சனி இரவு 11 மணி அளவில் பால் குடம் தூக்கி சென்றவர்கள் ஏராளம். அக்கா, பக்திமான் என்பதால் பால் குடம் தூக்கி சென்றார். தங்கைக்கு இந்த வருஷம் result வருவதால் அவரும் பால் குடம் தூக்கி சென்றார். நம்ம மட்டும் சும்மா இருந்தால், வீட்டில் சோறு கிடைக்காது என்பதால் நானும் தூக்கி சென்றேன் ஒரு
பக்தி-விரதம்-பூஜை-நேர்த்திகடன் - இதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. ஆனால், கடவுள் நம்பிக்கை உண்டு. எனக்கு தெரிந்த ஒரே மந்திரம்
"போடா....அந்த ஆண்டவனே நம்ம பக்கம்". நான் கடவுளை வணங்குகிறேன் என்று காட்டி கொள்வதில் அதிகம் ஆர்வம் கிடையாது. இந்த அறக்கருத்துகளை சொன்னால், அரை விழும் என்பதால் 'ஊருடன் ஒத்து' வாழ்ந்தேன் தைப்பூசம் அன்று.
அக்கா, தங்கை, அப்பா நடந்து வரும்போது விடியற்காலை 2 ஆகிவிட்டது. கோயில் அருகே கூட்டநெரிசல் அதிகமானது. ரொம்ப நேரம் காத்து இருந்தோம்!
அப்போது நடந்து சில காமெடிகள்.
1) சரி வேண்டுதல் பெரிசா ஒன்னுமில்ல எனக்கு. இருந்தாலும், கடவுள்கிட்ட நல்ல ஆரோக்கியத்திற்காக வேண்டினேன். ஆனால், 2 மணி நேரத்துக்கு மேல் காத்து கொண்டிருந்தமையால் முதுகு வலியே வந்துவிட்டது!:))
2) கோயில் அருகே வந்தபோது விழா அமைப்பாளர்கள் 'பக்தர்கள் விரைவாக நேர்த்திகடனை செலுத்திவிட்டு போங்க.' என்றபோது பக்கத்தில் நின்றவர்கள்
'அடேங்கப்பா, முதல கோயில்குள்ள விடுங்க சாமி' என்றனர்.
3) 'ஓம் முருகா' என்று ஒருத்தர் ஒலிபெருக்கியில் சொன்ன போது, எங்கள் காதுகளில் 'ஓம் ஊறுகா' என்று கேட்க குபீர் சிரிப்பு வந்துவிட்டது.
4) பக்தர்கள் நடக்கும் பாதையில் ஒரு அறிவிப்பு பலகை- "மது அருந்திவிட்டு செல்ல வேண்டாம். புகை பிடிக்காமல் இருக்கவும்"
ஹாஹாஹா....பக்தி என்ற பெயரில் நீங்கள் அடிக்கும் கூத்துக்கு இது ஒரு பதிலடி!
5) இரண்டு வெள்ளைக்காரர்கள் கூட்டத்தில் மாட்டிகொண்டனர். சும்மா நடந்துவிட்டு கோயிலுக்குள்ள போகலாம்னு நினைச்சு இருப்பாங்க போலும். ஒரு மணி நேரத்துக்கு மேல் நின்றதால், தாங்க முடியாமல் அவர்கள் கூட்டத்தில் மோதி எப்படியோ 'தப்பி' சென்றனர்.
*********************
மனதை கடவுள் என்று நினைச்சு நல்லது பண்ணாலே தினம் தினம் தைப்பூச திருவிழா தான்!!