May 16, 2018

நடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்?

தனக்கு பிடிச்சவங்க வாழ்க்கை கதைய மத்தவங்களுக்கும் பிடிச்ச மாதிரி படம் எடுக்க தெரிஞ்ச வித்தைக்காரர் 'நடிகையர் திலகம்' படத்தின் இயக்குனர் அஷ்வினு சொல்றதில்ல ஒரு சந்தேகமும் இல்ல.  இவ்வளவு பெரிய 'ரிஸ்க்' எடுத்துருக்குறார்னு திறமை உழைப்பு ரெண்டுமே அவர்கிட்ட நிறையவே இருக்கு.

சாவித்திரி.
சாரி.
சாவித்திரி அம்மா.


அவங்க எவ்வளவு பெரிய நடிகையர் திலகம்னு நமக்கு ஒரே ஒரு காட்சில புரிய வைக்குறார் அஷ்வின். சாவித்திரி அம்மா பட ஷுட்டிங்ல இருக்குறார். அழுகிற காட்சி. சாவித்திரி அம்மாவுக்கு கிளிசரின் போடனும். ஆனா, அன்னிக்கு அந்த நாள் கிளிசரின் சரியா போச்சு. இயக்குனருக்கு கோவம் வர, பேக்-கப் சொல்றார். அதுக்கு சாவித்திரி அம்மா, "இல்ல, இப்பவ நடிச்சுடுறேனு' சொல்ல, இயக்குனர், "நிறைய டேக் ஆகும். ஒரே ஒரு கண்ணுல மட்டும் தான் கண்ணீர் வரனும். உன்னால கிளிசரின் இல்லாம முடியாது'னு சொல்ல,

அதுக்கு சாவித்திரி அம்மா, "இல்ல நான் ஒரே டேக்ல பண்ணிடுறேன். எத்தன துளி கண்ணீர் வரனும்?"

தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் சாவித்திரி அம்மானு சொன்னா, அது மிகையாகாது.

மூனு மணி நேரம் படம் போனதே தெரியாம, ஒரு அழகிய ஆறு மாதிரி ரசிச்சு பாத்துகிட்டே இருந்த படம் சமீபகாலத்துல இதுவா தான் இருக்கும். அவங்க வளர்ச்சி மட்டும் இல்லாம, வீழ்ச்சியும் அதுக்கு காரணம் என்ன அப்படினு தைரியாம காட்டியிருக்காங்க. ஏன் தைரியம்னா, இதுல பல பிரபலங்கள் பெயர் அடிப்படுது? முக்கியமா, ஜெமினி கணேசன்.

சாவித்திரி அம்மா பல பேரும் புகழும் அடையுறாங்க. ஜெமினி கணேசனுக்கு அது அப்போப்போ புடிக்காம போக,  கல்யாணம் பண்ணிகிட்ட  ரெண்டு பேருக்கு இடையே விரிசல். ஒரு கட்டத்துல எல்லாத்தையும் விட்டுடுறேனு சாவித்திரி அம்மா சொன்னாலும், அதுக்கு அவர், "இல்ல அம்மாடி, வேணாம்னு' சொல்றார். ஜெமினி கணேசனை வில்லனா காட்டாம, இருக்க எடுத்துகிட்ட முயற்சி பாராட்ட வேண்டியது.


சாவித்திரி அம்மா, 'பத்மஸ்ரீ' பட்டம் வேணாம்னு சொல்லிட்டாங்க, அதுக்கு காரணம் ஜெமினி கணேசன். ஏனா அவர் தப்பா நினைச்சுப்பார்னு' இப்படி அவங்க வளர்ச்சிக்கு  முட்டுகட்டையா ஜெமினி இருக்க, அவர் மேல ஏதோ ஒரு வெறுப்பு வர தான் செய்யுது. "நீங்க மட்டும் கடைசி வரைக்கும் சரியா பாத்துகிட்டு இருந்திருந்தா....இந்த நிலம அவங்களுக்கு வந்திருக்குமா?" அப்படினு கேள்விய கேட்காம இருக்க முடியல.


சாவித்திரி அம்மா குடிபழக்கத்துக்கு அடிமையா ஆன பிறகு, அவங்க பொண்ணு, "அம்மா எது செஞ்சாலும் யாரும் செய்யாத அளவுக்கு தான் செய்வாங்க. அம்மாவுக்கு தோல்விங்கறதே பிடிக்காது. ஆனா, அப்பாவ ஜெயிக்கனும்னு வெறில எல்லாத்தையும் தோத்துட்டாங்க"ணு சொல்லும்போது மனசு கனத்துடுச்சு.

அவங்க எத்தனயோ பேருக்கு உதவி செஞ்சாங்க. எல்லாருக்கு சாப்பாடு போட்டாங்க. தர்மம் பண்ணாங்க.  ஒன்னுமே இல்லாத போதும், அவங்க அவங்களாவே வாழ்ந்து முடிச்சது தான், நமக்கெல்லாம் மிக பெரிய வாழ்க்கை படம்.  எனக்கு படம் பாக்கபோது, இளவரசி டயனா வாழ்க்கை வரலாறு நினைவுக்கு அப்பப்போ வந்து போனுச்சு.

*******

சாவித்திரி அம்மா மாதிரி தெரிவது
சாவித்திரி அம்மா மாதிரி நடிப்பது
சாவித்திரி அம்மா மாதிரி வாழ்ந்து காட்டியது

இது மூனுலயும் கீர்த்தி சுரேஷ் வெளுத்து வாங்கி இருக்காங்க. 50 வருஷம் கழிச்சு கீர்த்தி சுரேஷ் பத்தி படம் எடுத்தா, இந்த படம் கண்டிப்பா அதுல முக்கியமா இருக்கும். முதல் ஒரு மணி நேரம் படம் சாதாரணமா தான் போகுது. ஆனா, அவங்க நடிகையா ஆன பிறகு, ஜெமினி கணேசன் மேல காதல் கொண்ட பிறகு, கீர்த்தி சுரேஷ் அப்படியே முழுமையா சாவித்திரி அம்மாவ மாறிட்டாங்க.

சில black&white ஷாட்லயும் சரி, மாயபசார் பாடல் காட்சிகளயும் சரி கீர்த்தி சுரேஷின் நேர்த்தியான நடிப்ப பாத்து வியந்து போகாம இருக்க முடியல. கொஞ்சம் பிசரு தள்ளினா கூட, கலக்க போவது யார் நிகழ்ச்சி மாதிரி வெறும் மிமிக்கிரி மாதிரி இருந்திருக்கும். ஆனா, அந்த மாதிரி எதுவுமே இல்லாம, 'என்னோட best இது தான் பாருங்க'னு கீர்த்தி சொல்லாம சொல்லியிருக்காங்க.

எனக்கு 7ஜி ரென்போ காலனி படத்துல அப்பா, சொல்வாரே, "பாரேன் இந்த பையனுக்குள்ள ஏதோ ஒன்னு இருந்திருக்கு", அந்த காட்சி வசனம்  கீர்த்தி சுரேஷுக்கு பக்காவா பொருந்தும்.

நடிப்பு மட்டும் இல்லாம, இசையும் இந்த படத்துக்கு மிக பெரிய பலம். சாவித்திரி அம்மாவ கண் முன்னாடி, visualஆ கீர்த்தியின் செஞ்ச மேஜிக் ஒரு பக்கம்னா, இசை, இன்னொரு மேஜிக். சாவித்திரி அம்மா, திரையில வரும்போதெல்லாம், பிண்ணனி இசை ஒன்னு வரும் பாருங்க, புல்லரிக்கவச்சிடும்.

படம் பார்த்து முடிச்சுட்டு, சாவித்திரி அம்மாவின் நிஜ மகள்,

கீர்த்தி சுரேஷ் அம்மாவுக்கு ஃபோன் போட்டு சொன்னது, "கீர்த்தி எங்க அம்மாவ பெத்து எடுத்து கொடுத்துட்டா"

இதுக்கு மேல, ஒரு நடிகைக்கு என்ன பாராட்டு வேணும்?


சமந்தா வழி கதை நகர்வது சுவார்ஸ்சியம். சும்மா, அவங்க வாழ்ந்த வாழ்க்கைய 'documentary' மாதிரி கொண்டு போகாம, நம்ம மனசுல நிக்கிற படமா உருவம் பெற உழைத்த அத்தனை நடிகர் நடிகைக்கும், பாராட்டுகள்!
வெறும் படமா இல்லாம, தமிழ் சினிமாவுல ஒரு முக்கிய வரலாறா மாறிய அற்புத பொக்கிஷம்- நடிகையர் திலகம்.

May 11, 2018

மண்ணெண்ணே வேப்பெண்ணே வெளக்கெண்ணே, STRESS வந்து கிட்னி போனா எனக்கென்ன?

வேலை கஷ்டம்னு நினைச்சு, கொஞ்சம் நாள் படிக்க போலாம்னு வந்தா, இந்த படிப்பும் என்ன இவ்வளவு கஷ்டமா இருக்குப்பு??



சரி, அந்த வாக்கியத்த மறுபடியும் rephrase பண்ணி சொல்றேன். இந்த மூன்னு மாசத்துல knowledge கண்டிப்பா நிறைய வளர்ந்து இருக்கு. எத்தன புது விஷயங்கள கத்துகிட்டேனு கணக்குல வச்சுக்கு முடியாத அளவுக்கு அவ்வளவு சுவாரஸ்சியமான விஷயங்கள் படிச்சு, ரசிச்சு இருக்கேன். ஒருத்தன் மொழி ஏன் கத்துக்கிறான், அத எப்படி கத்துக்கிறான், ஒரு மொழி கத்துகிட்டு, இன்னொரு மொழிய சுலபமா கத்துக்க முடியுமா? முடியாதா? அத அப்படி மூளைக்குள்ள process ஆவுது. இப்படி ஏகப்பட்ட விஷயங்கள்.சின்ன புள்ளைங்க ஆங்கிலம் கத்துக்கும்போது, ஏன் முதல 'playing, jumping, eating'னு -ing present progressive verb பயன்படுத்துறாங்கனு பல விஷயங்கள பத்தி தெரிஞ்சுக்க ஒரு அபூர்வ வாய்ப்பு இந்த பயணம்.
ஆங்கிலம் மொழி யாருடையது? பரவிகிடக்கும் ஆங்கில ஆதிக்கத்தால் விளைவுகள், பயன்கள்.... இப்படி ஆர்வத்தயும், அதே சமயம் எத்தன மொழி தெரிந்தாலும், நம்ம எல்லாருமே ஏதோ ஒரு வகையில ஒன்னு தானு புரிந்த மூன்னு மாசம் இதுவா தான் இருக்கும்.

அப்பரம் என்ன லா stress?

படிக்கறது stress கிடையாது. அதுக்கு அப்பரம் 2500 வார்த்தைல ஆய்வு கட்டுரை எழுதனும். அது தான் மண்டைய காய வைக்குது. 

இப்படி கிட்டதட்ட 9 கட்டுரைகள் மூனு மாசம் எழுதிகிட்டு இருக்கேன். ஒரு கட்டுரை எழுதறதுக்குள்ள, ஒரு கிட்னி காணாம போயிடும். இதுல கட்டுரைனு சுருக்கி சொல்லிட்டேன்- essay, research, analysis. இப்படி ஜில் ஜங் ஜக்குனு மூனா பிரிக்கலாம். எனக்கு மூனுமே வராது, பிடிக்காது. என்ன படிச்சேனு உட்கார்ந்து பேச சொல்லுங்க, வாய் கிழிய, உங்க காது வலிக்க, பேசுவேன். ஆனா, இந்த எழுத்து தான்..... அபிராமி கமல் மடல் எழுதுற மாதிரி....அந்த வார்த்த தான் வரமாட்டேங்குது. 

இதுக்கு பத்தாதுனு வாரம் வாரம் quizனு ஒன்னு வச்சு இன்னொரு கிட்னியயும் புடிங்கிட்டாங்க. அதுல கேள்வி என்னான்னு புரிஞ்சிக்க இன்னிக்கு வரைக்கும் முயிற்சி பண்றேன்...ம்ம்ம்...ஹும்... இது ஆவறதுக்கு இல்ல!

அப்பரம் வாரம் வாரம் reflection- அதுக்கு ஒரே ஒரு மார்க் தான். ஆனா, குறைந்தபட்சம் 3 மணி நேரம் செலவு பண்ணனும். ஏனா, 42 பக்கங்கள் படிக்கனும். அந்த ஒரே ஒரு மார்க் பெற. 


18 வயசுல படிக்கறதுக்கும், 'ஹாலோ, எனக்கென பெரிய வயாசாச்சு? எனக்கு 18 வயசு தான்'  னு பொய் பேசும் மூட்டு வலியும் முதுகு வலியும் முழுசா நம்மகிட்ட ஐக்கியமான வயசுல படிக்கறதுக்கும் கடலளவு வித்தியாசம் இருக்கு, சித்துப்பு!! 2 மணி நேரத்துக்கு மேல ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பாக்க முடியாது.  ஏனா என் மண்ட உச்சில சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்குது! 

ராத்திரி குளிர் வேற அடிக்கும் சீசன் இது. இங்க brisbaneல சாய்ந்திரம் 5 மணிக்கெல்லாம்  இருட்டிடும். அதுக்கு அப்பரம் சின்ன தம்பி கவுண்டமணி மாதிரி, 'டேய், 6 மணிக்கு மேல, ஒரு ரூபா கொடுத்தாலும், நான் வேல பாக்க மாட்டேன்' னு கூவுவாரே அந்த மாதிரி, 6 மணிக்கெல்லாம், தூக்கம் கண்ண சொக்கும். விடியற்காலைல 3 மணிக்கு, நல்ல தூங்கிட்டு இருக்கும்போது, வலது கண்ணுலேந்து தண்ணி கொட்டும். என்ன ஆச்சுனு போய் கண்ணாடில பாத்தா,

'ஜாதி ஜாதினு கத்துறீயே, ஜாதியா டா உன்ன பெத்துச்சு?" னு விஜயகாந்த் ஒரு படத்துல சொல்லும்போது அவருக்கு கண்ணு சிவப்பா துடிக்குமே அந்த மாதிரி, கண்ணு சிவப்பா ஆயிடும் எனக்கு. இது தான் மன உளைச்சலின் உச்ச கட்டம்னு நினைச்சு மூஞ்சிய ஜில் குழாய் தண்ணில கழுவிட்டு படுத்துடுவேன்.

 'இதுக்கே பயந்தா எப்படி, இன்னும் ஒரு spessal item இருக்கு'னு வடிவேல் சொல்ற மாதிரி,



அடுத்த நாள், 6 வேளை சாப்பிடுவேன். சும்மா ஒரு தட்டு உணவு இல்ல. 6 பெரிய விருந்து சாப்பிடுவேன். அதுக்கு அப்பரம் 2 நாள், சாப்பிட்டேனாகூட தெரியாத அளவுக்கு assignments செய்ய பார்ப்பேன். நான் செய்றேனோ இல்லையோ, அது என்னைய நல்லா வச்சு செய்யும்.

வீட்டுல இருந்தா, சாப்பிட்டுகிட்டும் தூங்கி கிட்டும் இருப்பேன், அதனால, பள்ளி நூலகத்துக்கு போயிடுவேன். கிட்டதட்ட 10 மணி நேரம் வேலைய முடிக்க முயிற்சி பண்ணும்போது தான், அந்த திகில் சம்பவம் நடக்கும்.

'டேய், எவ்வளவோ பாத்துட்டோம், இதலாம் சப்ப மேட்டர். என்னால முடியும்'னு மனசுக்குள்ள, சக்தி கொடுனு ராகம் பாடும்போது, இடது கை சுண்டுவிரல ஒரு சொட்டு தண்ணி ஜொலிக்கும். என்ன டா ஆச்சுனு, விரல கண்ணுகிட்ட கொண்டு போனா, தக்காளி, அழுதுகிட்டு இருக்கேன்.

எனக்கு தெரியாமலே நூலகத்துக்கு நடுவே உட்கார்ந்து அழுத நாட்கள் ஏராளம்.

அப்போ, கட்டம்போட்ட சிவப்பு சட்டை, ஒரு french பையன் நூலகத்துக்குள்ள நுழைவான். எப்படி frenchனு உனக்கு தெரியும்னு கேட்காதீங்க? சரி italianன கூட இருக்கலாம். நான் தான் சோகத்துல அழதுகிட்டு இருக்கேன்ல. ஏன் கிட்ட ரொம்ப கேள்வி கேட்காதீங்க, ப்ளீஸ்!

அழகான பையன் முன்னாடி அழ கூடாதுனு விறுவிறுனு 'வேர்த்த' கண்ண துடைச்சிகிட்டு,
 சரி விரியா விடுனு மனசுக்கு ஆறுதல் வார்த்த சொல்லும்போது, மறுபடியும் பசிக்கும்.