டூயட் படத்துல ஒரு காட்சி வரும். பிரபுவிற்கு ஹீரோயின் தான் கடிதம் அனுப்பி இருக்கிறார் என்று நினைத்து கொண்டு, எழுத்துக்களை 'வாசி வாசி' என்று, பிரபு வரிசைப்படுத்தி இருப்பார். ஆனா, அது வாசி வாசி, இல்ல 'சிவா சிவா' என்று அவரின் சித்தி சீதாம்மா விளக்குவார்.
அது போல மக்கள் சூப்பர்ஸ்டார் ராகவா லாரண்ஸ் நடித்த இப்படம், வெறும் சிவா சிவா என பொருள் எடுத்து கொள்ளக் கூடாது. அதையும் தாண்டி ஒன்னு இருக்கு. காதல் காட்சிகளால் நம் Oxytocin எனும் love hormoneனை தீண்டி இருக்கிறார். சண்டை காட்சிகளால் நம் neurotransmittersயை நோண்டி இருக்கிறார். நடன காட்சிகளால் நம் இதயத்தில் பாண்டி ஆடியிருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளால் நம் உள்ளத்தை இரண்டாய் பிளந்து இந்த பக்கமும் அந்த பக்கமும் தாண்டி விளையாடி இருக்கிறார்.
ஹீரோ intro காட்சியில், மக்கள் சூப்பர்ஸ்டார் ஜீப்பில் வருகிறார். அப்போது 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடல் ரேடியோவில் ஒலிப்பரப்பாகிறது. தனது அரசியல் ஆசையை தெரிவிக்க இதைவிட ஒரு சிறந்த வழி யாராலும் கண்டுபிடித்து இருக்க முடியாது. இலைகள் பறக்க, காற்று திசை மாற, அருவி கொட்ட, slow motionல அவர் நடந்து வர, ஐம்பூதங்களும் எப்படி அவருக்கு அடிமை ஆகிறதோ அப்படியே நாமும் ஐம்புலன்களையும் அவர் காலடியில் வைக்கிறோம் படம் ஆரம்பித்து 10 நிமிடங்களில். உலகத்தை மறந்து இப்படத்தை ரசிக்க தொடங்குகிறோம்.
காவல் அதிகாரியாக சேர்ந்தவுடன் முதல் கடமையாக hero introduction பாடலுக்கு செவ்வனே ஆடி முடிக்கிறார். முடித்தவுடன், நாட்டுக்கு ரொம்ப அவசியமான அடுத்த கடமையை செய்கிறார். காதல் வயப்படுகிறார் ஹீரோயின் மேல. காமெடியன் சதீஷ், "அப்படியே ஒரு மணிரத்னம் frame போட்டு வெயிட் பண்ணா, பொண்ணு வந்திட போகுது." என்று கூறுகையில் ஹீரோவுக்கு ஒரு நல்லது நடந்துவிடதா என்று மனம் ஏங்குகிறது. திருப்பதிக்கு வந்து மொட்ட போட்டு கொள்கிறேன் சாமி! என்று நம் மனம் பிரத்தனையில் ஈடுபடுகிறது.
நம் பிரத்தனை உடனே நிறைவேற்றி வைக்கிறார் நம்மை கைவிடாத ராகவேந்திரா சாமி. 30 வினாடிகளில் காதலில் விழுவது எப்படி என்று புத்தகத்தையே இயக்குனர் எழுதி இருப்பார் போலும். நிக்கி கல்ராணி ஓடி வருகையில் ராகவா லாரண்ஸுக்கு காதல் வந்துவிடுகிறது. "என்னைய காப்பாத்துங்க" என நிக்கி பயந்து அழ, மறுபடியும் ராகவாவிற்கு காதல். காமத்துபால் அனைத்தையும் அள்ளி பருகும் விதமாக ஒரு பிண்ணனி இசை வரும் பாருங்க. அதை கேட்டதும், உங்களுக்கு எந்த காதல் உணர்ச்சியும் ஏற்படவில்லை என்றால், நீங்கள் ஒரு ஜடம்.
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை கண்ணாடி
என்று கண்ணாடி இப்படத்தில் 2nd heroவாக வளம் வந்து இருக்கிறது. கடைசி வரைக்கும் கண்ணாடி, ஹீரோவிடமிருந்து எக்காரணத்துக்கும் பிரிந்து செல்லவில்லை. அதிலும் ஒரு புதுமையை இயக்குனர் புகுத்தியிருக்கிறார் பாருங்க. ஹீரோவின் உள்பனியன் வண்ணத்திலே கண்ணாடி! அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பனியனின் கலர் கண்ணாடியில் தெரியும் என பழமொழியையே மாற்றி அமைத்திருக்கிறார் மக்கள் இயக்குனர் சாய் ரமணி.
கண்ணாடிக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? அத்தனைக்கும் ஆசைபடவில்லையா?
இசையமைப்பாளர் அமரேஷ் வீட்டின் வெளியே பாவமாய் கிடந்தன மென்மையான இசை கருவிகளான புல்லாங்குழல், வைலீன் ஆகியவை. drums சிவமணிக்கே சவால் விட்ட மாதிரி இசை முழுக்க 'டக்கு டக்கு டண்டனக்கா டக்கு டக்கு டண்டனக்கா' என்று தான் இருந்தது. ஒரு கட்டத்தில், என் கபாலத்தில் தான் யாரோ இசை மீட்டுகிறார்கள் என்று நினைத்துவிட்டேன். இசை நெஞ்சை தழுவலாம், இங்கே மண்டையே போட்டு தழுவியது.
'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பது தான் சுகம் சுகம்' பாடலை கேட்டு சமாதியிலிருந்து எம் ஜி ஆர் ஆத்மாவே வெளியே வருவதாக திடிகிடும் தகவல்கள் பல. பாடல் ஆரம்பிக்கும்போது, 'பொழட்சி' என ஒரு சொல் வரும். எந்த இலக்கியவாதியும் பயன்படுத்தாத சொல். இதுக்கு என்ன அர்த்தம் என்று ஆராய்ச்சி செய்கையில் தான் புரிந்தது 'புரட்சி' என்பதை தான் அப்படி பாடியிருக்கிறார் பாடகர். சுக்விந்தர் சிங்-க்குகே சுறுக்குனு குத்தியிருக்கும்.
தொட்டு ஆடலாம். ஆனால், இங்க மக்கள் சூப்பர்ஸ்டார், ஹீரோயினை அடித்து ஆடியிருக்கிறார். அவர் அடித்த அடிகளுக்கு, நிக்கி கல்ராணிக்கு பதில், கொஞ்ச மாவும் தண்ணீரும் வைத்திருந்தால், 547 பூரிகள் நமக்கு கிடைத்திருக்கும்.
கதை திரைக்கதை, காட்சியமைப்பு, நடிப்பு என்று அனைத்தும் ராகவா நடனம் போல் வழுக்கினே போகுது. அதை தொடர்ந்து நாமும் செல்ல, கடைசியில் நமக்கு என்ன ஆகிறது? என்பது தான் இப்படம் நம் அறிவை எட்டி உதைத்து கற்று தந்த பாடம்.
'காருக்கு எதுக்கு அச்சாணி' என வடிவேலு சொன்னதுபோல், இப்படத்துக்கு சத்தியராஜ், கோவை சரளா, சதீஷ், தேவதர்ஷினி என காமெடி பட்டாளம் எதுக்கு? humorக்கே tumor வந்ததுபோல் இருந்த நகைச்சுவைக்கு தான் சமாதி கட்டி, அதுக்கு முன் நாம் அனைவரும் தியானம் செய்வோமாக!
1 comment:
Terrific Review....Way to go gal
Post a Comment