ஏன் என்று தெரியவில்லை. படத்தில் இந்த வசனம் வந்த மறுநொடியே என் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென்று வழிந்தது. இப்படி மனசை தொடும், வருடும் பல வசனங்களை தூவி விட்டு இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.
பிழைப்பதற்காக கிட்டதட்ட ஒரு எடுபிடி போல் காவலதிகாரியுடன் இன்னொரு ஊருக்கு வரும் புலிபாண்டி (ராஜ்குமார்) வாழ்க்கையில் என்ன நடக்கிறது என ஒரு வரியில் சொல்ல கூடிய கடுகு அளவு கதையில் மிக பெரிய பலமே இயக்குனர் தேர்வு செய்த நடிகர்கள் தான். இப்படி ஒரு நடிகர் தேர்வை கனவில்கூட எதிர்பார்த்து இருக்க மாட்டோம். ஆனா, இவர் தான் இதுக்கு பொருத்தமா இருப்பார் என்று அசூர அளவு நம்பிக்கை வைத்த இயக்குனர் விஜய் மில்டனை பாராட்ட வார்த்தை இல்லை.
'character-driven' கதையில் நடிகர்கள் கொஞ்சம் சொதப்பினால்கூட அவ்வளவு தான். அப்படி நேர்கோட்டில் பயணம் செய்த ராஜ்குமாரும் சரி, பரத்தும் சரி மிக துல்லியமாக தனது வேலையை பார்த்து இருக்கிறார்கள். ராஜ்குமார் நடித்த புலிபாண்டி கதாபாத்திரத்தில் வேறு யாரும் பொருந்தமா இருந்திருப்பார்களா என்ற கேள்வியை கேட்கும்படி அவரது நடிப்பு மிலிர்கிறது படத்தில்.
"ஏய்யா தப்பு பண்ணல தப்பு பண்ணல சொல்றதே பெரிய தப்பு தான்ய்யா!" என ராஜ்குமார் வாய்விட்டு அழும்போது, இவரையா நான் கிண்டல் செய்து எழுதியிருந்தேன் (திருமதி தமிழ் படத்திற்காக) என்று அறையாமல் அறைந்துவிட்டு சென்று இருக்கிறார். இயல்பு நடிப்பு என்பதே ஏதோ ஒரு வகையில் நமது உண்மையான சுபாவத்தை வெளிகொண்டு வருவது தான். அதனை கண்டு அறிந்து திரையில் விருந்து அளித்து இருக்கிறார் ராஜ்குமார்.
ஏதோ ஒரு விமர்சனத்தில் படித்தேன்- "புலிபாண்டி, இப்படியா ஒருத்தர் ரொம்ப நல்லவரா இருப்பார். அது தான் கொஞ்சம் நெருடலா இருக்கு."
எனக்கு ஆச்சிரியமா இருந்தது. நல்லவனை அதுவும் புலிபாண்டி போல் நல்லவனை இருப்பதுகூட இவ்வுலகில் அதிசயமா போயிவிட்டதா? பரத் கதாபாத்திரம் போல் சூழ்நிலை கைதியாய் வாழும் அனைவருக்கும் புலிபாண்டி ஒரு அதிசயம் தான்.
எனக்கு மிகவும் பிடிச்சு இன்னொரு விஷயம், விஜய் மில்டன் இசைவெளியிட்டு விழாவில், எளிய மனிதர்களை வரவழைத்து அவர்களை பேச வைத்தது தான்.
இன்று காலையில் கலாய்த்து வந்த ஒரு டிவிட் படித்தேன் - "பாலா படத்த விக்ரமன் எடுத்த மாதிரி இருக்கு கடுகு"
நம்மூரில் ஒரு நல்ல படம் எடுத்தாலும், கிண்டல் செய்யும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து நல்ல சினிமாவை கொடுக்க விரும்பும் ஒரு சில இயக்குனர்களில் விஜய் மில்டனும் இப்போது வந்துவிட்டார்.
இப்படி மக்களுக்காகவும், மக்களின் மனதிற்கு பிடித்த மாதிரி படம் எடுத்த இந்த குழுவுக்கு, கடுகளவு இல்லை, கடலளவு நன்றி!