Aug 23, 2016

சிங்கப்பூரின் தங்க மகன்- ஜோசப் ஸ்கூலிங்

13 ஆக்ஸ்ட் 2016.

காலை 9.05. ஒலிம்பிக்ஸ் நீச்சல் இறுதி போட்டி- 100மீட்டர் வண்ணத்துபூச்சி ஸ்டைல்.நேரடி ஒளிப்பரப்பு.

மடிக்கணினி முன்னால் நான். நகரவில்லை.
பயமும் பதற்றமும் மனசு முழுக்க நிரம்பி கிடக்க, என் தாய் நாட்டை சேர்ந்த ஜோசப் நீச்சல் குளம் அருகே வருகிறார். சிங்கப்பூருக்கு இருக்கும் ஒரு இரு வாய்ப்புகளில் இதுவும் ஒன்று.

வீசில் ஒலித்தது. அனைவரும் குதிக்க, மூச்சுவிடவதை நான் நிறுத்தியதுபோல் ஒரு உணர்வு. நான்காவது தடத்தில் ஜோசப் முதலில் சென்று கொண்டு இருக்கிறார். 50 மீட்டரை கடந்த நிலையிலும், ஜோசப் முன்னிலையில் இருக்கிறார். ஒருவர் நீந்துவதை பார்த்து, இதயம் என்றுமே இப்படி அடித்து கொண்டது இல்லை, இனியும் அது நடக்காது!

90 மீட்டரை கடந்துவிட்டார். வர்ணனையாளர் ஆங்கிலத்தில், "are we going to witness history today?" என்று கூறி முடிப்பதற்குள், ஜோசப் 100 மீட்டரை தொட்டுவிட்டார். வரலாறு படைத்துவிட்டார். சிங்கப்பூரின் முதல் தங்க பதக்கம்.



சத்தியமா சொல்றேன், வாய்விட்டு அழுதேன். (இதை எழுதும்போதுகூட கண்ணு லேசா கலங்குது!) இது தேச பற்றா? இல்ல, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கொண்டவருக்கு கிடைக்கும் வெற்றியை கண்டு மனம் மகிழும் தருணமா? கொஞ்சம் நேரம் அப்படியே மடிக்கணினியை பார்த்து கொண்டிருந்தேன். மறுபடியும் அவர் கடைசில் நீச்சல் தளத்தை தொடுவதை மட்டும் slow motionனில் காண்பிக்க, மறுபடியும், கண்கள் கலங்குது!



வெளியே அவ்வளவு ஆரவாரம்! அண்டைவீடுகளில் பலத்த கரகோஷம். ஏதோ நம்ம வீட்டுப்பிள்ளை வென்றது போல் அனைவரும் கட்டிபிடித்து மகிழ்ந்தனர். இந்த மாதிரி ஒரு உணர்ச்சிபூர்வமான நிகழ்வு இனிமேல் நடக்குமானு தெரில. ஆனால், என் வாழ்க்கையில் இப்படி ஒன்றை தந்த தங்க மகனுக்கு, நன்றி!

பரிசளிப்பு விழாவில், என் நாட்டுக் கொடி பறக்க, அறையில் தான் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன். இருந்தாலும், எழுந்து நின்று தேசியகீதத்தை பெருமையுடன் பாடினேன். சிங்கப்பூர் பள்ளிகளில் தினமும் தேசிய கீதம் பாட வேண்டும். இத்தன வருடங்களில் நான் இவ்வளவு பெருமிதத்தோடு பாடிய ஒரு நாள் எது என்றால், அது 13 ஆக்ஸ்ட் 2016 அன்று தான்!

எந்த விதத்தில் அவர் வெற்றிக்கு துணை போய் இருக்கோம்?
ஒரு விதத்திலும் கிடையாது!

இருந்தாலும், வெற்றி பெற்ற பிறகு, வெறும் 21 வயது நிரம்பிய ஜோசப் தம்பி சொல்லுது, "இது என் வெற்றி இல்லை. இது நம்ம வெற்றி!"


(ஜோசப் மற்றும் பெற்றோர்கள்)

ஜோசப்-பின் வெற்றிக்கு ஒரே காரணம்- அவரது பெற்றோர்கள். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து, 13 வயதில் நான் அமெரிக்காவுக்கு சென்று உலகின் பிரபலமான பொல்ஸ் நீச்சல் பள்ளியில் சேர வேண்டும் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவரின் பெற்றோர்கள் எடுத்த முடிவே சிங்கையின் சிங்கமாக திகழ்கிறான் இன்று. 

சிங்கப்பூர் பல விஷயங்களில் தலை சிறந்து விளங்கினாலும், விளையாட்டு என்று வந்தால், ரொம்பவே பின் தாங்கி இருக்கிறோம். ஆனால், பல கோடி செலவு செய்து சீனாவிலிருந்து மேசை பந்து விளையாட்டாளர்களை வரவழைத்து இரண்டு வருடங்களில் சிங்கப்பூர் குடிமகன் உரிமை கொடுத்து இவர்களும் நம் நாட்டை சேர்ந்தவர்கள் தான் என்று கூறி, அரசாங்கம் பல வருடங்களாக செய்லகண்டு வந்திருக்கிறது.

இது பெரிய சர்ச்சையையே கிளப்பி இருந்தது. இன்று வரையில், அவர்கள் ஜெயித்தாலும், அதில் பல சிங்கப்பூரர்களுக்கு பெருமையில்லை. அதனால் தான் ஜோசப் கொடுத்த வெற்றி அரசாங்கத்தின் திட்டத்திற்கு பெரிய பதிலடி என்று நினைக்கிறார்கள் பலர். அவரின் பெற்றோர்கள் கடந்த 8 ஆண்டுகளாக, 1.35மில்லியன் வரை செலவு செய்திருக்கிறார்கள். 4 மாதங்கள் அவரின் அம்மா அமெரிக்காவில் தங்கியிருந்து ஜோசப்-பை பார்த்து கொள்வார். அடுத்த 4 மாதங்கள் அவர் அப்பா போவாராம், பிறகு அம்மா சிங்கப்பூருக்கு வந்து இங்கு இருக்கும் வீட்டை கவனித்து கொள்வாராம். சிக்கனமாக இருந்தால் மட்டும் தான் சமாளிக்க முடியாது என்று கூறும் அவரது தாயார், கடந்த 30 ஆண்டுகளாய் புது பேண்ட் கூட எடுத்தது இல்லையாம்.

(சட்டசபை வெளியே அனைத்து அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சருடன் ஜோசப்)

அமைச்சர்கள் பாராட்ட, சட்டசபைக்கு சிறப்பு விருந்தினராக ஜோசப் போக, நாடே அவருக்கு உயர்ந்த வரவேற்பு கொடுக்க, சிங்கையில் படித்த பள்ளிக்கு மீண்டும் சென்று இருக்கிறார்- இப்படி மீண்டும் சிங்கப்பூருக்கு வந்த 3 நாட்களிலே அவருக்கு ஓய்வு சுத்தமா கிடையாது.

(open top bus parade- மத்திய வேளையில் திரளன வந்த மக்கள் கூட்டம்)

அப்படி இருந்தாலும், எல்லாரிடமும் காட்டும் அன்பும், அந்த புன்னகையும், சிறிது அளவும் தலைக்கணம் இல்லாத குணமும், ஜோசப் உண்மையாக அனைவருக்கும் ஒரு நட்சத்திரமாக திகழ்கிறார்!

majulah singapura!!

(எங்கள் தேசியகீதத்தில் வரும் ஒரு வரி. அர்த்தம்- ஒன்றுபட்டு முன்னேறுவோம்!!)