Feb 24, 2009

அவள் என்னைவிட அழகு- பகுதி 1

"காபி டீ, காபி டீ"
"இந்தியா டுடே, குங்குமம், குமுதம்"
"பை டா மச்சான், ஊருக்கு போனவுடனே லெட்டர் போடு"


இப்படி நான் நடந்து வருகையில் ஏராளமான சத்தங்கள். பிளாட்வோர்ம் ஏ இரயிலில் ஏற வேண்டும் நான். மெதுவாய் நடந்து சென்றேன் என் பெட்டியை எடுத்து கொண்டு. துணைக்கு ஒரு வெள்ளை ஸ்டிக்.


"எக்ஸ்கீயூஸ் மீ, இந்த கம்பார்ட்மெண்ட் சீட் நம்பர் எங்க இருக்கு. சாரி, எனக்கு கண்ணு தெரியாது. கொஞ்சம் உதவி பண்றீங்களா?" என்றேன் நான் என் பயணச்சீட்டை நீட்டி. எனக்கு மற்றவர்களிடம் உதவி கேட்க பிடிக்காது. எனக்கு கண்ணு தெரியாது என்பதால் மற்றவர்கள் என்மீது பரிதாபம் காட்டுவது பிடிக்காது. பரிதாபம் தானே, கருணை காட்டினால் என்ன தப்பா? என்று நீங்க நினைக்கலாம். சாரி, எனக்கு அதுவும் பிடிக்காது! நான் அப்படி தான்.


ஆனால், தவிர்க்க முடியாத சூழலில் இப்படி உதவி கேட்பதைவிட வேற வழியில்லை!


என் பயண சீட்டை பெற்று கொண்ட அவர் "ராமு....male..age 26" என்று பயண சீட்டு தகவலை கம்பார்ட்மெண்ட் வெளியே ஒட்டியுள்ள தகவலுடன் சரி பார்த்தார்.


என்னிடம் "சார், சரியான இடத்துக்கே வந்துட்டீங்க. நீங்க ரொம்ப லக்கி சார்" என்றான் என்னை கையைப் பிடித்து உள்ளே சென்றவன். அவன் 'லக்கி' என்று சொன்ன சொல் எனக்கு பிடிக்கவில்லை. நான் எந்த விதத்தில் அதிர்ஷ்டசாலி?


என் சீட் வரைக்கும் அழைத்து வந்தவன் "வேற எதாச்சு வேணுமா?" என்று கேட்டான். "நான் உன்கிட்ட வேற எதாச்சு கேட்டானே?" என்று சொல்லலாமா என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தை ஒலியுடன் வெளியே வரவில்லை. 'வேண்டாம்' என்பதுபோல் ஒரு சின்ன சிரிப்பு. அவன் கிளம்பிவிட்டான்.


பொதுவாக வியாழக்கிழமை இரவு அவ்வளவு கூட்டமாக இருக்காது. அதுவும் இது சீஸன் நாட்கள் இல்லை. ஆக, யாரும் இந்த கம்பார்ட்மெண்ட்டில் வரமாட்டார்கள். அதிக கூட்டம் பிடிக்காது. நான் கண் தெரியாதவன் என்பதால், எனக்கு எப்படி கண் போச்சு? நான் இப்போ எங்கே போகிறேன்?என்ன வேலை செய்கிறேன்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கும் கூட்டமும் கூச்சலும் எனக்கு பிடிக்காது.


பிறவியிலே கண் தெரியாதவன், ஊரிலுள்ள அக்கா வீட்டிற்கு செல்கிறேன். சென்னையில் கவர்மெண்ட் ஆபிஸ் ஒன்றில் வேலை பார்க்கிறேன்....போன்ற தகவல்களை இந்த இரயில் பெட்டியில் ஏறிய ஏராளமான பயணிகளிடம் சொல்லியிருப்பேன். இது போன்ற பேச்சுகள் வேண்டாம் என்று நான் ஒரு முடிவு எடுத்தேன்.


நான் கண் தெரியாதவன் என்பதை காட்டி கொள்ளவதில்லை. இரயிலில் ஏறி உட்கார்ந்தவுடனே 'sleep eye bags'யை எடுத்து மாட்டி கொள்வேன். நான் தூங்குவதுபோல இருக்கும். நிம்மதியான பயணமாக இருக்கும்!


இரயில் பயணம் தொடர்ந்தது. இந்த சத்தம் கேட்கும்போது எல்லாம், எனக்கு 'சிக்கு புக்கு ரயிலே பாட்டு' ஞாபகத்துக்கு வரும்! யாரோ பிரபுதேவாவாம், பார்த்ததில்லை. ஆனால், மற்றவர்கள் சொல்லி கேட்டுள்ளேன்- இந்த பாடலுக்கு சூப்பரா ஆடி இருப்பாராம்! இப்பாடலை மனதில் ஓடவிட்டேன்.


இரண்டு நிமிடம் கழித்து ஒரு சத்தம். யாரோ வருவது போல் இருந்தது. ஒருத்தர் என் கால் தடுக்கி விழ பார்த்தார். டக்கென்று காலை மடக்கி கொண்டேன். "ஓ சாரி..." என்றது ஒரு பெண்ணின் குரல்.


அவள் போட்டிருந்த செண்ட்டின் வாசம் கம்பார்ட்மெண்ட்டை கமகமக்க செய்தது. . molecules, diffusion of gas particles, travel of the particles- இப்படி சின்ன வயதில் படித்த ஞாபகம். எதிரில் உட்கார்ந்தாள் .செண்ட் வாசனை எதிர்லிருந்து வந்ததால் இந்த யூகம்! படித்தவற்றை இப்படி மட்டும் தான் பயன்படுத்திக்க முடியும்.


"so stuffy ah....!" என்றாள் பெட்டிகளை வைத்தவாறு. நான் எதுவும் பேசவில்லை. தூங்க முற்பட்டேன். தூங்க முடியவில்லை. அவள் செண்ட் வாசம் என் மனசு வரைக்கும் பரவியது. கொஞ்சம் நேரம் கழித்து அவள் "சார் தூங்கிட்டீங்களா?" என்றாள்.

"இன்னும் இல்ல" ஏன் உடனே பதில் சொன்னேன் என்று தெரியவில்லை. அவள் தொடர்ந்தாள், "அப்பரம் ஏன் இவ்வளவு நேரம் அமைதியா இருந்தீங்க?"

பதில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் நிலைமையையும் என் வாழ்க்கை கதையை சொல்லி பரிதாபத்தை தேடி கொள்ள விரும்பவில்லை. சின்ன வயது முதலே யாரிடமும் அதிகமாய் பேசியதில்லை என் அக்காவிடம் தவிர.

"என்ன சார், உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டா, இப்படி சர்சர்ன்னு பதில் சொல்றீங்க...சரவெடி மாதிரி" என்றாள் கிண்டலாய். அவள் நக்கல் பேச்சு என்னை வெறுப்பேற்றியது.

"ஒன்னுமில்ல....நான் கொஞ்சம் reserved type" என்றேன்.

அவள் சிரித்து கொண்டே, "ஹாஹா....போகுற ரயிலில் தான் reserve பண்ணி வைப்பாங்க....வாழுற மனசையுமா reserve பண்ணி வைப்பாங்க?"

அவள் பேச்சு எனக்குள் சின்னதாய் ஒரு புன்னகை பூவை பூக்க வைத்தது. இருந்தும் அமைதியாய் இருந்தேன். சிரிக்கவில்லை. ஆமா....நான் கடைசியாய் வாய்விட்டு சிரித்தது...எப்போது தெரியுமா...ம்ம்ம்ம்....அது வந்து...ம்ம்ம்....சரிவிடுங்க....எனக்கு ஞாபகமில்லை.. வாழ்க்கையில் நான் சிரித்த தருணங்கள் கொஞ்சம் தான்.

"பை த பை , என் பெயர் பார்வதி." என்றாள். அவள் கைநீட்டி ஹலோ சொல்கிறாளோ, நானும் பதிலுக்கு எங்கயோ கை நீட்டி, நான் ஒரு கண்தெரியாதவன் என்பதை அறிந்துவிடுவாளோ! ஏகப்பட்ட கேள்விகளை சமாளித்து, அவள் சொன்னதும் உடனே நான் இரு கைகளை வணங்கி,

"ஹாய்...நான் ராமு..."

என்னை காப்பாற்றிய,வணக்கம் சொல்லும் தமிழ் கலாச்சாரம்-வாழ்க!

"ராமு....நீங்க எங்க வேலை செய்யுறீங்க?"

அவள் 'சார்' என்பதிலிருந்து 'ராமு' என்று உரிமையோடு அழைத்தது எனக்கு ஆச்சிரியமாய் இருந்தது.....

(பகுதி 2)

4 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏங்க ஒட்டு போட சொல்லிட்டு இன்னும் தமிலிஷ்ல போடாம இருந்த எப்படி? சீக்கிரமா மீதி கதையையும் எழுதுங்க.. நல்லா இருக்கு..

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்..அப்புறம்?? நல்ல நடை..

Karthik said...

Wow, Ammmmazing start. Really nice flow.

Lemme read the second part. :))

ஆதவா said...

முழு கதையும் படிச்சாச்சு!!! விமர்சனம் அடுத்த பகுதியில்...