Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Dec 18, 2017

அருவி- இன்னும் hangoverல Rolling Sir!

படம் இடைவேள விட்டபோதே இந்த படத்த பத்தி ஷேர் செய்யனும்னு துடிச்சது மனசு. ஆனா, வருங்கால CM விஷால் ஐயா ஒரு படத்த பாத்தா, 3 நாளைக்கு அப்பரம் தான் அத பத்தி பேசனும்னு சொல்லிட்டார். அதனால மனசு கட்டுப்படுத்திகிட்டேன்.


இடைவேள போதே கிட்டதட்ட ஒரு கதை முடிஞ்ச மாதிரி ஒரு உணர்வு. இதுக்கு அப்பரம் எப்படி படம் நகரும்? நிஜ அருவிய பாக்க சில தூரம் பயணித்து ஒரு மல உச்சிக்கு நடந்து போய் ஒரு இடத்துல நின்னா, நம்ம மேல சாரல் பட்டு ஒரு பிரமிப்பு அடைவோம்ல அந்த மாதிரி இந்த படம். பல வருட காலம் தமிழ் சினிமா உருண்டு ஓடி வந்து நமக்கு அளித்த அதிசயம் "அருவி"

இயக்குனர் அருண ஒத்த வார்த்தல வாழ்த்துகள்னு சொல்லி முடிச்சிட முடியாத அளவுக்கு தன் எழுத்தால் வசீகரம் பண்ணியிருக்கிறார். கே ஸ் ரவிகுமார்கிட்ட assistantஆ இருந்த அருண் தான் இப்டத்த எடுத்தார்னு நினைக்கும்போது ஆச்சிரியமா இருக்கு! நல்ல படம் எடுக்க நல்ல கதையவிட நல்ல மனசு தேவை. அது அருண்கிட்ட நிறையவே இருக்கு. படத்துல பல இடத்துல அத கண்கூடா பாக்க முடியுது. அருவி கதாபாத்திரத்துக்கு இணையா எனக்கு பிடிச்ச இன்னொரு கதாபாத்திரம்- Emily. 



panasonic GH4 cameraல தான் முழு படத்தையும் எடுத்தாங்களாம். மூனு மாசம் ஒத்திகை. அனைத்து கதாபாத்திரங்களும் முழு படத்தையும் stage play போல நடித்து காட்டிவிடும் அளவுக்கு ஒத்திகை நடந்திருக்கு. இப்படி அருண் மற்றும் குழுவின் உழைப்பு மெய்சிலிர்க்க வைக்குது.

இடைவேளை முடிஞ்சு ஒரு காட்சில அருவி அந்த முதலாளிய பாத்து கேட்கும், "நீ எப்ப எதுக்கு கடைசியா அழுதேனு." அதுக்கு அவன் தனது ஊரில் இருக்கும் பனியாரம் சுடும் பாட்டிய பத்தி ஒரு கதை சொல்வான். சொல்லிமுடித்தவிட்டு தேம்பி தேம்பி அழுவான். எனக்கு பொசுக்கென எட்டிபாத்துச்சு கண்ணீர். ஒரு கெட்டவனுக்காக நான் ஏன் இவ்வளவு feel பண்ணுறேன்? அது தான் 'அருவி'. இப்படி நம்மள ஒரு mixed emotional rollercoaster பயணத்தில அமர வைச்சு கூட பழகும் மனிதர்கள வேற மாதிரி பாருங்கடானு சொல்லுது.

கென்யாவோ இல்ல வேற ஒரு நாடானு தெரியல. அங்க மலைவாசி மக்களின் பழக்கம் ஒன்னு இருக்கு. தப்பு செஞ்சவன ஊர்மக்கள் நடுவுல உட்கார வச்சு அவன் பண்ண நல்ல விஷயங்கள எடுத்து சொல்லி அவன் நல்லவனு அவனுக்கே புரிய வைப்பாங்களாம். அருவி படத்துல வந்த பனியாரம் பாட்டி காட்சிய பாத்தபோது எனக்கு இது தான் நினைவுக்கு வந்துச்சு.

'liberty song'னு ஒரு பாட்டு. பள்ளி பருவத்தில் வரும் அருவி தனது ஆசிரியரால் அடிவாங்கும் காட்சி ஒன்னு ஆரம்பத்துல வரும். கொஞ்ச நாள் கழிச்சு, அந்த ஆசிரியரை பாக்க நேரிடும். அவரிடம் சென்று, "வணக்கம் சார் நான் தான் அருவி" என்று சொல்லிவிட்டு கல்லை தூக்கி அவரது கார் கண்ணாடியில் வீசிவிட்டு ஓடுவார் அருவி. அதுக்கு அருவி, "எத்தன தடவ கீறி இருப்பான் தெரியுமா?" என்று தோழியிடம் சொல்வாள். 

மனசு கனத்திடுச்சு. எவ்வளவு பெரிய விஷயத்த ரொம்ப ஆழமா சொல்லிட்டு போய்கிட்டே இருக்கும் திரைக்கதை, 'அருவி'ய எல்லாரும் தூக்கிவச்சு கொண்டாட காரணம்னு அது தான்னு நினைக்கிறேன். டிவிட்டர் பக்கத்துல சிலர் தூக்கிவச்சு கொண்டாடும் அளவுக்கு இதல என்ன இருக்குனு ஒரு கேள்வி கேட்குறாங்க.

பரவாயில்ல சார். தூக்கி வச்சு கொண்டாட வேணாம். atleast தூக்கிவச்சுபோம். 'அருவி' இந்த உலகத்த பார்க்கட்டும். இந்த உலகம் 'அருவி'ய பார்க்கட்டும். இல்லேனா, ஹிந்தில ரீமேக் பண்றேன் தெலுங்குல ரீமேக் பண்றேனு ஒரு குரூப் கிளம்பும். அவங்ககிட்டலேந்து காப்பாத்தறத்துக்காவது, 'அருவி'யை தூக்கி வச்சிபோம். கடைசி வரைக்கும் 'அருவி' நம்ம புள்ளையா நம்ம படமா இருக்கட்டும்.


"விஜய் நடிச்ச படம்ங்கற. நல்ல படம்ங்கற...எப்படி டா கண்டுபிடிக்கறது?"

"கை வை டா பாப்போம்."

"எனக்கு பயம் இல்ல. ஏனா எனக்கு இழக்கறதுக்கு எதுவும் இல்ல."

"நான் உண்டு என் ஜட்டி உண்டுனு இருப்பேன்."

"120 ரூபாய் கொடுத்து குப்ப படத்த பாக்குறோம்."

இப்படி படம் முழக்க ரசிக்கும் வண்ணம் வசனங்கள அள்ளி தெறிக்கவிட்டு இருக்காங்க.

இசை- beautifully unconventional. sweetly haunting. பிந்துமாலினி மற்றும் வேதாந்தின் பாடல்காள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லுது. 

என்ன டா படத்தில் நடித்த அதீத்தி பாலன் பத்தி ஒன்னும் சொல்லலையேனு நினைக்க வேண்டாம். அந்த புள்ளய பத்தி தனியா ஒரு போஸ்ட் போட்டால் கூட எல்லாத்தையும் சொல்லிட முடியுமானு தெரியல. இப்போதைக்கு அந்த புள்ளகிட்ட ஒன்னே ஒன்னு தான் சொல்ல தோணுது.

"இறுக்கி அணைச்சு ஒரு உம்மா" தரணும்.



Apr 8, 2017

காற்று வெளியிடை- வெறும் காத்துத்தியேன் வருது!

படம் ஆரம்பிக்க 10 நிமிஷத்துக்கு முன்னாடியே திரையரங்கு இருக்கையில் உட்கார்ந்து ஐஸ் லமன் டீ குடிச்சுகிட்டு இருந்தேன்.

"சிநேகிதனே சிநேகிதனே" பாடல் ஒலிச்சது அரங்கில். புன்னகையித்தேன். ஆஹா வரவேற்பு பாடலே செம்மயா இருக்கே. "இன்னிக்கு தூக்கத்தில் ஒரே லவ் கனவு தான் போ காயு" என கன்னத்தில் கிள்ளாத குறையாய், சராட்டு வண்டியில் பாடலை முணுமுணுத்தபடி அமர்ந்து இருந்தேன். 





படம் ஆரம்பிச்சது. கார்த்தி சிறைல அடைக்கப்படும் காட்சி. வேறு ஒரு இருட்டு சிறைல ஒரு கைதி தண்ணிக்காக தலைய மட்டும், ரொம்ப ரொம்ப சின்ன துவாரம் வழியில நீட்டுவார். அதிகாரி ஆக்ரோஷமா நடந்து வந்து, அவரின் தலைய வலுகட்டாயமா தள்ளிவிட்டு ஜன்னலுக்கு பூட்டு போடுவார். 




செம்ம சீன் போ! வந்துட்டேனு திருப்பி சொல்லு-னு மணிரத்னம் கால் பதித்துவிட்டார் என நினைத்தேன். கார்கில் போர், ராணுவம், தீவிரவாதம், சிறை, தேசப்பற்று.  தீப்பற்றும் கொடி மேல நம்மை மறுபடியும் உருள செய்ய போகிறார் என மனதில் வீரத்துடன் தொடர்ந்து ரசித்தேன் படத்தை.


அதுக்கு அப்பரம் அடுத்த வினாடியிலே flashback. 'வான் வருவான்' பாடலுடன் லீலா அறிமுகம் காட்சி. படத்தின் ஹீரோ VC இல்ல. AC தான். Aniyaayathuku Cold. 



ஸ்ரீநகரை சும்மா சுத்தி சுத்தி வளையத்து வளையத்து மேகம், அருவி, சாலை, மலை, புது வெள்ளை மழை- அப்படினு ஒரே குளிர்பிரதசமா அணு அணுவா காட்டி தள்ளிட்டார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன். 




ம்ம்ம்...கதை எதை நோக்கி போகுது மணி சார்?


மருத்துவமனையில் அடிப்பட்டு கிடந்த VC எழுந்து உட்கார்ந்து கவிதை பாடுகிறார். அபாஸ் ஒரு படத்துல பாரதி ரசிகனையாய் வந்து கவிதை பாடும் அபத்தமெல்லாம் பார்த்த தமிழ் சினிமாவில் VC கவிதை அரங்கேற்றம் மோசமா தெரியவில்லை என்றாலும், ஏன் எதுக்கு இந்த கவிதை?


கவிதை அரங்கேற்றம் முடிந்து, அடுத்த ஆடல் கலை நிகழ்ச்சி. 

வந்தவன், போனவன், லைட் மேன், எல்லாருமே tango ஆடுறாங்க. விமான படை பயிற்சியில் இதெல்லாமா சொல்லி தராங்கோ? லீலாகூட வந்த டாக்டர் தோழியும்  சேர்ந்து பாய்ந்து, குதித்து, எகுறி, ஏறி கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குகிறார். 

டெல்லி கணேஷ் லீலாவின் தாத்தா. அவர் வீட்டுக்கு முன்னாடி ஒரு கண்ணாடி வீடு. அவ்வளவு அழகு. ஆனால், அவரின் கதாபாத்திரம் அந்த கண்ணாடி வீட்டு அளவுகூட இல்லை என்பது மிக பெரிய வருத்தம். ஆர் ஜே பாலாஜியை வச்சு செய்து இருக்கிறார் போல (கடல் படம் விமர்சனத்துக்கு தான் நினைக்குறேன்)

"உனக்கு பெத்து போடனும்," என லீலா குமற, ஆண் ஆதிக்கம், பெண் அடிமைத்தனம் என  புதுசா ரசிக்கும் வண்ணம் காட்சிகளை நகர்த்தி கொண்டு போக நிறைய வாய்ப்பு இருந்தாலும், தான் எடுத்த முந்தைய படக்காட்சிகளை தான் மறுபடியும் எடுத்தே தீர்வேன் என கங்கணம் கட்டியிருக்கிறார் மணி சார். 



ஸ்ரீநகரில் இவர்களை தவிர வேறு யாருமே இல்லாதது போல் ஒரு உணர்வு. அது தான் படத்தின் நம்பகத்தன்மையை குறைத்து புதைத்துவிடுகிறது. ராவணன், கடல் போன்ற படங்களை தவிர்த்து, மற்ற மணிரத்னம் படங்களை சும்மா forward செய்து, play button  அழுத்தி பாருங்க. அந்த காட்சி ரொம்ப யதார்த்தத்திற்கு அருகாமையில் இருக்கும். 

ஒகே கண்மணி படத்தில், பிரகாஷ்ராஜ் சமையல் செய்துவிட்டு பாத்திரம் கழுவி வைப்பார்.  லீலா சாம்சன் "கடாய் அடிபிடிச்சு இருக்கு. நல்லா தேச்சு கழுவனும்" என்பார். 

யதார்த்தம். மிடில் கிளாஸ் குடும்ப யதார்த்தம். இதுபோன்ற யதார்த்தம் இல்லாததே மிக பெரிய குறை -காற்று வெளியிடை. 

துணைநடிகர்கள் அனைவரும் 'தெய்வம் தந்த வீடு' ஹிந்தி பதிப்பில் நடித்தவர்கள் போல் இருக்கிறார்கள். VCயின் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி- அனைவரும்  'நம்மில் மேல் என்ன சொல்றான்' தமிழ் வாசம் வீசும் சேட்டு குடும்பம் போல் தெரிகிறார்கள். ஒரு கதாபாத்திரம்கூட மனதுக்கு ஒப்பவில்லை. 

அதிலும் அவரின் அம்மாவை லீலாவிடம்,  அறிமுகப்படுத்தி, "இவங்க அம்மா. பாரதியும் மீன் குழம்பு ஊட்டி வளர்த்தவங்க." என சொல்லும்போது, 

மணி சார், petromax lightஏ தான் வேணுமா சார்?



அலைபாயுதே படத்துல பிரமிட் நடராஜான் சொல்வாரே, "அவ ஒரு இழு, இவ ஒரு இழு"

அந்த மாதிரி, லீலாவும் ஒரு பக்கம் கதையை இழுத்துகொண்டு போக, VC இன்னொரு பக்கம் இழுத்துகொண்டு போக, "yawn வருவான் வருவான்"னு பாடிகிட்டு இருந்தேன். 

அதித்தீ ராவ், ரொம்ப நல்லவே கதாபாத்திரத்துக்கு பொருந்தி இருந்தாங்க. ஆனா, படம் இரு கதாபாத்திரங்களை மட்டுமே மையப்படுத்தி இருப்பதால், இன்னும் அதிகமான அழுத்ததை கொடுத்திருக்கலாமோனு தோன்றியது. அப்பரம் நம்ம கார்த்தி. உங்களுக்கும் உங்க அண்ணனுக்கு இதுவே வேலையா போச்சு. உடம்ப குறைச்சால் நடிப்ப வரும்னு கம்பராமாயணத்துல சொல்லியிருக்காங்களா என்ன?



காதல் காட்சிகளில் எல்லாம் நம்ம கார்த்தி, காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பாலயாவிடம் பேய் கதை சொல்லி பயம் காட்டுவாரே அந்த மாதிரி தென்பட்டார். 

ஆனா, கடைசி 15 நிமிடங்களில் கார்த்தியின் நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும். 

படத்தில் மிகப்பெரிய ஆறுதலே ஏஆர் ரகுமான் தான்! 

வசனங்கள் என்ற பெயரில் permutation and combinationல் வரிகளை எழுதி இருக்கிறார். 


"நீ என்னைய விரும்புறத விட உன்னை அதிகமா விரும்புவேன்.
நீ என்னைய வெறுத்தாலும் விரும்புவேன்.
நீ என்னைய விரும்பலனாலும் விரும்புவேன். "



கபி குபாம்
குபாம் கபி
கம்பிகும்பா
கும்பா கம்பி 
பிம்த்தகம்கு


தோழி ஒருத்தி கேட்டா, "அப்போ இனி மணிரத்னம் ரசிகையா இருக்க போறதில்ல நீ. அப்படி தானே?"


உயிரை எடுத்தாலும்,
காற்று வெளியிடை எடுத்தாலும்,


He is my man! 

Mar 27, 2017

கடுகு- சிறுத்தாலும் காரம் குறையாது .

"யாராச்சு நம்மகிட்ட ஹாய்...  சாப்பிட்டீயா? தூங்கினீயா?னு கேட்க மாட்டாங்களானு ஏங்குறோம். அதனால தான் இந்த facebook whatsappலலாம் அவ்வளவு கூட்டம்"

ஏன் என்று தெரியவில்லை. படத்தில் இந்த வசனம் வந்த மறுநொடியே என் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென்று வழிந்தது. இப்படி மனசை தொடும், வருடும் பல வசனங்களை தூவி விட்டு இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.




பிழைப்பதற்காக கிட்டதட்ட ஒரு எடுபிடி போல் காவலதிகாரியுடன் இன்னொரு ஊருக்கு வரும் புலிபாண்டி (ராஜ்குமார்) வாழ்க்கையில் என்ன நடக்கிறது என ஒரு வரியில் சொல்ல கூடிய கடுகு அளவு கதையில் மிக பெரிய பலமே இயக்குனர் தேர்வு செய்த நடிகர்கள் தான். இப்படி ஒரு நடிகர் தேர்வை கனவில்கூட எதிர்பார்த்து இருக்க மாட்டோம். ஆனா, இவர் தான் இதுக்கு பொருத்தமா இருப்பார் என்று அசூர அளவு நம்பிக்கை வைத்த இயக்குனர் விஜய் மில்டனை பாராட்ட வார்த்தை இல்லை.

'character-driven' கதையில் நடிகர்கள் கொஞ்சம் சொதப்பினால்கூட அவ்வளவு தான். அப்படி நேர்கோட்டில் பயணம் செய்த ராஜ்குமாரும் சரி, பரத்தும் சரி மிக துல்லியமாக தனது வேலையை பார்த்து இருக்கிறார்கள். ராஜ்குமார் நடித்த புலிபாண்டி கதாபாத்திரத்தில் வேறு யாரும் பொருந்தமா இருந்திருப்பார்களா என்ற கேள்வியை கேட்கும்படி அவரது நடிப்பு மிலிர்கிறது படத்தில்.

Image result for great acting quotes"ஏய்யா தப்பு பண்ணல தப்பு பண்ணல சொல்றதே பெரிய தப்பு தான்ய்யா!" என ராஜ்குமார் வாய்விட்டு அழும்போது, இவரையா நான் கிண்டல் செய்து எழுதியிருந்தேன் (திருமதி தமிழ் படத்திற்காக) என்று அறையாமல் அறைந்துவிட்டு சென்று இருக்கிறார்.  இயல்பு நடிப்பு என்பதே ஏதோ ஒரு வகையில் நமது உண்மையான சுபாவத்தை வெளிகொண்டு வருவது தான். அதனை கண்டு அறிந்து திரையில் விருந்து அளித்து இருக்கிறார் ராஜ்குமார்.


ஏதோ ஒரு விமர்சனத்தில் படித்தேன்- "புலிபாண்டி, இப்படியா ஒருத்தர் ரொம்ப நல்லவரா இருப்பார். அது தான் கொஞ்சம் நெருடலா இருக்கு."

எனக்கு ஆச்சிரியமா இருந்தது. நல்லவனை அதுவும் புலிபாண்டி போல் நல்லவனை இருப்பதுகூட இவ்வுலகில் அதிசயமா போயிவிட்டதா?  பரத் கதாபாத்திரம் போல் சூழ்நிலை கைதியாய் வாழும் அனைவருக்கும் புலிபாண்டி ஒரு அதிசயம் தான்.



பரத்- காதல் படத்திற்கு அப்பரம், ஒரு நல்ல படம். இந்த மாதிரி நடிங்க பாஸ்! உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

எனக்கு மிகவும் பிடிச்சு இன்னொரு விஷயம், விஜய் மில்டன் இசைவெளியிட்டு விழாவில், எளிய மனிதர்களை வரவழைத்து அவர்களை பேச வைத்தது தான்.


இன்று காலையில் கலாய்த்து வந்த ஒரு டிவிட் படித்தேன் - "பாலா படத்த விக்ரமன் எடுத்த மாதிரி இருக்கு கடுகு"

நம்மூரில் ஒரு நல்ல படம் எடுத்தாலும், கிண்டல் செய்யும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து நல்ல சினிமாவை கொடுக்க விரும்பும் ஒரு சில இயக்குனர்களில் விஜய் மில்டனும் இப்போது வந்துவிட்டார்.

இப்படி மக்களுக்காகவும், மக்களின் மனதிற்கு பிடித்த மாதிரி படம் எடுத்த இந்த குழுவுக்கு, கடுகளவு இல்லை, கடலளவு நன்றி!


Aug 4, 2014

தமிழ் சோறு போடுமா?



தமிழ் சோறு போடுமா?
அட போங்க! அது சோறு போடுமானு தெரியாது. ஆனா, கண்டிப்பா ஐயர்லாந்து கூட்டிட்டு போகும்!

என்னது ஐயர்லாந்தா???

இப்படி தான் எனக்கும் தூக்கி வாரி போட்டது முதன் முதலில் செய்தியைக் கேட்டபோது.

போன வருடம் கதை எழுதும் போட்டியில் கலந்து கொண்டேன். நான்கு மொழி பிரிவில், என் கதை தமிழ் பிரிவில் ஜெயித்தது. முதல் பரிசாக கொஞ்சம் பணமும், ஐயர்லாந்தில் நடந்த கதை எழுதும் பயிலரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

வேலை, இம்சை, திங்கட்கிழம பத்தி கவலை, மீட்டிங் என எல்லாத்தையும் தூக்கி போட்டு விட்டு, புது புது அரத்தங்கள் ரகுமான் போல் ஜாலியான  ஒரு escape!!




ஒரு மாத விடுதி செலவு, சாப்பாட்டு செலவு, மத்த செலவுகள் அனைத்தும் sponsored!! கடவுள் இருக்கான்-டா!!

விடுதி என சொல்ல கூடாதுஇவ்விடத்தை. ஒரு அழகான வீடு. வீட்டிற்கு பின்னால், அருவி, கொஞ்சம் தொலைவில் கடல், மரம், ஆறு என இயற்கை நிறைந்த இடம். 15 நாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள் ஒன்றுகூடி பயிலரங்கில் கலந்து கொண்டோம்.

வழி நடத்தியவர்,  டேவிட். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். பயிலரங்கு என கூட சொல்லமுடியாது. அப்படி ஒரு ஜாலி gathering. ஆங்கிலத்தில் நடந்த இந்த பயிலரங்கு காலையில் ஆரம்பித்தால் மதியம் 12 முடிந்துவிடும். டேவிட், கதை எழுதும் உத்திகள் பலவற்றை சொல்லி தந்தார்.

மதிய உணவுக்கு பின்னர், நமக்கு பிடித்ததை செய்யலாம்.

மலை ஏறுதல், massage, அருவிக்கு போகலாம், அது ஒரு சின்ன கிராமம் என்பதால், நடக்க வசதியான இடங்கள் நிறைய உண்டு.

 நான் தங்கியிருந்த அறை.



 படுக்கைக்கு மேல் அடிக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள்.

 தினமும் கூடும் இடம். இது தான் meeting இடம். (முதல் சில நாட்கள் எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துருச்சு. வேலையிட மீட்டிங் அறையை நினைத்து பார்த்து. )

 ஐயர்லாந்தில் இரவு 9 மணிக்கு தான் பொழுது சாயும். இரவு உணவு முடிந்து, அனைவரும் ஒன்றாக படம் பார்ப்போம்.


(கீழ் படம்: நாங்கள் தங்கியிருந்து வீட்டிற்கு முன்னால் இருந்த வீடு.)



 இரவு உணவு உண்ணும்போது, பாடல் ஆடல் என ஐயர்லாந்து கலாச்சாரத்தை பத்தி நிறைய தெரிந்து கொண்டோம்.

ஒரு மாதம், இதோ ஒரு வேறு உலகத்துக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு. இந்த வலைப்பக்கம் ஆரம்பிக்கும்போது, கதை கவிதை என எதுவுமே எழுத தெரியாது. இப்ப 8 வருஷம் ஆச்சு வலைப்பூ ஆரம்பிச்சு. ஏதோ கொஞ்சம் கதை, கவித எழுத தைரியம் வந்து இருக்கு. நீங்க சொல்லும் கருத்துகள் வச்சு தான் எனக்கு ஊக்கமே வந்துச்சு.

வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். ஐயர்லாந்து கனவு எல்லாம் நினைச்சு கூட பார்க்காத ஒன்று. கடவுள், பெத்தவங்க செஞ்ச புண்ணியம், அப்பரம் வாசகர்களாகிய உங்க ஊக்கம் தான் காரணம். தனஷ் சொல்வதுபோல், "இது என் கனவு திவ்யா!" என்று இப்ப நினைச்சாலும் கண்கள் சந்தோஷ கண்ணீர் வடிக்கும்.

 கோடி நன்றிகள்!

தமிழ் சோறு போடுமா?
கண்டிப்பா போடும். ஏனா ஐயர்லாந்தில் பல நாள் தயிர் சாதம்கூட கிடைத்தது!

Jul 14, 2008

இதலாம் கெட்ட வார்த்தையா?

இப்பலாம் ஜாலிக்காககூட ஒருசில வார்த்தையா பேசமுடியல... அட அத ஏங்க தமிழ்ல இரண்டு வார்த்தைகூட பேசமுடியல(ரொம்ப யோசிச்சு யோசிச்சு பேச வேண்டியதா இருக்கு... எப்படி பேசினாலும் அதுல ஒரு double meaning இருக்கு என்கிறார்கள்? என்ன கொடுமை சார் இது?

ஆப்பு- இது ஒரு கெட்ட வார்த்தையா?? காமெடிக்காக சொல்வதை சீரியஸா எடுத்துகிட்டா என்ன செய்வது?

கடுப்பாக்குற- இதுவும் ஒரு கெட்ட வார்த்தை? வெறுப்பேற்றினான் என்பதற்கு இன்னொரு வார்த்தை தான் கடுப்பாக்குறான். இது எப்படி கெட்ட வார்த்தையாக நினைக்க முடியும்? இந்த வார்த்தைய சொன்னதற்கு 'அசிங்கமா பேசாத' என்று நல்ல பூஜை விழுந்தது!!!:(

பிடுங்குதல்- களை பிடுங்கினார். அன்னிக்கு செய்தித்தாள் படிக்கும்போது, விவாசயத்தை பற்றி ஒரு செய்தி. அதில் களை பிடுங்குதல் பற்றி இருந்தது. வாய்விட்டு படித்தேன். 'அந்த' வார்த்தையை படித்தபோது, ஒரு மாதிரி பார்த்தார்கள்.:(

ஆட்டுதல்- மாவு ஆட்டினான்.

தலைமுடிக்கு பழமையான தமிழ் சொல் ஒன்று இருக்கு- மயிர். இங்க பாருங்க இதை படிக்கும்போதுகூட எத்தனை பேரு முகம் சுழிப்பார்களோ! இன்றைக்கும் என் தாத்தா தலைமுடி என்று சொல்லமாட்டார். 'அந்த' வார்த்தையை தான் பயன்படுத்துவார். உண்மையான தமிழ் சொல் தானே அது!

words have become vulgarised by us! பிறக்கும்போதே, இது கெட்ட வார்த்தை இது நல்ல வார்த்தை என்று பிரிக்கபடவில்லை. நாம் தான் அதை கெட்ட வார்த்தையாக்கி கொண்டிருக்கிறோம். சரி எவனோ ஒருவன் அதை கெட்ட வார்த்தையாக்க, அந்த வார்த்தைய சொன்னால் அது அசிங்கம் என்று நினைத்து நாமும் அதற்கு துணை போகிறோம். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்! இல்லை என்றால், எல்லாம் வார்த்தைகளுக்கும் இதே கதி தான்!

அப்பரம், தமிழே பேசமுடியாமல் போகிவிடும்!

Jul 11, 2008

சம்பளம் எப்படி வந்துச்சு?

சம்பா என்றால் அரிசி
அளம் என்றால் உப்பு. முந்தைய காலத்தில் மக்கள் அரிசி மற்றும் உப்புக்காக தான் வேலை செய்தார்கள். ஆகவே தான் அதற்கு பெயர் சம்பளம் என்று வந்தது.

ம்ம்ம்... ஆஹா இன்னிக்கு யாராய்யா அரிசிக்கும் உப்புக்கும் வேலை பாக்க போறா?
அவ்வ்வ்...:))

(இது, விஜய் டீவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை பார்த்தபிறகு வந்த பாதிப்பு இல்லங்க...):)