்!


Aug 23, 2016

சிங்கப்பூரின் தங்க மகன்- ஜோசப் ஸ்கூலிங்

13 ஆக்ஸ்ட் 2016.

காலை 9.05. ஒலிம்பிக்ஸ் நீச்சல் இறுதி போட்டி- 100மீட்டர் வண்ணத்துபூச்சி ஸ்டைல்.நேரடி ஒளிப்பரப்பு.

மடிக்கணினி முன்னால் நான். நகரவில்லை.
பயமும் பதற்றமும் மனசு முழுக்க நிரம்பி கிடக்க, என் தாய் நாட்டை சேர்ந்த ஜோசப் நீச்சல் குளம் அருகே வருகிறார். சிங்கப்பூருக்கு இருக்கும் ஒரு இரு வாய்ப்புகளில் இதுவும் ஒன்று.

வீசில் ஒலித்தது. அனைவரும் குதிக்க, மூச்சுவிடவதை நான் நிறுத்தியதுபோல் ஒரு உணர்வு. நான்காவது தடத்தில் ஜோசப் முதலில் சென்று கொண்டு இருக்கிறார். 50 மீட்டரை கடந்த நிலையிலும், ஜோசப் முன்னிலையில் இருக்கிறார். ஒருவர் நீந்துவதை பார்த்து, இதயம் என்றுமே இப்படி அடித்து கொண்டது இல்லை, இனியும் அது நடக்காது!

90 மீட்டரை கடந்துவிட்டார். வர்ணனையாளர் ஆங்கிலத்தில், "are we going to witness history today?" என்று கூறி முடிப்பதற்குள், ஜோசப் 100 மீட்டரை தொட்டுவிட்டார். வரலாறு படைத்துவிட்டார். சிங்கப்பூரின் முதல் தங்க பதக்கம்.



சத்தியமா சொல்றேன், வாய்விட்டு அழுதேன். (இதை எழுதும்போதுகூட கண்ணு லேசா கலங்குது!) இது தேச பற்றா? இல்ல, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கொண்டவருக்கு கிடைக்கும் வெற்றியை கண்டு மனம் மகிழும் தருணமா? கொஞ்சம் நேரம் அப்படியே மடிக்கணினியை பார்த்து கொண்டிருந்தேன். மறுபடியும் அவர் கடைசில் நீச்சல் தளத்தை தொடுவதை மட்டும் slow motionனில் காண்பிக்க, மறுபடியும், கண்கள் கலங்குது!



வெளியே அவ்வளவு ஆரவாரம்! அண்டைவீடுகளில் பலத்த கரகோஷம். ஏதோ நம்ம வீட்டுப்பிள்ளை வென்றது போல் அனைவரும் கட்டிபிடித்து மகிழ்ந்தனர். இந்த மாதிரி ஒரு உணர்ச்சிபூர்வமான நிகழ்வு இனிமேல் நடக்குமானு தெரில. ஆனால், என் வாழ்க்கையில் இப்படி ஒன்றை தந்த தங்க மகனுக்கு, நன்றி!

பரிசளிப்பு விழாவில், என் நாட்டுக் கொடி பறக்க, அறையில் தான் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன். இருந்தாலும், எழுந்து நின்று தேசியகீதத்தை பெருமையுடன் பாடினேன். சிங்கப்பூர் பள்ளிகளில் தினமும் தேசிய கீதம் பாட வேண்டும். இத்தன வருடங்களில் நான் இவ்வளவு பெருமிதத்தோடு பாடிய ஒரு நாள் எது என்றால், அது 13 ஆக்ஸ்ட் 2016 அன்று தான்!

எந்த விதத்தில் அவர் வெற்றிக்கு துணை போய் இருக்கோம்?
ஒரு விதத்திலும் கிடையாது!

இருந்தாலும், வெற்றி பெற்ற பிறகு, வெறும் 21 வயது நிரம்பிய ஜோசப் தம்பி சொல்லுது, "இது என் வெற்றி இல்லை. இது நம்ம வெற்றி!"


(ஜோசப் மற்றும் பெற்றோர்கள்)

ஜோசப்-பின் வெற்றிக்கு ஒரே காரணம்- அவரது பெற்றோர்கள். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து, 13 வயதில் நான் அமெரிக்காவுக்கு சென்று உலகின் பிரபலமான பொல்ஸ் நீச்சல் பள்ளியில் சேர வேண்டும் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவரின் பெற்றோர்கள் எடுத்த முடிவே சிங்கையின் சிங்கமாக திகழ்கிறான் இன்று. 

சிங்கப்பூர் பல விஷயங்களில் தலை சிறந்து விளங்கினாலும், விளையாட்டு என்று வந்தால், ரொம்பவே பின் தாங்கி இருக்கிறோம். ஆனால், பல கோடி செலவு செய்து சீனாவிலிருந்து மேசை பந்து விளையாட்டாளர்களை வரவழைத்து இரண்டு வருடங்களில் சிங்கப்பூர் குடிமகன் உரிமை கொடுத்து இவர்களும் நம் நாட்டை சேர்ந்தவர்கள் தான் என்று கூறி, அரசாங்கம் பல வருடங்களாக செய்லகண்டு வந்திருக்கிறது.

இது பெரிய சர்ச்சையையே கிளப்பி இருந்தது. இன்று வரையில், அவர்கள் ஜெயித்தாலும், அதில் பல சிங்கப்பூரர்களுக்கு பெருமையில்லை. அதனால் தான் ஜோசப் கொடுத்த வெற்றி அரசாங்கத்தின் திட்டத்திற்கு பெரிய பதிலடி என்று நினைக்கிறார்கள் பலர். அவரின் பெற்றோர்கள் கடந்த 8 ஆண்டுகளாக, 1.35மில்லியன் வரை செலவு செய்திருக்கிறார்கள். 4 மாதங்கள் அவரின் அம்மா அமெரிக்காவில் தங்கியிருந்து ஜோசப்-பை பார்த்து கொள்வார். அடுத்த 4 மாதங்கள் அவர் அப்பா போவாராம், பிறகு அம்மா சிங்கப்பூருக்கு வந்து இங்கு இருக்கும் வீட்டை கவனித்து கொள்வாராம். சிக்கனமாக இருந்தால் மட்டும் தான் சமாளிக்க முடியாது என்று கூறும் அவரது தாயார், கடந்த 30 ஆண்டுகளாய் புது பேண்ட் கூட எடுத்தது இல்லையாம்.

(சட்டசபை வெளியே அனைத்து அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சருடன் ஜோசப்)

அமைச்சர்கள் பாராட்ட, சட்டசபைக்கு சிறப்பு விருந்தினராக ஜோசப் போக, நாடே அவருக்கு உயர்ந்த வரவேற்பு கொடுக்க, சிங்கையில் படித்த பள்ளிக்கு மீண்டும் சென்று இருக்கிறார்- இப்படி மீண்டும் சிங்கப்பூருக்கு வந்த 3 நாட்களிலே அவருக்கு ஓய்வு சுத்தமா கிடையாது.

(open top bus parade- மத்திய வேளையில் திரளன வந்த மக்கள் கூட்டம்)

அப்படி இருந்தாலும், எல்லாரிடமும் காட்டும் அன்பும், அந்த புன்னகையும், சிறிது அளவும் தலைக்கணம் இல்லாத குணமும், ஜோசப் உண்மையாக அனைவருக்கும் ஒரு நட்சத்திரமாக திகழ்கிறார்!

majulah singapura!!

(எங்கள் தேசியகீதத்தில் வரும் ஒரு வரி. அர்த்தம்- ஒன்றுபட்டு முன்னேறுவோம்!!)

Jul 24, 2016

கபாலி- ரஜினி வெறும் அனுபவம் மட்டும் தானா?

முதலில் என் தலைவனுக்கு ஒரு சின்ன லவ் லெட்டர்.

அன்புள்ள ரஜினிகாந்த் தலைவா,

கபாலி எப்படி உன் வாழ்க்கைல பெரிய படமோ, அதே மாதிரி தான் எனக்கும். படத்துக்கு பெயர் கபாலி-னு செய்தி வந்த நாளேந்து, பொன்ன சந்தோஷம்! அதுக்கு அப்பரம் வந்த பரபரப்பான விஷயங்கள், “நெருப்பு டா” பாட்டு, கபாலி டீசர், கபாலி விமானம், கபாலி ரிலிஸ் நாள், முதல் நாளே டிக்கெட் கிடைக்குமா கிடைக்காதா-னு மன பதபதப்பு, டிக்கெட் ஆன்லைனில் புக் செய்ய முடியாம இண்டர்நெட் தவித்த போது, கூடவே சேந்து தவித்த நான், புக் செய்றதுக்கு 45 நிமிஷம் போராடிய போராட்டம், போராட்டத்திற்கு அப்பரம் கடைசியாக புக் செஞ்ச போது ஒரு சந்தோஷம் வந்துச்சு பாரு...., அதுக்கு அப்பரம் படம் பார்க்க போன போது திரையரங்கு வாசலில் டிக்கெட்-ட எடுத்து கொடுத்த போது கை கொஞ்சம் நடுங்கிச்சு. ஏன்-னு தெரில. ஆனா அந்த உணர்வு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. இப்படி கபாலி எனக்கு தந்த திருவிழா-மகிழ்ச்சி ஏராளம்.





நீ கபாலியாய் திரையில வந்தபோது, மனம்விட்டு, கத்தி அலறி ஆரவாரத்தின் உச்சிக்கு சென்று, மனசுல உள்ள வேலை கவலை, வீட்டு பிரச்சனை, மன இறுக்கும், மன அழுத்தும்- எல்லாரையும் மறந்து, எல்லாத்தையும் மறந்து, உலகத்தையே துறுந்து, உன்னைய அனாந்து பாத்தேன்!! உன்னைய அணுஅணுவாய் ரசித்தேன்!

கபாலி படம் வெளிவரத்துக்கு முன்னாடி சிலர், “என்ன பெரிய கபாலி கபாலி”னு சொல்லிகிட்டு திரியுறீங்க-னு என்னை போன்ற பலரை திட்டினார்கள். இப்படி திட்டிய வாய் தான் சில மாசம் கழிச்சு இதே கபாலிய டிவில போடும்போது, “
rajini is the real style king la!” -னு ஃபேஸ்புக்-ல ஸ்டேட்டஸ் போட்டு உச்சு கொட்டுவாங்க!

“ரஜினி ஒரு நடிகன் அல்ல.
அவன் ஒரு அனுபவம்.”
– டிவிட்டரில் படித்தது


இப்படிக்கு,
கபாலி டிக்கெட் வாங்கிய பிறகு
ஏழையான ரசிகை
காயத்ரி
****************************************************************
ஜினி வெறும் அனுபவம் மட்டும் தானா?
ரஜினி வெறும் அனுபவமாக மட்டும் இருப்பது தான் மிக பெரிய வருத்தம். ரஜினிக்குரிய “மாஸ்” இருக்கு, அவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார். பஞ் வசனம் இல்லை. மாற்றத்தை நோக்கி செல்கிறார். மகிழ்ச்சி. இளம் பெண்களோடு டூயட் பாடவில்லை. பிடிச்சுருக்கு, இந்த மாற்றம். இருந்தும், ரஜினி என்னும் நடிகனை காணவில்லை. இது ரஜினியின் தவறில்லை.

ரஜினியை சகாப்தத்தில் மகுடம் சூடி உட்கார வைத்தது நாம். சூப்பர் ஸ்டாராக அவரை வளர்த்துவிட்ட நாம், ஏதோ ஒரு தருணத்தில் நடிகன் ரஜினியை புரக்கணித்து விட்டோம். “சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு இன்று சிறகு முளைத்தது” பாடலில், தன் மகளை நினைத்து ஏங்கும் ரஜினியின் நடிப்பை கண்டு, அறியாத புரியாத வயதில் கண் கலங்கிய நான், இன்று அப்படி ஒரு மாபெரும் நடிகனை புதைத்துவிட்டோமோ என்று கலங்குகிறேன்.

கபாலி படத்தில் தன் மனைவியை பல வருடம் கழித்து பார்க்கிற தருணத்தில் காட்டிய நடிப்புக்கு இப்படம் சிறிது அளவும் தீணி போடவில்லை.



ரஞ்சித் கையில் கிடைத்த ரஜினி போல

பழமொழியையே மாற்றி எழுத வைத்த கபாலி படத்தின் தளம் தமிழ் சினிமாவுக்கு புதுசு. அப்படி யோசித்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த ரஞ்சித்-க்கு மிக பெரிய தைரியம் இருந்திருக்க வேண்டும். வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி.

மலேசியா தமிழர்களின் வாழ்வியலையை புட்டு புட்டு வைத்த படம் என்கிறார்கள். ஆமாம், உண்மை தான். நிறைய விஷயங்களை தொட்டு இருக்கிறார், ஆனால் அலசி ஆராய்ந்திருந்தால், தமிழனுக்கு, தமிழ் பட ரசிகனுக்கும், இனி படம் எடுக்க போகும் இயக்குனருக்கு, “அறை”யாக இருந்திருக்கும். பார்டா, படம்னா இப்படி இருக்கும்னு அறைந்திருக்க வேண்டிய படம்.


எனக்கு தெரிந்து முதன் முதலாக தமிழ் படத்தில் “லா” என்று பேச்சு வழக்கு சொல்லை கிண்டல் செய்யாமல் இருந்த முதல் படம் கபாலி. காடி, சரக்கு, பொன்ன, ஜோக்கா- என்று மலேசியா தமிழ் சொற்களை சேர்த்தால் தான் எதார்த்தம் இருக்கும் என்று தெரிந்த இயக்குனர், காட்சியமைப்பில் சுவார்ஸ்சியத்தை பற்றி கவலை கொள்ளாமல் போனது ஏனோ?

ரஜினி என்ற திடமான நூல், மலேசியா தமிழர்கள் பிரச்சனை என்ற முத்துக்கள்—இரண்டையும் கோர்க்க முடியாமல், உதிர்ந்து விழுந்ததை தான் 2.5 மணி நேரம் நான் பார்த்தேன்.

திரைக்கதையும் காட்சியமைப்பும்

இன்று காலையில் படித்த விஷயம்- “ரஜினி சிறையிலிருந்து வெளியே வரும்போது, கம்பிகளை பிடித்து இரு முறை ஏறுவார்”. இது குண்டர்கும்பலின் வழக்கமாம். தண்டனை முடிந்து வரும்போது, சம்பிரதாயமாக ஏதோனும் ஒரு விஷயம் செய்ய வேண்டுமாம். எவ்வளவு பெரிய சுவார்ஸ்சியமான செய்தி. ஆனால், காட்சியாக பார்க்கும்போது, இந்த பின்புலம் தெரியவில்லையே! தெரிந்திருந்தால், காட்சியாய், திரைக்கதைக்கு எவ்வளவு வலு சேர்த்து இருக்கும்.

இப்படி, நிறைய செய்திகள், வழக்கங்கள், பழக்கங்கள்- தனியாக நோட்ஸ் வைத்து படித்தா படத்தை ரசிக்க முடியும்?


கதை படத்துக்குள் இருக்க வேண்டும், படத்துக்கு வெளியே அல்ல.

சமீபத்தில் அமெரிக்காவில் 40 வருடங்கள் தண்டனை அனுபவித்த ஒருவர் வெளியே வந்த போது, கைபேசியை விசித்தரமாய் பார்த்து இருக்கிறார். 40 வருடங்களில் உலகமே எப்படி வளர்ந்து இருக்கு என்ற ஆச்சிரியம். 25 வருடங்கள் கழித்து வெளியே வரும் கபாலி முகத்தில், இந்த “உலகத்தை” புதிதாய் பார்க்கிறோம் என்ற உணர்வு ஏன் வரவில்லை?

குண்டர்கும்பல் பார்ட்டிக்கு தான் அதிக நேரத்தை செலவழித்தாரே ஒழிய கபாலி, மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு காட்டினார்? மத்த ரவுடிகளை அடிக்கிறார். அதை தவிர? சுட்டு தள்ளிய வித்ததை பார்த்தால், அவரே பாதி தமிழர்களை அழித்து இருப்பார் என நினைக்கிறேன்.

திரைக்கதை ஓட்டம் சோர்வு அடைந்ததற்கு இன்னொரு காரணம்- ரஜினியை எல்லா காட்சிகளில் காட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் சிக்கியது தான். மக்களின் பிரச்சனையை “voice over”ல் சொல்லாமல், காட்சியாக ஏன் காட்டவில்லை. சினிமா என்பது visual medium. அதை சுக்கு நூறாக்கியது ஏன்?

இந்திய சட்டம் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. ஆனால், “விசாரணை” படம் பார்க்கும்போது, அப்படி ஒரு தாக்கம். காட்சிக்கு காட்சி, இது தான் பிரச்சனை என்று தெள்ள தெளிவாக காட்டினார்கள். அந்த உணர்வு, கபாலி படம் தந்து இருக்க வேண்டியது. முடியாமல் போனது, ச்சே.... இது கோபமோ, ஆதங்கமோ இல்லை. கஷ்டமா இருக்கு. நல்ல கதை களத்தில், கபடி ஆடியிருக்க வேண்டிய கபாலி, குமுதவள்ளியை தேடியே காலத்தை கடந்துவிட்டது. ஒரு கட்டத்தில், கௌதம் மேனன் ஹீரோ போல் கித்தாரை தூக்கிட்டு, குமுதவள்ளியை தேட ஃரான்ஸ் போய்விடுவாரோ என அச்சம் வந்தது.

உண்மையான மலேசியா தமிழனை பற்றி படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தால், இந்த பட்த்தை பாருங்க!


வில்லன்களும் மற்ற நடிகர்களும்



டோங் லீ.... அதாங்க ஏழாம் அறிவு படத்தின் வில்லன். டோங் லீ பெரியப்பா மாதிரி டோனி லீ. இவர பார்த்த பயமா? எனக்கா? டேய்! நாங்களெல்லாம் மார்க் ஆண்டனியையும் நீலம்பரியையும் பார்த்த வளர்ந்துவங்க டா, டோனியல்லாம் ஒரு வில்லனா?? கிட்டதட்ட நூற்றி ஐம்பது வில்லன் கதாபாத்திரங்கள். யார் எந்த கும்பலே தெரியல? எங்க போறாங்க? எங்க வராங்க? எதுக்கு? ஏன்?- இந்த சின்ன அறிவுக்கு புரியல.

எனக்கு ராதிகா அப்தே நடிப்பு பிடிச்சிருந்துச்சு. அவர் வரும் காட்சிகளில் ஒளிப்பதிவும் பிரமாதம். மீனா, டைகர் நடிப்பு எல்லாம் அப்படியே மலேசியா இளையர்களின் பிரதிபலிப்பு! மகிழ்ச்சி.

ஆனால், இன்னொரு விஷயம் புரில?

பல வருடங்கள் கழித்து பார்க்கு தாய்க்கும் மகளுக்கும் ஏன் எந்த ஒரு பாச உணர்வும் இல்ல? அவர்கள் தனியே உட்கார்ந்து பேசுவது போல ஒரு காட்சிகூட இல்ல! அவர்கள் கோணத்தில் கதை நகர்த்தி இருந்திருந்தால், புதுசா இருந்திருக்கு வாய்ப்பு இருக்கு.

பிண்ணனி இசை
படத்தின் வில்லனே பிண்ணனி இசை தான். காட்சிகள் தொய்வுக்கு இதுவும் ஒரு காரணம். நெருப்பு டா பாடல் இசையை தவிர்த்து வேறு புதுசா ஒன்னுமில்லை. மலேசியாவின் ரொம்ப பிரபலமான இசைக்கருவி- உருமி மேளம். அதை கோயில் காட்சியில் மட்டும் பயன்படுத்தியத்துக்கு பதிலாய், மற்ற காட்சிகளிலும் பயன்படுத்த தவறியது மிக பெரிய குற்றம்.




உருமி மேளம் டா! கொஞ்சம் நேரம் கண் மூடி, சில காட்சிகளை ஓட்டி பாருங்க, உருமி மேளம் இசையோடு!! மரண மாஸ்! ரஜினிக்கு மட்டும் இல்ல! எடுத்து கொண்டு கதை களத்துக்கே சீமாசனமாய் அமைந்திருக்கும்.

கபாலிக்கு பிறகு என்ன?

படம் லாபத்தை தந்துவிட்டதாம். இருக்கட்டும்.
அடுத்து இயந்திரன் 2.0. அதுவும் லாபத்தை ஈட்டும். ரஜினிக்கு வயதாகும். இத சொல்ல எனக்கு வலிக்குது. ஆனாலும், ரஜினி ஓய்வு பெறும் காலம் வெகு தூரம் இல்ல. 



ஒரே ஒரு படம். 

“பா” ஹிந்தி படத்தில் நடித்த அமிதாப் கதாபாத்திரம் போல் ஒரே ஒரு படம்.

“பறவையோட இயல்பே பறக்குறதுதான். பறக்கவிட்டுப்பார், வாழ்வா சாவான்னு அது முடிவு பண்ணட்டும்.”- கபாலி

தல, நீ எப்போ பறக்க போற?