Apr 3, 2018

நீங்களும் உங்க காதல் காட்சிகளும்.

கோபம் வர மாதிரி காமெடி பண்றது இது தான் நினைக்குறேன். சமீபத்துல பார்த்த ரெண்டு மூனு காதல் காட்சிகள் பயங்கரமா முகம் சுளிக்க வச்சுட்டு. சூரி சொன்ன மாதிரி, "ஒரே irritatingஆ இருக்கு மாப்பிள்ள"

மதுரவீரன்.

ஷண்முக பாண்டியனும் ஹீரோயின் மீனாட்சியும் பேசிகிட்டு இருக்காங்க. பக்கத்துலே காமெடியன் பாலா. 

பாலா: ராத்திரி பூரா மீன் குழம்பு எப்படி செய்யுறது கத்துகிட்டு, உனக்கு மீன் குழம்பு வச்சு கொண்டு வந்திருக்கா டா. அப்படினு என்னான்னு தெரியுமா?

ஷண்முகம்: தெரியல.

பாலா: அவளுக்கு உன்ன புடிச்சு இருக்குடா. 

ஹீரோயின் ஹீரோவ பாக்க, ஹீரோ அவள பாக்க, பாட்டு ஆரம்பிக்க, நான் தூங்க.

no 1) ஒரு புள்ள ராத்திரி முழுக்க தூங்காம இருந்திருக்கு. அப்படினு அதுக்கு insomnia. தூங்கமின்மை பிரச்சனை இருக்கு. அந்த புள்ளைக்கு உடனடியா மருத்துவ உதவி தேவை.

no 2) மீன் குழம்பு வைக்கறதுக்கும் காதலுக்கும் என்ன சம்மந்தம்? அதுவும் ராத்திரி முழுக்க மீன் குழம்பு வச்சு இருக்குனு? மீன் என்னத்தாக்கு ஆகறது? அப்படி என்ன அவசரம்? உலக உணவு சங்கம் மீன் குழம்ப அடுத்த நாள் தடைகிட பண்ண போறாங்களாம் என்ன?

no 3) படம் முழுக்க, வேற எந்த ஒரு காதல் அறிகுறியும் காதலில் விழுவதற்கான காரணமோ அழுத்தமோ இல்ல. அப்பரம் என்ன ம....மீன் குழம்புக்குய்யா காதல் காட்சினு பெயர்ல கண்ராவித்தனத்த திணிக்கிறீங்க?

***************

படம்: இவன் தந்திரன்.

ஹீரோயின் வேலை இண்டர்வியு போறாங்க. அங்க ஆபிசர் ஒரு கேள்வி கேட்கறாங்க.

ஆபிசர்: 20 வருஷத்துல நீங்க என்னவா ஆகனும்னு ஆசைப்பட்றீங்க?

ஹீரோயின்: இடுப்புல மடிப்பு வேணும், ஒன்னு இரண்டு தல முடி நரைக்கனும்.... தனியா இருக்க பயப்படனும்....

காதல் வசனம் எழுத சொன்னா, ஏன் காட்டுமிராண்டி வசனம் எழுதுறீங்க?  
இது எந்த மாதிரியான அன்பு, காதல்?

எனக்கு கோபத்தைவிட பயம் தான் அதிகரித்தது. படத்துல சொன்னது ஒரு பொண்ணா இருந்தாலும், இதை யோசித்து (யோசிக்காமல்) எழுதினது ஒரு ஆண். அப்போ இவ்வளவு உங்க நினைப்பா? இத தான் நீங்க காதல்னு வகைப்படுத்துறீங்களா? 

ஆண், பெண் பேதம் வித்தியாசம் பேசல. இருந்தாலும் யோசிச்சு பாருங்க. இதுவே ஒரு ஹீரோ....

"எனக்கு முடியெல்லாம் கொட்டனும். சொட்டை விழனும். கிட்னில ரெண்டு கல்லு வரனும்..."

எப்படி பேசினா? காதல்னு ஒத்துப்போமா? அப்பரம் ஏன் ஹீரோயினுக்கு இந்த மாதிரி வசனம்?

படத்துல தண்ணி பாடல், பெண்கள இழிவுப்படுத்தும் பாடல் இப்போ கொஞ்சம் குறைஞ்சிகிட்டு வர நேரத்துல இந்த மாதிரி வசனம் பீதிய கிளப்புதய்யா! 

*******************

Feb 25, 2018

காற்றில் மறைந்த கீதம்


விவரம் தெரியும் வரை ஸ்ரீதேவி தான் உண்மையான முருகன் சாமி என்று நினைத்தேன்.

இன்று காலை 8 மணி இருக்கும். வெளியே நடக்க போகலாம் என்று காலணியை மாட்டியவாறு, கைபேசியில் டிவிட்டர் பக்கம் சென்றேன். அதிர்ச்சி செய்தி. ஸ்ரீதேவி பற்றி. இல்லை அப்படி ஒன்றும் இருக்காது என்று
மற்ற இணையதளங்களை புரட்டி பார்த்தேன்.

உண்மை தான்.

54 வயது. cardiac arrest. மனம் பாரமாகிவிட்டது. ஸ்ரீதேவி பாடல்கள் ரொம்ப பிடிக்கும். இணையத்தளங்களை படிக்க படிக்க, அதே இரங்கல் செய்தி. டிவிட்டர் பக்கம், பல பிரபலங்கள் #RIPsridevi டிவிட்டு போட, என்னமோ செய்தது மனசு.

நான் நடக்க சென்றுவிட்டேன்.


எப்போதும் playlistலுள்ள பாடல்களை தான் கேட்பேன். ஆனா, இன்னிக்கு, விரல் youtube பக்கம் போனது.  ஸ்ரீதேவிஹிட்ஸ் பாடல்களை தேடி சென்றது. புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றனும்னு சொல்வாங்களேன் அந்த மாதிரி, முதல் பாடலே, "காற்றில் எந்தன் கீதம்...."



கேட்ட முதல் வரியிலேயே, கண்கள் குளமாகிவிட்டன. கண்ணீருடன், தொடர்ந்து நடந்தேன். "காற்றில் எந்தன் கீதம்" பாடலில், ஒரே ஒரு மைக், அருவி சாரல், ஸ்ரீதேவி- எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத பாடல். அந்த பாடலில், தன் முகபாவனையால் முழுதாய் படம் பார்ப்பவர்களை வசீகரித்து இருப்பார். இப்போ இந்த மாதிரி பாடல்களை 'சுமந்து' செல்ல யாரு இருக்கா சொல்லுங்க?

"ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"னு வசனத்தை சொல்லாத ஆள் இருக்கா?

இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் பார்த்துட்டு, தியெட்டரில் கண்ணீர் மல்க எழுந்து நின்று கைதட்டிய ஞாபகம் அலைமோதியது.

நேற்று இரவு, அவங்க துபாயில் உறவினர் ஒருத்தர் கல்யாணத்தில் சந்தோஷமாக நடனமாடிய வீடியோவை பார்த்தேன். துக்கம் தாங்கமுடியவில்லை.

ஸ்ரீதேவியின் அன்றாட உடற்பயிற்சி உணவு பழக்கத்தை பற்றி படிக்க நேர்ந்தது. இப்படி இருந்தும், எப்படி? ஏன்?

மாரடைப்பு வர பல காரணங்கள் இருக்கு.
விதி.
நேரம்.
'எமன் கூப்ட்டான்'

இப்படி ஆளுக்கு ஒரு காரணம் சொன்னாலும், மனம் இன்னும் லேசாய் விசும்பி கொண்டு தான் இருக்கிறது.

Feb 13, 2018

காமம் comes first( கவிதை)


மஞ்சத்தில் தஞ்சம் புகுந்தபடி
நாம் கிடக்க,

வெறும் போர்வையை மட்டும்
ஆடையாய் கோர்க்க,
வேர்வை காய்ந்த முதுகில்
உன் ஆள்காட்டி
விரலும்
நடுவிரலும்,
மயிலிரகாய்
கழுத்திலிருந்து
கீழே வருட
மறுபடியும் புரிந்தது
எவ்வளவு பெரிய
வித்தைக்காரன் நீ என்று!

புயல் அடித்து ஓய்ந்த
நிசப்தம் கலைக்க,
“Wake up baby Ma” 
காதுமடல் உரச
உன் உள்ளங்கை
மட்டும் திருட்டுத்தனமாய் 
என் இடுப்பை
அணைக்க
என்னிடம் பதில் இருந்தும் அமைதிகாக்கிறேன்.
கொஞ்சம் நேரம்
உன் மூச்சுகாற்று படரட்டும்.

கைபேசியில் நீ எதையோ 
தேடிகொண்டிருக்க,
மூன்று நாட்கள் ஷேவ் செய்யாத தாடியும்
அதில் ஓரமாய் மலர்ந்த நரை முடியும்
லேசாய் இடிக்கும் குட்டி தொப்பையும்

அனைத்தையும் நான் ரசிக்க,

“why are you so hot?” 
இதழ் பதித்தேன் 
கன்னக்குழிக்கும் தாடைக்கும் இடையே,
நீ வெட்கப்பட்டு புன்னகையிக்கும்
இடம் எதுவென்று அறிந்தே. 

“baby ma, how do I delete this in fb?”
அவனுக்கு தெரியவில்லை.

சொல்லி கொடுத்தேன்.

நேற்று இரவு போல்.

facebookல் யார் யாரோ போட்ட
படங்களை பார்த்து நக்கல் அடித்து

சேர்ந்து சிரிக்க,
கல்யாணம் செய்ய போகும் 

அவனது பள்ளி நண்பன் ஒருவனது
படத்திற்கு, 
“காமம் comes first da.” என்று கிண்டல்
செய்து வாழ்த்து கூற,

“baby ma, evening ஆச்சு டா. Get up” 

என அவன் எழ,
மீண்டும் தேடல்கள்
முளைத்த ஆசைகள்
கலைந்த ஆடைகள்.




Feb 12, 2018

'முதல் இரவும்' முதல் பிரியாணியும்

8 வருஷம் வேலை செஞ்சதுபோதும். ரொம்ப 'போர்' அடிக்குது. (போரும் நடந்தது) வேற ஏதாச்சு சுவாரஸ்சியமா பண்ணலாம்னு முடிவு எடுத்து, ஆஸ்திரேலியாவுல கால் அடி எடுத்து வச்சாச்சு. masters of applied linguistics அப்படினு ஒரு படிப்பு. இது என்ன, யாரு, எப்படி- அப்படினு சத்தியமா ஒன்னு தெரியாது. படிப்பு முடிய 1.5 வருஷம் ஆகும். அதுக்குள்ள கண்டுபுடிச்சிடுறேன்.




மொழி சம்மந்தப்பட்ட விஷயம்னு இணையத்தளத்துல போட்டு இருந்துச்சு. அந்த ஆர்வத்தோடும், ஆசையோடும், ஏதோ ஒரு இதோடும் மறுபடியும், காலேஜ்க்கு பைய தூக்கிட்டு கிளம்பிட்டேன்.

"மாப்பு, படிப்பு என்ன அவ்வளவு சீப்பா போச்சா'னு என் குலசாமி கவுண்டமணி சத்தியராஜ்கிட்ட ஒரு படத்துல சொல்வார்ல, கவுண்டமணி எங்கிட்டயும் சொல்றது மாதிரி தான் தினமும் காதுல கேட்குது. எந்த தைரியத்துல படிக்க கிளம்பிட்டேனு கேள்விய மனசுக்குள்ள ஒரு 1000 தடவ கேட்டு இருப்பேன். என்னனெமோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமானு ஒரு குருட்டு தைரியம், முரட்டு நம்பிக்கை.


தனிமையில் ரசித்து கழித்த முதல் இரவு 10 Feb. வாழ்க்கையில் தனிமைபடுத்தப்பட்ட தருணங்கள் ஏராளம். ஆனா, தனியாக வாழ்ந்த நாட்கள் இல்ல. ஆக, இந்த அனுபவம் புதுசு. இந்த இரவு புதுசு. கடிகார முள் சத்தம், சாலையில் கடந்த சென்ற பெரிய லாரியின் எஞ்சீன் சத்தம், சுழலும் காற்றாடி சத்தம், பக்கத்துவீட்டு பையன் நடந்து சென்றபோது அவரின்           காலடி சத்தம், என் கைப்பையின் வார் லேசாக நாற்காலி மேல் தட்டி கொண்டிருந்த சத்தம், நிம்மதியின் நிசப்தம், ரொம்பவே ரசித்தேன். மறுநாள் பிரியாணி செய்ய போகிறோம்னு ஒரு அலாதி சந்தோஷத்துடன், 'முதல் இரவு' நல்லிரவாக அமைந்தது.

முதன் முதலாக சமையல் செய்றதுங்கறது  science practical மாதிரி. சில பல தட்டுகள் உடையும், சில பல காயங்கள் ஏற்படும். இதலாம் தாண்டி தான் பிரியாணிய அடை முடியும். அந்நிய மண்ணில் நான் சமைத்த முதல் உணவு- பிரியாணி என்று நாளைக்கு வரலாறு பேசட்டும்!

பிறந்த குழந்தைய மருத்துவமனை அறையில் வைப்பாங்க, அப்ப வெளியே நின்னு எட்டி பார்க்கும் தந்தை மாதிரி தான் நானும் பார்த்தேன்.

கண் கலங்கிட்டேன்.