Mar 19, 2009

கொஞ்ச நாள் பொறு தலைவா-1

(கறுப்பு எழுத்துகளில் உள்ளது ஹீரோ point of viewலிருந்து எழுதப்பட்டது, நீல நிற எழுத்துகளில் உள்ளது ஹீரோயின் point of viewலிருந்து எழுதப்பட்டது. அடுத்த பாகத்தில் வரும் ஹீரோயினின் எழுத்துகள்)


ச்சே ச்சே காலையிலேந்து எத்தன விஷயம், கூச்சல், மேள சத்தம், சொந்தக்காரங்க டார்ச்சர், கீழே விழுந்து ஆசிர்வாதம் வாங்கி வாங்கி, கிட்டதட்ட 300 தடவ கீழே விழுந்து கும்பிட்டு இருப்பேன். கைகாலு, இடுப்புவலி தான் மிச்சம்! ஒரு நாள் கல்யாண ஏற்பாட்டுக்கு எத்தன சடங்குகள்....யப்பா சாமி..."டேய் ராகேஷ், டைம் 930 டு 1030 தான் சாந்திமூகூர்த்தத்திற்கு நல்ல நேரம். போய் சீக்கிரம் ரெடியாகு." என் பெரியப்பா என்னிடம் சொன்னது என் காதில் விழுந்தது. அத வேற சத்தம் போட்டு சொன்னார். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.arranged marriage எங்களது. ஓ... பை த பை அவள் பெயர் நித்யா. நல்லா இருக்குல?வீட்டில் பார்த்து செய்த திருமணம். நிச்சயதார்த்தம் முடிந்து 3 மாதங்களில் கல்யாணம். 2 முறையே அவளிடம் பேசியிருக்கிறேன். அதில்கூட "ம்ம்ம்...அப்பரம்", "சொல்லுங்க"...."சாப்பிட்டீங்களா".....இப்படி இதையே பேசி நேரத்தை வீணாக்கிவிட்டோம். அவளின் விருப்பு, வெறுப்பு, மற்ற ஆசைகள், லட்சியங்கள்- எதுவே எனக்கு தெரியாது. கிட்டதட்ட அந்நியனாக தெரியும் அவளிடம் எப்படி இன்று இரவு.....ஆக, நான் ஒரு முடிவு எடுத்தேன். நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட பிறகு தான், 6 மாதம் கழித்து தான் சாந்திமுகூர்த்தம் எல்லாம். பெரியவர்களிடம் இதை சொன்னால், வாசலில் கட்டப்பட்ட தோரணங்கள் போல் என் முதுகு தோலை பிச்சி எடுத்துவிடுவார்கள். அதனால், இது எனக்கும் நித்யாவுக்கும் தெரிந்த ரகசியமாகவே இருக்கபோகிறது.எப்படி ஒரு மனைவியிடம், அதுவும் கல்யாணம் ஆன முதல் நாளே, இவ்வாறு சொன்னால், அவள் ஏற்றுகொள்வாளா? என்னை தவறாக நினைத்துவிடுவாளா? தன்னை தான் பிடிக்கவில்லை என்று வேறுவிதமாக எண்ணி கொள்வாளா? என்று 1000 கேள்விகள், சென்னை போக்குவரத்தில் சிக்கிய ambulance போல் தவித்தன.என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். இன்று தான் நாங்கள் தனிமையில் பேசிகொள்ள போகிறோம். இதுவும் ஒரு வித பரபரப்பையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. இனி எனக்கென்ன ஒரு சொந்தம், எனக்காக ஒரு வாழ்க்கை துணை. எப்படி அமைய போகிறது வாழ்க்கை? தேர்வு எழுத போவதற்கு முன்னால் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் உணர்வு வரும், ஆனால் அந்த பட்டாம்பூச்சிகளே தேர்வு எழுத போனால் எப்படி இருக்கும்.... அப்படி ஒரு மெகா மகா பரபரப்பு என் மனம் முதல் வயிறு வரை.இருப்பினும், அனைத்து உணர்ச்சிகளையும் சமாளித்து கொண்டு அறைக்குள் சென்றேன்.மெத்தையில் அமர்ந்து இருப்பார் மாப்பிள்ளை. பெண் உள்ளே நுழைவாள் ஒரு சொம்பு பாலுடன். அவளை பிடித்து உள்ளே தள்ளுவார்கள் அவளின் தோழிகள். மெத்தை முழுவதும் மலர்கள், அது பக்கத்தில் ஊத்துபத்தி, பழங்கள், இனிப்பு வகைகள்- இப்படி தமிழ் சினிமா காட்சிகள் மனதில் ஓட நான் அறைக்குள் நுழைந்தேன். அட பாவிகளா, தமிழ் சினிமா என்னை ஏமாற்றிவிட்டது.எதுவுமே கிடையாது, ஒரு சின்ன குவளையில் பாலை தவிர. நித்யா ஏற்கனவே அங்கு இருந்தாள், லேப்டாப்பில் இ-மெயில் பார்த்து கொண்டு. கல்யாண புடவையை மாற்றி கொண்டு, சாதாரண நைட் டிரஸில் இருந்தாள். ஆச்சிரியமாக இருந்தது. நான் தான் கோமாளி மாதிரி அதே வேஷ்ட்டி சட்டையுடன் இருந்தேன்.என்னை பார்த்து ஒரு மாதிரி சிரித்தாள். 'என்னடா இவன், இந்த சட்டைய மாத்தவே இல்லையா' என்பது தான் அவள் சிரிப்புக்கு அர்த்தம். உடனே நானும் போய் பனியன் லுங்கியை எடுத்து போட்டு கொண்டு மெத்தையில் அமர்ந்தேன். நித்யாவும் லேப்டாப்பை மூடிவைத்து விட்டு மெத்தையில் உட்கார்ந்தாள்."எனக்கு net pals நிறைய பேர் இருக்காங்க. அவங்க வாழ்த்து இ-மெயில் அனுப்பியிருந்தாங்க... அதான் check பண்ணிகிட்டு இருந்தேன்." மெத்தையில் தன் விரல்களால் கோலம் போட்டு கொண்டே. என் கண்களை பார்க்கவில்லை."அப்படியா நித்யா? வெரி நைஸ்... " என்று தொடர்ந்து அவளுக்கு எத்தனை நண்பர்கள், யார் யார் அவர்கள், எவ்வாறு சிநேகம் ஏற்பட்டது என்பதை அறிந்து கொண்டேன். அவளும் ஆர்வத்தோடு பதில் அளித்தாள். இருந்தாலும், அவளது கண்கள் என் கண்களை சந்திக்கவில்லை.ஒன்னு மட்டும் சொல்லனும்ங்க... நித்யா குரல் இருக்கே... சான்ஸே இல்ல... வெண்ணிலா ஐஸ்கீரிம் மேல தேன்னை ஊற்றி சாப்பிட்டா எப்படி குளிர்ச்சியாக இருக்கும், அப்படி இருந்தது அவளது குரலை கேட்கும்போது.அவளது கூச்சம், அவளுக்கு இருந்த பயம், ஏதோ சொல்ல வருகிறாள் என்பது மட்டும் புரிந்தது. நான் கேட்ட கேள்விகளுக்கு பதில். அவளாகவே வேறு எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் அறை அமைதியாக இருந்தது. நான் மீண்டும் தொடர்ந்தேன்,"நித்யா.... நீ ஏதோ ஒன்னு சொல்லனும்னு நினைக்குற... ஆனா உனக்கு பயமா இருக்கு... எம் ஐ கரேக்ட்?"'டக்'கென்று அவள் கண்கள் என் கண்களை சந்தித்தன. நிலா வெளிச்சம் எல்லாம் சும்மாங்க... நித்யாவின் பார்வை ஒன்று மட்டுமே போதும், நிலாகூட 1000 வாட்ஸ் கடன் கேட்கும் என் நித்யாவிடம். அவள் கண்களில் ஒருவித சந்தோஷம் தெரிந்தது. அவள் சொல்லாமலேயே அவளது மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவனாய் நான் இருந்தேன்."நித்யா, இந்த சடங்கு, சாந்திமுகூர்த்தம் எல்லாம்.... பெரியவங்க சொன்னதுனால ஒகேன்னு சொல்லிட்டேன். ஆனா, ஒருவரை ஒருவர் புரிஞ்சுகிட்ட பிறகு தான் இதலாம் சரியா வரும்னு நான் நினைக்குறேன். compel பண்ணி வர commitment வேற, உண்மையான காதலோடு வர commitment வேற... நம்ம இரண்டாவது வகையா இருக்கனும்னு ஆசைப்படுறேன்...6 மாசம் கழிச்சு இதலாம் வச்சிக்கலாம்...." என்று முடித்தேன்.அவள் கண்கள் இன்னும் பிரகாசமானது, "நானும் அதே தான் சொல்லனும்னு இருந்தேன்... ஆனா கொஞ்ச பயமா இருந்துச்சு."ஆஹா, அவள் மனதில் பட்டதை நான் சொல்லிவிட்டேன். அடிச்சேன் பாருங்க நித்யா மனசுல ஒரு சிக்சர!!"ம்ம்ம்...." அவள் மறுபடியும் ஏதோ கேட்க வந்தாள்.

"சொல்லு மா" என் கண்களை அசைத்தேன்."உங்கள எப்படி கூப்பிடறது நான்?" அவள் கேட்டாள். சிரித்துகொண்டே நான், "டேய், மச்சான், மாப்பிள்ள, மாப்ஸ்....எப்படி வேணாலும் கூப்பிடலாம்?" என்று ஜோக் அடித்தேன்.சிரித்தவள், "ப்ளீஸ்... சரியா சொல்லுங்க."நான், "பெயர சொல்லியே கூப்பிடு. எனக்கும் அதான் விருப்பம். அப்பரம் இந்த வாங்க, போங்க எல்லாம் வேண்டாம்.... அது ஏதோ நம்மகிடையே ஒரு distance வர மாதிரி ஃபீலிங்.""சரி ராகேஷ்...thanks for everything and for making me feel at home. good nitez." அவள் சொல்லியவாறு போர்வையை போர்த்தி கொண்டாள்.நான் நிம்மதியாக தூங்கினேன். வயிற்றில், பரிட்சை எழுதிமுடித்து வெளியே பட்டாம்பூச்சிகள் நிம்மதியாய் வீடு திரும்பியது போல் ஒரு அசதி கலந்த நம்மதியான உறக்கம்.

(பகுதி 2)

9 comments:

mvalarpirai said...

தலைப்புக்கு அர்த்தம் கதைய முழுவதும் படித்த பிறகு தான் புரிந்தது !
ஆனா இந்த மாதிரி நிஜ வாழ்க்கையில நடக்கும்னு நினைக்கீறிங்க ! doubt தான்..

காஞ்ச மாட கம்பங்காட்டுக்குள்ள உட்ட மாதிரிதான் நடக்குது !

ஏன்னா அவ அவனுக்கு முப்பது வயதிலதான் பொண்ணு கிடைக்குது ! நான் Arranged marraige பத்தி சொல்றேன் !
நம்ம பெருசிங்க எல்லாம் 20க்குள்ளேயே ! எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு 25 ல அதோட வேலைய பார்க்க ஆரம்பிச்சுடாங்க ! ஆனா இப்ப அவன் அவன் 25 வயது வரைக்கும் படிக்கிறான் அதுக்கு அப்புறம் வேலை.....சம்மாத்தியம்..இதெல்லாம் சரியா அமைச்சாலும் நம்ம ஜாதககாரன் நமக்கு வைப்பான் பாருங்க செக் ! பையனுக்கு டைம் சரியில்லை அது இல்லை அப்படினு சொல்லி தள்ளி போடுவார்..என்னடா சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் குடுக்க மாட்றாரெனு காத்திருந்து அப்புறமா நல்ல பொண்ணா பார்த்தா ஜாதகம் பொருந்தலை..அவன் சித்தப்பன் சரியில்லை அது இதுனு சொல்லி நல்ல பொண்ணுகளை எல்லாம் தட்டி கழிச்சு ..காலம் போன கடைசியில "30 வயதாது இனியெல்லா அந்த காரணாம் எல்லாம் பார்க்க கூடாது கிடைக்கிற பொண்ணை கட்டிகோடா " அப்பிடிபாங்கே ! " டாய் நான் என்னைக்கிட காரணம் எல்லாம் பார்த்தேன்..நீங்கதானாட நல்ல பொண்ணுகளை எல்லாம் தட்டி கழிச்சீங்க" அப்படினா ...:உனக்கு எங்கடா போச்சு புத்தி அப்படிபாங்கே ! .. " சரி செய்ங்கடா.. என்ன என்ன செய்யனுமோ செய்ங்கடானு " வடிவேல் மாதிரி சொல்லிட்டு உங்கார்ந்திட வேண்டியதுதான் .அப்பறம் நமக்காக அந்த பொறந்த அந்த பாவப்பட்ட ஜென்மத்தை கல்யாண பண்ணிவைப்பாங்கே ! அந்த பொண்ணையும் இதே மாதிரி பல பசங்களை பார்த்து தட்டி கழிச்சு வெறுப்பேத்தி இருப்பாங்கே !

இதில இன்னும் 6 மாதம் பொறுக்க முடியமா அந்த தலைவானாலும், தலைவியாலும் :) :)

புதியவன் said...

உரையாடல் மொத்தமும் அருமை...

//தேர்வு எழுத போவதற்கு முன்னால் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் உணர்வு வரும், ஆனால் அந்த பட்டாம்பூச்சிகளே தேர்வு எழுத போனால் எப்படி இருக்கும்.... //

மிகவும் ரசித்த வரிகள்...

Thamizhmaangani said...

@valar,

அவ்வ்வ்...
வாழ்க்கையிலே என் ப்ளாக்குல இம்புட்டு நீளமா ஒரு பின்னோட்டம் போட்டது நீங்க தான்!!:)

//ஆனா இந்த மாதிரி நிஜ வாழ்க்கையில நடக்கும்னு நினைக்கீறிங்க ! doubt தான்..//

நடக்காதுன்னு சொல்லல நடந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்.
(தசாவதாரம் கிளைக்மெக்ஸால் பாதிக்கப்பட்டோர் சங்கம்) :)

நிஜத்துல நடக்காது... அதுனால தான் கதையில நடக்குற மாதிரி இருக்கு. கற்பனை தானே...

//நம்ம ஜாதககாரன் நமக்கு வைப்பான் பாருங்க செக்//

உண்மைய 'புட்டு' மாதிரி புட்டு புட்டு வைக்குறீங்க!

Thamizhmaangani said...

@புதியவன்

//உரையாடல் மொத்தமும் அருமை...//

நன்றிங்க:)

mvalarpirai said...

பின்னூட்டம்னு வந்துட்டா அப்புறம் நீளம் எல்லாம் பார்க்க முடியுமா !
Actualla இதைவச்சு ஒரு பதிவு எழுதலாம்னு தான் ஆரம்பிச்சேன்..ஆனா அதுக்கு உங்க பதிவை மேற்கோள் காட்டனும். அதுக்கு உங்ககிட்ட அனுமதி கேட்கனும்...சரி எதுக்கு friday அதுவமா அவ்வளவு கஸ்ட பட்டுகிட்டு தான் அதை சுருக்கி பின்னூட்டமா போட்டேன் !

reena said...

ஹே காயத்ரி... சூப்பரா போகுது கதை... நாளுக்கு நாள் உங்கள் கதை சொல்லும்/எழுதும் திறன் அதிகமாயிட்டே போகுது... உரையாடல்கள் அருமை... உயிர்ப்புடன் இருக்கின்றன.
//அட பாவிகளா, தமிழ் சினிமா என்னை ஏமாற்றிவிட்டது.//


அய்யோ பாவ‌ம் ராகேஷ்;))

reena said...

//தேர்வு எழுத போவதற்கு முன்னால் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் உணர்வு வரும், ஆனால் அந்த பட்டாம்பூச்சிகளே தேர்வு எழுத போனால் எப்படி இருக்கும்.... //

மிகவும் ரசித்த வரிகள்...

ரிப்பீட்டு....

அஷ்வின் நாரயனசாமி said...

என் முன்றாவது கருத்துகல எதோ சொல்லனும் தோனிச்சு உங்ககிட்ட மட்டும் தான் நான் துபாயில் அவள் இந்த்யாவில், இருந்தாலும் நாங்கள் சந்தித்த முதல் நாளயை எங்களுக்கு நினைவுபடுத்தி,மிக்க நன்றி தோழி,... வார்த்தைகள் வரவில்லை.... அப்பா , அம்மா பார்த்து பண்ணி வைத்த்து தான். என் முதல் இரவுவில் அவள் என்னிடத்தில் கேட்ட கேள்விகள் தான்...ஆனால் லே-டாப் எல்லாம் வைக்கவில்லை....இதுவரைக்கும் என் வாழ்வில் நடந்ததை சொன்னிங்க... அடுத்ததும் அப்படி இருக்கும் நம்பிகிறேன்....

வாழ்த்துக்கள்,நன்றிகள்

அஷ்வின்

Karthik said...

நானும் இதே மாதிரி ரெண்டு POV வில் ஒரு கதை எழுதி ட்ராஃப்டில் வெச்சிருக்கேங்க. ;) ஆனால் அதுல கல்யாணம் எல்லாம் இல்லை. சொல்லப்போனா அதுக்கு நேர் மாறானதுதான் இருக்கு. :)

என்ன கொடுமை ஸார் இது? தமிழ் சினிமா மாதிரி காலேஜ் தான் இல்லைனா, கல்யாணமும் இருக்காதா?? :(

கதை நல்லாருக்கு. :))