"ஹாலோ ராகுல், என்ன ஆச்சு காலுக்கு.. ஏன் நொண்டி நொண்டி நடக்குறீங்க?" என்று கேட்டார் பக்கத்துவீட்டுக்காரர் தனது பைக்கை நிறுத்திவிட்டு.
"ஒன்னுமில்ல சார், ஆபிஸிலிருந்து வீட்டுக்கு கிளம்பும்போது, பைக்கை
கொஞ்ச வேகமாக ஸ்டார்ட் பண்ணிட்டேன்னு நினைக்குறேன். அதான், muscle pull மாதிரி இருக்கு." என்றேன் நான்.
"cooling spray இருந்தா, கால்ல spray பண்ணிக்குங்க...சரியாயிடும்." என்று பேசி கொண்டு இருவரும் மின் தூக்கியில் ஏறினோம். அவர் குழந்தைகள் எவ்வாறு இருக்கின்றனர், எப்படி படிக்கிறார்கள் என்பதை பற்றி கேட்டேன். பேசி முடிப்பதற்குள் நாங்கள் இறங்கும் இடம் வந்தது.
"sister நல்லா இருக்காங்களா..கேட்டதா சொல்லுங்க" என்று என் மனைவி ரேவதியை பற்றி நலம் விசாரித்தபடி, அவர் வீட்டை நோக்கி நடந்தார். நான் என் வீட்டை நோக்கி நடந்தேன்.
நேத்து எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை. நேத்து 6 மணிக்கு கோயிலுக்கு போலாம்னு சொன்னாள். நானும் ஒகே என்று சொன்னேன். ஆனா, சாய்ந்தரம் 6 மணி வரைக்கும் மீட்டிங். ஆபிஸ் டென்ஷனில் ரேவதி சொன்னதை மறந்துவிட்டேன். செல்போனில் பேட்ரி சுத்தமா போச்சு. 18 மிஸ்ட் கால் கொடுத்திருந்தாள். வீட்டுக்கு வந்து தான் பார்த்தேன்.
அவள் ரொம்ப பாவம்! கோயில் வெளியே ஒரு மணி நேரமா காத்துகிட்டு இருந்தாளாம். எனக்காக காத்திருந்து காத்திருந்து மனம் நொந்து போனவள் வீட்டுக்கு வந்து பெரிய சண்டை போட்டாள்! நானும் என்ன செய்ய? என் மேல தப்பு தான். இருந்தாலும், மறந்துட்டேன். நேற்று ரொம்ப ஸ்பெஷ்ல் தினம். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க இரண்டு பேரும் முதன் முதலா பாத்துகிட்ட நாள், பாத்துகிட்ட இடம்! அம்மா அப்பா நிச்சயிக்கப்பட்ட திருமணம். பொண்ண நாங்க பாத்துட்டோம், நீயும் போய் பாருடான்னு கோயிலுக்கு அனுப்பிவச்சாங்க. பார்த்தோம், பேசினோம், ரொம்ப பிடிச்சுபோச்சு எனக்கு! ரேவதிக்கும் தான்!
இரண்டு வருஷம் அதுக்குள்ள ஓடிபோச்சு. நானும் ரேவதியும் பார்த்துகொண்டு அதே கோயிலில், அதே நாளில் ஒவ்வொரு வருஷமும் போக வேண்டும் என்பது அவளது ஆசை! ஆனா, நேத்திக்கு நான் தான் சொதப்பிட்டேன். நிறைய விஷயங்களை எனக்காக விட்டு கொடுத்தவள். நானாவது நேத்திக்கு சண்ட போடாமல் இருந்திருக்கலாம்.
நான் கோபத்தில் வார்த்தையைவிட, அவளுக்கும் கோபம் வர, அழுதுவிட்டாள். எனக்கு மனசு கஷ்டமா போச்சு. சாப்பிடாமலேயே தூங்கிவிட்டாள். இன்று காலையில் ஆபிஸ்க்கு சென்றுவிட்டு கிட்டதட்ட மூன்னு நாலு 'sorry' ஸ் எம் ஸ் அனுப்பி இருப்பேன். ஆனா, பதில் வரவில்லை. இப்ப இன்னும் கோபத்தில் இருக்கிறாளோ?
வீட்டின் கதவை திறந்தேன். அவள் dining tableலை துடைத்து கொண்டிருந்தாள்.
"hey dear எப்படி இருக்க? are u ok now?" என்று சதாரணமாய் வினாவினேன்.
ஒன்றும் பேசவில்லை ரேவதி. இன்னும் கோபமாய் தான் இருக்கிறாள். நான் மெதுவாய் நடந்து என் அறைக்குள் செல்லும்போது, ரேவதி என் காலையே பார்த்து கொண்டிருந்தாள்.
"என்ன ஆச்சு?" என்பது போல் அவளது கண்கள் பேசின.
நடந்தவற்றை சொன்னேன். அவள் கேட்டுகொண்டே தான் செய்துகொண்டிருந்த வேலையை தொடர்ந்தாள்.
அவள் கோபத்தை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவாறு குளித்து முடித்தேன். காலில் வலி ஏற்பட படுக்கையில் உட்கார்ந்தேன். ரேவதி அறையினுள் நுழைந்தாள் கையில் cooling spray bottleலோடு.
என் கால் அருகே வந்து, spray பண்ணிவிட்டாள் ஏதுவுமே பேசாமல். அவள் கைகளால் தடவி விட்டாள். cooling sprayயைவிட அவளது கைகள் இன்னும் கூலா இருந்துச்சு. அவள் காட்டிய அன்பும் அக்கறையும் நேற்று நான் செய்த முட்டாள்தனத்தை ஞாபகப்படுத்தி, குத்திகாட்டியது!
ரோஜாப்பூ போல் மென்மையான அவளது கைகளை தொட்டேன்,
" மா... சாரி... மா... இன்னும் கோபமா? ஐ எம் ரியலீ சாரி ரேவதி. என் தப்பு தான்... என்கிட்ட ஏதாச்சு பேசேன்.." சொல்லி முடிப்பதற்குள் என் கைகளை வெடுக்கென்று தட்டிவிட்டு சென்றாள்.
"ரேவா...ரேவா...ப்ளீஸ்...சொல்றத கேளு..."
கால் வலி பாதி குறைந்தது; ஆனால், அவள் என்னிடம் பேசமால் இருப்பது, என் மன வலியை அதிகரித்தது. என்ன செய்வது என்று புரியமால் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, மறுபடியும் உள்ளே வந்தாள். மடித்த துணிகளை அலமாரியில் அடுக்கி வைத்து கொண்டிருந்தாள்.
மெதுவாய் அவள் அருகே சென்று, பின்னாடியிலிருந்து அவளை கட்டி அணைத்து,
"டேய் பேசுடா செல்லம்.....என்கிட்ட பேச மாட்டீயா?" என்று அவள் கழுத்தோரமாய் முத்தமிட்டு கெஞ்சினேன். நான் செய்தது பிடிக்காதவளாய் என்னை தள்ளிவிட்டு அலமாரி கதவை ''படார்'ன்னு மூடிவிட்டு சென்றாள்.
"ச்சே, எதுக்குமே பிடி கொடுக்க மாட்டேங்குறா...சரி இனி இந்த கட்டிபிடி வைத்தியமெல்லாம் ஒன்னும் வேலைக்கு ஆகாது...வேற ஏதாச்சு யோசி ராகுல்" என்று என் மனசாட்சி சத்தமாய் சொன்னது.
இரவு சாப்பாட்டை dining tableலில் வைத்தாள். பொதுவா, நான் சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டே சாப்பிடுவேன். அதில் அவளுக்கு இஷ்டம் இருக்காது. dining tableலில் தான் சாப்பிட வேண்டும் என்பது அவளது strict ஆர்டர்!
அந்தெந்த இடத்திற்கும் பொருளுக்கும் கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்கனும்னு அடிக்கடி சொல்வாள். நான் தான் சில நேரத்துல கேட்பதில்லை. இன்னிக்கு அவளுக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டு, அவளை சமாதானம் செய்ய, அவள் இஷ்டப்படியே dining tableலில் அமர்ந்தேன்.
"இன்னிக்கு என்ன டிபன்?" என்று பேச்சு கொடுத்தேன். இரண்டு தோசையை என் தட்டில் போட்டாள்.
"ஓ இட்லியா?" என்று கிண்டலடித்தேன்.
"என்ன நக்கலா?" என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். அப்படியாவது பேசுவாள் என்று நினைத்தேன். ம்ஹும்..ஒன்னும் பேசவில்லை.
ரொம்ப நாளாச்சு, நாங்கள் இப்படி இருவரும் அருகருகே உட்கார்ந்து இருப்பது என்பதை அப்போது தான் உணர்ந்தேன். அவளுக்காக அதிக நேரத்தை ஒதுக்க முடியவில்லையே என்று வேதனை ஒரு புரம் பாய்ந்தது.
விரிந்த கூந்தல், வசீகரிக்கும் கண்கள், கிள்ளிபார்க்க துடிக்கும் கன்னங்கள், காந்தம்போல் ஈர்க்கும் உதடுகள்-அனைத்தையும் ரசித்தேன் அவள் சாப்பிடும் அழகையும் சேர்த்தே. தட்டுக்கு வலிக்காமல் தோசையை பூ போல் மெதுவாய் எடுத்து...வாவ்...எவ்வளவு அழகா சாப்பிட்டாள்! நானும் இருக்கேனே, ஏதோ பயல்வான் மாதிரி 5 தோசையை அப்படியே முழுங்கிட்டு போற ஜன்மம்!
அவளை ரசித்த ஒவ்வொரு நொடியும் எனக்கு புத்துணர்ச்சியை தந்தது.
"ஏய் நீ ரொம்ப அழகா இருக்க" என்று சொல்ல வார்த்தைகள் தொண்டை வரைக்கும் வந்தது. ஆனால், நான் சொல்ல போக, அவள் கண்ணகி கடைசி பேத்தி போல் கண்களாலே என்னை எரித்துவிடுவாளோ என்ற அச்சம் மேலோங்கியது. அவளது கோபத்தை அதிகரிக்க வேண்டாம் என்று தொண்டையில் நின்ற வார்த்தைகள் reverse gear போட்டு பின்னால் சென்றன.
அவளும் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றாள்.
இரவு 930 மணியானது. அவளுக்கு பிடித்த ஹிந்தி சீரியல் ஒன்று போடுவான் 930 அளவில். சீரியல் எனக்கு பிடிக்காது. இருப்பினும் அவளுக்காகவே டிவியை ஆன் செய்து சத்த அளவை அதிகமாய் வைத்து பார்க்க தொடங்கினேன். அறைக்குள் இருந்த அவள் வெளியே வேகமாய் வந்தாள்.
அவளும் உட்கார்ந்து பார்ப்பாள். ஏதாச்சு அப்படியே மெதுவாய் பேசி, அவளை கோபத்தை குறைக்கலாம்னு நினைத்தேன். அவள் வந்தாள், டிவி remoteயை என் கையிலிருந்து வெடுக்கென்று எடுத்தாள், எனக்கு பிடித்த கிரிக்கெட் channelலில் மாற்றிவிட்டு சோபாவில் remoteயை எறிந்துவிட்டு அறையினுள் சென்றாள்.
"உனக்கு பிடிச்சதே நீ பண்ணு!" என்பதுபோல் இருந்தது அவள் செயல். ஒரு குழந்தை கோச்சிக்கிட்டு போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அச்சமயம் அவள் முகத்தில் தெரிந்த கோபம்கூட அழகாய் இருந்தது. அவள்மீது கோபம் வரவில்லை. அவளை புரிந்த கொள்ளாமல் அவளை வேதனைபடுத்தி விட்டோமே என்று என் மேல் தான் எனக்கு கோபம்!
டிவி பார்க்கும் மூட் இல்லை. அறைக்குள் என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். படுத்து இருந்தாள். யாரும் இல்லாத போர்க்களத்தில் நின்று என்ன பயன் என நினைக்க, நானும் படுக்க சென்றேன். என் முகத்தை பார்க்க
பிடிக்காதவளாய், திரும்பி படுத்திருந்தாள். கடைசியா ஒரு தடவ 'சாரி' கேட்டு முயற்சி செய்து பார்ப்போமே என்ற எண்ணம் தோன்றியது.
ஆனால், மனசாட்சி" ரேவதிய நிம்மதியா தூங்க விடு. நாளைக்கு பேசிக்கலாம்" என்றது. நானும் ஒப்பு கொண்டு கண் அசர போன போது, திடீரென்று ரேவதி என் பக்கம் திரும்பி என் நெஞ்சில் அவள் முகம் சாய்த்து அழ ஆரம்பித்தாள்.
அவள் விட்ட மூச்சுகாற்று, அவள் சிந்திய கண்ணீர், அவள் கன்னத்தின் ஸ்பரிசம்-மூன்றும் என் நெஞ்சின் வழியாய் உடல் முழுவதும் சென்று, என்னை புதிதாய் பிறக்க செய்தது ஒரு உணர்வு.
"ஐ எம் சாரி ராகுல்... என்னால முடியல. உன்கிட்ட இன்னிக்கு பேசவே கூடாதுன்னு தான் நினைச்சேன்... ஆனா என்னால முடியல... ஐ எம் சாரி ராகுல் for everything." என்று என்னை கட்டி அணைத்து அழுதாள்.
"ஏய்...என்ன ரேவா... நான் தான் நேத்திக்கு கோபத்துல பேசிட்டேன். நான் தான் சாரி கேட்கனும். நீ போய் எதுக்குமா..." என்று அவள் தலை கோதி சமாதானப்படுத்தினேன்.
"இங்க பாரு...look at me.." என்றேன். அவளும் என்னை பார்த்தாள். கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தேன்.
"அழ கூடாது...இனிமே இப்படி நடக்காது. ஒகே.
ஆபிஸ்ல இன்னொரு phone charger வாங்கிவச்சிட்டேன்... இனி battery charge இல்லன்னு சொல்ல மாட்டேன்..."
சண்டை சமாதானத்தில் முடிந்ததது என்பதற்கு முற்றுப்புள்ளியாய் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டாள்.
அக்கறை பார்வையுடன் ரேவதி "ராகுல், இப்ப கால் எப்படி இருக்குடா...next time பார்த்து பைக்க ஸ்டார்ட் பண்ணுடா"
அதுக்கு நான், "முன்பு spray போட்டபோது பாதி வலி போச்சு. இப்ப கொடுத்தியே ரெண்டு கிஸ், அதுல எல்லா வலியும் போச்சு" என்று கண் சிமிட்டினேன்.
"ச்சீ...போடா" என்று என் கன்னத்தில் செல்லமாய் அடித்தாள்.
"நான் ஒன்னு சொல்லவா?" என்றேன்.
"என்னடா?" என்றாள்.
"நீ ரொம்ப அழகா இருக்க.." என்றேன். வெட்கப்பட்டு புன்னகையித்தவளாய் என் தோளில் சாய்ந்து கொண்டாள்.
*****முற்றும்*********