Feb 24, 2009

அவள் என்னைவிட அழகு- பகுதி 2

பகுதி 1

"கவர்மெண்ட் வேலை தான்..." என்றேன் அவளிடம்.

"மதுரையில கலெக்ட்டோரோ!" என்றாள் மறுபடியும் சிரித்து கொண்டே. இந்த முறை அவளின் சிரிப்பை வெறுக்கவில்லை. கொஞ்சம் அதிகமாகவே ரசித்தேன்.

"நீங்க அடிக்கடி ஏன் சிரிக்குறீங்க?" என்றேன் நான். பைத்தியம் போல் சிரிக்கிறாள் என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன். "நீங்க நினைக்குற மாதிரி இல்ல..." என்றாள் அவள்.

"நான் உங்கள பைத்தியம் மாதிரி சிரிக்குறேன்னு நினைச்சுது உங்களுக்கு எப்படி தெரியும்" என்றேன் நான்.

"ஹாஹா... அதான் இப்ப சொல்லிட்டீங்களே." என்றாள் அவள் பேச்சு சாமர்த்தியத்தோடு!

ச்சே...என் வாயை கொடுத்து நானே கெடுத்து கொண்டேன் என்று எனக்கு அவமானமாய் இருந்தது. சிறிது நேரம் பேசவில்லை.

"என்ன மறுபடியும் மூட் அவுட்டா?" அவள் ஆரம்பித்தாள்.

"ரிலேக்ஸ் மேன்... ஏன் எப்ப பாத்தாலும் இப்படி சட்டுன்னு அமைதியா போயிடுறீங்க.... சிரிக்க கத்துக்கனும். அப்ப தான் வாழ்க்கைல கவலை நம்மள ரொம்ப சீண்டாது....யூ நோ... நம்ம சிரிக்கும்போது நம்ம உடம்பில் natural antihistamines வெளியாகும். அப்படியே T-cells எனப்படும் natural anti-biotic உருவாகும். அதனால நம்ம உடலுக்கும், முக்கியமா இரத்தத்திற்கும் ரொம்ப நல்லது." என்று முடித்தாள்.

யப்பாடா இவ்வளவு விஷயம் அறிந்தவளா! ஆச்சிரிய அளவு கூடியது.

நான் அவளிடம் கேட்டேன், "எப்படி நீங்க இவ்வளவு சகஜம் பேசுறீங்க, இவ்வளவு விஷயங்கள சொல்றீங்க....?" ஆச்சிரியத்தின் உச்சியில் நான்.

"அப்படின்னு இல்ல...நான் வர போது, டிடி ஆரிடம் கேட்டேன், இந்த கம்பார்ட்மெண்ட்ல வேற யாருச்சு இருக்காங்கலான்னு....அவர் தான் ஒருத்தர் இருக்காரு என்றார்... சரி ஒரு ஆண் என்றதும்... பரவாயில்ல பேச்சு துணைக்கு ஆள் இருக்காங்கன்னு சந்தோஷப்பட்டேன்.... ஆண்கள்கிட்ட கொஞ்ச சகஜமா பேசலாம்..." என்றாள், எனக்கு மேலும் ஆச்சிரியத்தை கொடுத்துவிட்டு.

"ஆண்களா? பொதுவா பெண்கள், பெண்கள் இருந்தா தானே பரவாயில்லன்னு நினைப்பாங்க..." என்று வினாவினேன் நான்.

"அப்படி இல்ல...சில பெண்கள் தேவையில்லாத personal கேள்விகள கேட்பாங்க...gossip
பண்ணுவாங்க.... எனக்கு பிடிக்காது. சில ஆண்கள் பக்கா ஜெண்டில்மேன் மாதிரி நடந்துப்பாங்க... உங்கள மாதிரி... நீங்க என்கிட்ட ஏதாச்சு கேட்டீங்களா பாருங்க?" அதே சிரிப்புடன் சொன்னாள் அவள்.

அவள் ஜெண்டில்மேன் என்று சொன்னதும் எனக்குள் ஒரு புத்துணர்வு பிறந்தது. இப்படி மனதளவில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டதில்லை இந்நாள் வரைக்கும்.

என் அம்மா இறந்துபோன போது அவரை கடைசியாக பார்க்கமுடியவில்லையே என்று துடித்தேன்... எனக்கு கண்கள் இல்லையே என்று தவித்தேன். அதே தவிப்பு இப்போது, பார்வதியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது.

"நம்ம இருக்கும்வரை மத்தவங்களுக்கு உதவியா இருக்கனும். முடிஞ்ச அளவு மத்தவங்க வாழ்க்கையில ஏதாச்சு ஒரு மாற்றத்தை கொண்டு வரனும்." என்றாள் அவள் கொஞ்சம் சீரியஸான குரலில். ஒரு நிமிடம் சிரித்து பேசுவார்கள்,
மறுநிமிடமே சீரியஸா பேசுவாங்க- பெண்களுக்கு மட்டுமே கைவந்த கலை.

"அப்போ... நீங்க social worker.ஆ?." அமைதியாய் நான். ஜன்னல் வழி வீசிய காற்றை சுவாசித்தவளாய் பதில் அளித்தாள்

"அட...not bad...கண்டுபிடிச்சுட்டீங்களே...." அவர் குரலில் தெரிந்தது ஒரு ஆனந்தம்.

"ஆமா.. ஹிம்ஸனா என்ற அமைப்பு ஒன்னு இருக்குது. சிறுவயது பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி கொடுமை செய்யப்படும் அவர்களை காப்பாற்றி அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை தருவதே இந்த அமைப்பின் நோக்கம். ஆனா.... ஒரு சோகம் என்னென்னா... அங்க இருக்குற பெண்கள் அனைவருக்குமே எய்ட்ஸ் நோய் இருக்கு....அவர்களுக்கு மருந்து செலவு, படிப்பு செலவு... இப்படி ஏகப்பட பணம் தேவை. அதுக்காக பல பெரும்புள்ளிகளை பார்த்து நிதி திரட்டனும். அதுக்கு தான் நான் உதவி செஞ்சுகிட்டு இருக்கேன்..." என்றாள் சோக கலந்த அக்கறை நிறைந்த குரலில்.

என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. எத்தனையோ பயணிகளை சந்தித்து இருக்கிறேன். ஆனால், இவளை போல் யாரும் இல்லை.

"நீங்க ரொம்ப கிரேட்ங்க..." என்றேன் நான் அவள் செய்யும் பணியை கேட்டு.

"இதலாம் சாதாரணம்... இன்னும் நிறைய செய்யனும்... செய்யலாம்..." தன்னடக்கத்துடன் அவள்.

நான் இதுவரைக்கும் எதாச்சு நல்லது செய்திருக்கேனா என்று நினைத்து பார்த்தேன். என்னை பற்றி தேவையில்லாமல் கவலைப்பட்டே எனது நாட்களை கடந்துவிட்டேன். சரி நான் ஒரு கண்தெரியாதவன் என்பதை சொல்லிவிடலாமா என்று மனம் துடித்தது. ஆனால், வில்லன் 'ஈகோ'வோ வேண்டாம் என்று தடுத்தது.

நான் போகும் ஊருக்கு மூன்று ஸ்டேஷன் முன்னால் தான் அவள் இறங்க வேண்டிய ஸ்டேஷன். இரண்டு மணி நேரத்தில் இரயில் அவள் இறங்க வேண்டிய ஸ்டேஷனை வந்து அடைந்தது.

"all the best for the rest of your journey in this train and life" என்று சொல்லிவிட்டு அவள் சென்றாள். நான் 'தேங்கஸ்' என்று சுருக்கமான ஒரு பதிலை சொன்னேன். அவள் இடத்தை காலி செய்யவும் இன்னொரு பயணி அவள் இடத்தை நிரப்பவும் சரியாக இருந்தது.

புதிய பயணி என்னிடம் "பாவம் சார்... இந்த பொண்ணு....இவ்வளவு அழகா இருந்தும், ஆண்டவன் இவளுக்கு கண் இல்லாம படைச்சுட்டானே." என்றார்.

என் உடம்பு முழுவதும் மின்னல் தாக்கிய ஓர் உணர்வு! வாய்விட்டு அழ வேண்டும் என்று இருந்தது. ஏன் இந்த உணர்வு? தெரியவில்லை.

மனதளவில்... அவள் என்னைவிட அழகு!

11 comments:

Unknown said...

இந்த பகுதியின் பாதியிலேயே ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. அழகான கதை நன்றாகச் சொல்கின்றீர்கள்.

Karthik said...

oh, inspired story???

its not exact translation, right? or is it?

anyway, superb writing..so refreshing to read in tamil.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல கதை.. மொழிபெயர்ப்பா? வாழ்த்துக்கள்..

Divyapriya said...

ரொம்ப ரொம்ப அழகான கதை...

FunScribbler said...

@சுல்தான்

//இந்த பகுதியின் பாதியிலேயே ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது.//

ஓ அப்படியா... கொஞ்சம் சுருக்கமாக எழுதியிருந்தால்..இதை தவிர்த்து இருந்திருக்கலாம் போல்..:) பரவாயில்ல...அடுத்த தடவை, இன்னும் நல்லா எழுத முயற்சிக்கிறேன்.

//அழகான கதை நன்றாகச் சொல்கின்றீர்கள்.//

நன்றிங்கோ!:)

FunScribbler said...

@கார்த்திக், பாண்டியன்

இது முழுவதுமாய் மொழிபெயர்ப்பு கதை இல்ல. நான் 6ஆம் வகுப்பு படித்தபோது, எங்கேயோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம். முழு கதை ஞாபகமில்லை. ஆனால், ஆரம்பமான அந்த இரயில் காட்சியும், கடைசியுமாக வரும் கண்தெரியாத பெண் ஒருத்தி இருப்பாள் என்பது மட்டுமே ஞாபகத்தில் இருந்தது.

நடுவே நடக்கும் உரையாடல் கற்பனையில் வந்தது. ஹாஹா...:)

FunScribbler said...

@திவ்யாபிரியா

கருத்துகளுக்கு நன்றிங்கோ!!

mvalarpirai said...

அழகான கதை !

ஆதவா said...

கலக்கல்...... கண் தெரியாதவள் என்று கடைசியில்தான் தெரிந்தது!!! நல்ல திறமைசாலி எழுத்தாளரின் நடை!!!

பொதுவாக கண் தெரியாதவர்கள் வேறு ஏதாச்சும் புலனறிவு அதிகம் பெற்றிருப்பார்கள்.. சிலர் மனதளவில் கதத நாயகன் போல இருப்பார்கள்...

உண்மையிலேயே அந்த பெண் கிரேட்.....

ஓட்டு!!!! போட்டாச்சு போட்டாச்சு!!

ஆதவா said...

என் வலைக்கு வந்து ஊக்கம் கொடுத்ததமைக்கு நன்றி நண்பரே!!

தொடர்ந்து வாருங்கள்!!!

Shruthi Vijayaraghavan said...

மிகவும் தெளிவான எழுத்து. இயல்பான நடை. பேச்சு வழக்கு இயல்புக்கு வித்திட்டிருக்கிறது. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.