இன்று காலை 8 மணி இருக்கும். வெளியே நடக்க போகலாம் என்று காலணியை மாட்டியவாறு, கைபேசியில் டிவிட்டர் பக்கம் சென்றேன். அதிர்ச்சி செய்தி. ஸ்ரீதேவி பற்றி. இல்லை அப்படி ஒன்றும் இருக்காது என்று
மற்ற இணையதளங்களை புரட்டி பார்த்தேன்.
உண்மை தான்.
54 வயது. cardiac arrest. மனம் பாரமாகிவிட்டது. ஸ்ரீதேவி பாடல்கள் ரொம்ப பிடிக்கும். இணையத்தளங்களை படிக்க படிக்க, அதே இரங்கல் செய்தி. டிவிட்டர் பக்கம், பல பிரபலங்கள் #RIPsridevi டிவிட்டு போட, என்னமோ செய்தது மனசு.
நான் நடக்க சென்றுவிட்டேன்.
எப்போதும் playlistலுள்ள பாடல்களை தான் கேட்பேன். ஆனா, இன்னிக்கு, விரல் youtube பக்கம் போனது. ஸ்ரீதேவிஹிட்ஸ் பாடல்களை தேடி சென்றது. புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றனும்னு சொல்வாங்களேன் அந்த மாதிரி, முதல் பாடலே, "காற்றில் எந்தன் கீதம்...."
கேட்ட முதல் வரியிலேயே, கண்கள் குளமாகிவிட்டன. கண்ணீருடன், தொடர்ந்து நடந்தேன். "காற்றில் எந்தன் கீதம்" பாடலில், ஒரே ஒரு மைக், அருவி சாரல், ஸ்ரீதேவி- எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத பாடல். அந்த பாடலில், தன் முகபாவனையால் முழுதாய் படம் பார்ப்பவர்களை வசீகரித்து இருப்பார். இப்போ இந்த மாதிரி பாடல்களை 'சுமந்து' செல்ல யாரு இருக்கா சொல்லுங்க?
"ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"னு வசனத்தை சொல்லாத ஆள் இருக்கா?
இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் பார்த்துட்டு, தியெட்டரில் கண்ணீர் மல்க எழுந்து நின்று கைதட்டிய ஞாபகம் அலைமோதியது.
நேற்று இரவு, அவங்க துபாயில் உறவினர் ஒருத்தர் கல்யாணத்தில் சந்தோஷமாக நடனமாடிய வீடியோவை பார்த்தேன். துக்கம் தாங்கமுடியவில்லை.
ஸ்ரீதேவியின் அன்றாட உடற்பயிற்சி உணவு பழக்கத்தை பற்றி படிக்க நேர்ந்தது. இப்படி இருந்தும், எப்படி? ஏன்?
மாரடைப்பு வர பல காரணங்கள் இருக்கு.
விதி.
நேரம்.
'எமன் கூப்ட்டான்'
இப்படி ஆளுக்கு ஒரு காரணம் சொன்னாலும், மனம் இன்னும் லேசாய் விசும்பி கொண்டு தான் இருக்கிறது.