May 17, 2017

தேக்கா

கடை முதலாளி, “டேய் ரெண்டு முட்ட பொரோட்டவ எவ்வளவு நேரம் போடுவ? சீக்கிரம் போட்டு தொல!"  என அதட்டினார். 13  சதுர மீட்டர் அளவில் மட்டுமே இருந்த கடைக்குள்,  அடுப்பின் சூடு கையை எரித்தாலும்,  ஒரு மணி நேரமாய் பரோட்டா போட்டு கொண்டிருந்தார் சீனு. 





தேக்கா சந்தையில் அமைந்திருக்கும் பல உணவு கடைகளில் ராகுல்01 கடையும் ஒன்று. வீட்டுக்கு வீடு வாசபடி என்பதுபோல் தேக்கா உணவங்காடியில் பாதி கடைகளுக்கு மேல் பரோட்டா கடை தான். 

 "எங்க அந்த வீண போனவன்…இன்னும் வரலையா?” முதலாளியின் பொன் வார்த்தைகள் விழுந்தன. தனது பேரன் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கடை. தனது மகன் எடுத்து நடத்துவான் என்று ஆசையாக தொடங்கினாலும், வியாபாரம் தெரிந்தும், மகன் போக்கு சரியில்லை. கடையை இழுத்து மூட வேண்டிய சூழ்நிலை வந்த நிலைமையிலும் தொழில் விட்டு போக கூடாது என்பதற்காக, இந்த 68 வயதிலும் தினமும் அயராது உழைக்க வேண்டிய கட்டாயம். 

அன்று ஞாயிற்றுகிழமை காலை 8 மணி. பரோட்டா மாவு  பெட்டியில்  ஒன்றுக்கு  பின்னால்  ஒன்றாய்  அடுக்கி வைத்த  மாவு உருண்டை  போல் ஒன்றுக்கு பின்னால் ஒன்றாய்  5 பேர்  வரிசையாய்  நின்றுகொண்டிருந்தனர். 

"சாமிண்ணா இன்னும் வரல?" என சீனு கூறியபடி, ஒரு மாவு உருண்டையை மெல்லிசாய் தட்டி, நடுவில் முட்டையை உடைத்து ஊத்தினார். 

மாதம் கடைக்கு கட்ட வேண்டிய வாடகை பணம் $2300 வெள்ளி. இது மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமை. இந்த மாதம், கடையில் கேஸ் அடுப்பு பாதிப்பு ஏற்பட்டதால், அதற்கு செலவு. மலிக பொருட்கள் செலவு போக, வாடகை கொடுக்க பணம் தயாரான நிலையில் இல்லை. இந்த பயமும் ஒருவித எரிச்சலுடனும் முதலாளி கணக்கு புத்தக்கத்தில் கணக்கு எழுதி கொண்டிருந்தார். 

ரொம்ப நேரம் வரிசையில் காத்து கொண்டிருந்த மலாய் ஆடவர் ஒருவர் பொறுமையிழந்தார், "ஹாலோ அங்கிள், ப்ரப்பா லமா லகி லா?"

"wait லா அபாங். packing சுடா." என விறுவிறுவென்று பழுப்பு நிற பொட்டலத்தில் பரோட்டாவை மடித்து கொடுத்தார் முதலாளி. காலை மணி 8.45 ஆனது. ஞாயிற்றுகிழமை என்பதால்,  அடுத்த வரும் வாரத்திற்கு தேவையான மலிகை பொருட்கள் காய்கறி, மாமிச வகைகளை வாங்க வந்த கூட்டம் அதிகரித்த வண்ணமாய் இருந்தது. வாங்கிவிட்டு காலை உணவு உண்ணும் ஒரு சாரார் இருக்க, காலை உணவை சாப்பிட்ட பிறகு, பொருட்களை வாங்க போகும் ஆட்கள் இன்னொரு வகையை சேர்ந்தவர்கள். 

ராகுல்01 கடைக்கு மூன்று கடைகள் தள்ளி இருக்கும் பரோட்டா கடையில் மட்டும் எப்போதுமே கூட்டம். இந்த காட்சி, முதலாளிக்கு மேலும் எரிச்சலை ஊட்டியது. 


கூன்விழுந்த ஒரு சீன மூதாட்டி எங்கேயாவது அட்டைபெட்டியோ பேப்பரோ ஏதேனும் கிடைக்குமா என்று தேடுவார். அட்டைபெட்டிகளை சேகரித்து விற்றால் காசு கிடைக்கும் என்பதால்.  ராகுல்01 கடை அருகே வந்தார். மலிக பொருட்கள் அட்டைபெட்டிகள் இருந்தன. அதனை மடித்து, முதலாளி மூதாட்டியிடம் கொடுத்தார். 

மூதாட்டி அடுத்த கடைக்கு செல்ல முற்பட்ட போது, முதலாளி அவரிடம், பின்னாடி படிக்கட்டு ஓரமாய் நிறைய செய்திதாள் இருப்பதை சைகை மொழியில் தகவலைக் கூறினார். 

புரிந்து கொண்டு மூதாட்டி புன்னகையித்தபடி மெதுவாய் நகர்ந்து சென்றார். முதலாளி மற்ற மேசையில் உள்ளவர்களை கவனிக்க சென்றார். விடியற்காலையில் கடை திறக்க வர வேண்டிய சாமி, அப்போது தான் மெதுவாய் நடந்து வந்தார். தாமதமாய் வந்துவிட்டோம் என்ற பதற்றத்துடன் சாமி, கடைக்குள் நுழைந்து குழாய் தண்ணியில் கையை கழுவினார். 




வேர்வையை துடைத்தபடி சீனு, "அண்ணே, ஏனே லேட்டு? அவரு ரொம்ப நேரமா கத்திகிட்டு இருந்தார்ண்ணே." 

சாமி முகத்தில் படர்ந்திருந்த   கலக்கமும்  கவலையும் மேலும் ஒரு படி சென்றது.  

முதலாளி கடையை நோக்கி  வந்து கொண்டிருக்கிறாரா  இல்லையா  என  எட்டிப் பார்த்தவாறு சீனு,”என்னெண்ணே  யோசிக்கிறீங்க?” என்றான்.

சாமி தனது சட்டை பையிலிருந்த கோயில் பிரசாதத்தை எடுத்து நீட்டினார் சீனுவிடம் “எடுத்துக்கோ”

எண்ணெய் பிசுபிசுப்பும், முட்டை வாசமும், வெங்காய நெடியும், ச்சீஸ் வாடையும் கலந்திருந்த   சீனுவின் விரல், திருநீரை தொட்டது. திருநீரை நெற்றியில் பூசியவாறு சீனு,  “என்னண்ணே விசேஷம் இன்னிக்கு?” 

என் பொறந்த நாளு.” என்றார் சாமி. கோயில் பிரசாத பொட்டலத்தை, பரோட்டாவை பியித்துக் கொண்டு கொட்டிய 'மகாலட்சுமியை' போட்டு வைக்கும் மைலோ டப்பாவுக்கு பின்னால் ஒளித்து வைத்தார்.  

ஆச்சிரியத்துடன் சீனு, “அப்படியாண்ணே?”

 சாமியின் வலது கையை குலுக்கி பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொன்னான் சீனு.

இன்னொரு பரோட்டா மாவு உருண்டையைக் கையில் எடுத்த சீனு, “என்ன வயசண்ணே இருக்கும் உங்களுக்கு? நம்ம முதலாளி வயசு இருக்குமா?”

"தம்பி. எனக்கு வயசு 78…” 

கையில் 5 தட்டுக்களுடன் திரும்பி வந்த முதலாளி சாமியை பார்த்துவிட்டார் "நீ பண்ண வேண்டிய வேல இது!" 

கடும் கோபத்தில் இருந்த முதலாளி, கடைக்குள்  முன்னால் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிரம்பிய ஒரு பெரிய மங்கில் அனைத்து தட்டுக்களையும் போட்டார். போட்ட வேகமும், கூடவே கலந்த தெறித்த கோபமும் மங்கிலிருந்த தண்ணீரை வெளியே சிந்த செய்தது. 

தொடர்ந்து கொட்டினார் கோபத்தை, " நானே எல்லாத்தையும் பாத்தா, அப்பரம் நீ எதுக்கு வேலக்கு வர?" 

கூட்டமாக இருப்பினும் அதனைக் கண்டு கொள்ளாமல் அவர் சாமியைத் திட்டினார். கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த சில பேருக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. ஆனால், முதலாளிக்கு எந்த ஒரு கூச்சமும் இல்லை. எதுவும் பேசாமல், சிந்திய தண்ணீரை துடைக்க கீழே குனிந்தார் சாமி. 

"யோவ். என்ன இது?" சாமி கையிலிருந்த மஞ்சள் துணியை பார்த்து கேட்டார் முதலாளி. 

"இல்ல தொடைக்க தான்....." என இழுத்தார் சாமி.

"இந்த மஞ்ச துணி வச்சு எத தொடைக்கனும்னு சொல்லி இருக்கேன்." 

உள்ளே நின்று கொண்டிருந்த சீனு, "சாமிண்ணே அது தட்டு தொடைக்க. மத்ததுக்கு அந்த வெள்ள துணிய யூஸ்  பண்ணுங்க." 

அதற்குள், வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளக்கார பெண்மணி, “ஓன்  ப்ளேன்  ப்ராட்டா,  டூ  அனியன் ப்ராட்டா.”  என சொல்லிவிட்டு தான் அமர  போகும்  இடத்தைச் சுட்டி காட்டி, உணவை அங்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். 

”சீனு, ஒரு  கோசோங்,ரெண்டு வெங்காயம்” என்று ஆர்டரை மறுபடியும் கூவி கூறினார் முதலாளி.

வெள்ள துணியை கொண்டு சிந்திய தண்ணீரை சாமி துடைத்து எழுவதற்குள்  முதலாளி,”யோவ் சாமி அந்த  வெள்ளக்காரி  மேசை இருக்குல..,” என,தட்டு நிறைய பரோட்டாவை சாமி கையில் வைத்தார். 

வெள்ளைக்காரியிடம் உணவை பரிமாறிவிட்டு, அவர் பணத்தை சாமியிடம் கொடுத்தார்.  கொடுத்த காசை பல தடவை எண்ணினார் சாமி. கடைக்கு அருகே வந்து விலை பலகையை அனாந்து பார்த்து, "ஓரு கோசோங்….ஒரு வெள்ளி  10 காசு. வெங்காயம்…ஒரு வெள்ளி 40 காசு…அப்போ ரெண்டு  வெங்காயம்னா…ரெண்டு வெள்ளி 20 காசு….முன்னாடி…. வந்து… ரெண்டு வெள்ளி 20காசு….மொத்தம்..” என்று முணுமுணுத்தபடி குழம்பி போய் நின்றார்.


கடைக்கு திரும்பிய முதலாளி, “என்ன பண்ணிகிட்டு இருக்க நீ?” என்றார் அதிகார தோரணையில்.

சாமி, “இல்லண்ணே…இந்த காசு….” என்று இழுத்தார்.

“ஒரு கோசோங், ரெண்டு வெங்காயம். இது எத்தனனு உனக்கு தெரியல இன்னும்?” என்று சாமியின் கையில் இருந்த சில்லறை காசை வேகமாய் பிடிங்கினார்.

நொடியிலேயே காசை எண்ணிவிட்ட முதலாளி சாமியைப் பார்த்து, “மொத்தம்  மூனு  90.   அஞ்சு வெள்ளி கொடுத்திருக்கா. மிச்சம் எவ்வளவு கொடுக்கனும்?” என கேட்டார் சாமியிடம். கணக்கு அவ்வளவாய் பிடிப்படாத சாமி மேலும் குழம்பி போனார்.

சாமிக்கு பதில் தெரியவில்லை என்றதும் முதலாளிக்கு எரிச்சல் வந்தது, “ ஒரு வெள்ளி  10 காசு. இந்தா போய் குடு…” முதலாளி மேலும் திட்டிவிடுவாரோ என்ற அச்சத்துடன் அவ்விடத்தைவிட்டு வேகமாய் நடந்து வெள்ளைக்காரியிடம் மிச்சத்தை கொடுத்துவிட்டு  இன்னொரு மேசைக்கு பளாஸ்டிக்  பாத்திரம் ஒன்றில் மீன் கறியை ஏந்தியவாறு சென்றார்.

 மூதாட்டி ஏதோ ஒரு மேசையை தடவி கொண்டிருந்தார்.  மெதுவாய் ஒவ்வொன்றாய் அவர் தட்டுகளில் ஏதோ ஒன்றை தேடி கொண்டிருந்தார். ஒரு தட்டைப் பார்த்தார் மூதாட்டி. அந்த தட்டில் ஒரு பரோட்டா காய்ந்து இருந்தது. யாரோ முழுதாய் சாப்பிட்டு முடிக்காமல் அப்படியே விட்டு சென்ற தட்டு.

அதிலிருந்து ஒரு சின்ன துண்டு பரோட்டாவை கையில் எடுத்து நுகர்ந்து பார்த்தார். மறுபடியும் நுகர்ந்த பரோட்டா துண்டை அந்த தட்டில் போட்டார். அந்த தட்டை கையில் ஏந்தியவாறு ஒரு மறைவான இடத்திற்கு சென்றார். 

அந்த தட்டிலிருந்த பரோட்டாவை சாப்பிட ஆரம்பித்தார். இதனைப் பார்த்த சாமிக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அவரது மனம் ஏதோ செய்தது. இப்படிதான் தினமும் அந்த மூதாட்டி உணவு சாப்பிடுகிறாரோ என்று நினைத்து சாமியின் மனம் வேதனையில் புரண்டது.

மூதாட்டி நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தார் சாமி. சாமியை பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தார். பரோட்டா தட்டை மறைக்க முயன்றார். ஆனால், மூதாட்டியால் இயலவில்லை. சாமி சுற்றும் முற்றும் பார்த்தார். குறிப்பாக, முதலாளி பார்க்கிறாரா என்பதைக் கவனித்தார். முதலாளி தென்படவில்லை. சாமி, தனது கைகளிலிருந்த மீன் கறியை மூதாட்டியின் தட்டில் ஊற்றிவிட்டு, பக்கத்திலிருந்த குப்பையில் பளாஸ்டிக்  பாத்திரத்தைத் தூக்கிபோட்டார்.

புன்னகையித்தபடி மூதாட்டி “ம்ங் க்கோய் சாய், ம்ங் க்கோய் சாய் ” என அவருக்கு மட்டுமே புரிந்த மொழியில், கையை அசைத்து அசைத்து நன்றி கூறினார். எதுவும்  சொல்லாமல் விறுவிறு என்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார் சாமி.  

மீன் கறி கேட்டு ரொம்ப நேரம் ஆகியும் வராததால் சத்தம் போட்டுவிட்டு சென்றார் வாடிக்கையாளர்.அந்நேரம் பார்த்து, சாமி கடைக்குத் திரும்பினார். 

முதலாளி, “யோவ் சாமி! உனக்கு ஒரு வேலயும் உருபடியா பண்ண தெரியாதா? .ச்சே…உன்னையெல்லாம் வச்சுகிட்டு…. மீன் கறி எடுத்துட்டு போனீயே எங்க? ” என பரோட்டாவில் தெளித்த எண்ணெய் போல் வெடித்தார் முதலாளி.

மூதாட்டிக்கு உதவி செய்தேன் என்றால் திட்டுவாரோ என்ற சிந்தனை ஓடியது. முதலாளியின் குணம் தெரியும்.  தன் பிறந்தநாள் அன்று பொய் சொல்ல வேண்டாம் என்று நினைத்தார் சாமி. இந்த சின்ன விஷயம் பலகோடி குழப்பங்களைக் கொடுத்தது சாமிக்கு. உண்மையைச் சொல்லிவிடலாம் என்று சாமி வாயைத் திறக்க, முதலாளியின் சிவந்த கண்களைப் பார்த்தார்.

“கீழ…. ஊத்திடுச்சு.” சாமியின் வார்த்தைகள், போக்குவரத்தில் சிக்கிய முதலுதவி வண்டிபோல் தவித்தன.

நெற்றியில் அடித்துகொண்ட முதலாளி, “என்னது!!! கீ ஊத்திட்டீயா? அறிவு இருக்கா? சோத்த தானே திங்ற? ” என்றவர் தொடர்ந்தாற்போல் ஐந்து நிமிடங்களுக்கு திட்டி தள்ளிவிட்டார். கடவுள் படைத்த இரண்டு காதுகளின் முழு  அர்த்ததை புரிந்த வைத்திருந்த சீனு,எதையும்  கேட்டு  கொள்ளாமல் அன்றைய 210வது  பரோட்டாவை  போட்டு கொண்டிருந்தான்.


 வேல கேட்டு வந்து நின்னபோ வேல..கொடுத்தா நல்லாயிருக்கும்னு நினைச்சு உனக்கு வேல கொடுத்தேன் பாரு அது என் தப்பு தான்….” என்று திட்டுவதை நிறுத்தவில்லை முதலாளி. 

பக்கத்து கடையில் தே தாரேக் ஆற்றி கொண்டிருந்தவர் வெளியே வந்து, "ஹேய் மிஸ்டர் ப்ராட்டா, ரிலக்ஸ் லா!" என நக்கல் அடித்தார். அவரைப் பார்த்து முறைத்தார் முதலாளி. அதைப் பொருட்படுத்தாமல், அவர் முதலாளியின் முதுகில் விளையாட்டாய் இரண்டு அடி அடித்து விட்டு தே தாரேக் குவளையை வாடிக்கையாளரிடம் கொடுக்க சென்றார்.

"எனக்கு என்ன? வேல பாக்க ஆள் கிடைக்காதுனு நினைச்சுகிட்டு இருக்கீங்களா? ரெண்டு சின்ன பைலுக...மலேசியா பொடியனுங்க.... வேலக்கு வரேனு கேட்டு இருக்குதுங்க...அவனுங்கள வேலக்கு எடுக்க போறேன் லா நான்," என்று அவர் பாட்டிற்கு புலம்பி தீர்த்தார்.  வேலையை நிறுத்திவிடுவாரோ என்ற அச்சம் சாமியை தாக்கியது. இன்று, முதலாளியிடம் முன்பணமாக $50 வெள்ளி கேட்கலாம் என்று நினைத்திருந்த சாமிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தார். 

“யோவ் சாமி! நீ கிளம்பி போயிடு. என் கண்ணு முன்னால நிக்காத.” என்று கூறிவிட்டு கடைக்கு முன்னால் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார் முதலாளி. 

"+60...." என நம்பர் கொண்ட ஃபோன் அழைப்பு வர, அவர், "இந்த....அவனுங்களே கோள் பண்ணிட்டானுங்க," என உற்சாகத்துடன் கடைக்கு கொஞ்சம் தூரம் போய் பேச தொடங்கினார்.

 கடையிலிருந்து சீனு, “அண்ணே, நீங்க கொஞ்ச நேரத்துக்கு எங்கயாச்சும் போயிட்டு வாங்க. உங்கள இங்க பார்த்தாரு இன்னும் சத்தம் போடுவாரு.” என்றான்.

காற்சட்டை பாக்கெட்டில் இருந்த சீட்டு ஒன்றை நீட்டி சீனுவிடம், "வீட்டு சூரா வந்திருக்கு. மூனு மாசமா சேவா காசு கட்டுல...அண்ணே கிட்ட காட்டி....."

"ஐயோ இன்னிக்கு வேணாம்ண்ணே," சீனு மன்றாடினான்.

"நாளைக்குள்ள கட்டனும்னு போட்டுருக்கு...." 

"சாமிண்ணே, நீங்க போயிட்டு அப்பரம் வாங்க."


தேக்காவிலிருந்து 3.5கிலோ மீட்டர் துராத்திலிருக்கும் பெண்டிமியர் சாலைக்கு நடந்தே சென்றார். பெண்டிமியர் புளோக் 2ல் தான் சாமிக்கு வீடு. ஓரறை வீடு. தனியாக வாழும் சாமியின் வீட்டிலிருந்த ஒரே பெரிய பொருள்- தரையில் கிடந்த உறை மாற்றப்படாத மெத்தை. சுவரிலிருந்த காற்றாடி ஜன்னல் வழியே வந்த காற்று பட்டால் மட்டும் சுற்றியது.  மின்சார கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் இல்லை. 


சட்டையை கழட்டியபடி மெத்தையில் உட்கார்ந்தார்.  எதிரே மூன்று அடி கண்ணாடி .  யாரோ தேவையில்லை என்று எரிந்த கண்ணாடி அது. புளோக் கீழே கிடந்ததது. 


 அன்று கடையில் இழுந்த தன்மானம், வயதான காலத்தில் வேலை தேடி இழுந்த நிம்மதிகுண்டர்கும்பல் செயல்களில் ஈடுப்பட்டு பல வருடங்களாய் சிறையில் அடைக்கப்பட்டு இழுந்த வாழ்க்கை, வெட்டு குத்தில் இழுந்த இடது கை- இவை அனைத்தும் கண்ணாடியில் பிம்பாய் தெரிந்தன.  பச்சை குத்தப்பட்டிருந்த இடது தோள்பட்டையைத் தடவி கொடுத்தார். மெத்தையில் தலை சாய்த்து படுக்க சென்றபோது, கைபேசி மணி ஒலித்தது. 


சாமி வைத்திருந்த நோக்கியா X101ல், முதலாளியின் நம்பர் அவரைப் போலவே 'விளிச் விளிச்' என்று மின்னியது.

*முற்றும்*

May 1, 2017

(பாகுபலி) படம் பார்க்க போன கதை.

வியாழக்கிழமை இரவு 27/4/2017. என் அறையில் இருந்த கடிகாரத்தை பார்த்தேன் . 8 மணி என காட்டியது.

 திரையரங்கு இணையதளத்தை கிளிக் செய்தேன்.
'28/4/2017. முதல் காட்சி மதியம் 1.20க்கு. பாகுபலி 2.'

ஆனா இந்தி பதிப்பு. சரி மறுபடியும் திரையரங்கு இணையதளத்தை refresh செய்து பார்த்தேன். தமிழ் காட்சிகள் உண்டு என்ற தகவல் மட்டுமே.



சரி இன்னும் கொஞ்சம் நேரத்தில தமிழ் காட்சி டிக்கெட்களை வெளியிடு செய்துவிடுவான் என்ற நம்பிக்கையில்எ, மடிக்கணினியில் முடிக்காமல் கிடக்கும் அலுவலக வேலையை செய்ய தொடங்கினேன்.

இரவு மணி 10.05. மறுபடியும் திரையரங்கு இணையதளத்தை பார்த்தேன். இன்னும் ஒன்னும் இல்லை.  ஒரு பத்து தடவ refresh செய்து இருப்பேன். நம்ம வாழ்க்கை மாதிரி அதுவும் எந்த மாற்றமும் இல்லாமல், காட்டியதையே மறுபடியும் காட்டியது. இன்னொரு திரையரங்கு இணையதளத்திற்கு சென்று பார்த்தால், அங்கும் இந்தி, தெலுங்குக்கு மட்டுமே டிக்கெட் இருக்கிறது.

இது என்ன டா தமிழுக்கு வந்த சோதனை!

பாகுபலியை, தமிழில் மட்டுமே பார்ப்பேன்.

இதுவே என் கட்டளை 
என் கட்டளையே 
என் சாசனம் 

அப்படினு ரம்யாகிருஷணன் மாதிரி மைண்ட் வாய்ஸ் தெறித்தது. டிவிட்டரில் தகவல் ஏதேனும் இருக்குமா என்று அங்க சென்றும் பார்த்தேன். ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை.

திரையரங்கிற்கு phonecall செய்தேன், "ஹாலோ சார்...." என்று முடிப்பதற்குள்,

 அவர் மறுமுனையில், "மேடம், பாகுபலி இன்னும் ரெண்டு மணி நேரத்துல டிக்கெட் வெளியிடுவோம்" னு வெடுக்கென்று, ஆங்கிலத்தில்  சொல்லிவிட்டு வைத்து விட்டார்.


எரிச்சல், கொஞ்சம் கோபம், ஆதங்கம்.
இந்தி காட்சி திரையரங்கு டிக்கெட் விற்பனை எப்படி இருக்குனு இணையதளத்துல போய் கண்ணோட்டமிட்டால், கிடுகிடுவென்று முக்கால்வாசி டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டன.

தமிழுக்கு கிடைக்காத ஒன்று...ச்சே....ரோஜா படம் அரவிந்த்சாமி மாதிரி ஏதாச்சு தமிழ் கொடியில குதிச்சு நம்ம தமிழ் உணர்வ காட்டிடலாமானு வேறு தேவையில்லாத ஒரு யோசனை.

இரவு மணி கிட்டதட்ட 11 ஆகிவிட்டது. எந்த நல்ல செய்தியும் வரல. தூக்கம் வேற கண்ணுல சொக்குது. சரி, அலாரம் வைத்துவிட்டு சரியா நள்ளிரவு எழுந்து பார்க்கலாம்னு மெத்தையில் படுத்தேன்.

அட...ச்சே... ஒரு படத்துக்கா இவ்வளவு மனபோராட்டம் என்று அசைபோட்ட படி கிடந்தேன். சினிமா ஒரு பொழுது போக்கு மட்டும் இல்ல, இப்ப உள்ள சூழ்நிலையில் அது ஒரு escapism. மன உளைச்சல், சோகம், துக்கம், கவலை, வேலை, ஈமெயில்- இதை எல்லாத்தையும் தூக்கி போட்டு வேற ஒரு உலகத்துக்கு நம்மை அழைத்து செல்லும் ஒரு கருவி. சில நேரங்களில் மிக மிக அவசியமான கருவி.  

அப்படி ஒரு வெறித்தனமான சினிமா பார்க்கும் மோகம். முதல் மரியாதை சிவாஜி மாதிரி தான் நாமும். கவலைய மறக்க ராதாவிடம் செல்லும் சிவாஜியை தப்பா பார்க்க கூடாது. பார்க்க முடியாது. மீன் குழம்பும் மயில் இறகும் கொடுக்கும் சந்தோஷத்தை நாடி செல்லும் சிவாஜிபோல், சினிமா என்னும் 'குட்டி கழுதையை' தேடி செல்கிறேன். செல்கிறோம்.



அலாரம் மணி ஒலித்தது. வெள்ளிக்கிழமை விடியற்காலை 1 ஆனது. கைபேசியிலேயே, அரை தூக்கத்துடன், டிக்கெட் புக் பண்ணலாம்னு பார்த்தேன்....ம்ஹும். சென்னையில் முதல் இரண்டு காட்சிகள் திரையிட படாதுனு ஒரு செய்தி.  ஆஹா, இது தான் காரணமா இருக்குமோ. வெளியூர் காட்சிகளைப் பாதிக்குமா என்ன?  அட போங்கப்பா! சினிமா வியாபாரம் புரியாதவளாய், மறுபடியும் தூங்கிட்டேன்.

மறுபடியும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து பார்த்தேன்.

"சார் எப்ப சார் கடைய திறப்பீங்க?"




வெளிக்கிழமை 28/4/17 காலை 9.30 ஆனது. அப்போது தான் தமிழ் காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. எப்பாடா, கட்டப்பா!!

பொறு பொறு....என்னது? டிக்கெட் விலை $18 வெள்ளியா?
உலகம் முழுதும் 9000 திரையரங்குகளில் வெளியிட்டுமா ஒரு டிக்கெட்டின் விலை $18?

கபாலி, 4500 உலகதிரையரங்குகளில் வெளியிட்டபோது, $18.
நிறைய இடத்தில் திரையிட்டால், விலை குறையுனும் தானே!?
ஆட உங்க சினிமா வியாபாரம் எனக்கு மறுபடியும் புரியல!

பொதுவா, நான் தனியா தான் சினிமா பார்ப்பேன். அதுக்கே ஒரு கிட்னிய அடமானம் வைச்சு தான் பார்க்கனும். விலைவாசியும் நம்ம வருமானமும் அப்படிப்பட்ட ஒரு designல தவிக்குது. இந்த தடவ அம்மா அப்பா ரெண்டு பேர்க்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கனும். அவங்களும் வரனும்னு ஆசைப்பட்டாங்க. கிட்னிய அடமானம் வைக்கலாமா? இல்ல அம்மாகிட்ட அவங்க டிக்கெட்டுக்கு மட்டும் காசு கேட்கலாமா?

காசு கொடு ஆத்தா வையும்- சப்பாணி சொன்ன மாதிரி,
நான் போய் காசு கேட்டா தான், ஆத்தா வையும்!

சரி, ரெண்டு கிட்னிய வித்துட வேண்டியது தான்.

இரவு மணி காட்சிக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு. ஒரே குதூகலம். பாகுபலி 1 எப்படி ரசிச்சு பார்த்தேனோ அப்படி இன்னொரு அனுபவம் கிடைக்க போகுதுனு ஒரே சந்தோஷம்.

*******************************
 வேலை முடிஞ்சு வீட்டுக்கு போயாச்சு.

நான்: அப்பா, night show. பாகுபலி2 பாக்க போறோம்.

ஊர்ல ரிலிஸ் ஆகுற எல்லா படத்தையும் பாத்துட்டு, வாய்கிழிய கருத்து சொல்லும் பிள்ளையாகிய நான், என்னுடைய அப்பா: பாகுபலியா? அன்னிக்கு சன் டிவில போட்டானே!

நான்: சன் டிவிலயா?

அப்பா: ஆமா பாகுபலி. விஜய் காட்டுக்குள்ள இருந்து மருந்து குடிப்பானே அதானே பாகுபலி?

நான்: அது, பாகுபலி இல்ல. அது புலி.

**************************************************

பாகுபலி பாகுபலி.
MA MA philosophy philosophy என்று அவருக்கு விளக்கம் கூறி, அதிகம் படம் பார்க்காத அவரை தயார் செய்யும் கடமையும் எனக்கு இருந்தது.  பாகுபலி1 என்ன, பிரபாஸ் யாரு, ராணா யாரு, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷண்ன் என்ன பண்ணாங்க. எல்லாத்தையும் சொன்னேன்.   அம்மா, நிறைய படங்களை பார்த்து update செய்து கொள்வார். ஆக, ஒற்றை ஆளுக்கு மட்டும் பாகுபலி courseயை முடித்துகொண்டு கிளம்பினோம் திரையரங்கிற்கு.

முதல் நாள் பயங்கரம் கூட்டமா இருக்கும் என்பதால், அதிக கூட்டம் இல்லாத ஒரு அரங்கத்தில் தான் டிக்கெட் புக் செய்து இருந்தேன். ஆனா அந்த இடம் மகிழ்மதி ஏரியாவெல்லாம் தாண்டி ஒரு இடத்துல இருந்துச்சு. போய் சென்று அடைவதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு.

*********************************

படம் முடிந்து வெளியே வந்தபோது, ஒரு வெறுமை. என்ன டா இது! நமக்கு மட்டும் தான் இந்த உணர்வா?

பாகுபலி 1 அளவுக்கு இல்லையே! லிங்குசாமி சொன்னதுபோல் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி தள்ளிவிட்டார் ராஜமௌலி! VFX softwareல் இருக்கும் அனைத்து tools/options எல்லாத்தையும் பயன்படுத்தி இருக்கிறார் போல.

ஆனா, திரைக்கதையில் சறுக்கல். இப்படி சீரியஸான கட்டப்பா முதல் ஒரு மணி நேரம் காமெடி செய்ததெல்லாம் ஒத்துக்கொள்ளவே முடியாது. அதுக்கு அப்பரம் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என காராணம் சொன்ன போது என்னால் உணரவே முடியவில்லை (அப்போது முட்டியும் முதுகும்கூட உணர்ச்சியை இழந்தது, 3 மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் அப்படி தான்)



பாகுபலி 1ல், அறிவாளியாக திகழ்ந்த சிவகாமி இதில் ஆ வூனா அரசர் பதவியை எல்லாருக்கும் எடுத்து கொடுக்குது. முதலில் பாகுபலி தான் ராஜா! அப்பரம் தப்பு நடக்க, ராணா தான் ராஜா! அதுக்கு அப்பரம் குடும்ப பிரச்சன ஏற்பட, இல்ல இல்ல இந்த குழந்தை தான் ராஜானு சொன்னபோது,

"யம்மா சாமி! சட்டுபுட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க! முட்டி வலிக்குதுலே!"

போர் காட்சிகள் சில இடங்களில் 'bore' அடிக்க தொடங்கியது. ஆனா, எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது- படத்தின் வசனங்கள்! அழகு தமிழ்!

நன்றி, மதன் கார்க்கி அவர்களே! செம்ம போங்க!!!

அதுக்கு அப்பரம் பிரபாஸ் மற்றும் ராணா. தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள் பட்டியலில் நிச்சயம் இவர்கள் உண்டு.

பாகுபலி 1 பார்க்கும்போது, தோழிகளுடன் சென்றதால், "ராணா, நான் தான் உன் மைனா" என சத்தம்போட்டு கூவி எங்கள் அன்பை வெளிப்படுத்தினோம்.

 நமக்க எப்பயாச்சும் ஒரு தடவ தான் 'good hair day' நிகழும். பாகுபலி 2ல், பிரபாஸின் முடி காற்றில் பறக்கும்போதெல்லாம், என்னால் ஒன்னும் சொல்ல முடியவில்லை, இடது பக்கம் பார்வதியும், வலது பக்கம் சிவனும் இருந்ததால்.

அதிகமாய் ஜொள்ளுவிட முடியாமல் தவித்தேன்.



*************************************

அம்மா, "கட்டப்பா பாகுபலிய குத்தும்போது அழுதுட்டேன்" என்று படம் பிடித்து இருந்தது என அவரின் கருத்தை சொல்ல, அப்பா மட்டும் ஒன்றுமே சொல்லாமல் இருந்தார். அவர் செய்த வேலை அப்படி.

இந்த படக்குழுவினர் அனைவருமே ஒன்று கூடி தேம்பி தேம்பி அழது இருப்பாங்க- அப்படி ஒரு காரியம்.

படம் பார்த்து கொண்டு இருந்தேன். படம் ஆரம்பித்த 40வது நிமிடத்தில் வலது பக்கம் திரும்பி பார்த்தேன், அப்பா நன்றாக தூங்கி கொண்டு இருந்தார்!