Sep 17, 2017

மகளிர் மட்டும்- வெற்றி நிச்சயம் கிட்டும்

காட்சியில் பானுபிரியாவும் ஊர்வசியும் சமையலறையில் பேசி கொண்டு இருப்பார்கள். பின்புரத்தில், கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் ஜோவும் சின்ன பசங்களும் பானுபிரியாவின் மகனும். சின்ன பொண்ணு ஒன்னு பந்தை மிஸ் பண்ணிடுவாள். அதுக்கு அவன் (சித்தப்பா) அந்த சின்ன பொண்ணு கண்ணத்தில் அடிப்பான். அதை இயல்பான மிரட்டலுடன் தட்டு, வெறும் கண்ஜாடையில் அவனிடம் அப்படி அடிக்க கூடாது என்று சொல்லாமல் சொல்லுவாள் ஜோ. இது அனைத்தும் ஒரு 10 வினாடிகூட இருக்காது. இப்படி நிறைய குட்டி குட்டி விஷயங்களை அழகாய் கோர்த்த படம் தான், 'மகளிர் மட்டும்'


பொண்ணுங்களுக்கு எதிரான விஷயங்களை பேசி புரட்டி போடும் படம் அல்ல. அப்படி படம் எடுக்க இயக்குனர் பிரம்மாவிற்கு அனைத்து திறமையும் உண்டு. அதை இப்படத்தில் செய்திருக்கலாமா என்று தெரியவில்லை. ஆனா, 'மகளீர் மட்டும்' படத்தில் உள்ள நிறைய அழகான அம்சங்களை ரசிக்க வைத்துள்ளனர்.

"பொண்ணுங்க பிரசவ வலில துடிச்சு, எலும்ப உடைச்சு, கஷ்டப்படுறாங்க. நான் குழந்தையே பெத்தக்கள்ளனா?" என்று ஜோவின் வசனமெல்லாம் தமிழ் சினிமாவில், இப்போதைய சினிமாவில் யாருமே பேசவில்லை. எனக்கு அது தான் ஆச்சிரியம், சந்தோஷம். ஒரு பொண்ணு மனசுல பட்டது சொல்கிறாள், அதுவும் குழந்தை விஷயம் எல்லாம் தைரியமா சொல்லும் காட்சி பிரமாதம்!!

எனக்கு படத்துல பிடிச்ச இன்னொரு அம்சம். ஊர்வசி- ஜோவின் நட்பு/மாமியார் மருமகள் என்று பாகுபாடு இல்லாமல் இருந்தால், அதில் கிடைக்கும் சந்தோஷத்தை பார்க்கவே சந்தோஷம். இதெல்லாம் பலகோடியில் ஒருவருக்கே அமையும் அதிர்ஷ்டம் என்றாலும், இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். பெண்களின் நட்பை பற்றி இவ்வளவு அழகாகவும் இயல்பாகவும் படம் எடுத்த விதம் அழகு.

அப்பப்போ கொஞ்சம் சினிமாத்தனம் தெரிந்தது. அதை தவிர்த்து இருக்கலாம். ஆனாலும், அதுவும் ஏதோ ஒரு வகையில் 'இவனுங்க' மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையை தந்தது. குறிப்பா, பானுபிரியாவின் மகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சிகள்.

'மகளிர் மட்டும்' பாஷயில் சொல்லவேண்டும் என்றால், மாசால தோசை சாப்பிட வந்து, அதை ரசித்தும் ருசித்தும் கூடவே இருந்த பலவித சட்னியும் போனஸா கிடைத்த சந்தோஷம்!

பிரம்மாவின் படைப்பில் இதுவும் பிரமாதம்!