Mar 31, 2009

அப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்!

காலை 7 மணிக்கெல்லாம் பையன் ரெடியாகி நின்று கொண்டிருந்தான் அவனது கிரிக்கெட் பையுடன். இன்று ஞாயிற்றுக்கிழமை, அவனுக்கு கிரிக்கெட் பயிற்சி வகுப்பு இருக்கிறது டாவ்ஷன் மைதானத்தில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அவனை பயிற்சிக்கு அழைத்து செல்வேன். அங்கேயே மூன்று மணி நேரம் இருந்து அவன் விளையாடும் அழகை ரசிப்பேன். 7 வயதாக இருந்தாலும், அவனுக்குள் இருக்கும் திறமையை கண்டு பெருமிதம் கொண்டள்ளேன் பல முறை.

"அப்பா...சீக்கிரம் வாங்க....டைம் ஆகுது." என்னை இழுத்தான் ரோஷன். நானும் அவனும் விளையாட்டு திடலை அடைந்தோம். இந்த பயிற்சி வகுப்பில் கிட்டதட்ட 20 பேருக்கு மேல் சிறுவர்கள் வந்து பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். பல பள்ளிபோட்டிகளிலும், மாவட்ட போட்டிகளிலும் ஆட நிறைய திறன்மிக்க விளையாட்டாளர்களை உருவாக்கியுள்ளது இப்பயிற்சி வகுப்பு. அங்கே 9 மணிக்கு இருந்தால் போதும். ஆனால் ரோஷன் 730 மணிக்கே என்னை அழைத்துபோக சொல்வான். அவனது ஆர்வத்திற்கு நான் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை.

இரண்டு மூன்று காக்கா குருவிகளின் சத்தம், சில நாய்கள் ஓடிகொண்டிருந்தன- என சுற்றுசூழல் அமைந்திருந்தது. பனி விலகும் நேரம். உடற்பயிற்சி செய்ய அருமையான தருணம். வீட்டிலிருந்து போட்டுவந்த காலணியை கழற்றிவைத்து விட்டு புதிதாக அவனது பயிற்சிவிப்பாளர் வாங்கி கொடுத்த ரீபோக் ஷூவை போட்டு கொண்டான். ரீபோக் ஷூ- ரொம்ப விலையாம், உயர்ந்த தரமிக்க ஷூவாம். ரோஷன் சொல்லி தான் எனக்கு தெரியும். ஆனா என்னால் வாங்கி கொடுக்க வசதி இல்லை.

"அப்பா.... நான் 3 ரவுண்டு ஓடிட்டு வரேன்." என்று சொல்லி முடிப்பதற்குள் கிளம்பிவிட்டான். விளையாட்டில் திறமை இருந்தாலும், உடற்பயிற்சி தேவை. அப்போது தான் உடல் வலிமை பெறும். கிரிக்கெட் போன்ற விளையாட்டு ரொம்ப நேரம் விளையாட வேண்டிய விளையாட்டு என்பதால் உடலில் தெம்பு ரொம்ப முக்கியம். அதை நன்கு அறிந்தவன் ரோஷன். ஓடி முடித்துவிட்டு, கால் தசைகளுக்கு, கைகளுக்கு உகந்த சிறு சிறு பயிற்சிமுறைகளை தானாகவே செய்தான்.

அவன் ஒவ்வொரு அசைவையும் கண்கொட்டாமல் ரசிப்பேன் ஒவ்வொரு வாரமும். 9 மணியை நெருங்க, மற்ற சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள், பயிற்சிவிப்பாளர், சில இணை பயிற்சிவிப்பாளர் என பலர் வர ஆரம்பித்தனர். ஒவ்வொரு வாரமும் சில பெற்றோர்கள் தவறாமல் வந்துவிடுவார்கள், அதில் தெரிந்தவர்கள் சிறு புன்னகையிடுவார்கள். சில அப்பாக்கள் என்னிடம் வந்து பேசுவார்கள். அதில் ஒருவர்தான் குமார்.

குமார், "என்ன சார், எப்படி இருக்கீங்க?....என்னங்க இது ipl போட்டிகள வேற இடத்துக்கு மாத்திட்டாங்க?" அவர் கையில் வைத்திருந்த பைகளையும் தண்ணீர் பாட்டில்களையும் கீழே வைத்துவிட்டு என் அருகே உட்கார்ந்தார்.

"எங்க இருந்தா என்ன? நம்ம... எப்படியும் டீவியில தான் பாக்க போறோம்." சிரித்து கொண்டே பதில் அளித்தேன்.

"அதுவும் சரி தான்" என்றவர் வேலைகளை பற்றியும், அவர் வீட்டு லோன் பிரச்சனைகளை பற்றியும் பேசி கொண்டிருந்தார். இந்த பிரச்சனைக்குரிய விஷயங்களை பற்றி பேசுவது எனக்கு பிடிக்காது. இருந்தாலும், கேட்க வேண்டிய சூழ்நிலையில் மாட்டி கொண்டேன். அவர் சொன்னதற்கு தலையாட்டினேன். ஆனால், எனது சிந்தனை, கவனம், பார்வை எல்லாம் ரோஷனின் பயிற்சியின் மீதே இருந்தது. பயிற்சிவிப்பாளர் சொன்னவற்றை சிறுவர்கள் பின்பற்றுவதும், விளையாடுவதும் எனக்கு எல்லையில்லா சந்தோஷத்தை கொடுத்தது. ஒவ்வொரு முறையும் பயிற்சிவிப்பாளர் அவனை பாராட்டும்போது, எட்டி உட்கார்ந்து பார்த்தாலும் உள்ளூர ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும்.

ரோஷன் ஒரு பேட்ஸ்மேன். பந்து எந்த வேகத்தில் வந்தாலும் அதை கச்சிதமாக அடிப்பதில் வல்லவன். ஒரு சின்ன கேம் விளையாடினார்கள் அன்று. 5 ஓவர்கள் கேம். 4 பந்துகளில் 17 ரன்களை எடுத்தான் ரோஷன். தண்ணீர் இடைவேளையின் போது என்னிடம் பெருமையாக கூறியதை ரசித்து கேட்டேன்.

"அப்பா.. இன்னிக்கு கேம்ல நான் தான் டாப். கவர் டிரைவ்ல ஒரு ஷாட். அப்பரம் லெக் சைட்ல pull பண்ணி இன்னொரு பவுண்டரி. மொத்தம் 2 பவுண்டரி. 1 சிக்ஸர். அப்பரம் கடைசி பந்துல 3 ரன் எடுத்தேன்." வேர்வை முகத்தில் வழிந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மூச்சுயிறைக்க பேசி முடித்தான்.

நாள் முழுக்க விளையாட சொன்னாலும் விளையாடுவான் ரோஷன். இவனின் ஆசை கனவு எல்லாம் கிரிக்கெட் தான். எனக்கும் இவன் ஒரு விளையாட்டு வீரராக வரவேண்டும் என்பதே ஆசை. கேம் முடிந்து 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்தார்கள். அந்நேரத்திலும்கூட பேட்டிங், பந்தை பிடிப்பது, பந்தை ஸ்டம்பை பார்த்து அடிப்பது போன்ற பயிற்சிகளை சில சிறுவர்கள் அவர்களின் அப்பாவின் உதவியோடு பயிற்சி செய்தார்கள்.

ரோஷன் குமாரோடு பயிற்சி எடுத்தான். அச்சமயம் பயிற்சிவிப்பாளர் என்னிடம் பேசினார்.

"சார்... ரோஷன்.. ரொம்ப திறமசாலி. ரொம்ப கெட்டிக்காரன். இப்படியே அவன் விளையாடினால், அடுத்த 13 வயதுக்கு உட்பட்டோர் தமிழ்நாட்டு அணியில தேர்ந்தெடுக்கப்படுவான்... நல்ல எதிர்காலம் இருக்கு ரோஷனுக்கு." என்று என் தோளில் தட்டியபடி சொன்னார்.

என் மகிழ்ச்சிகளை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை என்பதால் என் ஆனந்த கண்ணீர் வர்ணிக்க ஆரம்பித்தன. கண்ணீரை துடைத்து கொண்டேன்.

பயிற்சி எல்லாம் முடிய மதியம் 12 ஆனது. பைகளை எடுத்து கொண்டோம். வீட்டிற்கு செல்லும் வழியில் தோனியின் பெரிய கட் அவுட் ஒன்று கம்பீரமாக சாலையை அலங்கரித்தது. சிவப்பு சிக்னல் இருந்ததால், வண்டியை நிறுத்தினேன். அந்த கட் அவுட்டை அனாந்து பார்த்த ரோஷன் என் முதுகை தட்டி, "அப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்!" என்றான்.

பிறவியிலே கால் ஊனமுற்றவனாக பிறந்த நான், அவ்வினாடி என் மகன் கூறியதற்கு என்னால் சொல்லமுடிந்த பதில், "நீ நிச்சயம் தோனி மாதிரி வருவே!"

என் மூன்று சக்கர வண்டியில் பயணத்தை தொடர்ந்தேன்.

Mar 29, 2009

கருத்தமாக்கள் அழிவதில்லை

"அம்மா இவங்க வீட்டுக்குமெல்லாம் போய் தான் ஆகனுமா? இவங்களுக்கும் நமக்கும் ஆகாது தானே... அப்பரம் ஏன்?" சலித்து கொண்டு புறப்பட்டாள் நந்தினி. அதற்கு அவள் அம்மா,

" அந்த பொண்ணு நல்ல பொண்ணு. அதுக்கு குழந்தை பொறந்திருக்கு... போகலன்னா...தப்பா போயிடும். அவங்க அம்மா தான் கொஞ்ச அப்படி இப்படி இருப்பாங்க." என்று பதில் அளித்தார்.

குழந்தையை பார்ப்பதற்கு இருவரும் சென்றனர். ஏனோ நந்தினிக்கு இந்த குடும்பத்தை பார்த்தாலே வெறுப்பு. தூரத்து சொந்தக்காரர்கள் இவர்கள். இந்த வீட்டு பெரியவர், அதான் அந்த குழந்தையின் பாட்டிக்கு வாய் கொஞ்சம் அதிகம். புரம் பேசுவதில் நம்பர் ஒன் இவர் தான்.

குழந்தையின் அம்மா வாசலில் நின்று வரவேற்றாள், "வாங்க சித்தி, வா நந்தினி...எப்படி இருக்கீங்க?" என்று முகம் மலர சொன்னாள். வீட்டில் நடு ஹாலில் உட்கார்ந்து இருந்த பாட்டி நக்கலுடன், "வாடியம்மா... இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?" என்றார்.

நந்தினிக்கு அவரின் நக்கல் பாணி பிடிக்கவில்லை. குழந்தை பிறந்து 4 நாள் தான் ஆகுது. என்னமோ 40 வருஷம் கழிச்சு வந்து பாக்குற மாதிரி பேசுறாங்க என்று மனதில் முணுமுணுத்து கொண்டாள். கடமைக்காக நந்தினி, பாட்டியிடம் ஒரு சிரிப்பு சிரித்தார்.

"இவ தான் உன் இரண்டாவது பொண்ணா?" பாட்டி நந்தினியின் அம்மாவிடம் கேட்டார். அவர் நந்தினியைப் பார்க்கும்போது எல்லாம் கேட்கும் அதே கேள்வி. குழந்தை இன்னொரு அறையில் உறங்கி கொண்டிருக்க, அதை தூக்கி கொண்டு வந்தார் அதன் அம்மா. அவர் நந்தினியின் அம்மாவின் கையில் வைத்தார் குழந்தையை.

பாட்டி உடனே, "ஆமா... என்னமோ இவ பொண் குழந்தைகளே பார்க்காத மாதிரி வந்து கொடுக்குறே?" என்று நந்தினியின் அம்மாவுக்கு மூன்று பெண்கள் இருப்பதை குத்தி காட்டியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏன் இந்த பேச்சு? நந்தினியின் குடும்பத்தினர் இவர்களைவிட வசதி படைத்தவர்கள் என்ற பொறாமையோ? நந்தினிக்கு புரியவில்லை. அவர் சொன்ன வார்த்தைகள் நந்தினியின் கோபத்தை தூண்டியது.

நந்தினி உடனே, "உங்களுக்கு எத்தன ஆம்பள பசங்க?" தெரிந்து கொண்டே கேட்டாள்.

பாட்டி, "2 பசங்க."

நந்தினி தொடர்ந்தாள், "2 பசங்க இருந்தாலும்... நீங்க என்னத்த சாதிச்சீங்க? ஒன்னு குடிக்காரன்... இன்னொருத்தன் வீட்டு பக்கமே வரது இல்ல."

பாட்டிக்கு ஆத்திரம் போங்க நந்தினியின் அம்மாவிடம் "ஏய் உன் மவ என்ன இப்படி பேசுறா?"

நந்தினி யார் பேசுவதற்கும் இடம் கொடுக்காமல், "பசங்க இருந்தா தான் கொல்லி வைப்பாங்க... அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தீங்கன்னா... அதுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன். இப்பலாம் செத்தா கொல்லி வைக்குறது இல்ல. ஹாஸ்பிட்டலில் ஒரு electric trayல வச்சு, ஒரு switch தான். எரிஞ்சு சாம்பலா போயிடும்... அந்த switch பசங்க தட்டுனாலும் சரி பொண்ணுங்க தட்டுனாலும் சரி, ஏரியும்." என்று சொல்லிமுடித்து வீட்டின் வெளியே வந்துவிட்டாள்.

இன்னும் ஒரு வினாடிகூட அந்த வீட்டில் அவள் இருக்க விரும்பவில்லை. உடனே அவளை பின் தொடர்ந்து ஓடி வந்தாள் அவள் அம்மா.

"என்னடி இப்படி பண்ணிட்டே. இனிமேல அவங்ககிட்ட எப்படி முகம் காட்டுறது?"

நந்தினி, "இப்படிப்பட்ட சொந்தக்காரங்கலாம் நமக்கு தேவையில்ல."

முற்றும்**

Mar 26, 2009

நானும் இசையும்

indian classical keyboard கற்று கொண்டு 3 மாதங்கள் ஆகிவிட்டன(அதற்கு முன்னால் western கற்று கொண்டிருந்தேன்..) இந்த 3 மாதங்களில் ரொம்ப முன்னேற்றம் அடைந்துவிட்டேன் என்றே சொல்லவேண்டும். அதற்கு காரணம் சொல்லி கொடுக்கும் குரு. நன்றி குருவே!:)

இந்த மே மாதம் 1st grade பரிட்சை எழுதலாம் என்றார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 3 மாதங்களில் இப்படி ஒரு வாய்ப்பு! இன்று என்னொரு சந்தோஷமான செய்தியும் சொன்னார். ஆக்ஸ்ட் மாதம் எனக்கு கச்சேரியில் வாசிக்க வாய்ப்பு தரப்படும் என்றார். அதற்கு 'முகுந்தா முகுந்தா' பாடலை கற்று கொடுத்தார். வகுப்பில் அவர் சொல்லி கொடுப்பதை தவிர்த்து, நானே இணையத்தில் பாடல்களின் keyboard notesகளை தேடி, வாசித்து பார்ப்பேன். அப்படி வாசிக்க கற்று கொண்டதுதான்... வசீகரா பாடல்.



அப்பரம் 'நெஞ்சுக்குள் பெய்திடும்...' பாடலும் ஓரளவுக்கு முயற்சி செய்திருக்கிறேன்.

Mar 24, 2009

பொறுமை

காரில், தினமும் காலையில் அம்மாவை அவர் வேலை இடத்தில் விடுவேன். அதற்கு அப்பரம் தான் கல்லூரிக்கு செல்வேன். நேற்று வழக்கம்போல் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் எந்த ஒரு indicatorரையும் போடாமல் திடீரென்று என் கார் சென்று கொண்டிருந்த laneக்குள் நுழைந்தது. ஒரு நொடி கவனமாக இல்லை என்றால், இரு வண்டியும் சுக்குநூறாகி இருக்கும்.

வந்த கோபத்தில், 20 வினாடிகள் தொடர்ந்து 'horn' அடித்தேன். ஒரே சத்தம்! பக்கத்து தடத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்கள் எல்லாம் பயந்துவிட்டனர். பக்கத்தில் அமர்ந்திருந்த என் அம்மா, "பொறுமையா போ. ஹார்ன் அடிக்காதே."

நான்: நான் பொறுமையா போனுமா? முன்னாடி போறானே அவன்கிட்ட போய் சொல்லுங்க.

அம்மா: சரி விடு.... ஏதோ பழமொழி சொல்வாங்களே...என்ன அது...ஆஆ...நாய் குரைச்சா திருப்பி குரைக்ககூடாது....

நான்: நாய் குரைச்சா பரவாயில்ல? கடிச்சா? நம்மள கடிக்க வந்தா....?

அம்மாவிடமிருந்து பதில் இல்லை.

நான்: சொல்லுங்கம்மா....கடிக்க வந்தா என்ன பண்ணுவீங்க?

அம்மா: கம்ப எடுத்துகிட்டு போய் அடிக்க போவேன்.

நான்: ஹாஹா...அப்ப மட்டும் பொறுமை தேவையில்லையா?

அம்மா என்னை பார்த்து முறைத்தார். "இந்த புள்ளக்கிட்ட பேசி வெல்ல முடியாது!" என்பதே அவரின் முறைப்புக்கு அர்த்தம் :) ஹிஹிஹி....

Mar 23, 2009

கொஞ்ச நாள் பொறு தலைவா-4

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

ஃபோன் செய்து பார்த்தேன். அவள் எடுக்கவில்லை. புரிந்துவிட்டது! 6 மாதம் முடிய இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது. அதற்குள்ளே நான் ரொம்ப அவசரப்பட்டுவிட்டேன். அவளை சமாதானப்படுத்த என்ன செய்வது என்று புரியவில்லை. பக்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த நண்பனிடம்,

"மச்சான்.... பொண்டாட்டி கோபப்பட்டால்... அவள எப்படி சமாதானம் படுத்துவது?"

நண்பன், "அடுத்த தெரு அண்ணாச்சியா இருந்தா, மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு போ. அனில் அம்பானினா, helicopterரோ விமானமோ வாங்கிட்டு போ. நீ எந்த வகை மச்சான்." என்றான் அவன். நேற்று அவன் அடித்த போதை இன்னும் இறங்கவில்லை என்பது அவன் பேச்சிலிருந்தே தெரிந்தது. மாலை 6 ஆகிவிட்டது. வீட்டிற்கு போக பயமாகவும் இருந்தது, அதே சமயம் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனம் வேண்டியது.

வீட்டிற்குள் நுழைந்தேன். அவள் துணிகளை iron செய்து கொண்டிருந்தாள். நான் எதுவும் பேசவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. என் பையை மேசையில் வைத்துவிட்டு, balconyயில் உள்ள சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தேன். தலையில் கைவைத்து யோசித்து கொண்டிருந்தபோது, ஒரு உருவம் என் அருகே வந்தது. அது நித்யா தான்!

அவளது கைகளால் என் முகத்தை திருப்பி, அவள் உதடுகளை என் முகம் அருகே கொண்டு வந்தாள். ஒரு வினாடி அவள் என் கண்களை பார்த்தாள். மறுநொடி, அவள் 'இச்' என்று ஒரு முத்தம் வைத்தாள் என் உதடுகளில்.

"sorry for the late reply" என்று கண்களை சிமிட்டினாள். அவளை என் மடியில் உட்கார வைத்தேன்.

"நீ கோபமா இருப்பீயோன்னு நினைச்சேன்... ரொம்மப கவலையா போச்சு நித்ஸ்.." என்றேன்.

அவள் வசீகர சிரிப்பை வீசி, "கோபமா?... இதுக்கா? கேட்குறது உன் உரிமை, கொடுக்குறது என் உரிமை. கொஞ்ச சஸ்பென்ஸா இருக்கட்டும்னு தான் ஒன்னுமே பதில் அனுப்பல..." அவள் விரல்கள் என் தலைமுடியோடு விளையாடின.

"ம்ம்... நல்ல பேச கத்துக்கிட்ட நித்ஸ்." என்றேன் நான்.

"பின்ன... உன்கூட 6 மாசம் குப்ப கொட்டி இருக்கேன். இதகூட கத்துக்கலன்னா எப்படி?" அவள் மறுபடியும் சிரித்தாள்.

"ஏய் நித்ஸ்... நம்ம போட்டோமே 6 மாசம் கண்டிஷன்.... அது 6 மாசமா... நல்ல யோச்சி பாரு... 5 மாசம் 29 நாள் சொன்ன மாதிரி ஞாபகம்."

"ஏய்.. ஜொள்ளா....nothing doing. 6 மாதம் முடிய இன்னும் ஒரு நாள் தானே இருக்கு. அதுக்குள்ள என்ன... நம்ம இதுவரைக்கும் சந்தோஷமா வாழ்ந்த வாழ்க்கைக்கு இன்னொரு முழுமையான அர்த்தம் கிடைக்கபோகுது... அதனால நாளைக்கு காலையில கோயில் போயிட்டு வந்துடுவோம். ஓகேவா?" என் கன்னத்தை கிள்ளினாள்.
--------------------------------------------------------------------------

தரிசனம் முடித்துவிட்டு கோயிலில் சிறிது நேரம் உட்கார்ந்தோம்.

"நித்ஸ், சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?" ராகேஷ் கேட்டான் என்னிடம்.

"எத்தன ஜன்மம் எடுத்தாலும்... நீ தான் எனக்கு கணவனா வரனும்னு வேண்டிகிட்டேன்." என்று பதில் அளித்தேன்.

"நீ என்ன வேண்டிகிட்ட?" நான் கேட்டேன்.

அதற்கு ராகேஷ், "நீ வேண்டி கேட்டதற்கு எதாச்சு பரிகாரம் இருக்கனும்னு வேண்டிக்கிட்டேன்." அவன் சிரித்தான்.

"ஏய்.. உத வாங்குவே." என்ற நான், அவன் நெற்றியில் இட்டிருந்த திருநீரை சரிப்படுத்தினேன். திடீரென்று என் கைவிரல்களை பிடித்து முத்தம் கொடுத்துவிட்டான்.

"oh my god, என்ன செய்யுற ராகேஷ். இது பொது இடம்." நான் முறைத்தேன்.

"என்ன மா...... நீ தானே சொன்னே, இன்னிக்கு நமக்கு ஒரு புது அர்த்தம் கிடைக்கபோகுது. அதுக்கு கடவுள்கிட்ட வேண்டிக்கனும்னு. அதான் இப்ப புள்ளையார் சுழி போட்டேன். தப்பா?" என்று கூறினான் குழந்தைபோல் முகபாவனை செய்து. அவனின் சாமர்த்தியமான பதில் என்னை சிரிக்க வைத்தது. கொஞ்சம் வெட்கப்பட வைத்தது. வீட்டிற்கு திரும்பும் வேளையில் என் மேனேஜர் ஃபோன் செய்தார்.

"சார்... முடியாது...சாரி... இன்னிக்கு என்னால போக முடியாது." அவரிடம் 1 மணி நேரம் வாதிட்டேன்.

"என்ன ஆச்சு மா?" ராகேஷ் கேட்தற்கு,

" ராக்ஸ், மேனேஜர் திடீரென்னு ஒரு வேலை கொடுத்துட்டாரு. ஒரு conference. அதுக்கு இன்னொரு டீம் லீடர் தான் போகனும். அவங்கனால போக முடியல கடைசி நேரத்துல. அதனால என்னை போக சொல்றாரு. 4 நாலு பெங்களூர்ல...இன்னிக்கு மதியமே கிளம்பனும்."

மிகவும் எதிர்பார்த்த பாகிஸ்தான் - இந்தியா கிரிக்கெட் போட்டி மழையினால் ஒத்திவைப்பு என்று சொல்லும்போது ஒரு ஏமாற்றம் வருமே, அதே ஏமாற்றத்தை கண்டேன் ராகேஷ் முகத்தில்.

"சாரி டா.... மேனேஜர் ரொம்ப insist பண்றாரு... நான் போய் தான் ஆகனும். சாரி ராக்ஸ்...." நான் அவன் கன்னத்தில் கைவைத்து கெஞ்சினேன்.

"பரவாயில்ல நித்ஸ். போயிட்டு வா....நீ என்ன பண்ணுவ... ஆபிஸ் நிலைமை அப்படி. நாலு நாள் தானே... it's ok." அவன் புன்னகையித்தான். இந்நிலைமையிலும் அவன் என்னை புரிந்து கொண்டது அவன் மேல் உள்ள காதலை அதிகப்படுத்தியது.

call taxi வந்து நின்றது வீட்டருகே. டிரைவர் சிகரெட் பிடிக்க கொஞ்ச தூரம் தள்ளி சென்றான். என் பெட்டிகளை வண்டியினுள் வைத்தான் ராகேஷ். அவனை பார்த்து நான், "ராக்ஸ்... ஒன்னு சொல்லட்டா...."

அவன் ஆவலாய் என் பதிலுக்காக காத்திருந்தது அவன் கண்களில் தெரிந்தது.

"ஐ லவ் யூ ராகேஷ்." என்றேன்.

"மீ டூ.... i am really going to miss you lots." என்றவன் என் கன்னம் அருகே வந்தான் ஏதோ ஒன்றை கொடுக்க. அச்சமயம் டிரைவர் சீட்டில் கிடந்த செல்போன் ரிங்டோன் பாடியது

"கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி இங்க வருவா கண்ணிரெண்டில் போர் தொடுப்பா அந்த வெண்ணிலவைத் தோற்கடிப்பா".

எங்களது சூழ்நிலையை படம்பிடித்து காட்டிய செல்போன்னை பார்த்து நாங்கள் சிரித்தோம்.

*முற்றும்*

Mar 22, 2009

கொஞ்ச நாள் பொறு தலைவா-3

பகுதி 1

பகுதி 2

"என்ன ராகேஷ் இது... தேவையில்லாம என்னனெம்மோ பேசுறே." அவள் குரலில் சோகம் தலைதூக்கியது.

"ஓ ஓஹோ... நான் பேசுறது உனக்கு தேவையில்லாத மாதிரி தெரியுதா... தேவையில்லாதத பேச நான் என்ன பைத்தியமா?" கையில் இருந்த ரிமோட் controlலை பக்கத்தில் இருந்த காபி மேசையில் போட்டேன்.

நான் பேச பேச, அவள் அமைதியாக இருந்தாள்.

"இந்த பொண்ணுங்களே இப்படி தான்....ச்சே.." நான் சலித்து கொண்டேன்.

"இப்ப ஏன் எல்லாம் பொண்ணுங்கள இழுக்குற? உனக்கு என் மேல மட்டும் தானே கோபம்.. அதுக்கு ஏன் எல்லாரையும் நீ தப்பா பேசுற." அவள் அமைதியாக கூறினாள்.

"ஓ இவங்க பெரிய மகளிர் சங்க தலைவி. பொண்ணுங்கள பத்தி சொன்னவுடனே... கோபம் வந்துடுச்சோ.... நீங்க மட்டும் பொதுவா பேசலாம்...stereotyping girls அது இதுன்னு..... நாங்க பேசுனா மட்டும் தப்பா?"

நித்யாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவள் கண்கள் குளமாகியதை கண்டேன். இரவு 1030 மணிக்கு ஆரம்பித்த சண்டை 12 மணி வரைக்கும் நீடித்தது. கை கடிகாரத்தை பார்த்தேன் மணி 12.01 என்று காட்டியது. உடனே நான்,

"ஹாஹா..... happy april fools' day!" என்று வாய்விட்டு சத்தம் போட்டு சிரித்தேன்.

"what!" நித்யாவுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. நான் சும்மா தான் அவளிடம் சண்டை போட்டேன், உண்மையான கோபம் ஒன்றுமில்லை, எப்படி அவளை april fools' day அன்று ஏமாற்றுவது என்று தெரியவில்லை, அவளாகவே மாட்டி கொண்டாள் என்ற முழுவிவரத்தையும் சொன்ன பிறகு நித்யா,

"you idiot!" சோபாவில் இருந்த cushion pillowவை எடுத்து என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

"நான் உண்மையாவே பயந்துட்டேன் தெரியுமா... ப்ளீஸ்.. இனிமேலு இப்படி பண்ணாத...i got a shock out of my life." அவள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் பேசினாள்.

"மேடம் மட்டும், பாக்ஸிங்.. அப்படின்னு என்னைய கலாய்க்கலாம்... நாங்க பண்ணகூடாதா?" என்றேன் நான்.

அவளுக்குரிய அந்த வசீகர சிரிப்பைச் சிரித்தாள்.
-----------------------------------------------------------------------------------

நாட்கள் வாரங்கள் ஆயின. வாரங்கள் மாதங்கள் ஆயின. ராகேஷுக்கு செல்ல பெயர் வைத்து கூப்பிட்டேன்- ராக்ஸ். அவனும் எனக்கு செல்ல பெயர் வைத்தான் - நித்ஸ். அவனது காலேஜ் புகைப்படங்களை ஒரு நாள் புரட்டி பார்த்து கொண்டிருந்தேன். பார்த்தபடியே அவனிடம் கேட்டேன்,

"ராக்ஸ், இந்த வீக்கெண்ட் எங்கயாச்சு outing போவோமா... நம்ம ஃபிரண்ஸ் எல்லாரையும் அழைச்சுகிட்டு. how about shirvas resort. பக்கத்துலே கடற்கரை. ஒரு நாள் தங்கியிருந்து வரலாம். it will be great you know."

"நித்ஸ், great idea." உற்சாகம் அடைந்தான் ராகேஷ்.

"ஏய்... அது என்ன எல்லா காலேஜ் போட்டோஸ்ல பொண்ணுங்க கூடவே நிறைய படம் எடுத்து வச்சுயிருக்கே... என்ன மன்மதன்னு நினைப்போ?" நான் சிரித்துகொண்டே அடுத்த படத்தை பார்த்தேன்.

"அப்படியலாம் ஒன்னுமில்ல... சும்மா தான்... என் கிளாஸ்ல அப்போ கொஞ்ச பேரு தான் பசங்க. மத்தவங்க எல்லாம் பொண்ணுங்க தான்..." ராகேஷ் பதில் அளித்தான்.

"ஓ really... சரி எல்லாரையும் கூப்பிடு... நிறைய பேரு வந்தா தான் அவுட்டிங் ஜாலியா இருக்கும்."

"பெண் தோழிகளுமா? உனக்கு ஒன்னும்....objection இல்லயா?" அவன் தயக்கத்துடன் கேட்டேன். பொதுவாக மனைவிகள் தங்களது கணவனுக்கு பெண் தோழிகள் இருப்பது பிடிக்காது. அது அவர்களின் விருப்பம். ஆனால், என்னை பொருத்தவரை, அப்படி பாகுபாடு எல்லாம் கிடையாது. நட்புக்கு எந்த ஆண் பெண் வேதமும் கிடையாது.

"உனக்கு ஃபிரண்ஸ்ன்னா... எனக்கும் அவங்க தோழிகள் தானே.. இதுல என்ன objection.....அது மட்டும் இல்ல.... அவங்ககிட்ட உன் வண்டவாளம் எந்த தண்டவாளம் வரைக்கும் போனுச்சு பத்தி எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கலாம் பாரு"

ராகேஷ் சிரித்துகொண்டே, " அப்படியலாம் நான் இல்ல... நான் ரொம்ம்ம்ப நல்ல பையன். பொத்திவச்ச மல்லிகை மொட்டு மாதிரி நான்.... வானத்தகூட அனாந்து பாக்க மாட்டோன். காலேஜ் முடிஞ்சா.... வீடு..." என்று அப்பாவியாய் முகத்தை வைத்து பேசியது எனக்கு சிரிப்பை வரவழைத்தது.

அவன் தொடர்ந்தான், " நீயும் உன் ஆண் நண்பர்களை கூப்பிடு... அவங்ககிட்டயும் நான் உன் தண்டவாள கதை பத்தி கேக்கனும்."

நான்," அதுக்கு சான்ஸே இல்ல... நான் படிச்சது எல்லாம் பெண்கள் பள்ளிகூடம், காலேஜ் தான்."

ராகேஷ் பதிலாய், "அதுக்கு என்ன... அவங்கிட்டயும் கேக்கலாமே.... இப்பலாம் அதான் நித்ஸ் இன்னும் interestingஆ இருக்கும்... fire படம் பார்த்ததுல?"

"அட ச்சி...naughty ராக்ஸ்"
----------------------------------------------------------------------------------

எனது தோழிகளையும் அவள் நண்பர்களாய் பார்க்கும் மனபக்குவம் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. எல்லாரும் காதல் செய்து கல்யாணம் செய்து கொள்வார்கள். நாங்கள் கல்யாணம் முடிந்து பிறகு தான் காதலர்களாகவே மாறினோம்.

ஒரு வெள்ளிக்கிழமை காலை அன்று ஆபிஸ் கிளம்பும்போது, நான் பரபரப்பாக ஒரு முக்கியமான presentationக்காக தயார் செய்து கொண்டிருந்தேன். கொஞ்ச டென்ஷனாகவும் இருந்தது. எல்லாவற்றையும் எடுத்து கொண்டோமா என்று என் ஆபிஸ் பையை பலமுறை சரி பார்த்தேன். என் நிலையை அறிந்தவள் என் அருகே வந்து,

"என்ன ஆச்சு ராக்ஸ், are you alright?" என்றாள்.

"i am ok. நான் சொன்னேன்ல, இன்னிக்கு ஆபிஸ்ல ஒரு important presentation... அதான் கொஞ்ச டென்ஷன்." வார்த்தைகள் நடனமாடின.

"ராக்ஸ்... don't worry. all the best." என் நெற்றியில் முத்தமிட்டாள் நித்யா.

என் மனைவி எனக்கு கொடுத்த முதல் முத்தம். நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் இந்த நேரத்தில். என் உயிர்நாடி ஒரு நிமிடம் சொர்க்கத்திற்கு சென்று வந்தது போல் இருந்தது. அவள் சொன்ன வார்த்தையும் , அவள் கொடுத்த முத்தமும் , என்னை presentation meeting போது அதிக உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது. பேசி முடித்தபின் எல்லாரும் என்னை பாராட்டினர்.

மதிய உணவு இடைவேளை போது அவளுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினேன்.

'ஏய் நித்ஸ், இன்னிக்கு presentation சூப்பரா பண்ணிட்டேன்."

நான் அனுப்பிய பதில் குறுந்தகவல் அனுப்பினாள், "நான் தான் சொன்னேன்ல, உன்னால நிச்சயம் நல்லா பண்ண முடியும்னு. வாழ்த்துகள்."

அடுத்த குறுந்தகவலை ஏன் அப்படி அனுப்பினேன் என்று தெரியவில்லை, மனம் துடித்தது. அது விரல்களுக்கு தெரிந்துவிட்டது. என் மூளையிடம் கேட்பதற்குள் குறுந்தகவலை அனுப்பிவிட்டது என் விரல்கள்.

'நித்ஸ், நீ காலையில ஒன்னு கொடுத்தியே... i wish i could get one on my lips right now. :)'

எப்போதுமே உடனுக்குடன் பதில் அனுப்பும் நித்யா இதற்கு பிறகு அனுப்பவில்லை. அவசரப்பட்டுவிட்டோமோ என்று மனம் பந்தாடியது. ஒரு சாரி குறுந்தகவலை அனுப்பி பார்ப்போமா என்று மூளை கேட்ட கேள்விக்கு மனம் அளித்த பதில்- 'நீ எதுக்கு சாரி கேட்கனும். அவளாவே தான் வந்து கொடுத்தா, அதுக்கு அப்பரம் தானே என்னைய இப்படி நினைக்க வச்சே. அவ சும்மா இருந்திருந்தா, நீயும் சும்மா இருந்திருப்பே. உன் மேல தப்பு இல்ல. நான் சொல்றது சரியான்னு என் ஃபிரண்ட் ஈகோகிட்ட கேட்டு பாரு'

குழப்பமாக இருந்தது எனக்கு. அவளுக்கு ஃபோன் செய்ய முடிவெடுத்தேன்.....

(பகுதி 4)

Mar 21, 2009

கொஞ்ச நாள் பொறு தலைவா-2

பகுதி 1

நேற்று ராகேஷ் "சொல்லு மா" என்று சொல்லியது எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது. ம்ம்ம்... பார்க்கவும் சரி பழகவும் சரி, நல்ல மனிஷனா தான் தெரிகிறார். தன் மனதில் பட்டதை தைரியமாக சொன்னது அழகாய் தெரிந்தது, மற்றவர்களின் மனதையும் புரிந்து கொள்ளும் கணவனை அடைய பாக்கியம் செய்திருக்க வேண்டும். நான் பாக்கியம் செய்தவள் போலும்.

ஒரு வாரம் சென்றது. ஒரு நாள், நான் இணையத்தில் சில சமையல் குறிப்புகளை தேடி கொண்டிருந்தேன். ராகேஷுக்கு கோழி என்றால் ரொம்ப இஷ்டம்.

"நித்யா, என்ன தீவிரமா இண்டர்நெட்ல பாத்துகிட்டு இருக்க." ராகேஷ் ஆபிஸ் முடிந்து வந்த களைப்பில் சோபாவில் விழுந்தான்.

"ஒன்னுமில்ல ராகேஷ்... உனக்கு பிடிச்ச கோழி ஐட்டம் ஏதாச்சு இருக்கா... அத எப்படி செய்றதுன்னு பாத்துகிட்டு இருக்கேன்?" பதில் அளித்தேன் நான்.

"ஆமா... சமையல உன்னோட speciality என்ன?" காற்று வாங்க, கழுத்தில் போட்டிருந்த tieயையும் சட்டையின் முதல் இரண்டு பட்டன்களையும் அவிழ்த்தான் ராகேஷ்.

பார்வையை கணினியின் மேல் வைத்தவாரே, "ம்ம்...சுடு தண்ணி சூப்பரா வைப்பேன் ராகேஷ்."

வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான் ராகேஷ். "என்ன நித்யா...காமெடிலாம் பிச்சு வாங்குறே?"

நான் அவனை பார்த்து, "இல்ல ராகேஷ்... உண்மையாகவே அவ்வளவு தான் எனக்கு தெரியும். கல்யாணத்துக்கு முன்னாடி, அதுக்குலாம் நேரம் கிடைக்கல. வேலை... வேலை முடிஞ்சா...training...அப்பரம் ரொம்ப tiredஆ போயிடும்... வந்து சாப்பிட்டு தூங்கிடுவேன்."

அவன் முகத்தில் குழப்ப மின்னல்கள் வெட்டின, "என்ன training நித்யா?"

அவன் எதிரே வந்து உட்கார்ந்தேன்.

"அத்தைகிட்ட நான் சொல்லியிருந்தேனே...உன்கிட்ட சொல்லலயா?" நான் மேலும் பேசியது அவனுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது.

தொடர்ந்தேன் நான், " நான் தமிழ்நாடு பெண்கள் boxing சங்கத்துல இருக்கேன். சின்ன வயசுலேந்து பாக்ஸிங் கத்துகிட்டு வரேன்..."

அவன் முகத்தில் குழப்பம் மறைந்து பயம் வந்துவிட்டது. "அப்ப.. நித்யா... நீ இன்னும் continue பண்ண போறீயா?" எச்சில் விழுங்க கஷ்டமா இருந்தது ராகேஷுக்கு.

"ச்சே ச்சே... இனி மேலு எதுக்கு, அதான் கணவன் இருக்காரே practice பண்ண?" நான் அடித்த ஜோக் அவனுக்கு 'பகீர்' என்றது. சிரிக்ககூட முடியாமல் தவித்தான்.

சிரித்தபடியே நான், "ஹாஹா... சும்மா சொன்னேன்.. பாக்ஸிங்கும் கிடையாது... ஒரு trainingகும் கிடையாது.."

"என்கிட்டயேவா...." அவனும் சிரித்தான்.

"சரி ராகேஷ் சொல்லு, என்ன வேணும் உனக்கு? ஹைதரபாத் கோழி பிரியாணி or செட்டிநாட்டு கோழி குழம்பு?" print out செய்து கையில் வைத்திருந்த தாட்களை அவனிடம் நீட்டினேன்.

"உன் இஷ்டம். நீ என்ன செஞ்சாலும்.... அது சுடு தண்ணி மாதிரி தான் இருக்கும்." என்று அவன் கிண்டலடித்தான். செல்ல கோபத்துடன் என் கையில் வைத்திருந்த தாட்களை அவன் தலையில் அடித்தேன்.

"சரி சரி....அடிக்காதே... ஹைதரபாத் கோழி பிரியாணியே செய்....நான் குளிச்சுட்டு வந்துடுறேன்." அவன் கிளம்பி அறைக்கு சென்றான். நான் சமையலறைக்கு சென்றேன். என்னை கூப்பிட்ட ராகேஷ்,

"நித்யா, எனக்கு ரொம்ப பசிக்குது... சீக்கிரம் ரெடி பண்ணு உன் ஹைதரபாத் சுடு தண்ணிய." என்று மறுபடியும் கிண்டல் அடித்துவிட்டு அறைக்குள் ஓடிவிட்டான்.

அவன் அருகே இருக்கும் நேரம், எனக்கு கொடுத்த சுதந்திரம், அவனுக்குள் இருந்த நகைச்சுவை உணர்வு எல்லாமே பிடித்திருந்தது.

------------------------------------------------------------------------------------------------------------------------

முதல் தடவ செய்த மாதிரியே இல்லை. நல்லாவே இருந்தது நித்யாவின் சமையல். சாப்பிட்டு முடித்துவிட்டு, தொலைக்காட்சி பார்க்க உட்கார்ந்தோம். அவள் சமையலை செய்து காட்டி அசத்திவிட்டாள். ஆக, என் பங்குக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று மனம் சொன்னது. கிரிக்கெட் சேனல் ஓடி கொண்டிருந்த டிவியில், நான் ஏதோ ஒரு சீரியல் சேனலுக்கு மாற்றினேன், அவளுக்கு பிடிக்கும் என்ற நோக்கத்தில்.

நான் மாற்றியதை கண்டு, கேள்வி எழுப்பினாள், "ஏன் மாத்துனே சேனல?"

"இல்ல... நீ சீரியல பார்க்க ஆசைபடுவேன்னு...." என்று இழுத்தேன்.

"நான் உன்கிட்ட சொல்லியிருக்கேனா... நான் சீரியல் பார்ப்பேனு..." அவள் சீறினாள்.

"பொண்ணுங்க normalஆ அதான் பாப்பாங்க..."

".ஏன் நாங்க கிரிக்கெட் பார்க்க மாட்டோமா...சீரியல் மட்டும் தான் பார்ப்போம்னு ஏதாச்சு சட்டம் இருக்கா என்ன?" அவளுக்கு கோபம் வந்தது. நான் சாதாரணமாக செய்த செயல் இப்படி வந்து முடியும் என்று எனக்கு தெரியவில்லை.

"ஏய் நித்யா...ரிலேக்ஸ்...சரி விடு. கிரிக்கெட் தானே பாக்கனும்...இந்தா பாரு." கூறினேன் நான்.

அவள் முணுமுணுத்தாள், " i hate people who stereotype girls...."
அவள் 'hate' என்ற வார்த்தையை பயன்படுத்தியது எனக்கு பிடிக்கவில்லை.

"so you hate me?நேரா சொல்ல வேண்டியது தானே...." எனக்கு கோபம் வந்தது.
அவள் அமைதியானாள். என் கோபத்தை சற்றும் எதிர்பார்க்காதவள் திடிக்கிட்டு போனாள்.

"அப்படி இல்ல ராகேஷ்.... நான் பொதுவா சொன்னேன்." அவள் பணிந்து போனாள். ஆனால், நான் விடுவதாக இல்லை.

"நமக்குள்ள ஒன்னுமே நடக்கல. அதுக்குல வெறுத்து போச்சா... ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்னு சும்மாவா சொல்லியிருக்காங்க..." என் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

(பகுதி 3)

Mar 19, 2009

கொஞ்ச நாள் பொறு தலைவா-1

(கறுப்பு எழுத்துகளில் உள்ளது ஹீரோ point of viewலிருந்து எழுதப்பட்டது, நீல நிற எழுத்துகளில் உள்ளது ஹீரோயின் point of viewலிருந்து எழுதப்பட்டது. அடுத்த பாகத்தில் வரும் ஹீரோயினின் எழுத்துகள்)


ச்சே ச்சே காலையிலேந்து எத்தன விஷயம், கூச்சல், மேள சத்தம், சொந்தக்காரங்க டார்ச்சர், கீழே விழுந்து ஆசிர்வாதம் வாங்கி வாங்கி, கிட்டதட்ட 300 தடவ கீழே விழுந்து கும்பிட்டு இருப்பேன். கைகாலு, இடுப்புவலி தான் மிச்சம்! ஒரு நாள் கல்யாண ஏற்பாட்டுக்கு எத்தன சடங்குகள்....யப்பா சாமி...



"டேய் ராகேஷ், டைம் 930 டு 1030 தான் சாந்திமூகூர்த்தத்திற்கு நல்ல நேரம். போய் சீக்கிரம் ரெடியாகு." என் பெரியப்பா என்னிடம் சொன்னது என் காதில் விழுந்தது. அத வேற சத்தம் போட்டு சொன்னார். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.



arranged marriage எங்களது. ஓ... பை த பை அவள் பெயர் நித்யா. நல்லா இருக்குல?



வீட்டில் பார்த்து செய்த திருமணம். நிச்சயதார்த்தம் முடிந்து 3 மாதங்களில் கல்யாணம். 2 முறையே அவளிடம் பேசியிருக்கிறேன். அதில்கூட "ம்ம்ம்...அப்பரம்", "சொல்லுங்க"...."சாப்பிட்டீங்களா".....இப்படி இதையே பேசி நேரத்தை வீணாக்கிவிட்டோம். அவளின் விருப்பு, வெறுப்பு, மற்ற ஆசைகள், லட்சியங்கள்- எதுவே எனக்கு தெரியாது. கிட்டதட்ட அந்நியனாக தெரியும் அவளிடம் எப்படி இன்று இரவு.....



ஆக, நான் ஒரு முடிவு எடுத்தேன். நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட பிறகு தான், 6 மாதம் கழித்து தான் சாந்திமுகூர்த்தம் எல்லாம். பெரியவர்களிடம் இதை சொன்னால், வாசலில் கட்டப்பட்ட தோரணங்கள் போல் என் முதுகு தோலை பிச்சி எடுத்துவிடுவார்கள். அதனால், இது எனக்கும் நித்யாவுக்கும் தெரிந்த ரகசியமாகவே இருக்கபோகிறது.



எப்படி ஒரு மனைவியிடம், அதுவும் கல்யாணம் ஆன முதல் நாளே, இவ்வாறு சொன்னால், அவள் ஏற்றுகொள்வாளா? என்னை தவறாக நினைத்துவிடுவாளா? தன்னை தான் பிடிக்கவில்லை என்று வேறுவிதமாக எண்ணி கொள்வாளா? என்று 1000 கேள்விகள், சென்னை போக்குவரத்தில் சிக்கிய ambulance போல் தவித்தன.



என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். இன்று தான் நாங்கள் தனிமையில் பேசிகொள்ள போகிறோம். இதுவும் ஒரு வித பரபரப்பையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. இனி எனக்கென்ன ஒரு சொந்தம், எனக்காக ஒரு வாழ்க்கை துணை. எப்படி அமைய போகிறது வாழ்க்கை? தேர்வு எழுத போவதற்கு முன்னால் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் உணர்வு வரும், ஆனால் அந்த பட்டாம்பூச்சிகளே தேர்வு எழுத போனால் எப்படி இருக்கும்.... அப்படி ஒரு மெகா மகா பரபரப்பு என் மனம் முதல் வயிறு வரை.



இருப்பினும், அனைத்து உணர்ச்சிகளையும் சமாளித்து கொண்டு அறைக்குள் சென்றேன்.



மெத்தையில் அமர்ந்து இருப்பார் மாப்பிள்ளை. பெண் உள்ளே நுழைவாள் ஒரு சொம்பு பாலுடன். அவளை பிடித்து உள்ளே தள்ளுவார்கள் அவளின் தோழிகள். மெத்தை முழுவதும் மலர்கள், அது பக்கத்தில் ஊத்துபத்தி, பழங்கள், இனிப்பு வகைகள்- இப்படி தமிழ் சினிமா காட்சிகள் மனதில் ஓட நான் அறைக்குள் நுழைந்தேன். அட பாவிகளா, தமிழ் சினிமா என்னை ஏமாற்றிவிட்டது.



எதுவுமே கிடையாது, ஒரு சின்ன குவளையில் பாலை தவிர. நித்யா ஏற்கனவே அங்கு இருந்தாள், லேப்டாப்பில் இ-மெயில் பார்த்து கொண்டு. கல்யாண புடவையை மாற்றி கொண்டு, சாதாரண நைட் டிரஸில் இருந்தாள். ஆச்சிரியமாக இருந்தது. நான் தான் கோமாளி மாதிரி அதே வேஷ்ட்டி சட்டையுடன் இருந்தேன்.



என்னை பார்த்து ஒரு மாதிரி சிரித்தாள். 'என்னடா இவன், இந்த சட்டைய மாத்தவே இல்லையா' என்பது தான் அவள் சிரிப்புக்கு அர்த்தம். உடனே நானும் போய் பனியன் லுங்கியை எடுத்து போட்டு கொண்டு மெத்தையில் அமர்ந்தேன். நித்யாவும் லேப்டாப்பை மூடிவைத்து விட்டு மெத்தையில் உட்கார்ந்தாள்.



"எனக்கு net pals நிறைய பேர் இருக்காங்க. அவங்க வாழ்த்து இ-மெயில் அனுப்பியிருந்தாங்க... அதான் check பண்ணிகிட்டு இருந்தேன்." மெத்தையில் தன் விரல்களால் கோலம் போட்டு கொண்டே. என் கண்களை பார்க்கவில்லை.



"அப்படியா நித்யா? வெரி நைஸ்... " என்று தொடர்ந்து அவளுக்கு எத்தனை நண்பர்கள், யார் யார் அவர்கள், எவ்வாறு சிநேகம் ஏற்பட்டது என்பதை அறிந்து கொண்டேன். அவளும் ஆர்வத்தோடு பதில் அளித்தாள். இருந்தாலும், அவளது கண்கள் என் கண்களை சந்திக்கவில்லை.



ஒன்னு மட்டும் சொல்லனும்ங்க... நித்யா குரல் இருக்கே... சான்ஸே இல்ல... வெண்ணிலா ஐஸ்கீரிம் மேல தேன்னை ஊற்றி சாப்பிட்டா எப்படி குளிர்ச்சியாக இருக்கும், அப்படி இருந்தது அவளது குரலை கேட்கும்போது.



அவளது கூச்சம், அவளுக்கு இருந்த பயம், ஏதோ சொல்ல வருகிறாள் என்பது மட்டும் புரிந்தது. நான் கேட்ட கேள்விகளுக்கு பதில். அவளாகவே வேறு எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் அறை அமைதியாக இருந்தது. நான் மீண்டும் தொடர்ந்தேன்,



"நித்யா.... நீ ஏதோ ஒன்னு சொல்லனும்னு நினைக்குற... ஆனா உனக்கு பயமா இருக்கு... எம் ஐ கரேக்ட்?"



'டக்'கென்று அவள் கண்கள் என் கண்களை சந்தித்தன. நிலா வெளிச்சம் எல்லாம் சும்மாங்க... நித்யாவின் பார்வை ஒன்று மட்டுமே போதும், நிலாகூட 1000 வாட்ஸ் கடன் கேட்கும் என் நித்யாவிடம். அவள் கண்களில் ஒருவித சந்தோஷம் தெரிந்தது. அவள் சொல்லாமலேயே அவளது மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவனாய் நான் இருந்தேன்.



"நித்யா, இந்த சடங்கு, சாந்திமுகூர்த்தம் எல்லாம்.... பெரியவங்க சொன்னதுனால ஒகேன்னு சொல்லிட்டேன். ஆனா, ஒருவரை ஒருவர் புரிஞ்சுகிட்ட பிறகு தான் இதலாம் சரியா வரும்னு நான் நினைக்குறேன். compel பண்ணி வர commitment வேற, உண்மையான காதலோடு வர commitment வேற... நம்ம இரண்டாவது வகையா இருக்கனும்னு ஆசைப்படுறேன்...6 மாசம் கழிச்சு இதலாம் வச்சிக்கலாம்...." என்று முடித்தேன்.



அவள் கண்கள் இன்னும் பிரகாசமானது, "நானும் அதே தான் சொல்லனும்னு இருந்தேன்... ஆனா கொஞ்ச பயமா இருந்துச்சு."



ஆஹா, அவள் மனதில் பட்டதை நான் சொல்லிவிட்டேன். அடிச்சேன் பாருங்க நித்யா மனசுல ஒரு சிக்சர!!



"ம்ம்ம்...." அவள் மறுபடியும் ஏதோ கேட்க வந்தாள்.

"சொல்லு மா" என் கண்களை அசைத்தேன்.



"உங்கள எப்படி கூப்பிடறது நான்?" அவள் கேட்டாள். சிரித்துகொண்டே நான், "டேய், மச்சான், மாப்பிள்ள, மாப்ஸ்....எப்படி வேணாலும் கூப்பிடலாம்?" என்று ஜோக் அடித்தேன்.



சிரித்தவள், "ப்ளீஸ்... சரியா சொல்லுங்க."



நான், "பெயர சொல்லியே கூப்பிடு. எனக்கும் அதான் விருப்பம். அப்பரம் இந்த வாங்க, போங்க எல்லாம் வேண்டாம்.... அது ஏதோ நம்மகிடையே ஒரு distance வர மாதிரி ஃபீலிங்."



"சரி ராகேஷ்...thanks for everything and for making me feel at home. good nitez." அவள் சொல்லியவாறு போர்வையை போர்த்தி கொண்டாள்.



நான் நிம்மதியாக தூங்கினேன். வயிற்றில், பரிட்சை எழுதிமுடித்து வெளியே பட்டாம்பூச்சிகள் நிம்மதியாய் வீடு திரும்பியது போல் ஒரு அசதி கலந்த நம்மதியான உறக்கம்.

(பகுதி 2)

Mar 18, 2009

ஜாதிகள் இல்லையடி, அத்தையே!

போன வாரம் நடந்த சம்பவம் இது. நானும் என் அத்தையும் வெளியே சென்று கொண்டிருந்தோம். சில பொருட்களை வாங்கி கொண்டு, அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு ஃபோன் வந்தது அவர் வீட்டிலிருந்து. அவரது மகள் தான் ஃபோன் செய்து இருந்தாள். அத்தையும் அவளும் பேசி கொண்டிருந்தனர்.



அன்று வெள்ளிக்கிழமை. கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்தபோது, அத்தை அவளிடம், " இன்னிக்கு பூஜ ரூம்ம துடைக்கனும். அங்க இருக்குற பூஜ சாமான்கள நீயே எடுத்து கொடு. அவள எடுக்கவிடாதே. நீயே எடுத்து கொடு." என்று கண்டிப்பாக கூறினார் அத்தை. பேசிமுடித்துவிட்டு என் பக்கம் திரும்பிய அத்தையிடம் நான் கேட்டேன்,



"யாரு அந்த 'அவ'... ஏன் உங்க பொண்ண குறிப்பா பூஜ சாமான்கள எடுத்து கொடுக்க சொல்றீங்க?" என்றேன் குழப்பத்துடன்.



அதற்கு அத்தை, "என் வீட்டு பணிப்பொண்ண எடுக்க விட வேணாம்னு சொன்னேன்...."



எனக்கு இன்னும் குழப்பமாய் போக, மீண்டும் நான், "ஏன்?"



அத்தை அதற்கு, " அவ வீட்டுக்கு வேலை பாக்க வந்த அப்பவே கேட்டேன் அவ என்ன ஜாதின்னு, அவ ஒரு ஜாதி பெயர சொன்னா...."



எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அத்தை மேல் உள்ள மதிப்பும் மரியாதையும் குறைந்துவிட்டது. எனக்கு கோபம் ஒரு பக்கம், அவரின் செயலின் வெளிப்பாட்டின் மேல் அருவருப்பு ஒரு பக்கம் இருக்க,



"ஏன் அத்தை, யாரா இருந்தா என்ன?" என்று சற்று கோபம் கலந்த குரலில் கேட்க.



"என் மனசுக்கு பிடிக்கல" என்று சொன்னார்.



இந்த காலத்தில், அதுவும் படித்தவர்கள், இப்படி செய்வது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. இவர்களை எப்படி திருத்துவது. அப்படி என்றால், அவர்கள் தானே வீட்டில் எல்லாம் வேலைகளை செய்கிறார்கள், சாப்பிடும் உணவை தயாரிக்கும் முதல் துணிகளை துவைப்பதும் வரை. அப்படி என்றால், சாப்பிடாமல் அல்லவா இருக்கனும் அத்தை?



நியாயமற்ற அவரின் செயலை நினைத்து வேதனைப்படுவதா, அல்லது அவரின் அறியாமையை கண்டு பரிதாபப்படுவதா- ஒன்றும் புரியவில்லை. இனி எப்போது உலகம் திருந்தும்?

Mar 17, 2009

பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா அணியினர் இன்று அடுத்த போட்டியில் நியூசிலாந்தை சந்தித்தது. ஆனால், தோல்வியை தழுவியது. இன்று பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது. இறுதி சுற்றுக்கு செல்ல மிக குறைவான அளவில் தான் வாய்ப்பு உள்ளது. 8 புள்ளிகளுடன் இங்கிலாந்து இறுதி போட்டியில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டது. இந்தியா இன்று சந்தித்த தோல்வியால் 4ஆம் இடத்தில் தான் உள்ளது. இன்னும் ஒரு போட்டி இருக்கிறது. அதில் வென்றால்கூட, வாய்ப்பு குறைவே!

இன்றைய ஆட்டத்தில், நிறையவே தவறுகள் நடந்துவிட்டன. 207 ரன்களுக்கு சுருண்டது இந்தியா! 4 விக்கெட்கள், ரன் அவுட்டில் போய்விட்டது. ரன் அவுட்டில் விக்கெட் இழப்பது விளையாட்டாளர்களின் பலவீனத்தையே சுட்டிகாட்டுகிறது.lack of communication between the runners. இதுவே காரணம். என் கிரிக்கெட் பயிற்சிவிப்பாளர் என்னிடம் கூறியதும் இதே தான், "ஒருத்தர் ரன் அவுட் ஆவதற்கு காரணம் ஒரு ஆள் இல்லை, அது இரண்டு பேரின் தவறு"

இருந்தாலும், நியூசிலாந்து அணியினருக்கு சரியான போட்டியாகவே அமைந்தது. நியூசிலாந்து அணியினர் பெட்டிங் செய்தபோது, சீக்கிரமாகவே விக்கெட் எடுத்திருக்கலாம் இந்தியா. அதிக ரன்களை கொடுத்துவிட்டது இந்தியா. இருப்பினும், கொஞ்ச நேரம் கழித்து, தனது fielding பலத்தை காட்ட தொடங்கியது. 210 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை இழந்த நியூசிலாந்து வெற்றி பெற்றது.

போன தடவை, கஷ்டமான போட்டியில், ஆஸ்திரேலியாவை வென்றது, சுலபமாக இருக்கும் என்று எண்ணிய ஆட்டத்தில் இப்படி போய்விட்டது! இறுதி போட்டிக்கு போக முடியவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவை வென்றதே ஒரு சாதனை. பெண்கள் இவ்வளவு உயரத்துக்கு முன்னேறி வருகிறார்கள் என்று நினைக்கையில் ரொம்ம்ம்ம்ம்ம்ப பெருமையாக உள்ளது!

தொடர்ந்து நாம் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்! ஜெய் ஹோ!

Mar 15, 2009

ஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-4

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கமலத்தை இடித்தது. கையிலும் தலையிலும் காயம்!

மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் கமலம். ராமலிங்கம் உடனே கவிதாவிற்கு தகவல் சொன்னார். ஆனால், கவிதா வேறு ஒரு இடத்தில் foreign clients conferenceலில் இருந்தாள், அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல 1 மணி நேரத்திற்கும் மேலே ஆகும். பதற்றமாக இருந்த கவிதா, நிஷாவிற்கும் விலியமிற்கும் தகவல் சொல்லி மருத்துவமனைக்கு போக சொன்னாள்.

"விலியம், நீயும் நீஷாவும் கொஞ்ச அங்க சீக்கிரம் போங்க.. நான் வந்துடுறேன். நீங்க அங்க இருந்தா...அப்பாவுக்கும் கொஞ்ச ஆறுதலா இருக்கும்." ஃபோனில் விலியமிடம் சொன்னாள் கவிதா.

"கவி, கவலைப்படாத. ஒன்னும் ஆகாது ஆண்ட்டிக்கு. you don't get too tensed. we'll reach there soon." விலியம் கூறினான்.

மருத்துவமனைக்கு போகும் வழியில் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டுவிட்டது. ஒரு மணி நேரத்தில் வந்து சேர்வதற்கு பதிலாக இரண்டு மணி நேரம் ஆனது. அவசரமாக, பதற்றத்துடன் மருத்தவமனையின் 4 ஆம் மாடிக்கு சென்ற கவிதா, கமலம் இருக்கும் அறையை நோக்கி ஓடினாள்.

கதவை திறந்தவுடன், அவள் கண்களில் தென்ப்பட்டனர்- ராமலிங்கம், நிஷா, கமலம் படுக்கையில். படுக்கை பக்கத்தில் நின்று கொண்டிருந்த விலியமின் கையை பிடித்து கொண்டு இருந்தார் கமலம். ! ஆச்சிரியம் கவிதாவிற்கு! அவளுக்கு அங்கு என்ன நடக்குது என்பது புரிந்து கொள்ள கொஞ்சம் நேரமானது.

"ஆண்ட்டி...உங்களுக்கு ஒன்னுமில்ல. லேசான அடி தான். அதான் விலியம் உங்களுக்கு ரத்தம் கொடுத்து காப்பாத்திட்டாரே. அப்பரம் ஏன் கண் கலங்குறீங்க?" நிஷா கூறியதற்கு, கமலம்

"ரொம்ம்ம்ப தேங்கஸ் விலியம்... நீ மட்டும் எனக்கு...." வார்த்தைகள் முட்ட, கண்களில் கண்ணீர்.

"பரவாயில்ல ஆண்ட்டி... இதுக்கு போய் ஏன் இவ்வளவு ஃவீலிங்ஸ்....everything will be alright. என் அம்மாவுக்கு இப்படி ஒன்னு நடந்தா... நான் செஞ்சு இருந்திருக்க மாட்டேனே." என்று விலியம் ஆதரவாய் பேசினான்.

நின்று கொண்டிருந்த ராமலிங்கம் நிஷாவின் காது அருகே முணுமுணுத்தார், "ஏம்மா நிஷா, feelings of india and chinaவ ஒரே நேரத்துல பாத்து இருக்கீயா?"

"அதான் பாத்துகிட்டு இருக்கேனே...." நிஷா சிரித்தார். ராமலிங்கமும் சேர்ந்து சிரித்தார். எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த கவிதா,

"அம்மா...." என்று ஓடிவந்து கமலத்தை கட்டி பிடித்தாள். எப்படி அடிப்பட்டது, எங்கு அடிப்பட்டது, ரத்தம் தேவைப்பட்ட விஷயம், அதை கொடுத்து உதவியது விலியம் போன்ற தகவல்களை ஒன்னுவிடாமல் கூறிமுடித்தார் கமலம். போன உயிர் திருப்பி வந்ததுபோல் உணர்ந்தாள் கவிதா.

கமலம் ராமலிங்கத்தை கூப்பிட்டு, "ஏங்க.... உடனே கல்யாண வேலைகள ஆரம்பிச்சுடுவோம்....அடுத்த மாசத்திலே கல்யாணம் வச்சுடுவோம்." கமலம் கூறியது அனைவருக்கும் சந்தோஷமான அதிர்ச்சியாக இருந்தது.

"அதுக்கு என்ன..... பேஷா பண்ணிடுவோம்....என்ன கவிதா....மாப்பிள்ள சந்தோஷம் தானே?" ராமலிங்கம் கவிதா தலையை தடவி கொடுத்தவாரே கேட்டார். இப்படி ஒரு சோகம் நடந்தபிறகு, வரும் சந்தோஷத்தை முழுவதாய் உணர முடிந்த கவிதாவுக்கு ஆனந்தமாக இருந்தது.

சிரித்து பேசி கொண்டிருந்த போது, ஒரு தாதி உள்ளே வந்து....

உலகத்திலுள்ள தாதியர்களின் ஆஸ்தான வேலை என்ன என்பதும் அவர்கள் சொல்லும் டையலாக் என்ன என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டுமே! அதே தான்....

"ஏன் எல்லாரும் இப்படி கூச்சல் போட்டுகிட்டு இருக்கீங்க. patientக்கு rest தேவை. நீங்க எல்லாரும் கொஞ்ச வெளியே வேட் பண்ணுறீங்களா. டாக்டர் ரவுண்ஸ் வர நேரமாச்சு..." அவர் சொல்லி முடிக்க, அனைவரும் வெளியே வந்தனர். அறைக்கு வெளியே வந்தபோது,

நன்றியுணர்வுடன் கவிதா விலியமிடம், "தேங்கஸ் விலியம். நீங்க இல்லேன்னா...." அவனின் கையை பிடித்து கொண்டாள்.

"அட எனக்கு தேங்கஸ் சொல்லாத, அங்கிளுக்கு தான் தேங்கஸ் சொல்லனும்." என்றான் விலியம். அவன் சொன்னது கவிதாவிற்கு புரியவில்லை.

ராமலிங்கம், "அட மாப்பிள்ள நீங்க வேற.... அது எல்லாம் ஒன்னுமில்ல கவிதா... எனக்கு தேங்கஸ் சொல்றதுவிட நீ நிஷாவுக்கு தான் நன்றி சொல்லனும்."

அனைவரும் கவிதாவிற்கு புதிர் போட்டு கொண்டே பேசினர். கவிதாவின் குழப்பமான முகத்தை கண்ட நிஷா சிரித்துகொண்டே, " ஏய் கவிதா... actually என்ன ஆச்சுன்னா.... "

நடந்தது என்னவென்றால்- டாக்டர் கமலத்திற்கு அவசரமாக இரத்தம் தேவை என்று கூறியிருக்கிறார். நிஷா இரத்தம் கொடுத்திருக்கிறார். இது தான் தக்க சமயம் என்பதால், விலியம் இரத்தம் கொடுத்ததாக பொய் சொல்லியுள்ளனர் கமலத்திடம். விலியம் மீது நல்ல எண்ணம் ஏற்பட செய்த மாபெரும் master plan இது. இந்த திட்டத்தை தீட்டியவர் ராமலிங்கம். செயல்முறைப்படுத்த உதவியவர் விலியமும் நிஷாவும்.

"இது தாண்டி நடந்துச்சு...." என்று சொல்லி முடித்தாள்.

கவிதாவிற்கு ஆச்சிரியமாக இருந்தாலும், சிரிப்பு தாங்க முடியவில்லை. அறையில் நடித்த நடிப்பை நினைத்து கவிதா மீண்டும் சிரித்தாள்.

"விலியம், உனக்கு... இப்படிகூட நடிக்க வருமா?" கவிதாவின் கேள்விக்கு புன்னகை மன்னன் புன்னகையித்தார்.

பலமுறை கவிதா வீட்டில் சாப்பிட்ட நிஷா 'நண்பன் போட்ட சோறு நிதமும் திண்ண பாரு' என்ற பாடலுக்கு வாழும் உதாரணமாக திகழ்ந்தாள்.

கமலம் சில வாரங்கள் கழித்து வீடு திரும்பினாள். கல்யாண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன. கல்யாண பத்திரிக்கைகளை அடித்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்தனர். தனது தோழி வசந்தாவிடம் பத்திரிக்கை கொடுக்க சென்றாள் கமலம்.

"என்ன கமலம்... இப்ப எப்படி இருக்கு உடம்பு.... கால் நடக்க முடியுதா?" வசந்தா நலம் விசாரித்தார். நான் நலமாக இருக்கிறேன் என்பதுபோல் தலை அசைத்தார் கமலம். தன் மகள் கவிதாவின் கல்யாண பத்திரிக்கையை நீட்டி,

"அவசியமா வந்துரு..." கமலம் சொன்னார்.

"கண்டிப்பா வந்துடுறேன்.... காபி சாப்பிட்டு போ கமலம்." வசந்தா உபசரித்தாள். அதற்கு கமலம்,

"இல்ல வசந்தா... நான் இன்னொரு நாளைக்கு சாப்பிட்டுக்குறேன்... நேரமாச்சு... இப்பவே 7 மணியாச்சு... 715க்கு language clubல கிளாஸ் இருக்கு. " என்றார்.

"என்ன கிளாஸ்?" வினாவினார் வசந்தா.

"சீன மொழி கத்துகிறேண்டி... அதுக்கு தான் போறேன்... வரேன் வசந்தா." கமலம் சீன மொழி வகுப்பிற்கு விரைந்தார்.

*முற்றும்*
----------------------------------------------------------------------------------------------

கதை உருவான விதம். ஹாஹா... behind the scenes ரேஞ்சுக்கு ஒன்னும் பெரிய விஷயமில்லை. ஆனா, கொஞ்ச சுவாரஸ்சியமான தகவல் தான் நான் சொல்ல போறது. போன வருஷம் ஒரு முறை என் தோழியிடம் பேசி கொண்டிருந்தேன் online chatல். என் பள்ளி தோழி, பத்தாம் வகுப்பு முடிந்த பிறகு, அவள் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பிவிட்டாள். கிட்டதட்ட 5 ஆண்டு காலமாக அங்க இருக்கிறாள்.

பேசிகொண்டிருந்த போது, கல்யாணம், boyfriends-girlfriends பத்தி பேச்சு வந்தது.

நான்: அப்பரம் எப்படி நீ.... வெள்ளக்காரன தான் கல்யாணம் பண்ணிப்பே... அப்படியே எனக்கும் ஒன்னு பாரேன்...hahaha...

தோழி: அட நீ வேற வெள்ளக்காரனலாம் சரிப்பட்டு வராது...

நான்: ஏண்டி இப்படி சொல்றே... ஒகே atleast some chinese fellow....

தோழி: ஹாஹா.... நம்ம கருவாட்டு குழம்பு வைக்குற அன்னிக்கு தான் அவனுக்கு fishball noodle soup வேணும்னு கேட்பான்.... அதலாம் சரிப்பட்டு வராது.... i think indian guys are the best... no matter south or north. haha.

இப்படி இவள் சொன்னபோது விழுந்து விழுந்து சிரித்தேன். அந்த கழுவாட்டு குழம்பு உதாரணம் என்னை ரொம்ம்ம்பவே கவர்ந்தது. அவள் negative aspectல் சொன்ன விஷயத்தை positive angleலில் கொண்டு வந்தேன் இக்கதையில். அவ்வளவு தான். :)

Mar 14, 2009

chak de india- பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

முதல் கட்ட போட்டிகளில் இந்தியா 3 நாடுகளுடன் மோதியது. இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. ஆனால், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளிடம் விளையாடி, வெற்றி பெற்றது.

சூப்பர் 6 சுற்றுக்கு முன்னோறியது இந்தியா. இந்த சுற்றில் இன்று ஆஸ்திரிலியா அணியிடம் மோதியது. வெற்றியும் கண்டது. எப்படி ஆண்கள் ஆஸ்திரிலியா அணி ஒரு power house குழுவாக இருந்ததோ அதே போல தான் பெண்கள் அணியும். முதல் ஆட்டத்திலியே இந்தியா ஆஸ்திரிலியாவிடம் விளையாட போவது என்று படித்த போது கொஞ்சம் பயமாக இருந்தது.

ஆனால், இந்திய பெண்கள் எதற்கும் தயார் என்பதை காட்டிவிட்டனர். எனக்கு ரொம்ம்ம்ம்ப சந்தோஷமாக இருந்தது. இப்போது ரொம்ம்ம்ப எதிர்பார்க்கிறேன், உலக கோப்பையை வெல்ல அதிக நம்பிக்கை வந்துவிட்டது. ஜெய் ஹோ இந்தியா!

இன்றைய ஆட்டத்தின் சிறப்பான விளையாட்டாளர் இந்தியாவின் anujam chopra. இவர் 76 ரன்ஸ் எடுத்து சிறப்பாக விளையாடியுள்ளார். இந்தியா மொத்தம் 234 ரன்ஸ் எடுத்தது. கடைசி பத்து ஓவர்களில் மட்டும் 87 ரன்கள்!! டாப் மச்சி!:)

பிறகு பெட்டிங் செய்து ஆஸ் அணியினர் 218 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒரு பெரிய அடியை வாங்கிய சோகத்தில் ஆஸ் அணியினர் இனி வரும் 2 ஆட்டங்களிலுமே வெற்றி பெற வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா, அடிச்சு தூள் கிளப்பு மச்சி!:)

நண்பர் நவீனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

சக வலைப்பதிவாளர் நவீனுக்கு இன்று பிறந்த நாள்.
காதல் கவிதைகள் எழுதுவதில் வல்லவர். நல்லவர். நாலும் தெரிஞ்சவர். ஹிஹிஹி...

அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துகள்

Mar 13, 2009

ஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-3

பகுதி 1

பகுதி 2

விலியம் தமிழில் பேசியது ராமலிங்கத்திற்கு ஆச்சிரியத்தை தந்தது. கமலத்திற்கு ஆச்சிரியத்தால் மயக்கமே வந்துவிட்டது. இஞ்சியை அப்படியே காம்பளான் மாதிரி விழுங்கியதுபோல் சிலையாய் நின்றுவிட்டார் கமலம். அவர்களின் ஆச்சிரியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் விலியம்,



"எனக்கு தமிழ் தெரியும்... அண்ணனும் அண்ணியும் சென்னையில் தான் இருக்காங்க.. அங்க ஒரு chinese restuarant வச்சு இருக்காரு. அடிக்கடி அங்க போவேன். இங்க வேலை பாக்குறதுக்கு முன்னாடி சென்னை branchல தான் ரெண்டு வருஷமா இருந்தேன்...அப்படியே தமிழ் கத்துக்கிட்டேன். இங்க வந்து கவிதாகிட்ட இன்னும் கொஞ்ச அதிகமா கத்துகிட்டேன்" என்றான் சரளமான ஆங்கிலம் உச்சரிப்பு கலந்த தமிழில்.



"அப்படியா மாப்பிள்ள...வெரி குட் வெரி குட். ரொம்ம்ம்ப சந்தோஷமா இருக்கு... இப்படி தமிழ் மொழிய எல்லாரும் பேசறத பாக்கும்போது" என்றார் ராமலிங்கம்.



அவர் விலியமை மாப்பிள்ளை என்று அழைத்தது நிஷாவுக்கும் கவிதாவுக்கும் பேரானந்தத்தை கொடுத்தது. நிஷா கவிதாவை பார்த்து ஜெயம் நமக்கே என்பதுபோல் கை காட்டினாள் மற்றவர்களுக்கு தெரியாமல் . ஆனால், ராமலிங்கத்தின் வார்த்தைகள் கமலத்தின் கோபத்தை அதிகப்படுத்தியது. கொதிக்கின்ற எண்ணெயில் பனியாரத்தை போட்டதுபோல் ஆகிவிட்டது.



"உங்க அம்மா, அப்பா எங்க இருக்காங்க?"வினாவினார் ராமலிங்கம் ஆர்வத்தோடு.



"அப்பா... முன்பு tourism boardல வேலை பாத்தாரு... அதிக நாட்கள் இந்தியாவுல தான் அவருக்கும் வேலை.டெல்லி ரொம்ப பிடிச்சு போனதுனால. இப்ப retire பண்ணிட்டு டெல்லியில தான் இருக்காரு...." என்றான் விலியம்.



"அட இங்க பாருடா... அடுத்த ஆச்சிரியத்த.... என்ன விலியம் இது ரொம்ப surprisingஆ இருக்கு...." ராமலிங்கத்திற்கு முகத்தில் ஆனந்தம் தாண்டவம் ஆடியது.



"உங்க அம்மா அவர்கூட இருக்காங்களா?" என்று ராமலிங்கம் கேட்டதற்கு விலியமின் முகம் சற்று வாடி போனது. உடனே கவிதா பதில் அளித்தாள்,



"இல்ல அப்பா... அவங்க அம்மா...இறந்துட்டாங்க... விலியம் பொறந்தப்ப, அவங்களுக்கு கொஞ்ச complications ஆயிட்டு... அதான்..." என்று கவிதாவும் சோகமான குரலில் விடை அளித்தாள்.



"ஓ சாரி விலியம்" என்றபடி ராமலிங்கம் விலியமின் தோள்பட்டையில் தட்டிகொடுத்தார். இவை அனைத்தையும் ஒரு ஓரத்தில் நின்று பார்த்து கொண்டிருந்த கமலத்திற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. தன்னை ஓரம்கட்டிவிட்டு, இவர்கள் என்ன இப்படி கூத்து அடிக்கிறார்கள் என்பதுபோல் முறைத்து பார்த்தார் மூவரையும்!



"உங்க அப்பா, அண்ணே... நம்பர கொடுங்க...சீக்கிரமாவே பேசிடுவோம்." வாய்விட்டு சிரித்துகொண்டே இலையில் உள்ள வடையை வாயில் திணித்தார் ராமலிங்கம்.



சிறிது நேரத்தில் நிஷாவும் விலியமும் கிளம்பினார்கள். "தேங்கஸ் அங்கிள்... எல்லாத்துக்கும்" புன்னகையித்தார் விலியம் தனது ஷூவை மாட்டியவாறு.



"அப்பரம் ஆண்ட்டிய...." என்று இழுத்தான்.



"don't worry...அவள நான் சமாளிச்சுக்குறேன்" ஆறுதல் வார்த்தைகள் கூறியது கவிதாவிற்கும் விலியமிற்கும் ஆதரவாய் இருந்தது.



அவர்களை வழி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவர்களை கமலம்,



"எல்லாம் ஒன்னு சேந்துட்டீங்களா? அப்பரம் நான் எதுக்கு... இந்த வீட்டுல...." என்று ஆரம்பித்தார்.



"ஏன்...? அம்மா வீட்டுக்கு போகபோறியாக்கும்...இந்த வயசுல!" என்று கிண்டல் அடித்தார் ராமலிங்கம்.அவரின் கிண்டல் பேச்சு அவளை கோபத்தின் உச்சியின் மேல் உட்கார வைத்தது.

"அவங்க கலாச்சாரம் என்ன, சாப்பாடு பழக்கம் என்ன.... செத்தா கருமாரியலாம் வைப்பாங்களா?" வெறுப்புடன் சீறியவர் முந்தானையால் மூக்கை தொடைத்தார் கமலம்.

"அம்மா... ஏன் மா இப்படி பேசுறீங்க... நான் வாழ போறது பத்தி பேசுறேன்... நீங்க இப்படியலாம் பேசுறீங்க?" அழ ஆரம்பித்தாள் கவிதா.

"இப்படி ஒரு கல்யாணம் நடக்குறதும் கருமாரி பண்றதும் ஒன்னு தான் டி!" தனது ஆத்திரத்தை பாத்திரம் வழிய கொட்டி தீர்த்தாள் கமலம். அழுகை தாங்க முடியாமல் தன் அறைக்குள் சென்று கதவை 'படார்' என்று சாத்திகொண்டாள் கவிதா.

"ஏண்டி... உனக்கு இப்படி புத்தி போகுது... இப்ப விலியம்கிட்ட என்ன குறைய கண்டுபிடிச்சுட்டே.... நல்ல பையன்... தமிழ்ல பேசுறேன்.... வேற என்ன பிரச்சனை உனக்கு. இப்ப காலம் மாறி போச்சு கமலம்.... நம்ம தான் புள்ளைங்கள புரிஞ்சுக்கனும். அவங்க எவ்வளவு டீசண்ட்டா வந்து கேட்குறாங்க... இப்படிப்பட்ட புள்ளைங்கள பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..." என்று பெருமிதம் கொண்ட ராமலிங்கம்,

"சரி... நம்ம பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறவன் இந்தியா தொடர்பு இருக்கனும்னு தானே உன் ஆசை... அதான் நிறைவேறிடுச்சே.....நீ உசலம்பட்டிய தாண்டி வந்து இருக்கீயா... விலியம பாரு... சென்னை, டெல்லின்னு... இந்தியா பத்தி எவ்வளவு சொல்றாரு.... சொல்ல போனால்... தமிழ் பற்றும் இந்தியா நாட்டின் மீது மரியாதையும் நம்மள விட அவருக்கு அதிகமா இருக்கு... அத நீ புரிஞ்சுக்கோ..." கண்டித்தார்.

ராமலிங்கத்தின் பேச்சு பிடிக்காமல் கமலமும் கோபத்துடன் அறைக்கு சென்றார். கவிதாவின் மனகண்ணாடி உடைந்து சுக்குநூறாகி இருக்கும் என்பதை அறிந்தவர், அதை ஒன்று ஒன்றாக ஒட்ட வைக்க முயன்றார். கவிதா அறைக்குள் சென்றார்.

"இங்க பாரு கவிதா... கவலைப்படாதமா... அம்மா கொஞ்ச நாள்ல சரின்னு சொல்லிடுவா...." ராமலிங்கம் அக்கறையுடன் சொன்னது கவிதாவுக்கு கொஞ்சம் தைரியத்தை தந்தது. கண்களை துடைத்தவள்,

"இது நடக்குமாப்பா?"

"நான் நடத்தி காட்டுறேன். காதல்ல தோற்பது எவ்வளவு வலிய கொடுக்கும் என்பது எனக்கு தெரியும்" என்று ராமலிங்கம் கூறிய குரலில் ஒரு வலி தெரிந்தது. இவர்களின் அப்பா-மகள் உறவு நண்பர்கள் போலவே. எல்லாம் விஷயங்களையும், ரகசியங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அவர் சொன்னதற்கு அர்த்தம் அவர் வாலிப வாழ்க்கையிலும் ஒரு முறை 'ஆட்டோக்கரப்' வந்துபோனது. அதை வேறு யாரிடமும் சொன்னதில்லை கவிதாவிடம் தவிர. கமலத்திற்குகூட தெரியாது!

தனது மகளுக்கு 'கவிதா' என்ற பெயர்கூட......

கரக்கெட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே.....ராமலிங்கத்தின் காதலியின் பெயர் தான்!

"அப்பா.... ஆனா... அம்மாவ நினைச்சா பயம் இருக்கு..." கவிதாவிற்கு மீண்டும் பயம் கவிகொண்டது.

"இங்க பாரு கவிதா... நீ எப்போதும்போல அவகிட்ட பேசு... ஆபிஸ் போயிட்டு வா.... அவள நம்ம வழிக்கு கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு" புன்னகையித்தார் ராமலிங்கம். 'நன்றி' என்ற வார்த்தையைவிட வேறு ஏதேனும் புனிதமான வார்த்தை இருந்தால் கவிதாவிடம் சொல்லுங்கள். அவளுக்கு அது தேவைப்பட்டது தன் அப்பாவின் பாசத்திற்கு மரியாதை கொடுக்க.

2 வாரங்கள் உருண்டோடின. கமலம் கொஞ்ச நாள் பேசாமல் இருந்தார். பிறகு பேச ஆரம்பித்தார். ஆனால், இந்த விஷயத்தை பற்றி ஒன்றும் பேசவில்லை. ஆனால், பலமுறை சிந்தித்து பார்த்தவர், அவருக்குள்ளே ஒரு மாற்றம் வந்தது. ஆனால், ஏனோ தெரியவில்லை அவரின் ஈகோ சம்மதம் சொல்ல மறுத்தது. பூங்காவில் காலை உடற்பயிற்சிக்கு சென்றபோது, வசந்தாவை பார்த்தாள்.

வசந்தா, "என்ன கமலம், ரொம்ம்ப நாளா ஆள காணும்?" கேட்டார் கமலத்திடம். இருவரும் நடந்துகொண்டே பேசி வந்தனர். கமலம் வீட்டில் நடந்ததை மெகா சீரியல் போல் காட்சியமைப்புடன் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தார். எல்லாவற்றையும் கேட்ட வசந்தா வாய்விட்டு சிரித்தார்.

"என்கிட்டயே இத சொல்றீயா... ஹாஹா..." மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தார்.

"இங்க பாரு... என் வீட்டு மருமகள் வெள்ளக்காரி தான்..... நாங்க நல்லா சந்தோஷமா தானே இருக்கோம். எல்லா விஷயங்களயும் கத்துக்குவா என்கிட்ட.... பாத்து பாத்து கவனிச்சுக்குவா எல்லாரையும். பேர புள்ளைங்க நம்ம கலாச்சரத்தையும் அவங்க பண்பாட்டையும் சேர்ந்தே கத்துக்குதுங்க..... போன வருஷம் பாரு.... நாங்க எல்லாரும் அவங்க ஊருக்கு போனோம்.... நம்மள மாதிரியே தான் அவங்களும்...." என்று தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் வசந்தா.

வானவில் மேகங்கள் விலகுவதுபோல், கமலத்தின் மனதில் எழுந்த குழப்பங்கள் சற்று மெதுவாய் ஒவ்வொன்றாய் விலகினாலும் ஈகோ வில்லன் போல் நின்றது.

"அப்படின்னா.... இதுக்கு என்னைய சம்மதிக்க சொல்றீயா...." கமலம் குழப்பத்துடன்.

"அது உன் மனச பொருத்தது..... இங்க பாரு கமலம்... நல்லவங்க யார இருந்தாலும் கட்டிகொடுத்துட வேண்டியது தானே... அப்பரம் என்ன குழப்பம். நான் உன் நிலைமையில இருந்தேனா... சரின்னு தான் சொல்லுவேன். அந்த பையன்கிட்ட திருப்பி பேசி பாருங்க... அவன் அப்பா அண்ணன்கிட்ட பேசுங்க.... எல்லாருக்கும் பிடிச்சுருந்தா... உடனே கல்யாணத்த பண்ணிட வேண்டியது தானே?" என்றார் வசந்தா.

இருவரும் 3 கிலோ மீட்டர் நடந்து முடிந்தபின் வசந்தா, "சரி கமலம்... நான் கிளம்புறேன்... மருமக church போனும்னு சொன்னா... பேர புள்ளைங்கள போய் பாத்துக்கனும்... நான் கிளம்புறேன். சீக்கிரமாவே எனக்கு உன் மக கல்யாண பத்திரிக்கைய கொடு" என்றார்.

யோசித்து கொண்டே வீடு திரும்பிய கமலம் எதிரே வரும் மோட்டார் சைக்கில் வருவதை பார்க்கவில்லை.....
(பகுதி 4)

Mar 11, 2009

ஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-2

பகுதி-1

"ஏய் வெரி குட். நல்ல முடிவு. கவலைப்படாதே. எல்லாம் நல்லபடியா நடக்கும்." நிஷா புன்னகையித்தபடி தொடர்ந்து டைப் செய்ய தொடர்ந்தாள்.


"வர ஞாயிற்றுக்கிழம... விலியம வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன்...சோ....நீயும் வரனும்!" என்று ஆர்டர் செய்தாள் கவிதா.

கணினியின் மேல் உள்ள பார்வை கவிதாவின் முகத்திற்கு திருப்பி, ஆச்சிரியத்துடன் வாயை பிளந்தாள் நிஷா. "என்னது நானா???? எதுக்குடி.... ஆண்ட்டி என்னைய போட்டு சாத்து சாத்துன்னு சாத்தவா...."

கவிதா சோகமாக "என்னடி... நீ தானே எனக்கு தைரியம் சொன்னே...."

"அது உனக்கு தைரியம் சொல்றதுக்காக சொன்னேடி... அதுக்கு போய் என்னையும்... ஐயோ ஆண்ட்டிய நினைச்சாவே... எனக்கு பயமா இருக்குதடி... நான் வரலப்பா... நீயாச்சு அவங்களாச்சு... ஆள விடு ஆத்தா." என்றாள் நிஷா.

"ஏய்... நீ ஒன்னும் செய்ய தேவையில்ல. நீ சும்மா வீட்டுக்கு வா. என் ஆபிஸுல வேலை பாக்குறவங்களுக்கு சின்ன lunch gatheringனு சொல்லி இருக்கேன். நீ வா...வந்து சாப்பிடு.... என் பக்கத்துல இரு. மத்தத நான் பாத்துகிறேன். i just need your presence and support." கெஞ்சினாள் கவிதா.

அவள் கெஞ்சலுக்கு முடியாது என்று சொல்ல மனமில்லை நிஷாவுக்கு. ஒரு வழியாக ஒப்புகொண்டாள்.

"நீ என்னைய close friend close friendனு அடிக்கடி சொல்லுவியே... அதுக்கு இப்ப தாண்டி அர்த்தம் புரியது?" நிஷா புதிர் போட்டாள்.

என்ன என்பதுபோல் தலை அசைத்தாள் கவிதா. "என்னைய close பண்ண போற friend நீ தானு.. இப்ப தான் தெரியுது... என் அம்மாவுக்கு நான் ஒரே இரண்டாவது புள்ள டி..... " கிண்டல் செய்தாள் நிஷா. கவிதா அவள் தோளில் செல்லமாக அடித்து நன்றி கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு 'சனி' கிழமையாக மாற போவது என்று தெரியாமல் ராமலிங்கம் கவிதாவை அன்று காலையில் கேட்டார், "என்ன கவி, திடீரென்னு lunch gathering வச்சு இருக்கே..."

"ஒன்னுமில்லப்பா சும்மா தான்." என்று பதில் அளித்தார் கவிதா, சோபாவை சுத்தம் செய்தபடி. பெண்கள் ஒன்றும் இல்லை என்று சொன்னால், அதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது எழுதப்படாத சட்டம். அந்த சட்டம் தன் கடமையை செய்தது. ஆம், மணி 1 ஆகிவிட்டது. விலியம் மற்றும் நிஷா வீட்டிற்கு வந்தனர்.

நிஷாவால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. முகத்தில் கொஞ்ச பயம், கவலை. விலியமுக்கும் இந்த ப்ளான் தெரியும். அவனுக்கும் கொஞ்ச பயம் இருந்தது. இருந்தாலும், தைரியமாக இருந்தான். நிஷாவை கவிதாவின் பெற்றோர்களுக்கு நன்கு தெரியும் என்பதால், நிஷா சமையலறைக்குள் புகுந்து கமலத்திடம் நலம் விசாரித்தாள் கொஞ்சம் அரை அடி தள்ளி நின்றவாரே.

விலியம் முதன் முதலாக சந்திக்கிறான் அவனது மாமானர் மாமியாரை. கவிதா அவள் பெற்றோரிடம், " அம்மா, அப்பா... இவர் தான் எங்க எம்.டி....மிஸ்டர் விலியம் வாங்." அறிமுகப்படுத்தினாள். கமலத்திற்கு அவ்வளவு ஆங்கிலம் தெரியாது என்பதால் விலியமிடம் அதிகமாக பேசவில்லை. ராமலிங்கமும் விலியமும் சோபாவில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.

நிஷாவும் கவிதாவும் அறைக்குள் சென்று ஒரு முறை ஒத்திகை பார்த்தனர். கவிதா, "ஏய் நிஷா... நான் இப்ப...சமையலறைக்குள்ள போவேன்...ஹாலில் உள்ள அப்பாவ கூப்பிடுவேன்.. அவர் சமையலறைக்குள்ள வருவார்... நீ போய் அந்த நேரத்துல சோபாவுல உட்கார்ந்து விலியமிடம் பேசிகிட்டு இரு. நான் அவங்ககிட்ட விஷயத்த சொல்லிடுறேன்..." என்று கடகடவென்று ஒப்பித்தாள்.

சாமி பாடல்களை பாடியவாறு நிஷா பிராத்தனை செய்து கொண்டிருந்தாள்.

"ஏய்... நான் இங்க சீரியஸா சொல்லிகிட்டு இருக்கேன்.. நீ என்ன பஜனை பாடிகிட்டு இருக்கே.... " நிஷாவின் முதுகில் அடித்தாள் கவிதா.

"எனக்கே நான் தைரியம் சொல்லிக்கிறேண்டி..." தொடர்ந்து பாடிய நிஷா,

"கவி, சாப்பிட்டு முடிச்ச பிறகு, சொல்லேன்... "மன்றாடினாள் நிஷா.

"நோ....இப்ப தான்... நல்ல நேரம்...." என்று கூறிய கவிதா மறுபடியும் ப்ளானை தனக்குள்ளே ஒப்பித்து கொண்டாள்.

"ச்சே.... இதுக்கு போய் நல்ல நேரமா...." வினாவினாள் நிஷா.

"எனக்காக இல்லடி... அம்மா இதலாம் பாப்பாங்க... அதுக்கு தான்.....பல்லு விளக்கவே எங்க அம்மா சகுனம் பாப்பாங்கடி.... அதனால தான்...முன்னெச்சரிக்கையா..." சிரித்துகொண்டே கவிதா கூறினாள்.

"tragedyல கூட உனக்கு காமெடி வருது....நீ நல்லா இரு!" என்று சலித்து கொண்டாள் நிஷா. நேரம் கிட்ட நெருங்க, நிஷாவுக்கு நரக வாசல் திறப்பதுபோல் காட்சி கண்களில் வந்து வந்து போனது. இந்த ப்ளானுக்கு நீயும் உடந்தயா என்று கமலம் நிஷாவின் கால்களை சூப் வைத்துவிடவாங்களோ என்று நிஷாவிற்கு பயம் எவர்ஸ்ட்டையும் தாண்டி சென்றது.

ப்ளான் ஆரம்பமானது.

ராமலிங்கமும் கமலமும் சமையலறையில். விலியமும் நிஷாவும் சோபாவில். இவர்கள் இருவரும் படபடப்புடன்.

"அம்மா, அப்பா... நான் ஒன்னு சொல்லனும்....." தயங்கினாள் கவிதா.

"அம்மா...அப்பா..... விலியம நான் காதலிக்கிறேன். அவர கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்." என்று போட்டு உடைத்தாள் கவிதா.

நிஷா கண்களை இறுக்க மூடிகொண்டாள். வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத உருண்டை உருளுதடி என்று வைரமுத்து சாதாரணமாக எழுதிவிட்டார். ஆனா, நிஷாவுக்கு அச்சமயம் இரண்டாயிரம் உருண்டைகள் உருளும் உணர்வால் சுருங்கி போனாள்.

ஆச்சிரியம், அதிர்ச்சி, கோபம்!- கமலம் ஒரு நிமிடம் ஆடி போனாள். "என்னடி சொன்னே..." என்று கவிதாவை அறைய கை ஓங்கினாள். கமலத்தை தடுத்து நிறுத்தினார் ராமலிங்கம்.

"இப்போ எதுக்கு நீ ஓவர் ரிஆக்ட்டு பண்ணுற... பொண்னு ஆசைப்பட்டு இருக்கா... நம்மகிட்ட டிசெண்ட்டா சொல்லுறா..." என்றார் ராமலிங்கம். தன் அப்பா இவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்வார் என்பதை சற்றும் எதிர்ப்பார்க்காத கவிதாவிற்கு ஆனந்தம் ஒரு பக்கம். ஆனால், கமலத்தை நினைத்து வருத்தம் ஏற்பட்டது.

"என்னங்க...சொல்றீங்க.... இவ காதல் கத்திரிக்கான்னு பேசுறா... அதுவும்.. ஒரு...ச்சீ..." என்று விலியமை அருவருப்பாய் எண்ணினாள் கமலம். அப்போது கவிதா அடைந்த துயரம் அவளைவிட உயரம். இவர்கள் போடும் கூச்சல் ஏதோ ஓர் அளவுக்கு நிஷா மற்றும் விலியம் காதுகளில் கேட்டது.

கமலத்தின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் விழுந்தது.
"சரி சரி... முதல சாப்பாடு.. போடு.. அப்பரம் பேசிக்கலாம்...." என்று கவிதாவையும் கமலத்தையும் சமாதனப்படுத்தினார் ராமலிங்கம்.

கவிதா, " அப்பரம் இன்னொரு முக்கியமான விஷயம்... அவருக்கு...." என்று தொடர்ந்தவளை,

"சும்மா நிறுத்து...நீ ஒன்னும் சொல்லாத" என்று கவிதாவின் வாயை அடைத்தார் கமலம். தான் சொல்ல வந்ததை மறுபடியும் தொடர ஆரம்பித்தார் கவிதா. ஆனால் ராமலிங்கம்,

"பரவாயில்ல கவிதா....எல்லாம் அப்பரம் பேசிப்போம்...." என்றார். கமலம் கவிதாவை பார்க்க விருப்பம் இல்லாமல் அவளிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. சமையலறையிலிருந்து வெளியே வந்தவர்களின் முகத்தில் பலவிதமான உணர்ச்சிகளை பார்த்தனர் நிஷாவும் விலியமும்.

நிஷா கமலத்தை பார்த்து, "ஆண்ட்டி..." என்றாள் மெதுவாக.

"என்ன மா நீயும் என் புள்ளைய இப்படி விட்டுட்டீயே..." என்று வருத்தப்பட்டார் கமலம்.

கமலத்திற்கு உணவு உபசரிக்கவே பிடிக்கவில்லை. விலியம் முகத்தை பார்த்து முறைத்தவாரே சாதத்தை கொட்டினாள் அவனது இலையில். நிஷாவுக்கும் ஒரு மாதிரியாக இருந்தது. கவிதாவிற்கும் சாப்பிட மனமில்லை. ராமலிங்கம் மட்டும் எப்போது போலவும் சாப்பிட்டார். விலியமை நிறைய சாப்பிட சொல்லி உபசரித்தார். விலியமுக்கும் ஒரு மாதிரியாய் இருந்தது.

கோபத்தில் விலியமை திட்டவேண்டும் என்று இருந்தது கமலத்திற்கு. என்ன சொல்வது என்று தெரியாமல், விலியமை பார்த்து, "you... know....we...taj mahal...INDIA." என்று இந்தியர் பெருமையை எடுத்து சொல்வதற்காக திடீரென்று உறக்க சொன்னார் கமலம், குறிப்பாக 'இந்தியா' என்ற சொல்லை மட்டும் சத்தமாக சொன்னார்.

திடுக்கிட்டு போன விலியம், இலையில் இருந்த பார்வையை கமலத்தின் பக்கம் திருப்பினார். விலியம்," yes aunty, we have great wall of china too." என்று நெத்தியடி அடித்தான்.

சரியான போட்டி என்பதுபோல் ராமலிங்கம் வாய்விட்டு சிரித்தார். நிஷாவுக்கும் சிரிப்பு அடக்கமுடியவில்லை. கவிதாவும் சிறியதாய் புன்னகையித்தார்.

நெத்தியடியின் வலி தாங்காமல், " இவங்க fishball noodlesக்கும் நம்ம ஊரு கருவாட்டு குழம்புக்கும் சரிப்பட்டு வராதுங்க! " கமலம் சாத சட்டியை மேசையில் போட்டார்.

"எனக்கு கருவாட்டு குழம்பும் பிடிக்கும் ஆண்ட்டி." என்றார் விலியம் தமிழில்!!!!!!!!

(பகுதி 3)

Mar 9, 2009

ஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-1

கவிதா தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து, புதிதாக 'வெடி'த்திருக்கும் முகப்பருவிற்கு மருந்து போட்டு கொண்டிருந்தாள். "ச்சே.. இந்த பிம்பல்ஸ் எங்கேருந்து வருதோ தெரியல.. ச்சே.. ஏன் தான் வருது" என்று எரிச்சலுடன் தனக்குதானே பேசி கொண்டதை கேட்டுவிட்டார் கவிதாவின் அம்மா கமலம்.

கவிதாவிற்கும் அவள் அம்மாவிற்கும் எதற்கு எடுத்தாலும் ஒரு கருத்து முரண்பாடு இருக்கும். சில சமயம் கமலம் சொல்வது நியாயமாக இருக்கும். சில சமயம் கவிதா சொல்வது அதைவிட நியாயமாக இருக்கும்.

கவிதா கண்ணாடிமுன் நின்று முனுமுனுத்ததை கேட்ட கமலம் "அதலாம்... கல்யாணத்திற்கு அப்பரம் போயிடும்... உங்க அத்தைக்கும் இப்படிதான் இருந்துச்சு..இப்போ எப்படி நல்லா இருக்கா தெரியுமா?" என்றார் கமலம்.

எங்கே சுற்றி எங்கு வருகிறாள் என்பது கவிதாவிற்கு புரிந்துவிட்டது. மறுபடியும் கல்யாண பேச்சை ஆரம்பித்துவிட்டார் என்பதை அறிந்துகொண்டாள் கவிதா. இதை பற்றி பேசாத நாளே இல்லை. கவிதாவிற்கு வயது கூடிகொண்டே போகிறது, அதற்குள் ஒரு கல்யாணத்தை முடித்து வைக்கவேண்டும் என்பது கமலத்தின் ஆசை.

கவிதாவிற்கு ஒரு நல்ல இடமாக பார்த்து கல்யாணம் செய்து வைத்துவிட்டாள் தனது கடமை முடிந்துவிட்டது என்று எண்ணினார் கமலம். ஆனால், கவிதாவிற்கு கல்யாணத்தில் தற்போது நாட்டமில்லை என்பதைதான் அவள் அடிக்கடி கூறி வந்தாள்.

சோபாவில் உட்கார்ந்து செய்திதாள் படித்து கொண்டிருந்தார் கவிதாவின் தந்தை ராமலிங்கம்.

"சரி மா... மறுபடியும் ஆரம்பிக்காதே.. நான் ஆபிஸ்க்கு போறேன். டைம் ஆச்சு" என்று கைபையையும் மடிகணினியையும் எடுத்துகொண்டு அவசரமாக 'போயிட்டு வரேன்ப்பா' என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அவள் சென்ற பிறகு, "ஏன்னுங்க.. இவ இப்படி பேசிகிட்டு இருக்காளே.. நீங்க ஒன்னும் சொல்ல மாட்டீங்களா... " என்று கோபத்துடன் சொன்னார் கமலம்.

"என்னடி பண்ண சொல்லுறே... விட்டு புடிப்போம்.. ஆடுற மாட்ட ஆடி தான் கறக்கணும்.. பாடுற மாட்ட பாடி தான் கறக்கணும்" என்று சொல்லி கொண்டே செய்தித்தாளின் அடுத்த பக்கத்தை திருப்பினார்.

"ஆமா... இவரு பெரிய ராமராஜன்... " என்று முணுமுணுத்து கொண்டே ராமலிங்கம் குடித்து முடித்த காபிகுவளையை எடுத்து கொண்டு சமையலறை சென்றார் கமலம்.

"ஷெண்மகமே, ஷெண்மகமே..." என்று பாட தொடங்கினார் ராமலிங்கம்.

"இப்ப எதுக்கு தேவையில்லாம பாடுறீங்க?" என்றார் கமலம்.

"நீதான் டி சொன்ன நான் ராமராஜன் மாதிரி!" என்றவர் கண்ணாடியை சரி செய்து கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்தார். அவ்வளவு சத்தமாக முணுமுணுத்துள்ளார் கமலம்!

அலுவலகத்தை வந்து அடைந்ததும் அவள் முதலில் பார்ப்பது நிஷாவைதான்! நிஷா அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் கவிதாவின் தோழி. ரொம்ப கலகலப்பாக பேசும் தன்மை கொண்டவள். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் அவளை பார்த்துவிட்டு தான் தனது வேலையை ஆரம்பிப்பாள் கவிதா. வழக்கம்போல நிஷா காலை உணவு அருந்தும் இடத்தில் ஒரு கையில் காபியும் இன்னொரு கையில் ரொட்டியையும் வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள். அங்கு இருந்த தொலைக்காட்சியில் பிபிசி நியூசை பார்த்து கொண்டே சாப்பிட்டாள்.

"ஹாலோ நிஷி, குட் மார்னிங். என்ன காலையிலே டிவியா?" என்று கவிதா coffee dispenser-லிருந்து சூடான காபியை எடுத்தாள்.

"இல்லடி, காலையில ரொட்டியும் காபியும் தான்!" என்றாள் நிஷா.

நிஷா சொன்னதை கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தாள் கவிதா. "சரியான மொக்கை டி நீ..." என்று சொல்லியவாறு நிஷா அருகில் வந்து உட்கார்ந்தாள்.

காலையில் கமலத்தோடு நடந்த சின்ன சண்டையை நிஷாவிடம் கூறினாள். அமைதியாக கேட்ட நிஷா சீரியஸான குரலில், "நீ உன் அம்மாகிட்ட உடனே சொல்லிடனும்.... இல்லேன்னா ரொம்ம்ம்பா கஷ்டமா போயிடும். "

"ஏண்டி நீ வேற வெந்த புண்ணுல ஆசிட் ஊத்துற?" என்றாள் கவிதா சற்று பயம் கலந்த கவலையான குரலில்.

"ஏண்டி, பயப்படுறே...நல்ல பையன், அழகானவன்...நிறைய படித்தவர்...நல்ல வேலை பாக்குறார்... நம்ம எம்.டியை தான் காதலிக்குற...அவரும் நீயும் 3 வருஷமா காதலிக்குறீங்க....நல்ல பாத்துப்பாருன்னு... பட்டுன்னு போட்டு உடைச்சுட்ட வேண்டியது தானே! சோ சிம்பல்..." என்றாள் நிஷா.

"எங்க அம்மா ருத்தர தாண்டவமே ஆடிடுவாங்க..." பயத்துடன் கவிதா.

"ஏன் ஆண்டி, நான் கடவுள் ஆர்யாகிட்ட training போனாங்களா என்ன?" சிரித்துபடி தன் காபியை குடித்தாள்.

"hey be serious nisha. எனக்கு உண்மையாவே பயமா இருக்கு.... என் அப்பாவகூட ஒரு வழிக்கு கொண்டு வந்துடலாம். ஆனா என் அம்மா தான்...ஐயோ நினைச்சாவே உள்ளே இருக்குற கிட்னியலாம் வெளியே வந்துடுற மாதிரி இருக்கு..." சொன்னாள் கவிதா, பக்கத்திலுள்ள டிஷுபேப்பரை எடுத்து விரல்களை துடைத்தார்.

"ஏய் தோடா... என்னைய சீரியஸா இருக்க சொல்லிட்டு, நீ காமெடியா பேசுற" என்ற நிஷா, ஆபிஸுக்குள் நுழைந்த எம்.டியை பார்த்தவுடன்

"ஏய்... உன் ஆளுக்கு ஆயிசு நூறு... சரிடி இனி எனக்கு என்ன இங்க வேலை.. நான் கேபினுக்கு போறேன்" என்று கண் சிமிட்டினாள்.

எம்.டியும் கவிதாவும் ரொம்ப நேரம் இந்த விஷயத்தை பற்றி பேசினர். எம்.டி முகத்தில் கொஞ்சம் சோகம், கல்யாணம் பேச்சு என்பதால் கொஞ்சம் சந்தோஷம், கவிதா மனதில் உள்ளது போலவே கொஞ்சம் பயம், அவன் முகத்தில் மாறி மாறி சென்றன.


இருவரும் பேசி கொண்டிருந்தபோது நிஷா வந்து, "sorry guys..... the clients are waiting at the conference room." என்றாள்.

நான் உடனே வருகிறேன் என்பதுபோல் கையசைத்தான் எம்.டி.

conference roomக்குள் நுழைந்தவன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்,

"hi, I am Mr William Wong."

என்னது wongஆ??

ஆமாங்க, கவிதா காதலிப்பது ஒரு சீனரை!



மதிய உணவு உண்ணும் நேரம் வந்தது. தனது வேலையை மும்முரமாக பார்த்து கொண்டிருந்தாள் நிஷா. அவள் கேபினுக்கு வந்தாள் கவிதா.

"ஏய் நிஷி...என்னய்யா...சாப்பிட போகாமா..இப்படி வேலையே செஞ்சுகிட்டு இருக்கே?" அக்கறையுடன் வந்து நிஷா அருகே காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.


ஏதோ ஒன்றை அவசரமாக டைப் செய்து கொண்டிருந்தவள் கவிதாவைப் பார்த்து, "என்ன கவி, ஒன்னுமில்லாம நீ ஊத்துவத்தி ஏத்த மாட்டீயே? சொல்லு... நான் என்ன செய்யனும்?"

கவிதா சிரித்த முகத்துடன் "சோ...ஸ்மார்ட். நீ ஒரு உதவி பண்ணனும்..." என்று இழுத்தாள். தொடர்ந்து சொல்லுமாறு நிஷா கவிதாவின் கை மேல் கை வைத்தாள்.

"நான் அம்மா அப்பாகிட்ட சொல்லிடலாம்னு இருக்கேன்."

(பகுதி 2)

பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி 2009

பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. தற்போது ஆஸ்தரேலியாவில் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்று நடந்த போட்டியில், இந்தியா பாகிஸ்தானை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. குரூப் 'பி' யில் இருக்கும் இந்தியா இரண்டு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் நியூசிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன. இந்த ஆண்டு, மொத்தம் 8 நாடுகள் விளையாடுகின்றன.

நம் இந்தியா அணியை பற்றி தெரிந்து கொள்ளவும் மற்ற விவரங்களுக்கும் இங்கே செல்லவும் http://iccwomensworldcup.yahoo.net/teams-and-players/india-profile.html

என்னை கவர்ந்த விளையாட்டாளர், இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவிலும் கென்யாவிலும் படித்து முடித்த லீசா தான். முப்பது வயதாகும் லீசா உலகின் டாப் ஆல்ரவுண்டர்!


சி.ம.ச VS வெ.க.கு

சிவா மனசுல சக்தி மற்றும் வெண்ணிலா கபடி குழு ஆகிய இரண்டு படங்களை பார்த்தேன் நேற்று.

சிவா மனசுல சக்தி- என் மனசுல கொலைவெறி.
ஒரே வாக்கியத்தில் இந்த படத்தை பற்றி சொல்லிட்டேன். எனக்கு செலவு அதிகமாய்கிட்டே போகுது. அதுக்கு காரணம், இந்த மாதிரி சொந்த செலவுல சூன்யம் வச்சுகிறதால.... ஐயோ என்ன பண்ண.... சரி விடுங்க.. என் சோக கதை என்கூடவே போகட்டும்.

என்னடா இது இப்படி பண்ணிட்டோமேன்னு நினைக்குற நேரத்துல வெண்ணிலா கபடி குழு படத்தை பார்த்து...மெய்சிலர்த்துவிட்டேன்.

வெண்ணிலா கபடி குழு- வெற்றி குழு

சுப்பரமணியபுரம், சென்னை 28 ஆகிய படங்களின் சாயல் மாதிரி படம் இருந்தாலும், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பார்த்தேன். உலக புகழ் பெற்ற சச்சினாக இருக்கட்டும் இல்ல தெருமுனையில் கில்லி விளையாடும் சின்ன பசங்களாக இருக்கட்டும்....எல்லாரும் விளையாட்டளர்கள் தான்! அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு வலியும்,வேதனையையும் இயல்பாய் காட்டிய இயக்குனருக்கு சபாஷ்!!

ஹீரோ உண்மையிலேயே ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை அறிந்தேன். நல்லாவே நடித்து இருக்கிறார். தமிழில் இனி வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை... ஆனா அவரை பார்க்க தெலுங்கு ஹீரோ போல் இருப்பதால்... தம்பி, நீங்க அந்தரா பக்கம் போங்க! அப்பரம் ஹீரோயின்... சொல்லவே வேண்டாம்....டாப்! (சுப்பரமணியபுரம் சுவாதியைவிட பல மடங்கு பெட்டர்)

நகைச்சுவை, சோகம், விறுவிறுப்பு- இப்படி பலவற்றின் கலவையாய் நம் டைரியின் இன்னொரு பக்கமாய் உருவம் பெற்றுவிட்டது இப்படம்.

*ஒரு பேருந்தை முந்த(அதில் ஹீரோயின் இருப்பார்) ஹீரோ வேகமாக சைக்கிளை ஓட்டுவார். அவனுக்காக விட்டுகொடுத்த பேருந்து ஓட்டுனர் சொல்வார் "நம்ம சின்ன வயசுல எத்தன வண்டிய முந்தி இருப்போம்...அவன் முகத்துல சந்தோஷத்த பாருய்யா" என்பார் பக்கத்தில் உள்ளவரிடம்.

*ஹீரோ கண்களை கட்டி கொண்டு உரி அடிக்க முயற்சிப்பார். அவருக்கு உதவியாய் ஹீரோயின் தன் கால்கொலுசு சத்தத்தை வைத்து கொண்டு, சிங்கனல் காட்டுவார், சரியான இடத்தில் நிற்க.

*"நான் நல்லா இருக்குன்னு சொன்னா... எல்லாம் கறியையும் எனக்கு கொடுத்துடுனும் ஆத்தா...அதான் நல்லா இல்லேன்னு சொன்னேன்." என்று ஹீரோ அம்மா மீது வைத்திருக்கும் பாசம்..

இப்படி ஏகப்பட்ட காட்சிகளை ரசித்தேன். கிளைக்மெக்ஸ், அழகிய காதல் காவியம்...

இதுக்கு மேல என்ன.... போய் படத்த பாருங்கல!:)

Mar 7, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்- 4

அவர் இயக்கிய முதல் படத்திலிருந்தே ரொம்ம்ப பிடிக்கும். ஆனா, இப்போ சமீபத்தில் தான் தோஸ்தானா படத்தை டிவிடியில் பார்த்தேன். அவரின் தயாரிப்பில் உருவான படம்! அவரை ரொம்ம்ம்ம்ம்ப ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். அவர் தான்ங்க... நம்ம கரண் ஜோகார்.

தனது இரண்டாவது படமான கபி குஷி கபி காம் படத்தில் என்னமா கலக்கி இருப்பாரு! எவ்வளவு பெரிய நடிகர் பட்டாளம்! இத்தனை பேரை வைத்து கொண்டு.... ரொம்ப பெரிய ஆளுங்க கரண்.
Writer

* Kuch Kuch Hota Hai (1998)
* Kabhi Khushi Kabhie Gham (2001)
* Kal Ho Naa Ho (2003)
* Kabhi Alvida Naa Kehna (2006)

Director

* Kuch Kuch Hota Hai (1998)
* Kabhi Khushi Kabhie Gham (2001)
* Kabhi Alvida Naa Kehna (2006)
* My Name is Khan (2009)

Producer

* Duplicate (1998)
* Kuch Kuch Hota Hai (1998)
* Kabhi Khushi Kabhie Gham (2001)
* Kal Ho Naa Ho (2003)
* Kaal (2005) (co-producer)
* Kabhi Alvida Naa Kehna (2006)
* Dostana (2008)
* My Name is Khan (2009)

Actor

* Dilwale Dulhania Le Jayenge (1995)
* Main Hoon Na (2004)
* Aapko... Ghar Tak (2005)
* Om Shanti Om (2007)

அப்பரம், காபி வித் கரண்....oh my god, he is simply the great!! அவர் பேசும் விதம். அவரிடம் உள்ள தன்னம்பிக்கை, நக்கல் செய்யும் விதம், ரொம்ம்ம்ப சூப்பரா இருக்கும்.

ம்ம்ம்...கரண்...கரண்......:)

தற்போது சைட்....series

Mar 5, 2009

பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-4




மறுபடியும் கிரீஷுக்கு ஃபோன் செய்து பார்த்தாள் கவிநா. ரீங் போனாலும் யாரும் எடுக்கவில்லை. பயம் அவளை கவிக்கொண்டது. உடல் முழுக்க வேர்வை துளிகள். உடனே எல்லாம் வேலையை போட்டுவிட்டு, காரில் ஏறி வீட்டிற்கு சென்றாள்.
செல்லும் வழியில், டாக்டருக்கு ஃபோன் செய்ய முயற்சி செய்தபோது அவள் கைபேசியில் பெட்ரி இல்லாமல் போனது.

மனம் படபடக்க என்ன செய்வது என்று தெரியாமல் காரை வேகமாக ஓட்டினாள். அவள் எண்ணம் கிரீஷை பற்றியே இருந்ததால் சாலையை சரியாக கவனித்து ஓட்டமுடியவில்லை. சாலையில் கிடந்த ஒரு பெரிய பலகையை கவனிக்காமல் அதன் மேல் ஏறி சென்றது கார்.

அடுத்த நொடி, காரின் முன் டயர் கிழிந்துவிட்டது. அவளின் பயம் அதிகரித்து அவளை பிடிங்கி திண்ண ஆரம்பித்தது. அழுகை ஒரு புரம், காரின் மேல் கோபம் ஒரு புரம்- இப்படி அவள் பல உணர்ச்சிகளின் நடுவே பந்தாடப்பட்டாள். 'கால் டெக்சிக்கு' அழைத்தாள். அரை மணி நேரம் கழித்து தான் வந்தது டெக்சி.

வீட்டை அடைந்தாள்.பணத்தை எண்ணகூட நேரத்தை வீணாக்காமல், பணநோட்டுகளை ஓட்டுனர் கையில் திணித்துவிட்டு வீட்டை நோக்கி ஓடினாள். அவள் கண்களில் கண்ணீர் வழியும் வேகத்தைவிட அவளின் கால் ஓடிய வேகம் அதிகம். மின்தூக்கி இடத்திற்கு சென்றால் 'out of order' என்று எழுதப்பட்டிருந்தது. அவளின் இதயதுடிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஏழு மாடி ஏறினாள். வீட்டு கதவு அருகே வந்தபோது, ஆச்சிரியம்!

கதவு திறந்து இருந்தது.உயிர் போவதுபோல் இருந்தது கவிநாவுக்கு. கதவை திறந்துகொண்டே கிரீஷை சத்தம் போட்டு கூப்பிட்டாள். பதில் எதுவும் வரவில்லை. ஒரே இருளாக இருந்ததால் அவள் ஹாலிலுள்ள விளக்கை போட switchயை தேடினாள்.

ஏதோ ஒரு switchயை அழுத்த,வெளிச்சம் வந்தது. அதே நேரம் அவள் மேல் வண்ணபூக்கள் கொட்ட ஆரம்பித்தன. அதே சமயம் ஒரு உருவம் அவள் பின்னாடியிலிருந்து கட்டிபிடித்தது.

"surprise!!!" என்றான் கிரீஷ். அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே ஒரு நிமிடம் ஆனது.

"என்ன இது கிரீஷ்?" அழுகையின் நடுவே கவிநா.

"ஏன்? சாரி கவி... உனக்கு surprise பண்ணதான்...சாரி."

"இது என்ன விளையாட்டு... i was so shocked to hear your trembling voice over the phone. நான் எவ்வளவு பயந்துட்டேன்...தெரியுமா? you stupid fellow....." அவன் நெஞ்சில் முகம் புதைத்து கதறி அழுதாள்.

"ஏய்...என்ன கவி இது... இதுக்கு போய்.. சாரி... சாரி....நீ இவ்வளவு பயப்படுவேன்னு தெரிஞ்சு இருந்தா...நான் செஞ்சு இருக்க மாட்டேன்..." என்று கவிநாவின் கூந்தலை வருடிகொண்டே மன்னிப்பு கேட்டான்.

"இனிமேலு இப்படி செய்ய மாட்டேன்." அவன் குரல் சோர்வானது. கிரிஷுக்கு ஒன்றுமில்லை என்ற நிம்மதி அவளை சாந்தப்படுத்தியது. கண்களை துடைத்து கொண்ட கவிநா அவன் முகத்தை பார்த்து கேட்டாள்,

"இனிமேல்... ப்ளீஸ் இப்படி செய்யாதே.... ஆமா, எதுக்கு கிரீஷ் இந்த surprise?"
கவிநா தனனை மன்னித்துவிட்டாள் என்ற உற்சாகத்தோடு கிரீஷின் முகம் பொலிவானது.

அப்போது மணி 12 ஆனாது. சுவரில் இருந்த கடிகாரம் ஒலி எழுப்பியது. இருவரும் அதை பார்த்தனர். அச்சமயம் கிரீஷ் கவிநா காது அருகே

"happy birthday dear!" என்று சொல்லியவாறு, தன் பாக்கெட்டில் இருந்த ஒரு சின்ன பரிசு பொருளை கொடுத்தான் கிரீஷ்.

ஆச்சிரியத்துடன் அதை வாங்கி கொண்ட கவிநா அதை திறந்து பார்த்தாள். platinum necklace with a heart-shaped dollar.

"ஏற்கனவே ஒரு முறை என் இதயத்தையே கொடுத்துவிட்டேன். இது இரண்டாவது முறை." என்று சிரித்த படியே கிரீஷ் கவிநாவை டைனிங் அறைக்கு அழைத்து சென்றான்.


மெழுகுவர்த்திகள், பூக்கள், பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது மேசை. அதன் மேல் ஒரு கேக். கேக்கில் ரோஸ் வண்ண கீரிமால் எழுதியிருந்தது
'happy birthday to my darling." ஆனந்தத்தால் அவளுக்கு வார்த்தையே வரவில்லை. கேக் வெட்டிமுடித்தபின் கவிநா,

"எதுக்குடா இதலாம்.... "

பதில்- கண்களாலே ஐ லவ் யூ சொன்னான்.

"இன்னும் இருக்கு நிறைய... வா..." என்றவன் கவிநாவை படுக்கை அறைக்கு அழைத்து சென்றான். படுக்கையில் அழகிய ரோஜாக்கள் கிடந்தன. அதை கண்டு பூரிப்பு அடைந்தவள் படுக்கையில் உட்கார்ந்து ஆனந்த கண்ணீரில் மூழ்கினாள். தன் மூகத்தை கைகளால் மூடி கொண்டு அழுத கவிநாவின் கைகளை விலக்கினான் கிரீஷ். இன்னொரு பரிசு ஒன்றை தந்தான். அவளையே ஓவியமாய் வரைந்த ஒரு படம்- அதன் கீழே ஒரு கவிதை.

ஒரு கவிதையே

என் கவிதையை
படிக்க நான் தவம்
செய்திருக்கவேண்டும்.
ஒரு ஓவியத்தையே
நான் ஓவியமாய்
வரைய வரம்
பெற்றிருக்கவேண்டும்!

அவள் படித்து முடிக்கும் வேளையில் படுக்கையில் இருந்த ஒரு ரோஜாவை எடுத்து அவளிடம் நீட்டி,
"you are always my angel" என்றான் மன்றாடும் தோரணையில். கிரீஷை மார்போடு அணைத்தபடி அவன் கழுத்தில் இதழ் பதித்தாள் கவிநா.

எல்லாவற்றையும் ரசித்தாள் அவனுக்காக,

அன்று உண்மையாகவே அவள் பிறந்தநாள் இல்லை என்றபோதிலும்!

**முற்றும்**

Mar 4, 2009

பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-3

பகுதி 1

பகுதி 2

"வாங்க அங்கிள், வாங்க...." வரவேற்றாள் கவிநா. பின்னாடியே ரிப்போட்டர் ரதி வந்தார். முதன் முறையாக சந்திப்பதால், ரதியும் கவிநாவும் கை குலுக்கி கொண்டனர்.
ஹாலில் கிரீஷ் இருக்கிறானா என்று சுற்றுபுரத்தை ஒரு முறை நன்கு பார்த்தபடி டாக்டர், "என்ன கவிநா...எங்க கிரீஷ்?"

வெளியே சென்றுவந்ததால் களைப்பாக உள்ளதாக சொல்லிவிட்டு உறங்கி கொண்டிருக்கிறான் கிரீஷ் என்ற விஷயத்தை கூறினாள் கவிநா. மூவரும் சோபாவில் உட்கார்ந்தனர்.

"எங்க பத்திரிக்கையில இந்த மாதத்தில ஒரு சிறப்பு கட்டுரை ஒன்னு போடுறோம். வித்தியாசமான தம்பதிகளை பத்தி.... அதான் உங்கள பத்தி எழுதலாமேன்னு வந்தேன்... don't worry kavina, we will keep your real names confidentially."

"உங்கள பத்தி... கிரீஷ பத்தி....?" நேரடியாக கேள்வியை கேட்க ஆரம்பித்தார் ரதி.

"yes... he is suffering from acute schizophrenia disorder." தழுதழுத்த குரலில் கவிநா.

"இது எப்படி.... கேள்விப்படாத ஒரு டிஸார்டர் மாதிரி இருக்கு... ஏன்? என்ன ஆச்சு அவருக்கு?" ரதி தனது பேனாவிற்கும் தாட்களுக்கும் வேலை வைத்தார்.

"இந்த டிஸார்டர் உலக ஜன தொகையில 1% மேல் இருக்கு. அமெரிக்காவுல மட்டும் 2.7 மில்லியன் மக்களுக்கு இந்த டிஸார்டர் இருக்கு. ஏன்... எப்படின்னு சரியான...ஒரு குறிப்பிட்ட காரணம் சொல்ல முடியாது.... மூளையின் பாதிப்பு, சின்ன வயசுல சரியான ஊட்டசத்து இல்லாதது, மனம் உளைச்சல்...இப்படி பல காரணங்கள் இருக்கலாம்..." என்று விளக்கினார் டாக்டர்.

அவர் தொடர்ந்து, " இப்படி உள்ளவங்க....பேசும் முறை, பாணி, சிந்தனை, அதை வெளிபடுத்தும் விதம்...இப்படி நிறைய வகையில பாதிப்பு இருக்கும்.... சில சமயங்களில் ஞாபக மறதி கூட வரும். ரொம்ப நேரத்துக்கு அவங்க அவங்களாவே இருக்க மாட்டாங்க. ஆனா... கொஞ்ச நேரம் கழிச்சு சரியா போயிடும்..."

"ஒரு விஷயம் நடந்த மாதிரி பேசுவாங்க... இன்னிக்கு பாருங்க சண்டே....போஸ்ட்மேன் வந்துட்டு போனான்னு சொன்னார் கிரீஷ்.... திடீரென்னு யாரோ மூளைக்குள்ள வந்த மாதிரி அவங்களிடம் பேசிகிட்டு இருப்பாரு... இன்னிக்குகூட கார்ல போகும்போது அப்படி இருந்தாரு.... கொஞ்சம் பயமாகவும் இருக்கும்...ஆனா பாவமாகவும் இருக்கும்." என்று கவிநா சொல்ல சொல்ல, அவள் கண்கள் சற்றே குளமாகின.

ரதி கேட்டார் இருவரையும் பார்த்து, "அப்போ, இது split personalityன்னு சொல்ல முடியுமா?"

டாக்டர் உடனே பதில் அளித்தார், "இல்ல ரதி, அப்படி சொல்ல முடியாது. split personalityக்கும் schizophrenia disorderக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. schizophrenia disorder patients face a psychotic state. இந்த நிலை மூளையை பெரிதம் பாதிக்கும்.A split personality has nothing to do with schizophrenia, but more with Multiple Personality Syndrome. split personality ஒருத்தரை பல அவதாரங்கள எடுக்க வைக்கும். ஒவ்வொரு அவதாரத்திற்கும் வெவ்வேறு செயல்பாடுகள் இருக்கும்."

"மருந்தால இத குணப்படுத்த முடியுமா டாக்டர்?" ரதி அடுத்த கேள்வியை வீசினார்.

"இதற்கு முழுமையான தீர்வு கிடையாது. ஆனா, பாதிப்பு அளவை குறைக்க முடியும். கிரீஷ்கூட முன்பு ரொம்ப முரட்டுத்தனமா நடந்துப்பான்.... ரொம்ப நேரம் கத்துவேன்....கோபம்கூட ரொம்ப நேரத்துக்கு நீடிக்கும்...now he is under medication. அதனால...இப்ப ரொம்ப மாறிகிட்டு வறான்....am i right, kavina?" கவிநாவை பார்த்தார் டாக்டர்.

"ஆமா அங்கிள், இப்போ கொஞ்ச பெட்டர்..... நீங்க
கொடுத்த மருந்துகளை, சாதாரண vitamin supplement tabletsன்னு சொல்லி கிரீஷ்கிட்ட கொடுத்துட்டு வறேன்...மாற்றம் இருக்கு..." நன்றியுணர்வுடன் கவிநா.

"இப்படி ஒருவரை கல்யாண பண்ணிக்க...." கேள்வியை கேட்கலாமா இல்லை வேண்டாமா என்ற ஒரு தோரணையில் இழுத்தார் ரதி. புரிந்து கொண்ட கவிநா,

"மூனு வருஷ லவ்...எப்படிங்க அப்படியே விட்டுட முடியும்... இந்த ஒரு காரணத்துனால...அவர வேண்டாம்னு சொல்ல எனக்கு மனசு வரல....காலேஜ் முதல் ரெண்டு வருஷம்...he was normal...அதுக்கு அப்பரம் தான் மூணாவது வருஷம் தான் எனக்கு தெரிய வந்துச்சு..."

"தனக்கு இப்படி ஒரு டிஸார்டர் இருக்குன்னு கிரீஷுக்கு...." கேள்வியை ரதி முடிப்பதற்குள்,

கவிநா முடித்தாள்- "கிரீஷுக்கு தெரியாது!"

டாக்டர், "பொதுவா இந்த டிஸார்டர் உள்ளவங்களுக்கு, தான் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறோம்ன்னு தெரியாது...."

அவர் சொல்வதை வேகமாய் தாளில் கிறுக்கினாள் ரதி. "முழு நேரமும் அவர்கூடவே இருக்கனுமே....கஷ்டமா இல்லையா? நீங்க வேலைக்கு போகும்போது எல்லாம்.....எப்படி?"

சிரித்துகொண்டே கவிநா, "that's what makes me love him more and more. அவர்கூட இருக்கறது தான் எனக்கு சந்தோஷம். அவரை முழு நேரம் கவனிக்க வேணும் என்பதால், நான் நைட் ஷிப்ட் வேலை பாக்குறேன். ராத்திரி 9 மணிக்கு எல்லாம் தூங்க வச்சுடுவேன் கிரீஷை...அதுக்கு அப்பரம் தான் வேலைக்கு கிளம்புவேன்."

ரதி, டாக்டர் சொன்னவற்றையும் கவிநா சொன்னவற்றையும் குறிப்பு எடுத்து கொண்டார்.

கவிநா, "கிரீஷுக்கும் வேலைக்கு போகனும்னு ஆசை தான். ஆனா...அவரால மத்தவங்ககிட்ட வேலை பாக்க முடியல. அதான்...freelance photographer இருக்காரு...படம்கூட அழகா வரைவார் கிரீஷ்..." என்றவள் ஹாலின் சுவரில் இருந்த ஒரு அழகான படத்தை காட்டி,

"இது அவர் பண்ணுன work தான்." பெருமிதத்தோடு.

சிறு புன்னகையுடன் ரதி, கவிநாவை பார்த்து, "you are unique indeed."

ரதியின் புன்னகைக்கு பதில் புன்னகை அளித்து சொன்னாள் கவிநா, "that's because, i am not surviving but rather living every moment of life with krrish."

கவிநா சொன்ன வார்த்தைகள் பிடித்துபோய் அதை உன்னிப்பாய் கவனித்து எழுதி கொண்டாள் ரதி.

"ரொம்ப நன்றி டாக்டர்....ரொம்ப நன்றி கவிநா. ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள பாத்ததில்... " கவிநாவும் ரதியும் கைகுலுக்கி கொண்டனர். ரதி விடைபெற்று கொண்டாள். டாக்டர் கிளம்பும் முன்,

"கிரீஷ பாத்துக்கோ.... மாற்றம் தெரிஞ்சாலும்...ஜாக்கிரதையா இரு கவிநா..எந்த ஒரு major relapse வராம பாத்துக்கோ...ஏதாவுதுன்னா...எனக்கு உடனே call பண்ணு." அக்கறையுடன் சொன்னார்.

இரவு வேலைக்கு கிளம்பும் நேரம் வந்தது. கவிநா ஆபிஸுக்கு கிளம்பும்முன், கிரீஷ் உறங்கி கொண்டு தான் இருக்கிறானா என்பதை ஒரு முறை அறை கதவை திறந்து பார்த்து உறுதி செய்து கொண்டாள்.

ஆபிஸை வந்து அடைந்த நேரம் 945 pm. அன்று வேலை அதிகம் இல்லை. தினம் பார்க்க வேண்டிய ரிப்போர்ட்டுகளை பார்த்து கொண்டிருந்தாள், கைபேசி மணி ஒலித்தது.

மறுமுனையில் கிரீஷ்,

"கவிநாஆஆஆஆஆஆ!!!" அலறினான்.

(பகுதி 4)

Mar 2, 2009

பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-2

பகுதி 1



அவள் வேறு எதுவும் சொல்லவில்லை. அவன் பின்னாடியே சென்றாள். காரில் ஏறியவன் இரண்டு நிமிடம் கழித்து,

"படம் முடிஞ்சுட்டா அதுக்குள்ள?". அவனின் தேவையில்லாத கோபம் நீடித்தது 5 நிமிடங்களுக்கு மட்டுமே. கோபம் குறைந்த சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், ஏதோ ஒரு வருத்தம், கவலை, பயம் அவள் மனதில் ஒட்டி கொண்டது.

"ஆமா...படம் முடிஞ்சுட்டு" என்றாள் கவிநா.

"ஓ அப்படியா...ம்ம்ம்...கடைசில என்ன ஆச்சு. சாரி கவிநா...மறந்துட்டேன்"

"they live happily ever after." என்றாள் கவிநா காரை ஓட்டியபடி.

"ஓ...நம்ம காதல் மாதிரி." கிரீஷ் அவளைப் பார்த்து சொன்னான்.

வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த வழியில், அவர்கள் ஒரு பூங்காவை கடந்து சென்றனர். உடனே கிரீஷ்,

"கவி, கொஞ்ச நேரம் பார்க்ல உட்காந்து இருந்துட்டு போலாமா?" கெஞ்சினான்.

அவன் கெஞ்சலுக்கு முடியாது என்று சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. இருவரும் பூங்காவிற்கு சென்றனர். மெல்லிய குளிர் காற்று. வெயில் இல்லை. இயற்கையை ரசிக்க அருமையான தருணம். மேகங்களை உடைத்து கொண்டு மழைத்துளிகள் எந்நேரமும் கீழே விழ தயாராக இருந்தன. ஆனால், இந்த காதல் ஜோடியை பார்த்த பிறகு அவை சற்று நேரம் காத்திருந்தன.

ஒரு மரத்தடிக்கு பக்கத்தில் சிறு பெஞ்ச்.அங்கே அமர்ந்தனர் கவிநாவும் கிரீஷும். அவ்வளவாக கூட்டமில்லை. பூங்காவில் சில குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. அவர்களை பார்த்து கிரீஷ், "எனக்கும் இந்த மாதிரி இரண்டு குட்டி ஏஞ்சல் வேணும்."

குழந்தைகள் வேண்டும் என்று குழந்தைபோல் அவன் கேட்பதை ரசித்தாள். அவனை பார்த்து கேட்டாள்," என்னைய மாதிரி அழகா வேணுமா? இல்ல கொஞ்ச அழகு கம்மியா வேணுமா?"

"உன்னைய மாதிரியே வேணும்."என்றவன் கவிநாவின் உள்ளங்கையை பிடித்து,

"இங்க பாத்தியா... இந்த சின்ன ரேகையும்....இங்க இருக்குற பெரிய ரேகையும் மீட் பண்ணிக்குது. அப்ப கண்டிப்பா நமக்கு இரண்டு பொண்ணுங்க தான் பொறக்கும்.. நான் நினைச்ச மாதிரியே."

அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு ஏதோ ஒரு ஆனந்தத்தை கொடுத்தது. அவள் தொடர்ந்தாள், "ஏன், இரண்டு பொண்ணுங்க மட்டும்? பசங்க வேண்டாமா...."

"இல்ல பொண்ணுங்க...தான், அவங்க அப்பாவ நல்லா பாத்துப்பாங்க.... girls are really very precious."

கவிநா அவன் முகத்தை பார்த்து சிரித்தபடி, "அப்ப என்னைய பாத்துக்க....?"

"நான் இருக்கேன்..." என்று கிரீஷ் சொன்னபோது அவன் தோள் மீது சாய்ந்துகொண்டாள்.

"நான் உன் மேல வச்சுருக்க காதல் அதிகம்னா நமக்கு பெண் குழந்தை பொறக்கும். நீ என் மேல வச்சுருக்கு காதல் அதிகம்னா பசங்க பொறக்கும்....you wanna bet?" என்றான் உற்சாகத்தோடு.

கவிநா, "இரண்டு காதலும் சமமா இருந்தா..?" புருவங்களை சுருக்கி.

ஒரு வினாடி யோசித்தவன், "இரட்டை குழந்தைங்க தான். ஒன்னு பொண்ணு. இன்னோன்னு ஆண் குழந்தை." என்று பதில் சொன்னவனின் கண்களை பார்த்து வெட்கப்பட்டாள். இந்த பொழுது இப்படியே இருக்கவேண்டும். உலகில் வேறு எதுவும் வேண்டாம். இவன் பேசுவதை வாழ்நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கவேண்டும் என்று உள்ளூர ஆசைகள் பெருக்கெடுத்து ஓடின கவிநாவின் மனதில்.
"கவி, பசிக்குது எனக்கு... அங்க...காபி ஷாப் இருக்கு. எதாச்சு சாப்பிடலாமா?" என்று கேட்டான் கொஞ்ச தூரத்திலுள்ள கடையை காட்டி.

இருவரும் அங்கு சென்று உணவை ஆர்டர் செய்தனர். எதிர் எதிரே உட்கார்ந்து இருந்தனர் கவிநாவும் கிரீஷும்.


கலைத்துவிட்டு விளையாட தூண்டும் பஞ்சு போன்ற மூடி, படர்ந்த நெற்றி, வசீகரிக்கும் காந்த கண்கள், அப்பாவித்தனமாய் முகம், விரல்களால் சீண்ட துடிக்கும் அவன் மூக்கு, உதடுகளுக்கு குடைபோல் விரிந்து இருக்கும் அவன் மீசை, மெத்தைக்கு பதில் அதன் மேல் விழுந்துகிடக்க வேண்டும் என்று ஆசைப்பட வைக்கும் உதடுகள், புன்னகை மாறாத முகம்-

கிரீஷின் அழகை கண்களாலே அளவு எடுத்து கொண்டிருந்தாள் கவிநா. குழந்தையின் பிஞ்சு விரல்கள் போல் மிருதுவாய் இருக்கும் அவனது விரல்களை தொட்டு,

"ஏய், கீரிஷ்.....நீ ரொம்ப அழகா இருக்கே...." என்றாள் கவிநா. ஆண்கள் வெட்கப்படுவதை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். கவிநா கொடுத்து வைத்தவள். அவன் வெட்கப்பட்டு அவளது கையை தடவி கொடுத்தான்.

கவிநாவின் கைபேசி ஒலித்தது. caller idயில் பெயர் தெரிந்தது- டாக்டர் ரவிராஜ். கைபேசியை எடுத்தாள், அப்போது அங்க வந்த சர்வரிடம் கிரீஷ் பேசி கொண்டு இருந்தான். வேறு பக்கம் திரும்பி, அமைதியான குரலில் கவிநா,

"ஹலோ அங்கிள், சொல்லுங்க." கவிநாவின் அப்பாவின் நண்பர் டாக்டர் ரவிராஜ்.

மறுமுனையில் டாக்டர், "ஹாய் கவிநா, எப்படி இருக்க? நான் இன்னிக்கு வீட்டுக்கு வரலாமா?......ஆண்ட்...என்கூட ஒருத்தர் வருவாரு...அவங்க மிஸ் ரதி...youngsters of today பத்திரிக்கையின் ரிப்போட்டர்....உங்கள பத்தி...." என்றவர் முழுவதையும் சொல்லி முடித்தார்.

சற்று யோசனைக்கு பிறகு கவிநா, "வாங்க அங்கிள். நோ problem."

டாக்டர், "how is krrish?இப்ப...பரவாயில்லையா?" என்று வினாவினார்.

பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்- 1

காலை மணி 8. தனது காலை உடற்பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பினாள் கவிநா. சூரியன் ஒளி ஜன்னல் வழி வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் பட்டது. வீட்டினுள்ளே நுழைந்தவள் curtain துணியால் ஜன்னலை மூடினாள். வாசலில் இருந்து கொண்டு வந்த செய்தித்தாளை மேசையில் போட்ட படியே,

"கிரீஷ், ஏந்திரி! இன்னும் என்ன தூக்கம்? ஏந்திரி டா"

சொல்லி கொண்டே, அறையினுள் நுழைந்தாள் கவிநா. ஜன்னலை எட்டி பார்த்தபடி கிரீஷ் நின்று கொண்டிருந்தான்.

"ஓ ஏந்திரிச்சுட்டியா.... சரி குளிச்சிட்டு வா... what do you want for a drink? coffee or tea?" கேட்டுகொண்டே கலைந்திருந்த போர்வையை சரி செய்து மெத்தையில் வைத்தாள்.

ஜன்னல் வெளியே விட்ட பார்வையை கவிநா பக்கம் திருப்பி, கேள்வியை மறுபடியும் சொல்லியபடி கிரீஷ், "coffee or tea?mmm...can i have a bit of u?" சிரித்தான்.

"what!" மெத்தையில் கிடந்த தலையணையால் கிரீஷை செல்லமாய் அடித்தாள்.


காலை உணவு சாப்பிட அமிர்ந்தான் கிரீஷ். அங்கிருந்த போட்டோ ஆல்பத்தை திறந்து அதன் முதல் படத்தை கண்சிமிட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான். சமையல் அறையிலிருந்து bread toastயையும் காபியையும் எடுத்து வந்த கவிநா அவன் நிலைமையை புரிந்து கொண்டாள்.

அவன் அருகே சென்று, "கிரீஷ், இது நான். கவிநா. இது ராஜேஷ். இவ லீனா. நம்ம எல்லாரும் காலேஜ் டூர் போன போது எடுத்த படம். நீ தானே இந்த படத்த எடுத்த...." என்று ஒரு குழந்தையிடம் பாடம் சொல்லி கொடுப்பது போல் ஒவ்வொன்றை மெதுவாய் அமைதியாய் சொன்னாள் கவிநா. கிரீஷ் அவளை பார்த்து ஒரு புன்னகை.

"சரி சாப்பிடு..." என்று கவிநா கிரீஷின் கையில் காபியை கொடுத்தாள். மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தவளை கிரீஷ் கூப்பிட்டு "கவி, இன்னிக்கு postman வந்திருந்தான்."

அன்று ஞாயிற்றுக்கிழமை.

கவிநா ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றாள்.

மதியம் 12 மணி அளவில் இருவரும் படம் பார்க்க தியெட்டர் கிளம்பினார்கள். கொஞ்சம் தூரமான பயணம் என்பதால் கிரீஷை காரை ஓட்டவிடவில்லை கவிநா. அவளே ஓட்டினாள். பக்கத்தில் அமைதியாய் வந்த கிரீஷ், திடீரென்று தனக்கு தானே பேசிகொண்டான்.

"ஆமாண்டா சொல்லு. நான் marsல தான் இருக்கேன். நீ எங்க இருக்க இப்போ... venusஆ?" என்று ஒரு நண்பனுடன் பேசுவது போல் அவன் பேச்சுகள் அமைந்தன.


ஒரு வினாடி கழித்து யாரோ ஒரு பெண்மணியிடம் பேசுவது போல் "இந்த ஏரியா இங்க இல்ல... நீங்க flight எடுத்து போகனும்." சிரித்தமுகத்துடன் தனது பேச்சுகளை தொடர்ந்தான் கிரீஷ்.

கவிநா தனது கவனத்தை சாலையிலும் வைத்திருந்தாள் அதே சமயம் கிரீஷ் மேலேயும் இருந்தது. பாதுகாப்பு கருதி கதவுகளை 'லாக்' செய்து கொண்டாள். அவன் இருக்கும் மனநிலையை புரிந்த கொண்ட கவிநா ஏதும் சொல்லாமல் இருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து, சுயநினைவுக்கு வந்தவனாய் அமைதியாய் மாறி போனான் கிரீஷ். சற்று நேரத்திக்கு முன் காணப்பட்ட கிரீஷுக்கும் இப்போது மாறிய கிரீஷுக்கும் நிறைய வேறுபாடு.


"ஏய் கவி, என்னமா ஒன்னுமே பேசாம வர...என்ன ஆச்சு?" கியரின் மேல் விழுந்த துப்பட்டாவின் மேல் கைவைத்து.

'ஒன்னுமில்ல' என்பதுபோல் அவனை பார்த்து புன்னகையித்தாள். "சும்மா...உன்னைய பத்தி நினைச்சுகிட்டு வந்தேன்." புன்னகை மாறாமல் சொன்னாள்.

"என்னைய பத்தி நினைச்சுகிட்டே இருக்க... நான் என்ன உன் காதலனா..i am your husband." அவன் அடித்த ஜோக்குக்கு அவனே சிரித்தான்.

முறைத்தாள் கவிநா.

"ஒகே சாரி... i will try a better one next time." என்றதும் வாய் விட்டு சிரித்தாள் கவிநா.

தியெட்டரை வந்து அடைந்தனர். கிரீஷுக்கு romantic படங்கள் ரொம்ப பிடிக்கும். 'அலைபாயுதே' படத்தை பார்த்து கொண்டிருந்தனர். இடைவேளையின் போது நிரம்பி வழிந்த கூட்டங்கள் கழிவறைக்கும் பாப்கார்ன் வாங்கவும் சென்றன.


"கவி, this movie reminds me of our college days. நம்ம காதல்ல ஜெயிக்க வைக்க எத்தன போராட்டம்?" குரலில் ஒரு கவலையுடன் கிரீஷ்.


தொடர்ந்தான் கிரீஷ், "ஐ லவ் யூ கவி." சீட்டின் கைபகுதியில் வைத்திருந்த கவிநாவின் கைகளை இறுக்க பிடித்து கொண்டு.




"மீ டூ." என்றாள் கவிநா அவனின் தலைமுடியை அழகாய் கலைத்துவிட்டு.

இடைவேளை முடிந்து பத்து நிமிடங்கள் வரை ரசித்து கொண்டிருந்த கிரீஷ், கவிநா காது அருகே சென்று "கவி, வா போவோம். படம் நல்லா இல்ல. எனக்கு பிடிக்கல."


சற்று குழம்பம் அடைந்த கவிநா "கிரீஷ், நீ தானே நல்லா இருக்குன்னு சொன்னேன் இப்போ..."

"பிடிக்கல....நீ வரியா இல்லையா?" சற்று குரலை உயர்த்தி அதட்டுவது போல் பேசினான்.

(பகுதி 2)