May 1, 2017

(பாகுபலி) படம் பார்க்க போன கதை.

வியாழக்கிழமை இரவு 27/4/2017. என் அறையில் இருந்த கடிகாரத்தை பார்த்தேன் . 8 மணி என காட்டியது.

 திரையரங்கு இணையதளத்தை கிளிக் செய்தேன்.
'28/4/2017. முதல் காட்சி மதியம் 1.20க்கு. பாகுபலி 2.'

ஆனா இந்தி பதிப்பு. சரி மறுபடியும் திரையரங்கு இணையதளத்தை refresh செய்து பார்த்தேன். தமிழ் காட்சிகள் உண்டு என்ற தகவல் மட்டுமே.சரி இன்னும் கொஞ்சம் நேரத்தில தமிழ் காட்சி டிக்கெட்களை வெளியிடு செய்துவிடுவான் என்ற நம்பிக்கையில்எ, மடிக்கணினியில் முடிக்காமல் கிடக்கும் அலுவலக வேலையை செய்ய தொடங்கினேன்.

இரவு மணி 10.05. மறுபடியும் திரையரங்கு இணையதளத்தை பார்த்தேன். இன்னும் ஒன்னும் இல்லை.  ஒரு பத்து தடவ refresh செய்து இருப்பேன். நம்ம வாழ்க்கை மாதிரி அதுவும் எந்த மாற்றமும் இல்லாமல், காட்டியதையே மறுபடியும் காட்டியது. இன்னொரு திரையரங்கு இணையதளத்திற்கு சென்று பார்த்தால், அங்கும் இந்தி, தெலுங்குக்கு மட்டுமே டிக்கெட் இருக்கிறது.

இது என்ன டா தமிழுக்கு வந்த சோதனை!

பாகுபலியை, தமிழில் மட்டுமே பார்ப்பேன்.

இதுவே என் கட்டளை 
என் கட்டளையே 
என் சாசனம் 

அப்படினு ரம்யாகிருஷணன் மாதிரி மைண்ட் வாய்ஸ் தெறித்தது. டிவிட்டரில் தகவல் ஏதேனும் இருக்குமா என்று அங்க சென்றும் பார்த்தேன். ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை.

திரையரங்கிற்கு phonecall செய்தேன், "ஹாலோ சார்...." என்று முடிப்பதற்குள்,

 அவர் மறுமுனையில், "மேடம், பாகுபலி இன்னும் ரெண்டு மணி நேரத்துல டிக்கெட் வெளியிடுவோம்" னு வெடுக்கென்று, ஆங்கிலத்தில்  சொல்லிவிட்டு வைத்து விட்டார்.


எரிச்சல், கொஞ்சம் கோபம், ஆதங்கம்.
இந்தி காட்சி திரையரங்கு டிக்கெட் விற்பனை எப்படி இருக்குனு இணையதளத்துல போய் கண்ணோட்டமிட்டால், கிடுகிடுவென்று முக்கால்வாசி டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டன.

தமிழுக்கு கிடைக்காத ஒன்று...ச்சே....ரோஜா படம் அரவிந்த்சாமி மாதிரி ஏதாச்சு தமிழ் கொடியில குதிச்சு நம்ம தமிழ் உணர்வ காட்டிடலாமானு வேறு தேவையில்லாத ஒரு யோசனை.

இரவு மணி கிட்டதட்ட 11 ஆகிவிட்டது. எந்த நல்ல செய்தியும் வரல. தூக்கம் வேற கண்ணுல சொக்குது. சரி, அலாரம் வைத்துவிட்டு சரியா நள்ளிரவு எழுந்து பார்க்கலாம்னு மெத்தையில் படுத்தேன்.

அட...ச்சே... ஒரு படத்துக்கா இவ்வளவு மனபோராட்டம் என்று அசைபோட்ட படி கிடந்தேன். சினிமா ஒரு பொழுது போக்கு மட்டும் இல்ல, இப்ப உள்ள சூழ்நிலையில் அது ஒரு escapism. மன உளைச்சல், சோகம், துக்கம், கவலை, வேலை, ஈமெயில்- இதை எல்லாத்தையும் தூக்கி போட்டு வேற ஒரு உலகத்துக்கு நம்மை அழைத்து செல்லும் ஒரு கருவி. சில நேரங்களில் மிக மிக அவசியமான கருவி.  

அப்படி ஒரு வெறித்தனமான சினிமா பார்க்கும் மோகம். முதல் மரியாதை சிவாஜி மாதிரி தான் நாமும். கவலைய மறக்க ராதாவிடம் செல்லும் சிவாஜியை தப்பா பார்க்க கூடாது. பார்க்க முடியாது. மீன் குழம்பும் மயில் இறகும் கொடுக்கும் சந்தோஷத்தை நாடி செல்லும் சிவாஜிபோல், சினிமா என்னும் 'குட்டி கழுதையை' தேடி செல்கிறேன். செல்கிறோம்.அலாரம் மணி ஒலித்தது. வெள்ளிக்கிழமை விடியற்காலை 1 ஆனது. கைபேசியிலேயே, அரை தூக்கத்துடன், டிக்கெட் புக் பண்ணலாம்னு பார்த்தேன்....ம்ஹும். சென்னையில் முதல் இரண்டு காட்சிகள் திரையிட படாதுனு ஒரு செய்தி.  ஆஹா, இது தான் காரணமா இருக்குமோ. வெளியூர் காட்சிகளைப் பாதிக்குமா என்ன?  அட போங்கப்பா! சினிமா வியாபாரம் புரியாதவளாய், மறுபடியும் தூங்கிட்டேன்.

மறுபடியும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து பார்த்தேன்.

"சார் எப்ப சார் கடைய திறப்பீங்க?"
வெளிக்கிழமை 28/4/17 காலை 9.30 ஆனது. அப்போது தான் தமிழ் காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. எப்பாடா, கட்டப்பா!!

பொறு பொறு....என்னது? டிக்கெட் விலை $18 வெள்ளியா?
உலகம் முழுதும் 9000 திரையரங்குகளில் வெளியிட்டுமா ஒரு டிக்கெட்டின் விலை $18?

கபாலி, 4500 உலகதிரையரங்குகளில் வெளியிட்டபோது, $18.
நிறைய இடத்தில் திரையிட்டால், விலை குறையுனும் தானே!?
ஆட உங்க சினிமா வியாபாரம் எனக்கு மறுபடியும் புரியல!

பொதுவா, நான் தனியா தான் சினிமா பார்ப்பேன். அதுக்கே ஒரு கிட்னிய அடமானம் வைச்சு தான் பார்க்கனும். விலைவாசியும் நம்ம வருமானமும் அப்படிப்பட்ட ஒரு designல தவிக்குது. இந்த தடவ அம்மா அப்பா ரெண்டு பேர்க்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கனும். அவங்களும் வரனும்னு ஆசைப்பட்டாங்க. கிட்னிய அடமானம் வைக்கலாமா? இல்ல அம்மாகிட்ட அவங்க டிக்கெட்டுக்கு மட்டும் காசு கேட்கலாமா?

காசு கொடு ஆத்தா வையும்- சப்பாணி சொன்ன மாதிரி,
நான் போய் காசு கேட்டா தான், ஆத்தா வையும்!

சரி, ரெண்டு கிட்னிய வித்துட வேண்டியது தான்.

இரவு மணி காட்சிக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு. ஒரே குதூகலம். பாகுபலி 1 எப்படி ரசிச்சு பார்த்தேனோ அப்படி இன்னொரு அனுபவம் கிடைக்க போகுதுனு ஒரே சந்தோஷம்.

*******************************
 வேலை முடிஞ்சு வீட்டுக்கு போயாச்சு.

நான்: அப்பா, night show. பாகுபலி2 பாக்க போறோம்.

ஊர்ல ரிலிஸ் ஆகுற எல்லா படத்தையும் பாத்துட்டு, வாய்கிழிய கருத்து சொல்லும் பிள்ளையாகிய நான், என்னுடைய அப்பா: பாகுபலியா? அன்னிக்கு சன் டிவில போட்டானே!

நான்: சன் டிவிலயா?

அப்பா: ஆமா பாகுபலி. விஜய் காட்டுக்குள்ள இருந்து மருந்து குடிப்பானே அதானே பாகுபலி?

நான்: அது, பாகுபலி இல்ல. அது புலி.

**************************************************

பாகுபலி பாகுபலி.
MA MA philosophy philosophy என்று அவருக்கு விளக்கம் கூறி, அதிகம் படம் பார்க்காத அவரை தயார் செய்யும் கடமையும் எனக்கு இருந்தது.  பாகுபலி1 என்ன, பிரபாஸ் யாரு, ராணா யாரு, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷண்ன் என்ன பண்ணாங்க. எல்லாத்தையும் சொன்னேன்.   அம்மா, நிறைய படங்களை பார்த்து update செய்து கொள்வார். ஆக, ஒற்றை ஆளுக்கு மட்டும் பாகுபலி courseயை முடித்துகொண்டு கிளம்பினோம் திரையரங்கிற்கு.

முதல் நாள் பயங்கரம் கூட்டமா இருக்கும் என்பதால், அதிக கூட்டம் இல்லாத ஒரு அரங்கத்தில் தான் டிக்கெட் புக் செய்து இருந்தேன். ஆனா அந்த இடம் மகிழ்மதி ஏரியாவெல்லாம் தாண்டி ஒரு இடத்துல இருந்துச்சு. போய் சென்று அடைவதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு.

*********************************

படம் முடிந்து வெளியே வந்தபோது, ஒரு வெறுமை. என்ன டா இது! நமக்கு மட்டும் தான் இந்த உணர்வா?

பாகுபலி 1 அளவுக்கு இல்லையே! லிங்குசாமி சொன்னதுபோல் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி தள்ளிவிட்டார் ராஜமௌலி! VFX softwareல் இருக்கும் அனைத்து tools/options எல்லாத்தையும் பயன்படுத்தி இருக்கிறார் போல.

ஆனா, திரைக்கதையில் சறுக்கல். இப்படி சீரியஸான கட்டப்பா முதல் ஒரு மணி நேரம் காமெடி செய்ததெல்லாம் ஒத்துக்கொள்ளவே முடியாது. அதுக்கு அப்பரம் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என காராணம் சொன்ன போது என்னால் உணரவே முடியவில்லை (அப்போது முட்டியும் முதுகும்கூட உணர்ச்சியை இழந்தது, 3 மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் அப்படி தான்)பாகுபலி 1ல், அறிவாளியாக திகழ்ந்த சிவகாமி இதில் ஆ வூனா அரசர் பதவியை எல்லாருக்கும் எடுத்து கொடுக்குது. முதலில் பாகுபலி தான் ராஜா! அப்பரம் தப்பு நடக்க, ராணா தான் ராஜா! அதுக்கு அப்பரம் குடும்ப பிரச்சன ஏற்பட, இல்ல இல்ல இந்த குழந்தை தான் ராஜானு சொன்னபோது,

"யம்மா சாமி! சட்டுபுட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க! முட்டி வலிக்குதுலே!"

போர் காட்சிகள் சில இடங்களில் 'bore' அடிக்க தொடங்கியது. ஆனா, எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது- படத்தின் வசனங்கள்! அழகு தமிழ்!

நன்றி, மதன் கார்க்கி அவர்களே! செம்ம போங்க!!!

அதுக்கு அப்பரம் பிரபாஸ் மற்றும் ராணா. தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள் பட்டியலில் நிச்சயம் இவர்கள் உண்டு.

பாகுபலி 1 பார்க்கும்போது, தோழிகளுடன் சென்றதால், "ராணா, நான் தான் உன் மைனா" என சத்தம்போட்டு கூவி எங்கள் அன்பை வெளிப்படுத்தினோம்.

 நமக்க எப்பயாச்சும் ஒரு தடவ தான் 'good hair day' நிகழும். பாகுபலி 2ல், பிரபாஸின் முடி காற்றில் பறக்கும்போதெல்லாம், என்னால் ஒன்னும் சொல்ல முடியவில்லை, இடது பக்கம் பார்வதியும், வலது பக்கம் சிவனும் இருந்ததால்.

அதிகமாய் ஜொள்ளுவிட முடியாமல் தவித்தேன்.*************************************

அம்மா, "கட்டப்பா பாகுபலிய குத்தும்போது அழுதுட்டேன்" என்று படம் பிடித்து இருந்தது என அவரின் கருத்தை சொல்ல, அப்பா மட்டும் ஒன்றுமே சொல்லாமல் இருந்தார். அவர் செய்த வேலை அப்படி.

இந்த படக்குழுவினர் அனைவருமே ஒன்று கூடி தேம்பி தேம்பி அழது இருப்பாங்க- அப்படி ஒரு காரியம்.

படம் பார்த்து கொண்டு இருந்தேன். படம் ஆரம்பித்த 40வது நிமிடத்தில் வலது பக்கம் திரும்பி பார்த்தேன், அப்பா நன்றாக தூங்கி கொண்டு இருந்தார்!


No comments: