Sep 25, 2007

அத்தை மகன் சிவா (part 1)

சீதாவிற்கு மழை ரொம்ப பிடிக்கும், சின்னசிறு நாய்க்குட்டிகளுடன் விளையாடுவது பிடிக்கும், பாலில் தேன் கலந்து குடிப்பது பிடிக்கும், இரவில் தனிமையாக பாட்டு கேட்பது பிடிக்கும், ஆளில்லாத பேருந்து பிடிக்கும், வானவில் பிடிக்கும், பூக்களின் மீது இருக்கும் பட்டாம்பூச்சி பிடிக்கும், இதை எல்லாம்விட அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது அவள் அத்தை மகன் சிவா! சிவா என்ற பெயரை கேட்டாலே போதும் சீதாவிற்கு உலகமெல்லாம் ஒரு முறை பறந்துவந்ததுபோல் திரிவாள்.

சீதா சிங்கப்பூரிலே பிறந்து வளர்ந்தவள். அவளின் தந்தையின் தங்கை மகன் தான் சிவா. அத்தை குடும்பம் எல்லாம் திருச்சியில் உள்ளனர். பலமுறை சீதா இந்தியாவிற்கு சென்று வருவதால் அவளுக்கு அந்த ஊரும் அதைவிட சிவாவையும் ரொம்ப பிடித்துவிட்டது. முறை பையன் வேற.. கேட்கவா வேண்டும்! வருடத்திற்கு ஒரு முறை இந்தியா சென்று வருவதை சீதாவின் குடும்பம் ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். சீதாவிற்கு அப்போது 19 வயது இருக்கும், சிவாவிற்கு 21 வயது!

பல வருடம் பழகி இருந்தபோதிலும், சீதாவிற்கு அவ்வயதிலிருந்துதான் சிவா மீது காதல். இதுவரைக்கும் அவனிடம் சொன்னதில்லை. சிவாவிற்கும் தன் மீது அதே ஆசை உண்டா? என்பதும் தெரியாது. அதற்கு பிறகு சீதா இந்தியா போவதே சிவாவை பார்க்கதான். எப்படியாவது தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கும்போது பழாபோன பயம் தடுத்துவிடும். சிங்கப்பூரிலிருந்து சொந்தம் வந்தால்தான் போதுமே...ஊரே திரண்டு வரும். இந்த கூட்ட நேரிசலில் வேற என்னத்த சொல்ல. குல தெய்வ கோயிலுக்கு பேருந்தில் சென்றபோது, வேண்டும் என்றே அவன் இருக்கை அருகே உட்கார்ந்து கொள்வாள். தூங்கி விழுவதுபோல் நடித்து அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். சிங்கையில் வேறும் ஜீன்ஸ்-டி ஷர்ட் போட்டு திரியும் சீதா இந்தியாவிற்கு போனவுடன் அப்படியே குடும்ப குத்துவிளக்குதான் போங்க! மாமனுக்கு பிடித்த கலரில் தாவணி போட்டு கொள்வதும், சமையலே தெரியாமல் இருந்தாலும் சமையலறையில் போய் அத்தைக்கு உதவி செய்வதும்...அப்பப்பா... சீதாவின் அட்டகாசம் ஒரு ரகளை ஆயிடும்!

இந்த கிறுக்குத்தனத்திற்கு காரணம் சீதா சிவாவின் மீது வைத்திருக்கும் அளவுகடந்த காதலே ஆகும்! சிவா ரொம்ப ரொம்ப அமைதியானவன். பெண்களை அதட்டிகூட பேசமாட்டடன். விரிந்த கண்கள், அதுக்கு ஏற்ற கண்ணாடி. அளவு எடுத்து செய்ததுபோல் மூக்கு. அதுக்கு கீழே கச்சிதமான மீசை. சிரிக்கும்போது அழகாய் வளையும் மேல் உதடு, கன்னத்தில் விழும் குழி! அதைவிட ரொம்ப ரொம்ப கெட்டிக்காரன். அவங்க ஊரிலே +2 தேர்வில் முதல் மாணவன். பொறியியல் படிப்பு படிக்க சென்றான்.

நான்கு வருடங்கள் உருண்டோடின. சிங்கையில் சீதா பிஸ்சி கணிதம் கடைசி ஆண்டு படித்து கொண்டிருந்தாள். சிவா நல்ல தேர்ச்சியுடன் பட்டபடிப்பு முடித்து சிங்கப்பூரில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

"ஹலோ மாமா, நான் தான் சிவா பேசுறேன். அங்க ITTA technologies கம்பெனியில் வேலை கிடைச்சுருக்கு மாமா. அடுத்த வாரம் அங்க வரேன். ஒரு வாரத்துக்கு அப்பரம் தான் கம்பெனியில் புதுசா தங்க..இடம் கொடுப்பாங்களாம்... அதனால.. நான் நம்ம வீரபாண்டி அண்ணன் மகன் வீட்டுல கொஞ்ச நாளைக்கு தங்கிகிறேன் மாமா..."என்றான் சிவா சீதாவின் தந்தையிடம்.

அதற்கு அவர், "அப்படியே சிவா, ரொம்ப சந்தோஷம் வேலை கிடைச்சதுல. என்னிக்கு வரேனு சொல்லு. நான் வந்து அழைச்சுகிட்டு போறேன். சரியாப்பா." என்று மனமகிழ்ச்சியுடன் கூறி விவரங்களை பெற்று கொண்டார். இதை கேட்டபடி சோபாவில் செய்திதாளை படித்து கொண்டு இருந்தாள் சீதா. சமையலறையிலிருந்து காபியை குடித்தபடியே வெளியே வந்த சீதாவின் அம்மா கேட்டார் "யாருது?". சீதாவின் தந்தை சிவா கூறியதை சொன்னனர். கேட்டவுடன் சீதாவிற்கு மயக்கமே வந்துவிட்டது. அதற்கு அப்பரம் செய்திதாள் படித்தாளா இல்லை படிப்பதுபோல் நடித்தாளா என்பதை அவள் மனசை கேட்டுதான் சொல்ல வேண்டும்.

சீதாவின் அம்மா, "என்னங்க நீங்க... சிவா போய் மத்தவங்க வீட்டுல தங்கினால் என்ன அர்த்தம். நம்ம வீட்டுலையே தங்க சொல்லுங்க. உங்க தங்கச்சி நமக்கு எத்தனையோ செஞ்சிருக்கா... நாம இதகூட செயலையினா எப்படி... நம்ம சீதாவும் இருக்கா... எதாச்சு உதவி வேணுமுனாகூட சீதா செய்வா.." என்று காபியை குடித்தவாறு கூறினார். இதை கேட்டவுடன் சீதாவுக்குள் ஒரு ஐஸ்பெட்டியை வைத்ததுபோல் குளிர்விட்டு குதுகலமாகினாள். எனினும் எதையும் காட்டி கொள்ளமால் செய்தித்தாளை படித்து கொண்டிருந்தாள். செய்திதாளில் எழுத்துகளா தெரிந்தது.... சிவா முகம் தானே ஆயிரம் முறை வந்துவந்து சென்றது! சீதாவின் தந்தை உடனே சிவாவிற்கு தகவல் சொல்லி தனது வீட்டுலையே தங்குமாறு கேட்டு கொண்டான். சிவா முதலில் வேண்டாம் என்று நினைத்திருந்தான் இருப்பினும் அவர் கேட்டு கொண்டதால் மறுக்க முடியாமல் ஒப்புகொண்டான்.

சீதாவிற்கு தான் கையும் ஓடல காலும் ஓடல. வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து அலங்காரம் படுத்தும்வரை எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்தாள். மாமனுக்கு புதுசு புதுசா சட்டை வாங்கி வைத்தாள், அவருக்கு பிடித்த மாதிரி அவர் அறையை அலங்கரித்துவிட்டாள்.

சிவா காலை 6 மணி விமானத்தில் வந்து இறங்குவதால்... அவள் அதிகாலை 3 மணிக்கே எழுந்துவிட்டாள். அன்று சீதாவின் தந்தைக்கு வேலை இருப்பதால், சீதா தான் சிவாவை அழைத்துகொண்டு வருமாறு சொல்லிவிட்டார்கள். அதுவும் அவளே தனது டோயோட்டா காரில் அழைத்து கொண்டு வரவேண்டும்... அட கரும்பு திண்ண கூலியா! 5 மணிக்கே விமான நிலையத்திற்கு சென்றுவிட்டாள். ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்தபடியே உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் துடித்தாள். விமான நிலையத்தில் ஒரு அறிவிப்பு - " 6 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் சற்று தாமதமாகும்" என்று! ஆஹா... எரிகின்ற நெருப்பில் ஆசிட்டை ஊத்திட்டாங்கய்யா!! விமான நிலையத்தில் மக்கள் இருந்ததால் தப்பித்தோம்... இல்லையென்றால் பத்தரக்காளி ஆட்டமே ஆடி இருப்பாள்!

கொஞ்ச நேரம் கழித்து ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது. பயணிகள் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். மின்னல் வேகத்தில் சீதாவின் பார்வை அங்கும் இங்கும் ஓடியது தன் மாமனை தேடி....

(நாளை பூக்கும்- தொடரும் என்பதைதான் வித்தியாசமாக சொன்னேன்)

அத்தை மகன் (part 2)

Sep 24, 2007

என் கலா..-சிறுகதை

பொதுவாகவே ரயில் பயணம் என்றாலே சற்று களைப்பாகதான் இருக்கும். உட்கார இடம் கிடைக்காது, நிற்ககூட இடம் இல்லாமல் தள்ளாடி கொண்டு தான் இருக்க வேண்டும். இருந்தாலும் லதாவிற்கு ஏதோ ஒரு சுகம், ரயில் பயணம் என்றாலே! அன்று நடந்த சம்பவம் லதாவை பெரிதும் பாதித்து அவள் தனது டயரியில் நடந்ததை எழுத ஆரம்பித்தாள். இரவு மணி 11, தனது நினைவுகளை பின்னோக்கினாள்.... மதியம் 2 மணி...

-----------***---------------------------------
நான் எப்பொழுதும் அந்த பச்சை நிற இருக்கைகள் இருக்கும் இடத்தில் தான் நிற்பேன். இன்றைக்கும் அங்குதான் நுழைந்தேன். கூட்டம் அதிகம் இல்லாததால், இருக்கைகள் காலியாக இருந்தன. நான் நுழைவுகதவு ஓரமாக இருக்கும் இருக்கையில் அமர்ந்து கையில் வைத்திருந்த 'three-dimensional structure of proteins' நோட்ஸ்சை சும்மா பக்கம் பக்கமாய் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது, ஒரு சிறுமியின் கை என் முட்டியை தொட்டது. நோட்ஸ்சில் இருந்த என் பார்வை சற்று நிமிர்ந்து அச்சிறுமியின் முகத்தின்மேல் பட்டது. அவள் புன்னகையித்தாள். அவளுக்கு ஒரு ஆறு வயதுதான் இருக்கும். அவளின் தாயாரும் அங்கிருந்தார். சிறுமி சற்று சத்தமான குரலில் "நான் இங்க உட்காரனும்." என்றாள் அவள் ஆள்காட்டி விரலை என் இருக்கையின் மீது காட்டி. நானும் சரி குழந்தை தானே என்று நினைத்து அவளை என் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு எழுந்து நின்றேன். பக்கத்தில் உள்ள கம்பியை பிடித்துபடி சிறுமியை பார்த்து கொண்டே வந்தேன்.

அவள் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாகவும் விநோதமாகவும் இருந்தன. தனக்குதானே கைகொட்டி சிரித்தாள். அவள் தலை உருவமும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது. தன் சட்டையில் உள்ள பட்டன்களை இழுத்து அதை உடைத்து கொண்டிருந்தாள். நான் என் கைகளை நீட்டி அவளை தடுத்தேன். எதிர்பார்க்காத விதமா ஒரு கணம் என் விரல்களை இழுக்கமாக பிடித்து கொண்டு என்னை பார்த்து முறைத்தாள். நான் திடிக்கிட்டேன். மறுவினாடியே சிரித்தாள்! கள்ளகபடமற்ற சிரிப்பு! சிரிக்கையில் அவளுக்கு வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. அதைகூட அவள் கவனிக்காமல் தன்னை மறந்து சிரித்தாள். அவள் அம்மா வந்துதான் எச்சிலை துடைத்து "ஷுஷு...சத்தம் போடாதே" என்றார்.

எனக்கு தெரியவந்தது அச்சிறுமி மூளை வளர்ச்சி குன்றியவள் என்று. மனசு அக்கணமே சஞ்சலபட்டது. கண்கொட்டாமல் அவளையே பார்த்துகொண்டிருந்தேன். இரண்டு மூன்று ரயில் நிறுத்தங்கள் தாண்டி அவள் பக்கத்திலுள்ள இருக்கை காலியானது. அவள் என்னன பார்த்து கை அசைவால் பக்கத்தில் வந்து உட்காரும்படி கேட்டாள். நான் 'பரவாயில்லை' என்பதுபோல் தலை அசைத்தேன். அவள் மறுபடியும் முறைப்பதுபோல் கெஞ்சினாள். அவள் அம்மாவிடம் திரும்பி "ஆண்டி நீங்க உட்காருங்க.." என்றேன். அதற்கு அவர் "பரவாயில்ல.. அவ உன்னைய தான் கூப்பிடுறா." என்றார் புன்னகையுடன்.

அவள் பக்கத்தில் அமர்ந்துவுடன் அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்க்கவேண்டுமே- அப்படியே 1000 வாட்ஸ் விளக்குகள் ஒன்றாய் வெளிச்சம் காட்டியதுபோல் பிரகாசம்! அவள் காதருகே சென்று " உன் பேரு என்ன?" என்றேன். நான் அவளிடம் பேசியதை கண்டு குதுகலமாகிய அவள் "எ எ..பேரு..." என்று திக்கி திக்கி சொல்ல ஆரம்பித்தவுடன் அடடே பாவம் என்று மனம் வேதனைப்பட்டது. அவள் நிலை தெரியாமல் பேசவைத்து கஷ்டப்படுத்துகிறோமே என்று என் உள்மனம் என்னை லேசாக குத்தியது. ஏதோ ஒரு பேரு சொன்னாள். ஆனால், அவள் சரியாக உச்சரிக்காமல் சொன்னதால் என்னால் பெயரை கண்டுபிடிக்கமுடியவில்லை. அவள் சொன்னதை வைத்து 'கலா' என்று பெயர் போலதான் ஒலித்ததால்,

"கலா?" என்று அமைதியாய் அவள் கண்களை பார்த்து கேட்டேன். அது அவள் பெயர் இல்லை. நான் தவறாக சொன்னதால் என்னை மறுபடியும் ஒரு முறை கோபித்து கொண்டாள்.
பெயரை மறுபடியும் சொல்ல முற்பட்டாள். சொல்லிமுடித்தவுடன் என் முகத்தை பார்த்தாள், அவள் பெயரை நான் சொல்லவுடன் என்ற ஆவலுடன். மீண்டும் தவறாக சொல்லி அவளை காயப்படுத்தவேண்டாம் என்று எண்ணி "ஓ.. ரொம்ப அழகான பெயரு." என்று சொல்லி சமாளித்தேன். அப்போது நான் சொல்லியதை கேட்டு மீண்டும் அந்த முகமலர்ச்சி. இப்படி ஒரு குழந்தையை சந்தோஷபடுத்த முடிகிறதே என்று நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது.

அச்சிறுமி அவள் அம்மாவை காட்டி "ராணி!" என்று சத்தமாய் சொன்னாள். இம்முறை எனக்கு விளங்கியதால் நான் "ஓ.. அம்மா பெயரு ராணியா?" என்றுவுடன் என் இரு கைகளையும் அவள் மடியில் வைத்து தடவினாள். என்ன ஒரு ஸ்பரிசம்!! என்னுடலில் ஏதோ ஒன்று ஊடுறவது போல் உணர்வு!! எனக்கு அவளை ரொம்ப பிடித்துவிட்டது. அவளிடம் பேசி கொண்டே இருக்க வேண்டும் என்று என் மனம் பட்டாம்பூச்சிபோல் பறந்தது.

தன் கையில் ஒரு கசங்கியிருந்த tissue paperயை வைத்திருந்தாள். அவளிடம் பேச்சு கொடுக்க வேண்டும் என்பதால் tissue paperயை சுட்டிகாட்டி "அது என்ன?" என்று நான் வினாவினேன் அவளிடம். ரொம்ப நேரம் யோசித்துவிட்டு "என் photo." என்றாள் அதே திக்கு குரலில். நான் ஒரு நிமிடம் ஆடிபோய்விட்டேன். எதற்கு அவள் அப்படி சொல்லவேண்டும்? கசங்கிபோன tissue paper போல்தான் நானும் என்று சொல்லாமல் சொல்கிறாளா? தெரிந்து சொல்கிறாளா? தெரியாமல் சொல்கிறாளா? என்று மனம் புரியாமல் குழம்பியது.

அதற்கு அவள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. மெதுவாக் இருக்கையில் இருந்து இறங்கி அவள் அம்மா கையை பிடித்து கொண்டாள். என்னை பார்த்து சிரித்து கொண்டே "டாட்டா" காட்டினாள். அவள் போகையில் ஏதோ ஒன்று என்னைவிட்டு போவதுபோல் நான் உணர்ந்தேன். ரொம்ப தூரம் சென்றபிறகும் திரும்பி பார்த்து, கூட்டத்தை தன் கண்களால் விலக்கி பார்வையால் என்னன தேடி கண்டுபிடித்து கைகாட்டியபடியே சென்றாள்.

அவள் சென்றவுடன், என் கண்களில் நீர் முட்ட கண்கள் குளமாகி கண்ணீரால் ஈரமானது என் கன்னங்கள்!! நான் யாருக்காகவும் எதற்காகவும் இப்படி அழதது இல்லை. இன்று ஏன் அழுதேன்? எனக்கே புரியாத புதிராக...
ஏன் கடவுள் இப்படிப்பட்ட குழந்தைகளை படைக்கவேண்டும்? அவள் அம்மாவின் முகத்தில் காண முடிந்தது மறைந்தகிடந்த கவலை. இன்று பார்த்துகொள்ள அவள் அம்மா இருக்கிறாள்.எதிர்காலத்தில் அவளுக்கென யார் இருப்பார்? இப்படி லட்சக்கணக்கான கேள்விகளுடன் மனம் சுழந்தது.
-----------------****--------------------

இப்படி டயரியில் எழுதி கொண்டிருக்க லதா தன் கடைசி வாக்கியத்தை கண்ணீருடன் முடித்தாள்- "அவளுக்கு நான் வைத்த பெயர் கலா. என் கலா எப்போதுமே நல்லா இருக்கணும்!"

அம்முவாகிய நான்-விமர்சனம்

படத்தின் பெயரே எதோ ஒரு கவிதை மாதிரி தான் இருக்கிறது. படமும் வித்தியாசமான முயற்சிதான். இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு தைரியம் உலகளவு இருந்திருக்க வேண்டும்! படத்தின் பலமே பார்த்திபனும் புதுமுக கதாநாயகி பாரதியும் தான்!! அதிகமான கதாபாத்திரங்கள் இல்லை. அதுவே சற்று வித்தியாசமாகதான் இருந்தது, ஒரு நாவல் படிப்பதுபோல் ஒரு உணர்வு.

காட்சிகள் அமைந்த விதம் ரொம்ப மென்மையாக இருந்தது. ஒளிப்பதிவாளருக்கு தான் அந்த பாராட்டு சேரவேண்டும். சரி கதை என்னவென்றால் ஒரு பெண் குழந்தை தனது தந்தையால் ஒரு விபச்சாரியிடம் விற்கப்படுகிறாள். அவள் அங்கே வளர்ந்து அங்கே வாழ்கிறாள். பார்த்திபன் ஒரு எழுத்தாளர். அவர் எழுதும் ஒரு கதைக்காக அங்கே செல்கிறார், பாரதி பிடித்திருந்ததால் அவளை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்குள் கொண்டு வருகிறான். ஒரு வில்லனால் அவன் படைப்புக்கு விருது கிடைக்காமல் போக, பாரதி அதற்காக என்ன செய்கிறாள்? என்பதை திரைக்கதையாக்கி நமக்கு ஒரு புதுமையான படத்தை தந்துள்ளது தமிழ் சினிமா.

இசையும் வசனமும் இப்படத்திற்கு இன்னொரு பலம். பார்த்திபன் அதிகம் பேசாமல் நடித்தது இன்னொரு பலம். ஒரு விபச்சார இடத்தை ரொம்பவே வித்தியாசமாக காட்டியிருப்பது அருமை! படம் பார்த்தால் தெரியும்... 'அருமை' என்று ஏன் சொல்கிறேன் என்பது புரியும். கல்யாணம் முடிந்து பார்த்திபன் படுக்கையறையை அலங்கரித்து கொண்டு இருப்பான். நாம் தமிழ் சினிமாவில் பார்த்ததுபோல் வழக்கமான(அநாவசியமான) முதலிரவு காட்சியை தான் காட்டபோகிறான் என்றால் அங்க ஒரு வித்தியாசம். பார்த்திபன் பாரதியிடன் சொல்வார் "நீ இன்னிக்கு நிம்மதியா தூங்க போற முதலிரவு. நிம்மதியா படு." என்று சொல்லிவிட்டு இந்த தனிமையான தூக்கத்தை அனுபவி என்று பார்த்திபன் சென்றுவிடுவது அற்புதமான ஒரு சிந்தனை.

இவ்வாறு பல வித்தியாசமான காட்சி இருந்தாலும், குறைகளும் அங்காங்கே உள்ளது. திரைக்கதையின் வேகம் சற்று மெதுவாகவே நகர்கிறது. பார்த்திபன் கதை எழுதுவது விருதுக்காகதான் என்று சொல்வது ஏற்று கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கிறது. இதுக்கு எல்லாம் மேலாக, இந்த படத்தை குழந்தைகள் கண்டிப்பா பார்க்கமுடியாது. குடும்பத்தோடு கண்டிப்பா பார்க்க இயலாது. எதோ ஒரு சஞ்சலம் ஏற்படுவதுபோல் இருக்கும்.... ஆக இப்படம் வெற்றிபடம் என்பதைவிட நல்ல கலைபடம் என்று கூறலாம்.

நம் சமூகம் இது போன்ற படங்களுக்கு எந்த அளவு ஆதரவு கொடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பா இப்படத்திற்கு பல வெளிநாடு படவிழாவில் விருது வாங்கும் வாய்ப்பு உள்ளது.

அம்முவாகிய நான் - தனியே படிக்க வேண்டிய டயரி!

தினமும் ஒரு கவிதை

பாசத்துடன் ஒரு பார்வை
நேசத்துடன் ஒரு சிநேகம்
கெஞ்சலுடன் ஒரு சிரிப்பு
கொஞ்சலுடன் ஒரு மறுப்பு
முறைப்புடன் ஒரு முத்தம்
சிணுகலுடன் ஒரு அமைதி
காதலுடன் ஒரு தவிப்பு
இக்கவிதையுடன் நான்
என்னுடன் நீ!

Sep 15, 2007

ஆயிரம் முத்தம்

என் அலுவலக மேசையின் மேலிருக்கும்


உன் புகைப்படத்திற்கு


தினம் ஆயிரம் முத்தங்கள்


கொடுக்கிறேன்பாசத்துடன் ஒரு பார்வை

நேசத்துடன் ஒரு சிநேகம்

கெஞ்சலுடன் ஒரு சிரிப்பு

கொஞ்சலுடன் ஒரு மறுப்பு

முறைப்புடன் ஒரு முத்தம்

சிணுகலுடன் ஒரு அமைதி

காதலுடன் ஒரு தவிப்பு

இக்கவிதையுடன் நான்

என்னுடன் நீ!