Apr 30, 2009

இந்த எழவு எல்லாம் ஆர்மோன் செய்யும் கலகம் தானடா!

இருவரும் threadmillலில் ஓடினர் 20 நிமிடங்களுக்கு. சனிக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது உடற்பயிற்சி மையத்தில். பெண்கள் ஆண்கள் என நிறைய பேர் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். 10 நிமிடம் பிரேக் எடுத்து கொள்வதற்காக ஷாலினியும் ரீனாவும் அங்கிருந்த சோபாவில் ஓய்வு எடுத்தனர். கையில் இருந்த '100- plus energy drink' பாட்டிலை ஷாலினியிடம் தூக்கிபோட்டாள் ரீனா.

ரீனா தனக்கும் ஒரு பாட்டிலை எடுத்து திறந்து குடித்தாள். அவர்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலிருந்து ஆண்கள் பயிற்சி செய்வதை நன்கு பார்க்கலாம். ரீனா பார்த்து வியப்படைந்தாள். "oh god... just look at him. he's so cuteee..." ரீனா நல்லா சைட் அடித்தாள்.

ஷாலினிக்கு இந்த சைட் அடிப்பது, ஆண்களை பற்றி பேசுவது-எதுவுமே பிடிக்காது என்பதால் ரீனா சொல்வதை காது கொடுத்து கேட்கவில்லை.

"அங்க பாரேன்...." ரீனா குஷியாகி ஷாலினியின் மடியை தட்டினாள்.

"ஏய் ரீனா... stop your nonsense. behave yourself!" அதட்டினாள் ஷாலினி.

"ஏய்.. பாட்டி மாதிரி பேசாத. we are 23 only. இப்ப சைட் அடிக்காம அப்பரம் எப்போ?" மீண்டும் தன் பார்வையை ஆண்கள் உடற்பயிற்சி இடத்திற்கு திருப்பினாள்.

"நான் கிளம்புறேன்." வெறுப்புடன் ஷாலினி புறப்படும்போது, ரீனா அவள் கையை வலுகட்டாயமாக பிடித்து மறுபடியும் சோபாவில் உட்கார வைத்தாள்.

"ஏய் என்ன ஆச்சு? ஏன் உனக்கு இதலாம் பிடிக்கறது இல்ல.... எனக்கு தெரிஞ்சு.... ரொம்ப காலமா இப்படியே இருக்கீயே ஏன்? you mean you don't like guys?" வினாவினாள் ரீனா. பதில் எதுவும் பேசாமல் கீழே படத்து push-up செய்ய ஆரம்பித்தாள்.

"ஓய் ஷாலு... i am talking to you." தனக்கு பதில் அளிக்குமாறு ரீனா, தன் குரலை உயர்த்தினாள்.

"என்ன மேன் உனக்கு வேணும்?.... எனக்கு ஆண்கள பிடிக்காதுன்னு நான் சொன்னதே இல்லையே..there is nothing fascinating about them. that's all. and i feel disgusted about these unwanted concepts of சைட் அடிக்கறது....love... what not." ஷாலினி நெத்தியடியான பதிலை கூறினாள்.

"அதான் ஏன்? இங்க பாரு... 10 பேர பாத்தோமா... அதுல 5 பேர செலக்ட் பண்ணோமா... அதுல 3 பேர ஃபிரண்டாக்கி... அதுல நமக்கு பிடிச்ச ஒருத்தன காதலிச்சோமான்னு... இருக்கனும். இதாண்டி லைவ்! பாரு... சொல்லும்போதே, எவ்வளவு excitingஆ இருக்கு?" ரீனா கண்களில் உற்சாகம் துள்ளியது.

"காதலிச்சு?" கேள்வி தொடுத்தாள் ஷாலினி.

"அப்பரம் என்ன.... கல்யாணம் தான்...." ரீனா புன்னகையித்தாள்.

"அப்பரம்?" ஷாலினி புருவங்களை உயர்த்தி.

"அப்பரம் என்னடி அப்பரம்... கல்யாணம்... குடும்பம், சந்தோஷம்... குழந்தைங்க..." பதில் அளித்தாள் ரீனா.

"கல்யாணமா? marriage is a gamble! அதுல யாரும் ஜெயிச்சதா சரித்திரம் கிடையாது." ஷாலினி கூறினாள். ரீனாவிற்கு குழப்பமாக இருந்தது. sit-ups செய்து கொண்டே ஷாலினி,

"ரெண்டு பேருமே ஏதோ ஒரு வகையில தங்களோட தனித்தன்மைய இழக்கனும்."

"சில விஷயங்கள இழக்கறதுல தான் அதிக சந்தோஷம் கிடைக்கும்." ரீனாவின் பதில்.

சிரித்து கொண்டே 10வது sit-upயை தொடர்ந்தாள் ஷாலினி, "அப்படின்னு நாமே நம்மள ஏமாத்திகிட்டு வரோம். 25 வருஷமா நம்ம நாமாகவே இருந்துட்டு, அப்பரம் மத்தவங்களுக்காக நம்மள மாத்திக்கனுமா? we lose this game no matter what happens."

"என்ன ஷாலு நீ... தோத்துடுவோம், தோத்துடுவோம்னு சொல்லிகிட்டு இருக்கே... இது நீ சொல்ற மாதிரி விளையாட்டு இல்ல. இது வாழ்க்கை. இதுல விட்டுகொடுக்கறது சகஜம் தான். அன்பு, பாசம், காதல், அக்கறை... see... so many emotions and feelings!... அனுபவிக்கனும் ஷாலு!" ரீனா jumping jacks செய்தாள்.

"காதல்?? பாசம்?? ஹாஹா... all utter crap. ஆயுத எழுத்து படத்துல வர சுஜாதா வசனம் மாதிரி... இதலாம் சும்மா organic chemistry..x chromosome, y chromosome, xx, xy.. அவ்வளவு தான். ஓட்டல், பீச், பார்க், பெட். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதுக்கு அப்பரம் chapter over." சலித்து கொண்டாள் ஷாலினி.

ரீனாவிற்கு சற்று கோபம் வந்தது, "ஏய், உலகத்துல யாரும் கல்யாணம் பண்ணிக்கலையா? சந்தோஷமா இல்லையா? இதலாம் நடக்கலைன்னா, நீயும் நானும் இப்படி இங்க நின்னு பேசிகிட்டு இருக்கமாட்டோம்!"

"கல்யணாம் பண்ணியிருக்காங்க. ஆனா அவங்கள கேட்டு பாரு, வாழ்க்கைல ஒரு தடவையாவது நினைச்சு இருப்பாங்க ஏண்டா கல்யாணம் பண்ணிகிட்டோம்னு! நீயும் நானும் இங்க இருக்குறது.... it was not our choice babe. I can't be responsible for the choice being made." என்று சொல்லிவிட்டு சைக்கிளிங் வண்டியில் level 10 என்று பட்டனை அழுத்தினாள்.

பக்கத்திலுள்ள படிஏறும் இயந்திரத்தில் ஏறினாள் ரீனா.

"இப்ப வக்கனையா பேசுவே? ஆனா, நாளைக்கே... வயசான பிறகு நமக்கு ஒரு துணை இருக்கனும்னு நினைப்ப... atleast ஒரு பிள்ளையாவது நம்மகூட இருக்கனும்னு கண்டிப்பா நினைப்ப." ரீனா பேசினாள்.

வேர்வை கொட்ட விடை அளித்தாள் ஷாலினி, " அப்படி ஒரு நினைப்பு எனக்கு வராது. டீவி, புக்ஸ், இசை, நிம்மதியான தூக்கம், ஆரோக்கியமான உடல்நிலை, அளவான சாப்பாடு,traveling around the world... இது போதும்டி எனக்கு. தனிமையில் நிச்சயம் இனிமைய அனுபவிக்க முடியும். பிள்ளையா? ஹாஹா... குழந்தைங்கலாம் ஒன்னாவது போகும்வரைக்கு தான் cuteஆ இருப்பாங்க. அதுக்கு அப்பரம் வளர்ந்து.... அதுங்க teenage வயச அடைஞ்ச பிறகு, போடுற skirt கட்டையா போகும், பேசுற வாய் நீளமா போகும்.... அப்பரம் அவங்கள நினைச்சு நினைச்சு... சோகம் தான்! இதலாம் நமக்கு தேவையா?"

"ஓய்.... நீ ஏன் இப்படி pessimisticஆ இருக்க? நல்லதே உன் மனசுல தோணாதா?அப்பரம் பிள்ளைங்க இருக்குறவங்க எல்லாம் என்ன சோகமாவா இருக்காங்க?" 100 calories burnt out என்று ரீனாவின் இயந்திரத்தில் காட்டியது.

"ஹாஹா.... சரி உன் வழிக்கே வரேன்... ஆனா... என்ன guarantee?" ஷாலினி புருவங்களை உயர்த்தினாள்.

"guaranteeஆ? ஏய்... இது வாழ்க்கை ஷாலு... இதுக்கு போய்..." ரீனாவின் பதில்.

"அது எப்படி ரீனா... கடைக்கு போய் ஒரு டீவி வாங்குறோம். 24 மணி நேரமும் பாக்க போறது கிடையாது.. எப்பவாச்சு பாக்குற டீவிக்கே 5 வருஷம் guarantee கிடைக்குமா இல்ல... அதுக்கு மேலயும் டீவி ஏதாச்சு இருக்கான்னு பாக்குறோம். எப்பவாச்சு பாக்குற டீவிக்கே guarantee முக்கியம். கடைசி வரைக்கும் வாழற போற வாழ்க்கைக்கு?... உன்னால life-long guarantee கொடுக்க முடியுமா?" தனது கருத்தை ஆணித்தரமாக மறுபடியும் ரீனா முன்னிலையில் வைத்தாள் ஷாலினி.

தொடர்ந்தாள் ஷாலினி,

"சரி... கல்யாணம் பண்ணிக்கிறோம்....நம்ம வேலைக்கு போறோம். வார நாட்கள்ல சமைக்க முடியாது... வீக்கெண்ட்டுல தான் முடியும்னு சொல்றோம். ஆரம்பிக்கும்போது எல்லாம் நல்லா தான் போகும். ஆனா திடீரென்னு சொல்வாங்க... ஏன் நீ வார நாட்களையும் சமைக்க டிரை பண்ணலாமேன்னு? அப்ப நமக்கே தோணும்... ஐயோ அப்ப நம்ம எடுத்த முடிவு தப்பான்னு... நம்மளே நம்மை சந்தேகப்பட ஆரம்பிச்சுடுவோம். நம் முடிவு மேலயே நமக்கு தன்னம்பிக்கை வராம போயிடும்...."

ரீனா சகித்து கொண்டு பதில் அளித்தாள், "உன்னைய திருத்த முடியாது.. வாழ்க்கையில் நீ நிறைய விஷயங்கள மிஸ் பண்ண போற.."

"கண்டிப்பா கிடையாது. be single, double the happiness. கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாமே இனிக்கும் விருந்து தான்... அதுக்கு அப்பரம் எல்லாம் வேப்பங்கொழுந்து!" வாய் விட்டு சிரித்தாள் ஷாலினி.

தனது சிரிப்பை தொடர்ந்தாள், "பொண்ணுங்க மட்டும் இல்ல... பாவம் ஆண்களும் நிறைய கஷ்டங்கள பாக்க வேண்டிய சூழ்நிலை வரும். இப்ப ஒரு உதாரணம்... எல்லாரும் வெளியே போறோம். நமக்கு பிடிச்ச கலருல ஒரு சேலை கட்டிகிட்டு போறோம். அப்போ மாமியாருக்கு அந்த கலரு பிடிக்காது.... போய் வேற கட்டிகிட்டு வான்னு சொல்வாங்க. பிடிச்ச கலர கூட போட முடியாத சூழ்நிலை நமக்கு. அம்மா பேச்சையும் தட்ட முடியாது, மனைவி ஆசையும் நிறைவேறாமல் போயிடுச்சேன்னு அவரும் நினைப்பாரு... கஷ்டம் ஆண்களுக்கு தான்... "

"ஏய்.. கண்ட கண்ட புத்தகத்த படிச்சு நீ ரொம்ம்ப கெட்டு போய் இருக்க.. அது மட்டும் நல்லா தெரியுது." ரீனா தனது உடற்பயிற்சியில் கவனத்தை செலுத்தினாள்.

"ஏய் உனக்கு இன்னொரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ....நமக்குள்ள இருக்குற ஈகோவ தட்டி எழுப்புற function பேரு தான் கல்யாணம்!" என்று ரீனாவின் முகத்தை பார்த்து கூறியபோது ரீனாவிற்கே ஆச்சிரியம் கலந்த சிரிப்பு வந்தது.

"உனக்கு யாரடி இதலாம் சொல்லி கொடுக்குறா? உன்கூட பேசுன்னா... எல்லாரையும் ஆஞ்ஜநயா பக்தரா ஆகிடுவே!" என்றாள் ரீனா. உடற்பயிற்சி முடித்து கார் பார்க்கில் இருந்த தனது காரை நோக்கி நடந்தாள் ஷாலினி, பக்கத்தில் ரீனா.

"இதலாம் யாரும் சொல்லி கொடுக்க தேவையில்ல. உலகத்த பாத்து தோன்ற விஷயம் தான் இது. இங்க பாரு.. நீ கேட்டே, நான் என் கருத்த சொன்னேன். அதுக்கும் நீயும் இதே மாதிரி ஆகனும்னு சொல்லல. நாளைக்கே உனக்கு கல்யாணம்னா, முதல் ஆளா வந்து நிற்பேன் பெரிய giftடோட, குழந்தைக்கு பெயர் வைக்கனுமா... கண்டிப்பா நல்ல பெயர select பண்ணி தருவேன். நீ உன் விருப்பப்படி வாழு, நான் என் விருப்பப்படி இருக்குறேன். அவ்வளவு தான். one man's poison is another man's meat!" ஷாலினி ரீனாவின் வீட்டை அடைந்தாள்.

"சரி சரி... உன் வீடு வந்தாச்சு... கிளம்பு... நாளைக்கு ஜிம்ல பார்க்கலாம்!" ஷாலினி சொல்ல, ரீனாவும் அமைதியாக வீட்டை நோக்கி நடந்தாள். களைப்பாக இருந்ததால், குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தாள். ஷாலினி சொன்ன வார்த்தைகள் அவள் மூளையிலும் மனதிலும் எதிரோலித்தது- organic chemistry, x chromosome, y chromosome, be single double the happiness, life-long guarantee. நினைத்து கொண்டே தூங்கினாள்.

எழுந்தாள்.மதிய 2 மணி ஆகியது, ஷாலினிக்கு ஃபோன் செய்தாள்.

"என்ன ரீனா... இன்னும் கேள்வி கேக்கனுமா? சண்டைய நீ இன்னும் முடிக்கலையா?" சிரித்தாள் ஷாலினி.

"அது எல்லாம் ஒன்னுமில்ல... சும்மா தான் ஃபோன் செஞ்சேன். சாப்பிட்டீயா?" வினாவினாள் ரீனா.

"ம்ம்ம்... ஆச்சு. இப்ப வெளியே கிளம்பிகிட்டு இருக்கேன்..." என்றாள் ஷாலினி.

"எங்க?" கேட்டாள் ரீனா.

"single's club meeting..." விடை சொன்னாள் ஷாலினி.

"நானும் வரலாமா?" என்றாள் ரீனா. வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள் ஷாலினி.

*முற்றும்*

Apr 29, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்(5)

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்- விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் ஆடி கொண்டிருக்கும் நந்தா. சில வருடங்களுக்கு முன் ஜான் பிர்த்தோ என்னும் நடன பள்ளியில் குரூப் டான்ஸராக இருந்தவர். அமெரிக்காவில் masters பட்டம்(நடனத்தில்) பெற்றவர். jazz ஸ்டைலில் கலக்குவார்.

கவர்ந்த அம்சங்கள்-குரல்(sounds veryyy sexxyy..hehe) பேசும் விதம், புன்னகை

இதே சமயம், இன்னொரு கண்ணில் சைட் அடித்து கொண்டிருப்பவர், இதே நிகழ்ச்சியில் சில முறை நடுவராக வந்த ஷோபி மாஸ்டர். ஆத்திச்சூடி பாடலுக்கு ஆடியவர். இவர் 15 வருடங்களுக்கு மேல் குரூப் டான்ஸராக பணியாற்றியவர். டெக்ஸி டெக்ஸி பாடலில்கூட கொஞ்ச நேரம் வருவார். முழு பாடலுக்கும் ஆடியது ஆத்திசூடி பாடலில்.

கவர்ந்த அம்சம்- curly hair, killer smile.


முன்பு சைட் அடித்தவர்களில் பட்டியல்

Apr 27, 2009

மரியாதை= சூர்யவம்சம்+வானத்தை போல

விஜய்காந்த் நடித்த மரியாதை படத்தை பார்த்தேன் சனிக்கிழமை அன்று. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த பட போஸ்ட்டரை பார்த்து சிரித்தேன். சரி, விஜயகாந்த் இன்னொரு ஒரு காமெடி படத்தை தரவுள்ளார், வாரணம் ஆயிரம் பார்ட் 2 என்று இமெயிலில் கலாய்த்து இருந்தார்கள். ஆனால், நான் நினைத்தது தவறு என்பதை காட்டிவிட்டார். தேவையில்லாத சண்டை, பஞ் டயலாக், அபத்தமான stunts, சுவரில் ஏறி அடிப்பது என்று எந்த ஒரு காமெடி விஷயத்தையும் செய்யாமல் ஒரு குடும்ப படத்தை தந்து இருக்கிறார்.

கதை, திரைக்கதை எல்லாமே சூர்யவம்சம்+ வானத்தை போல படங்களே! விக்ரமன் இதை விட்டு வெளிவராமல் இருக்கிறார். இருந்தாலும் படத்தில் எனக்கு பிடித்தது ஒரு விஷயம் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள், முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் எதுவுமே இல்லாமல் ஒரு படம். அனைவருமே குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கலாம்! இப்படி ஒரு 'சுத்தமான' படத்தை சமீப காலமாக பார்க்க முடியவில்லை. அப்படி ஒன்றை தந்ததற்கு இயக்குனர் விக்ரமனை பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தில் எனக்கு பிடித்தது:

1) வசனங்கள். படத்தில் அம்பிகா நன்றாக சமைப்பவர் அல்ல. விஜயகாந்திடம் ,"இத்தன நாளா நான் சமைச்சத எப்படி சகச்சிகிட்டு இருந்தீங்க?" என்று கேட்பார். அதற்கு பதில்- நல்ல சமைக்கறவ தான் வேணும்னா.. கல்யாணம் எதுக்கு. அதுக்கு ஒரு சமையல்காரியே போதுமே. மனைவி என்பவள் அது மட்டும் அல்ல... என்று சொல்வது ரொம்ப யதார்த்தமாக இருந்தது.

2) பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற கருத்து. தப்பு செஞ்சா கண்டிக்கனும், தொட்டதுக்கு எல்லாம் கண்டிக்க கூடாது என்று வலியுறுத்தும் காட்சிகள்

3) இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ ரீமிக்ஸ் பாடல்(கேட்பதற்கும் மட்டும் நல்லா இருந்துச்சு)

4) சில நகைச்சுவை காட்சிகள்

படத்தில் பிடிக்காதது:

1) அரைச்ச மாவையே அரைத்தது- கதை, திரைக்கதை

2) பல வருடங்களாக பார்த்து பார்த்து சலித்து போன செண்டிமெண்ட் காட்சிகள்

3) பெண் பார்க்க வரும்போது, பெண்ணை பாட சொல்வது

4) விஜயகாந்த் இன்னும் மகன் கதாபாத்திரத்தில் நடிப்பது

5) பாடல்கள் சுத்த போர். இன்னும் பின்னணி இசைக்கு விக்ரமனின் அக்மார்க் "ல்லலா...ல்லலா..." என்று இசை கொடுப்பது.

6) மீரா ஜாஸ்மீன் ரொம்ம்ப குண்டா தெரியுறாங்க. (கொஞ்ச இடையை குறைக்கவும் அக்கா)

7) எனக்கு பிடித்த வில்லன் சம்பத்(ஹிஹி...) அவருக்கு சின்ன கதாபத்திரத்தை கொடுத்தது.

8) ரீமிக்ஸ் பாடலின் நடனம்! (ஹாஹா....)

எனக்கு இன்னும் புரியாதது. அது எப்படி விக்ரமன் படங்களில் எல்லாருமே நல்லவங்களா இருப்பாங்க. உலகம் இப்படி இல்லை, சார்! லோக்கேஷன்களை மாத்துங்க சார்! வானத்தைபோல படத்தில் வந்த அதே வீடு! உஷ்ஷ்......

சூப்பர் படம் என்றும் சொல்ல முடியாது. மொக்கை படம் என்றும் சொல்லமுடியாது. சில இடங்களில் நல்லா இருக்கும், சில இடங்களில் போர் அடிக்கும். விஜயகாந்த், அம்பிகா, மீனா என்று சீனியர் நடிகர்களை விட்டு விட்டு இளசுகளை வைத்து படம் பண்ணுங்க, விக்ரமன் சார்! திறமைமிக்க ஒரு இயக்குனரிடம் அதிகமான மரியாதை வைத்திருக்கும் ஒரு ரசிகை கேட்டு கொள்வது- அரைச்ச மாவை கொஞ்சம் தள்ளி வைங்க. புதுசா யோசிங்க!

Apr 24, 2009

எக்ஸாம் முடிஞ்சபிறகு வரும் ஆசைகள்!

3rd year 2nd semester கடைசி பரிட்சையை(வெற்றிகரமா) முடித்துவிட்டேன். இனி 2 மாதம் லீவு. இரண்டு வாரம் உடல் சுகமில்லை. அப்படி இருந்தும் தேர்வை எப்படியோ போட்டு அடிச்சு முடிச்சுட்டேன். நல்லா இருக்கும்போது எழுதினாவே, ம்ஹும்.... இப்ப இந்த நிலைமையில் தேர்வு முடிவுகள் எப்படியோ! உங்கள் ஆசிர்வாதமும் பிராத்தனைகளும் ரொம்ம்ப தேவைங்கோ! இப்போ வரும் ஆசைகள்...
எனக்காக தனஷ் பேசுகிறார்.



தனஷ்: இது என் கனவு திவ்யா.சின்ன வயசுல ஒன்னாவது படிக்கும்போது mathsல 100% வாங்கினேனே, அது மாதிரி. இதலாம் கிடைக்காதா கிடைக்காதான்னு எவ்வளவு நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா. இதோ இதோ இந்த செவத்தலாம் கேட்டு பாரேன். எத்தன நாள் இது முன்னாடி நின்னு அழுது இருக்கேன்னு சொல்லும்.

எனக்கு இதாண்டா பிரச்சனை. எனக்குன்னு வரும்போது எதுவுமே நடக்குறது இல்ல. அப்படி நான் என்ன பெரிசா கேட்டேன். நீங்கலாம் வாங்குற மாதிரி சாதாரண ஒரு distinction. அது ஏன் எனக்கும் மட்டும் கிடைக்க மாட்டேங்குது. ஏன் எனக்கும் மட்டும் தப்பாவே நடக்குது. நான் என்ன பாவம் பண்ணேன் திவ்யா??

Apr 22, 2009

விழி மூடி யோசித்தால்....


ஆபிஸுக்கு 'லேட்' என்று
தெரிந்திருந்தும் உன் முத்தங்கள்
வேண்டுமென்றே
வம்புக்கு இழுக்கிறதே!
உன் உதடுகளை என்ன செய்ய?
ஐயோ, அவை மீது
கோபப்படவும் தெரியவில்லையே!


ச்சீ.. கண்ட இடத்திலெல்லாம்
கை வைக்காதே என்று
அதட்டுகிறாய்
நான் கண்ட இடங்களிலாவது
கை வைக்க
உத்தரவு தருவீயா?


நீ கொடுத்த முத்தங்களும்
உன் மீசையின் குறும்புகளும்
ஒரே நேரத்தில்
என்னை சீண்டியபோது
உணர்ந்தேன்
சுகமான அவஸ்த்தை
என்றால்
என்னவென்று!


நெடுந்தூரம் கார் பயணத்தை
இனியதாக்க
பாட்டு சத்தம் வேண்டாம்.
உன் முத்தச்சத்தம்
மட்டும் போதும்!

வாழும் போதே
சொர்க்கத்தை
அனுபவிக்க செய்கிறாய்
நீ சிந்தும் வெட்கத்துளிகளாலும்
அதில் ஜில்லென்று
தெறிக்கும் உன் முத்தங்களாலும்!
இன்று இரவு
நிறைய ஆபிஸ் வேலை
இருக்குடா என்னை
இம்சை பண்ணகூடாது
என்று திட்டவட்டமாய்
நீ சொல்லும்போதே
தெரிகிறது
'என்னை இம்சை
பண்ணுடா' என்று.


சக்கரை கசப்பு தான்
காலையில் கண் விழிக்கும்போது
நீ கொடுக்கும்
முத்தத்தை ஒப்பிடும்போது


கண்டதும் காதல்
நம் பார்வைகள்
கண்டதும் மோதல்
நம் உதடுகள்

Apr 20, 2009

daddy mummy வீட்டில் இல்ல(series 1) - பகுதி 5

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

4 பசங்க, இப்பெண்கள் அமர்ந்து இருக்கும் பஸ் ஸ்ட்டாப்பை நோக்கி வந்தனர்.

"ஏய் 4 குஜிலீங்க..." என்றான் ஒருவன். பெண்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. வேர்க்க ஆரம்பித்தது.

"தோடா...இந்த நேரத்துல...அதுவும் இந்த இடத்துல...நாலு பொண்ணுங்க...என்ன பாப்பாக்களா, பார்ட்டியோட பிக்கப் பாயிண்ட்டா இது?" இன்னொருவன் வாய்க்கு வந்தபடி உளறினான்.

உடனே கலாவுக்கு ஒரு யோசனை வந்தது. தன் கைபையில் இருந்த காலேஜ் identity cardயை வெளியே எடுத்து நீட்டினாள்,

"i am acp அன்புச்செல்வி. we are police on patrol." என்றதும் பசங்களுக்கு அதிர்ச்சி! பசங்க மப்பில் இருந்ததால் கார்ட்டை சரியாக கவனிக்கவில்லை.

பெண்களை சுற்றி நின்றவர்கள் அவர்கள் முன்னாள் சென்றனர். போலீஸ் என்று சொன்னதும் கையில் இருந்த சிகரெட்டையும் பாட்டிலையும் கீழே போட்டனர். பேச முடியாமல் அதில் ஒருவன்,

'சாரி....சாரி...மேடம்..தெரியாம...சாரி." வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.

தொடர்ந்தாள் கலா, "எங்களுக்கு நிறைய complaint வந்துச்சு. இந்த ஏரியாவுல பசங்க குடிச்சுட்டு வந்து கலாட்டா பண்றதா? சோ...நீங்க தான் அந்த culprits! am i right?" என்று மூன்று முகம் அலேக்ஸ் பாண்டியன் ரஜினி போல் அதட்டினாள்.

"இல்ல மேடம்...இல்ல... நாங்க சும்மா இந்த பக்கமா இன்னிக்கு தான்...இப்ப தான்...." பயத்தினால் என்ன சொல்வது என்று தெரியாமல் தத்தளித்தான்.

"நைட்ல கூட்டமா இப்படி போக கூடாதுன்னு rules இருக்கா இல்லையா?" சாமி விக்ரம் போல் கத்தினாள் கலா. ஒருத்தன் முகத்தை ஒருத்தன் பார்த்து கொண்டான். விஜி, சுதா, சசிக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது எப்படி இந்த கலா இப்படி போட்டு அசத்துகிறாள் என்று.

"கூட்டமா போனதுக்கு, பொது இடத்துல தண்ணி, தம் அடிச்சதுக்கு, பெண்களை கேலி செஞ்சத்துக்கு, அதுவும் பெண் போலீஸ பாத்து கிண்டல் செஞ்சத்துக்கு, சிகரெட்டையும் பாட்டிலையும் கீழே போட்டீயே..பொது இடத்துல குப்ப போட்டதுக்கு....இப்படி வரிசையா charge போட்டா உங்க நிலைமைலாம் என்ன ஆகும் தெரியுமா?" இப்போது honest raj விஜயகாந்த் போல் மாறினாள் கலா.

"மேடம் மேடம்....எங்கள ஒன்னும் பண்ணிடாதீங்க மேடம். படிக்குற பசங்க... எங்க படிப்பு...future எல்லாம் கெட்டு போயிடும் மேடம்." கலாவின் கால்களை பிடித்து கெஞ்சினான் ஒருத்தன்.

"ச்சீ...மேல ஏந்திரி. இந்த புத்தி முன்னாடி இருந்திருக்கனும்....காலேஜ் படிக்குற பசங்களுக்கு நைட்ல என்ன வேலை வெளியே?" கலா சொன்னது பசங்களுக்கு அறிவுரை சொன்னதுபோல் இருந்தாலும் விஜி, சுதா,சசிக்கு சிரிப்பு வந்தது.

"எனக்கு இவன பாத்தா சந்தேகமா இருக்கு... கஞ்சா கடத்துறவன் மாதிரி இருக்கு. check this fellow, constable 420." என்று கலா உத்தரவு போட்டாள் விஜி, சுதா, சசியை பார்த்து. யாரை பார்த்து கூப்பிடுகிறாள் என்று தெரியவில்லை. மூவரும் முழித்தனர்.

"excuse me, constable 420...you....please check him." என்று கலா சசியை பார்த்து கை நீட்டினாள். விஜிக்கும் சுதாவிற்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. சசிக்கு கோபமாக வந்தது.

"மேடம் மேடம்... எங்க கிட்ட ஒன்னுமில்ல மேடம்...." என்று அவனாகவே பாக்கெட்டில் உள்ள அனைத்தையும் வெளியே கொட்டினான். கொட்டிய பொருட்களில் நிறைய சிகரெட்டுக்கள் தான் இருந்தது.

"படிக்குற பசங்களுக்கு சிகரெட்டு ஒரு கெடு..." என்று கலா அவனின் பின் மண்டையில் அடித்தாள்.

"மேடம் மேடம்...சாரி." என்றான் மண்டையை தேய்த்து கொண்டு.

"எந்த காலேஜ்டா நீங்கலாம்?" கலா கொட்டிய பொருட்களை எடுத்து பார்த்தாள்.

"நாங்க கே எல் வி காலேஜ்" என்றார்கள். அந்த காலேஜில் தான் கலாவின் அக்கா பயின்றார். ஆகவே, அந்த காலேஜின் தலைமையாசிரியர் பெயர் கலாவிற்கு தெரிந்து இருந்தது.

"ஓ...உங்க principal...mr SE ashvan kumar தானே." என்றதும் பசங்களுக்கு மேலும் அச்சமாக இருந்தது.

"complaint எதுவும் செஞ்சுடாதீங்க.... நாங்க இனிமேலு... எந்த தப்பும் செய்ய மாட்டோம்." என்று மன்றாடினர்.

கலாவும், "சரி... this is the first and last warning...திரும்பி பாக்காம ஓடி போயிடுங்க... இதலாம் எடுத்துகிட்டு." என்றாள் கீழே விழுந்தகிடந்த பொருட்களை சுட்டி காட்டி. பசங்களும் ஒரே ஓட்டமாக ஓடினர்.

விஜி, சுதா, சசி கலாவை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. "தலிவா... நீ தான் எங்கள் டான்!" என்றாள் சுதா.

"உன் மூளைக்கு என்ன ஒரு மூளை." என்றாள் விஜி.

"எல்லாருக்கும் மூளைக்குள்ள ஐடியா இருக்கும். எனக்கு ஐடியாக்குள்ள தான் மூளையே இருக்கு." தற்பெருமை கொண்டாள் கலா.

"அது ஏண்டி... நீ மட்டும் ஏ சி பி? நான் constableஆ?" சசி கேட்டாள்.

"ஹாஹா.... அந்த நேரத்துல அப்படி வந்துட்டு டி...." கலா கூறினாள். மூவரின் தோள்களில் மீதும் கை போட்டு நடந்தாள் கலா, "நான் இருக்கேன் டி.. உங்கள காப்பாத்த."

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே என்ற தீம் மியூசிக் பின்னாடி ஒலிப்பது உங்களுக்கு கேட்குதா?

கொஞ்ச தூரம் நடந்த பிறகு, ஒரு டெக்ஸி வந்தது. வீடு வந்து அடைந்தனர். போட்டிருந்த ஆடைகளை சும்மா வெறும் தண்ணியில் அலசி எடுத்து காய வைத்தனர் வீட்டில் இருந்த எல்லாம் fanகளை ஆன் செய்து. அப்போதே மணி காலை 5 ஆகிவிட்டது. வேகமாக காய வைக்க, வீட்டில் இருந்த hair dryerயும் உதவிக்கு எடுத்தனர். துணிகளை iron செய்து எப்படி இருந்ததோ அவ்வாறே மடித்து கலாவின் அக்கா பீரோவில் வைத்தனர்.

அடித்து போட்டதுபோல் அவர்கள் உறங்கினர் காலை 6 மணி அளவில். மதியம் 1 மணிக்கு கலாவின் பெற்றோர்களும் அக்காவும் வீடு திரும்பினர். இன்னும் யாரும் எழுமால் இருப்பதை கண்ட கலாவின் அம்மா,

"என்னங்கடி..... இவ்வளவு நேரமா தூக்கம்...எந்திரிங்க..." அவர்களை திட்டினார்.

தூக்க கலக்கத்துடன் விஜி, "ஹாலோ ஆண்ட்டி... எப்ப வந்தீங்க?...."

பாதி தூக்கத்துடன், "அம்மா.... காலையில மூனு மணிக்கு எந்திரிச்சு படிச்சுட்டு இப்ப தான் காலையில 9 மணிக்கு படுத்தோம்.... " மறுபக்கம் புரண்டு படுத்தாள் கலா.

"அம்மா, எல்லாம் பொய் மா. இந்த மூஞ்சிலாம் படிச்சே இருக்காது." கலாவின் அக்கா சீண்டினாள்.

அக்காவின் குரல் கேட்டு எழுந்து உட்கார்ந்தாள் கலா. கலா, "அம்மா....இத ஏன் மா அழைச்சுகிட்டு வந்தீங்க....நான் தான் இதுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சு அங்கேயே விட்டுடு வர சொன்னேன்ல...""

அக்கா, "அப்பா... எங்க பாருங்க."

அப்பா, "அடடா...வந்தவுடனே ஆரம்பிச்சாச்சா.... சரி சரி...girls...எந்திரிங்க..." கலாவின் பெற்றோர்களும் அக்காவும் கலாவின் அறையைவிட்டு சென்றனர்.

இவர்கள் போட்ட சத்தத்தில் அனைவரும் எழுந்துவிட்டனர். படுக்கையில் புரண்டு கொண்டிருந்த கலா மற்ற பெண்களை பார்த்து, " டேடி மம்மீ பாட்டுக்கு சரியா ஆடாம விட்டுடோம்ல.."

சசி," நீ திருந்தவே மாட்டீயா? உயிர் போய் உயிர் வந்துருக்க.... உன் பேச்ச இனி கேக்கவே கூடாது." விரிந்திருந்த கூந்தலை கட்டினாள்.

"உங்களுக்கு ஒரு புது உலகத்தையே காட்டியிருக்கேன். என்னைய போய்.... ச்செ... நன்றி கெட்ட உலகம்டா இது." கலா சொன்னாள்.

"ஓய்... ஆனா... இத பத்தி வெளியே மூச்சு விட கூடாது. ஏய் சசி உனக்கு தான் முக்கிய சொல்றேன். நம்ம நாலு பேருக்குள்ள தான் இருக்கனும். யாருகிட்டயாவது உலறி வச்சே....you will be going straight into the coffin." கட்டளை போட்டாள் விஜி.

அச்சமயம் சசியின் கைபேசி ஒலித்தது. சுதா பக்கத்தில் தான் கைபேசி இருந்தது.

"வீட்டுலேந்து தம்பி மேசேஜா இருக்கும்....எப்ப வர? என் இவ்வளவு லேட்டு அப்படின்னு இருக்கும்... எடுத்து என்னான்னு படி டி...." சலிப்புடன் சசி.

சுதா எடுத்து படித்தாள் -

ஹாய், நான் தான். நேத்திக்கு கிளப்புல தெரியாம உங்க சீட் பக்கத்துல உட்கார்ந்தேனே. நீங்க கூட ஹாலோன்னு சொன்னீங்களே. hope you remember me.:) அப்ப பாக்கும்போதே யோசிச்சேன்...உங்கள எங்கேயோ பாத்த மாதிரி இருக்கேன்னு. அப்பரம் இன்னிக்கு தான் facebookல சும்மா பாத்துகிட்டு இருந்தபோது....கண்டுபிடிச்சேன்...you are my brother's friend's sister. என் அண்ணா கல்யாணத்துல உங்கள பாத்துருக்கேன். நம்பர் எப்படி கண்டுபிடிச்சேன்னு கேக்காதீங்க. அது ரகசியம்!நேத்திக்கு நீங்களும் ரொம்ப மூட் அவுட்ல இருந்தீங்க...அதான்...சும்மா... are you alright today? :)

விஜி சுதா கலாவிற்கு அதிர்ச்சி. சசிக்கு அதற்கும் மேல்!

கலா, "ஓய்... என்ன டி நடக்குது இங்க? இதலாம் எப்ப டி நடந்துச்சு."

சசி, "சத்யமா எனக்கு எதுவுமே தெரியாதுடி."

விஜி, "நாங்க அங்க soundtrackக்கு ஆடிகிட்டு இருந்தப்ப...நீ இங்க ஒரு lovetrack ஓடிகிட்டு இருந்திருக்க!"

சசி, "ஐயோ அநியாயமா பேசாத."

சுதா,"ஒன்னு தெரியாத பாப்பு, குளிக்காத போது போட்டாளாம் சோப்பு!"

மற்ற மூவரும் சிரித்து கும்மாளம் போட, சசிக்கு மட்டும் ஒரு மாதிரியாக இருந்தது. சசியின் கைபேசி மீண்டும் அலறியது. மூவரும் கைபேசியின் மேசேஜை படித்தனர்.

"ஹே... சாரி...என் பெயரு சொல்ல மறுந்துட்டேன்...by the way, i am siddarth." இதை படித்தவுடன் மூவரும்,

"மச்சான்....சாச்சுபுட்டான் மாச்சான்!" படுக்கையில் சிரித்துகொண்டே விழுந்தனர்.

*முற்றும்*

Apr 16, 2009

daddy mummy வீட்டில் இல்ல(series 1) -பகுதி 4

பகுதி 1

பகுதி 2

பகுதி 3


காவலர்கள் தங்களை நோக்கி வருகிறார்கள் என்பதை பார்த்தபிறகு, ஆளுக்கு ஒரு பக்கம் ஓடினர். கலா தான் அவர்களை ஒருங்கிணைத்து ஏதோ ஒரு அறைக்கு இழுத்து சென்றாள். அங்கு ஒரே குப்பையாக கிடந்தது. பெரிய அறை வேற, ஒளிந்து கொள்ள சரியான இடமாக தோன்றவில்லை. காவலர்கள் அந்த அறைக்குள் வந்தால், கண்டிப்பாக மாட்டிகொள்வார்கள். எங்கே போவது என்று தெரியவில்லை யாருக்கும்.

கலாவிற்கு ஒரு ஐடியா தோன்றியது. அனைவரையும் இழுத்து கொண்டு கழிவறைக்கு ஓடினாள் யார் கண்களிலும் படாமல். கழிவறை கதவை பூட்டினாள்.

"ஏய், லூசு... ஏன் இங்க.... வேற எங்கயாச்சு இருந்தாலும் பரவாயில்ல...எப்படியாச்சு தப்பிச்சு போலாம். இங்க.. ஒரு ஜன்னல்கூட இல்ல தப்பிச்சு போக. சரியான லூசு டி கலா." சுதா திட்டினாள்.

சசி அழுகையை நிறுத்தவே இல்லை. கலாவின் பேச்சை கேட்டு கிளப்புக்கு வந்தது தவறு என்பதை நினைத்து தேம்பி தேம்பி அழுதாள். கழிவறை ரொம்பவே சின்னது. அந்த நான்கு பெண்கள் எப்படியோ சமாளித்து கொண்டு நின்றனர்.

"உன் பேச்சையே கேட்டு இருந்திருக்க கூடாது. என் புத்திய செருப்பால அடிக்கனும்." சசி தனது கோபத்தை கொட்டினாள்.

"சாரி என்கிட்ட high heels தான் இருக்கு... பரவாயில்லையா?" நக்கல் அடித்தாள் கலா.

"இந்த நேரத்துல கூட உனக்கு ஜோக் வருதா? என் ஜன்மமோ நீ" சசிக்கு ஆத்திரம் வந்தது.

"ஏய்... ப்ளீஸ் கேள்ஸ்... எப்படி தப்பிக்கலாம்னு யோசிங்கடி..." விஜி அவசரப்படுத்தினாள்.

"ஆமா...இந்த இடத்துல நின்னுகிட்டு என்ன யோசிக்குறது. போலீஸ் வருவான். கதவ திறப்பான்... தேவையில்லாம இங்க ஒளிஞ்சு இருக்கீங்களே, அப்ப நீங்க தான் ஏதோ கடத்தியிருக்கீங்கன்னு... நம்மள அள்ளிகிட்டு போய்டுவான். கல்லூரி பெண்கள் கஞ்சா கடத்தினார்கள்னு நாளைக்கு பேப்பர்ல வரும்!" மழைபோல் கொட்டி தீர்த்தாள் சுதா.

பருத்திவீரன் பிரியாமணி போல் கதறி அழ ஆரம்பித்தாள் சசி.

"எல்லாம் இவளால வந்தது." என்று கலாவின் முதுகையை அடித்தாள் சசி.

"ஓய்... சத்தம் போடாத. நாங்க இங்க மணிரத்னம் பட ஹீரோ மாதிரி சவுண்ட் இல்லாம பேசிகிட்டு இருக்கேன். நீ பேரரசு பட வில்லன் மாதிரி காட்டு கத்து கத்துறே... ஷுஷு..." அமைதியாய் பேசுமாறு சொன்னாள் கலா.

"எல்லாம் போச்சு... இனி அமைதியா பேசி என்ன பயன்? அம்மா அப்பா என்னைய பத்தி என்ன நினைப்பாங்க... அவ்வளவு தாண்டி நம்ம எதிர்காலம். எல்லாம் ஓவர்." நெற்றியில் அடித்து கொண்டாள் சசி.

"சசி, முட்டாள் மாதிரி பேசாத. நம்ம என்ன கஞ்சாவா கடத்துனோம். அப்படியே வந்து புடிச்சுகிட்டு போனாலும், விசாரிப்பாங்க. அப்பரம் investigation முடிஞ்சு விட்டுடுவாங்க." விஜி கூலாக பதில் சொன்னாள்.

"உனக்கு அவ்வளவு சாதாரணமா போச்சா.... வீட்டுல என்ன நடக்கும் தெரியுமா. பொய் சொன்னதுக்கு, கிளப்புக்கு போனதுக்கு, போலீஸில் மாட்டியதுக்கு...இப்படி வரிசையா அடி விழும்...." சுதா குரலில் ஒருவித நடுக்கம்.

"அப்பரம் அவ்வளவு தாண்டி.... எனக்கு சங்கு தான்! என் வீட்டுல என்னைய சாகடிச்சுடுவாங்க...." அழுகையை நிறுத்தவில்லை சசி.

"கவலைப்படாத....நீ செத்தா உன் சாவுக்கும் வந்து டான்ஸ் ஆடுறேன்..." என்று நாக்கை மடித்து கொண்டு குத்தாட்டம் ஆடும் போஸ் கொடுத்தாள் கலா. சசிக்கு கோபம் வர, கலாவின் கன்னத்தில் அறைவதற்காக கை ஓங்கினாள். விஜி சசியை தடுத்து நிறுத்தினாள்.

"ஏய் தோடா... இந்த கொசு தொலை தாங்க முடியல...." கலா கிண்டல் செய்தாள். அவள் தொடர்ந்தாள், " கொஞ்ச நேரம் யோசிங்க...எப்படி தப்பிக்கலாம்னு?"

"பேசாம...surrender ஆயிடலாம். அது தான் ஒரே வழி." சுதா அழுகாத குறையாய் கூறினாள்.

"இது உன்னைய மாதிரி முட்டாள்கள் வழி." கலா சுதாவின் ஐடியாவிற்கு நோ சொன்னாள்.

"பேசாம ஒவ்வொரு ஆளா இந்த toilet bowlக்குள் இறங்குவோம். flush பண்ணிடுவோம். அப்படியே குழாய் வழியா drainageக்குள்ள போயிடுவோம்...அங்கேந்து தப்பிச்சு போயிடலாம். எப்படி ஐடியா?" சசியின் கேவலமான யோசனையை கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

கலா, "உனக்கு ஏண்டி இப்படியலாம் ஐடியா வருது? மூளைய பயன்படுத்தவே மாட்டீயா? த்தூ.... இதுக்கு மேல ஏதாச்சு பேசுனே....கழிவறையில் கன்னிப்பெண் கொலைன்னு நாளைக்கு நிஜமாவே பேப்பர்ல வந்துடும்...."

எந்த நேரத்திலும் காவலர்கள் வந்துவிடுவார்கள் என்ற பயம் ஒரு பக்கம். யோசனை எதுவுமே சிக்கவில்லை என்று என்னொரு பக்கம். அவர்களை கெட்ட நேரம் பந்தாடியது. பேச்சு சத்தம் கேட்டது. காவலர்கள் கிட்ட நெருங்கி கொண்டு வருகிறார்கள் என்பது இப்பெண்களுக்கு புரிந்துவிட்டது. சசி சாமி பாடல்களை பாடினாள். கலாவிற்கு திடீரென்று ஒரு யோசனை வந்தது.

இவர்கள் கிளப்பிற்குள் நுழையும்போது 'rules and regulations of this club' என்று ஒரு பேப்பரை கொடுத்தார்கள். அது கலா தனது கைபையில் தான் வைத்திருந்தாள். அதை எடுத்தாள். அந்த தாளின் மறுபக்கத்தில் ஒன்றும் எழுதப்படவில்லை. தனது லிப்ஸ்ட்டிக்கை எடுத்தாள். அந்த தாளில், "toilet- out of order" என்று லிப்ஸ்ட்டிக்கால் எழுதினாள். கதவு ஓரத்தில் ஏதோ ஒரு பசை ஒட்டி இருந்தது. அதை எடுத்து தாளின் நான்கு ஓரத்தில் ஓட்டினாள். கதவை மெதுவாக திறந்து கதவில் ஒட்டிவிட்டு மீண்டும் உள்ளே நுழைந்து கொண்டாள்.

இவளது செயலை கண்ட மற்றவர்களுக்கு இவளை பாராட்ட வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தனர். சசி, "ஏய், நம்ம இப்படி நின்னுகிட்டு இருந்தா, வெளியே நின்னு பாக்கும்போது நம்ம காலு தெரியுமே?"

sitting toilet என்பதால் அதன் மூடியை மூடி, அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டனர் . ஏதோ ஒரு வாத்து கூட்டம் உட்கார்ந்து இருந்ததுபோல் இருந்தது. அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுகொண்டாள் கலா.

காவலர்கள் உள்ளே வந்தார்கள். மற்ற கழிவறைகளை பார்த்தார்கள். இந்த கழிவறை மட்டும் 'toilet-out of order' என்று இருந்ததை கவனித்த காவலர் அவரின் மேல் அதிகாரியிடம்,

"சார்... யாரும் இங்க இல்ல சார்...ஆனா ஒன்னும் மட்டும் out of orderன்னு இருக்கு சார்" என்றார்.

மேல் அதிகாரி, "சரி சரி...அதையலாம் போட்டு நோண்டிகிட்டு இருக்காத...மத்தத செக் பண்ணிட்டு வந்துடு" என்றார்.

யப்பாடா தப்பித்துவிட்டோம் என்று பெருமூச்சு விட்டனர் இப்பெண்கள். வெளியில் எந்த ஒரு சத்தமும் இல்லை. லேசாக கதவை திறந்து எட்டி பார்த்தாள் கலா. யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மற்றவர்களை அழைத்தாள்.

டிஸ்கோ விளக்குகள் உடைந்து இருந்தது. தண்ணீர் பாட்டில்கள் கீழே விழுந்து கிடந்தன. யாருமே இல்லாத இடமாக காட்சியளித்தது அந்த கிளப். ஒரு மாதிரியாக இருந்தது அவர்களுக்கு. இருந்தாலும் கலா, "ஏய்...யாருமே இல்லடி...நம்மளே ஏதாச்சு பாட்டு போட்டு ஆடலாமா?" என்று கூறியபோது சசி

"நீ திருந்தவே மாட்டீயா?"

விஜிக்கு பயம் பற்றிகொண்டது. ஏன் தெரியுமா?

விஜி, "ஏய்..... போலீஸ் main doorல் seal வச்சுட்டு போய் இருப்பாங்களே? இப்ப நம்ம எப்படி தப்பிக்குறது?"

இப்போது சுதா சசியின் பணியை தொடர்ந்தாள். சுதா அழ ஆரம்பித்தாள்.

"ச்சீ.... நீங்களாம் போய் சீரியல நடிக்க போலாம்...சும்மா எப்ப பாத்தாலும் அழுதுகிட்டு.... " கலா எரிச்சலுடன்.

"தேடுவோம்... எப்படியாச்சு... ஒரு வழி இல்லாம போயிடுமா என்ன?" கலா சொன்னாள். அப்போதே மணி விடிய காலை 2 ஆகிவிட்டது. அவர்கள் தேடினார்கள். மணி 3 ஆகிவிட்டது. அப்போது சசி கூச்சலிட்டாள்.

"ஏய் இங்க பாருங்க ஒரு backdoor இருக்கு."

அனைவரும் அங்கு சென்றார்கள். அதன் வழி தப்பித்தார்கள். கொஞ்ச தூரம் ஓடினார்கள். main roadட்டை அடைந்தார்கள். அங்கு இருந்த பஸ் டாப்பில் உட்கார்ந்தார்கள். ஓடி வந்த களைப்பு! சாலையில் எந்த வாகனமும் இல்லை. வேறு யாரும் அங்க இல்லை.

அச்சமயம் தூரத்தில் 4 வாலிபர்கள் தண்ணி அடித்துவிட்டு கலாட்டா செய்து கொண்டு பஸ் டாப்பை நோக்கி வந்தனர்.

சுதா, "மாட்டுனோம் டி!"

(பகுதி 5)

Apr 13, 2009

daddy mummy வீட்டில் இல்ல(series 1) - பகுதி 3

பகுதி 1

பகுதி 2

இதய துடிப்பு இரட்டிப்பானது! யார் இந்த சமயத்தில் என்று பார்வைகள் பறந்தன. விஜி, சுதா, சசி ஆகியோர் வீட்டிற்குள் ஓடினர். சுதாவிற்கு தான் அதிக கவலை. கிளப்பை சேரும்வரை அவளுக்கு நிம்மதியாகவே இருக்காது போல.

கலா கதவை திறந்தார். அங்கு ஒருவர் கையில் கணக்குடன் நின்றார். "மேடம், இந்த மாசம் நியூஸ் பேப்பர் பில்."

ஒரு நிமிடத்தில் எங்களை ஏன் இப்படி பயம் காட்டி மிரள வைத்துவிட்டீர்கள் என்று அவரை கேட்க வேண்டும் என்று தோன்றினாலும் வார்த்தைகளை அடக்கி கொண்டாள் கலா. வீட்டில் யாரும் இல்லை அடுத்த வாரம் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று பதில் அளித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். நடந்ததை சொல்லி முடித்தாள் கலா, மற்ற மூவரிடம். பிறகு, தான் அனைவருக்கும் நிம்மதி வந்தது!

"ஆண்ட்டி வீட்டுக்கு ஃபோன் பண்ணா?" என்னொரு முக்கியமான விஷயத்தை கேட்டாள் சசி.

"வெரி சிம்பல்." என்று சொல்லிய கலா, தனது கைபேசியை எடுத்தாள். அப்பாவுக்கு ஸ். எம்.ஸ் அனுப்பினாள்- "அப்பா, அங்க போய் சேந்தாச்சா? எப்படி போகுது ஏற்பாடு எல்லாம்?"

உடனே அப்பா பதில் அளித்தார்- " நாங்க வந்தாச்சு. function preparation ஜாலியா இருக்கு. நீ படிச்சாச்சா?"

அதற்கு கலா அனுப்பினாள்- "ஆமா இன்னிக்கு ரிவிஷன் முடிச்சிட்டோம். ரொம்ம்ப களைப்பா இருக்கு. அதான்..தூங்க போறோம். குட் நைட்."

அதற்கு அப்பாவின் பதில்- "ஓகே...குட் நைட்"

எல்லாம் 3 நிமிடங்களுக்குள் முடிந்தது. கலாவின் அபார திறமையை கண்கொட்டாமல் பார்த்து வியந்தனர் மற்ற மூவரும். "எப்படி இப்படிலாம் யோசிக்குற?" சுதா ஆச்சிரியப்பட்டாள். மற்றவர்கள் வீட்டிற்கும் இதே மாதிரி ஸ்.எம்.ஸ் அனுப்பி காரியத்தை முடித்தாள் கலா.

"மாட்டிகொள்ளாமல் பொய் சொல்வது எபப்டி?...அப்படின்னு ஒரு பெரிய ஆராய்ச்சியே செஞ்சு இருக்கேன்..கூடிய சீக்கிரத்துல புத்தகம்கூட போடலாம்... இங்க பாரு, நான் ஃபோன் பண்ணி பேசியிருந்தேனா...அது கொஞ்சம் artificalஆ இருந்திருக்கும். எப்போதும் ஃபோன் பண்ணாதவ இப்ப ஏன் ஃபோன் பண்ணி தூங்க போறான்னு சொல்றா? அப்படின்னு அப்பா மனசுல தோன்றியிருக்கும். அதான் ஸ்.எம். ஸ் அனுப்பினேன். எல்லாம் ஒருவித psychology மச்சி!" lecture அடித்தாள் கலா.

"சரி சரி...வாங்க போவோம்.டைம் ஆச்சு." சுதா அவசரப்படுத்தினாள். டெக்ஸியில் ஏறி ஆல்பட் கிளப்பை அடைந்தனர். அங்க தடி மாடு மாதிரி 4 bouncerகள் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். சசிக்கு ஒன்றும் புரியவில்லை.

"யாரடி இவங்க?" சசி கேட்டாள்.

"எல்லாம் உன் அத்தை பசங்க தான்." கிண்டலடித்தாள் விஜி டெக்ஸி டிரைவரிடம் காசை கொடுத்துவிட்டு.

"ஏய்... இவங்க தான் bouncer. உள்ளே தகராறு செய்யும் ஆட்கள வெளியே வந்து போடுவார்கள்." கலா கூறினாள்.

"ஐயோ அப்ப தகராறு நடக்குமா?எனக்கு பயமா இருக்குடி...."சசி கண்ணாடியை சரி செய்து கொண்டு.

"சும்மா பேசாம வா." கலா அதட்டினாள். உள்ளே நுழையும்போது bouncerகள் அவர்களை ஒரு விதமாய் பார்த்து, "நீங்க new entryயா?"

ஆம் என்பதுபோல் தலையை எல்லாம் பக்கமும் ஆட்டினர். "உங்க பெயரு என்ன?" என்று மன்சூர் அலிகான் குரல் கொண்ட ஒருவர் கேட்டார்.

மற்ற மூவரும் பதில் அளிக்கும் முன் கலா முந்திகொண்டு, "என் பேரு ஷாமா, இவ ஹேமா, அவ பாமா, இவ உமா." என்று வாய்க்கு வந்த நான்கு பெயர்களை அள்ளிவிட்டாள்.

"ஓகே மேடம்... நீங்க உள்ளே போலாம்." சிரிக்காத முகத்துடன் நின்றனர்.

"ஏண்டி, பெயர்லாம் கேக்குறாங்க?" சசிக்கு மீண்டும் கேள்வி எழும்பியது.

"பொங்கலுக்கு சேலை எடுத்து கொடுப்பாங்க. வந்து வாங்கிட்டு போறதுக்கு. யவடி இவ... எல்லாம் ஒரு registration formality தான். இங்க பாரு.. நம்மளே இங்க திருட்டு தனமா வந்திருக்கும். உண்மையான பெயர சொல்லி மாட்டிக்க கூடாது. தப்பு செஞ்சா தடயம் இல்லாம செய்யனும்." தான் ஒரு தலைவி என்பதை கலா மீண்டும் நிருபித்தாள்.

டிஸ்கோ விளக்குகள், புகைமூட்டம், காதில் இரத்தம் வரும் அளவிற்கு பாட்டு சத்தம், கூச்சல், தண்ணி அடித்துவிட்டு ஆட்டம் போடும் ஆண்கள், பெண்கள், அன்று நடக்கும் காற்பந்தாட்டத்தை டீவியில் பார்த்து கொண்டிருக்கும் இன்னொரு கூட்டம்- இப்படி ஒவ்வொரு மூலையிலும் ஏதேனும் ஒன்னு நடந்து கொண்டிருந்தது. 'where is the party tonight?' என்ற சிலம்பாட்டம் பட பாடல் போட்டவுடன், கலா மூவரையும் ஆடும் இடத்திற்கு இழுத்து சென்றாள். பாடல் ஆரம்பித்ததுதான் தெரியும், அதற்கு அப்பரம் கலா மலை ஏறிவிட்டாள். அவளை பார்த்த விஜியும் பேய்யாட்டம் ஆடினாள். சுதா ஏதோ கைகளையும் கால்களையும் அசைத்தாள். சசிக்கு ஆட வராது. ஏதோ சானி மிதிப்பதுபோல் மிதித்து கொண்டிருந்தாள்.

டிஸ்கோவில் இருந்த டிஜே வரிசையாக குத்து பாடல்களை போட்டு தாக்கினார். "போட்டு தாக்கு..." என்னும் குத்து பட பாடலை போட்டவுடன் கலா கட்டிவைத்திருந்த தலைமுடியை அவிழ்த்துவிட்டு சாமி வந்ததுபோல் ஆட தொடங்கினாள்.

அங்கு ஆடி கொண்டிருந்த பலரும் அப்படியே செய்தனர். நால்வரும் ஒரு வட்டமாக ஆடி தொடங்கினாலும், போக போக அது பிரிந்து, விஜியும் சுதாவும் கலாவும் அங்கு வந்திருந்த மற்றவர்களுடன் சேர்ந்து ஆட தொடங்கினர். சசிக்கு களைப்பாக இருந்ததால் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தாள். சுதாவும் வந்து அமர்ந்தாள்.

"என்னடி நீங்க.... யாருக்கூடவோ ஆடுறீங்க?" சசி மூச்சுயிறைக்க சொன்னாள்.

"அதான் டி கிளப்பிங் culture. தெரிஞ்சவங்ககூடவே ஆடனும்னா வீட்டுலேயே ஆடலாமே, இங்க வந்துட்டா அப்படி தான் இருக்கனும்." சுதா கூறினாள்.

"ஆமா இதலாம் உனக்கு எப்படி தெரியும்?" சசி மீண்டும் கேள்வி கேட்டாள்.

"ஆடிகிட்டு இருக்கும்போது கலா சொன்னா..." சுதா ஆரஞ்சு ஜூஸை அருந்தியவாறு பதில் அளித்தாள்.

"உன்னைய ரொம்ப கெடுக்குறா அவ!" சசிக்கு பிடிக்கவில்லை.

'it's the time to disco' என்னும் ஹிந்தி பாடலை கேட்டவுடன் உற்சாகம் அடைந்த சுதா, "ஓ மை காட்...my fav song yea!!" என்று சொல்லிகொண்டே ஆடும் இடத்திற்கு ஓடினாள். மற்றவர்களுடன் ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தாள். அந்த பாடலில் ப்ரித்தி சிந்த்தா எப்படி ஆடுவாளோ அப்படியே ஆடினர் கலாவும் சுதாவும், விஜியும்!

சசி சோபாவில் உட்கார்ந்து இருந்த போது, ஒருத்தன் அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

"ச்சே, நான் அப்பவே சொன்னேன்.. இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் நான் வரலேன்னு.... ச்சி... i hate these guys." புலம்பினான் அவன். சசி பக்கத்தில் உட்கார்ந்து இருப்பதை கவனிக்கவில்லை அவன்.

"ஹாலோ..." என்றாள் சசி.

"ஓ...சாரி...சாரி...நான் பார்க்கல்ல...." என்றவன் எழுந்து வேற இடத்திற்கு செல்லும்போது, அவன் கைப்பேசி அழைத்தது. அதை எடுத்து பேசி கொண்டே நகர்ந்தான், 'டேய், எங்கடா இருக்கீங்க? நான் போறேன். இந்த இடம் எனக்கு தலைவலியா இருக்கு. நான் போறேன்..." அவன் பேசியதை சசி கேட்டாள். மனதிற்குள் அவளுக்கு சிந்தனை ஓடின, "ம்ம்ம்...நம்மள மாதிரியே சில பசங்களுக்கும் இந்த இடம் பிடிக்கல....உஷ்...." என்று பெருமூச்சுவிட்டாள் சசி.

அப்போது யாரோ சசியை பிடித்து இழுத்து சென்றார்கள். மூன்று முரட்டர்கள்போல் இருந்தனர். கழிவறைக்கு இழுத்து சென்று அவளை அறைந்தார்கள். ஏதோ கையில் பீர் போல் இருப்பதை அவள் வாயில் திணிக்க முற்பட்டபோது, அவள் அலற ஆரம்பித்தாள், "அம்ம்ம்ம்ம்மாஆஆஆ!"

பக்கத்தில் இருந்த சுதா, விஜி, கலா மூவரும் சசியை பிடித்து, "என்னடி ஆச்சு?"

சசி சுயநினைவுக்கு வந்தாள். தான் கண்டது ஒரு கனவு என்பதை அவர்களிடம் விளக்கியபோது, அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். வெறுவாயிற்கு அவல் கிடைத்ததுபோல, கலா சசியை தாறுமாறாக கலாய்த்துவிட்டாள். அச்சமயம், "டேடி மம்மீ, வீட்டில இல்ல..." என்ற பாடல் ஒலித்தது. குஷியான கலா,

"ஓ மை காட்....நம்ம பாட்டு டி இது...வாங்க வாங்க...போய் ஆடலாம்." என்றாள்.

சசிக்கு போக இஷ்டமில்லை. மற்ற மூவரும் ஆடிகொண்டிருந்த நேரம் பார்த்து, போலீஸ் வாகனம் சத்தம் கேட்டது. அனைவரும் ஓட ஆரம்பித்தனர். என்ன நடக்கிறது என்பது இவர்களுக்கு புரியவில்லை. கலா மற்ற மூவரையும் இழுத்து கொண்டு தங்களது கைபைகளை எடுத்து கொண்டு தப்பிக்க முற்பட்டனர். ஓடும்போது விஜி கேட்டாள் கலாவிடம், "என்னடி நடக்குது."

கலா அதிர்ச்சியுடன், "ஓ காட்.... எனக்கும் தெரியல்ல... "

எங்கே ஓடுவது என்று தெரியவில்லை. அங்கே ஆடி கொண்டிருந்த சிலர் பிடிப்பட்டனர். மற்றவர்களை பிடிக்க முற்பட்டபோது, இவர்கள் ஒரு மறைவுக்கு பின் ஒளிந்து கொண்டன. காவலர்கள் பேசி கொள்வது அவர்கள் காதில் விழு- "இந்த இடத்துல கஞ்சா கடத்துறாங்க... ஒரு இடம் விடாம தேடு. எல்லாரையும் பிடிச்சு வண்டில போடு."

இவர்களுக்கு ஆச்சிரியம், அதிர்ச்சி, சிலையாய் நின்றனர். சசிக்கு அழுகையே வந்துவிட்டது. அந்த மறைவான இடத்திற்கு சில காவலர்கள் வருவதை பார்த்துவிட்டனர்....

(பகுதி 4)

daddy mummy வீட்டில் இல்ல(series 1)- பகுதி 2

பகுதி 1

"ஓ மை காட்...நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் சொல்றீயா?" சசி வாயை பிளந்தாள்.

"hey come on girls..இந்த மாதிரி சான்ஸ் நமக்கு இனிமேலு கிடைக்காது. நமக்கு எல்லாருக்குமே கிளப்பிங் போனும்னு ஆசை இருக்கு. ஆனா வீட்டுல விடமாட்டாங்க. நமக்கு கல்யாணமும் ஒன்னு நடந்த பிறகு...புருஷன்கார இதுக்கலாம் ஒத்துப்பானான்னு தெரியாது. இப்ப வீட்டுல யாருமே இல்ல... செம்ம சான்ஸ் டி இது. நம்ம எல்லாருமே போறோம்! ஒகே!" கொள்ளை கூட்டத்தின் தலைவர் போல் ஆர்டர் போட்டாள் கலா.

"ஏய்...இன்னும் ஒரு வாரத்துல நமக்கு பரிட்சை இருக்கு டி...இப்ப போய்...இதலாம் டைம் வேஸ்ட்டு! நான் வரலப்பா!" சுதாவிற்கு பயம் வந்தது.

"ஓய்..காற்றுள்ள போதே தூற்றி கொள்! சின்ன வயசுல படிச்சது இல்ல....படிச்சத மறந்துட்ட பாத்தீயா...நம்ம தமிழ் டீச்சருக்கு துரோகம் பண்ணாதே?" கலா சுதாவை தன் பக்கம் இழுக்க பார்த்தாள். விஜி எப்போதுமே கலா பக்கம் தான்! அதனால், கலாவின் பிளானுக்கு விஜியின் முழு ஆதரவு எப்போதுமே உண்டு.

விஜி, " இங்க பாருங்க டி... நம்ம ரிவிஷன் பிளான் படி காலையில படிச்சுட்டு, மதியம் கொஞ்ச நேரம் தூங்கிட்டு...திருப்பி மறுபடியும் ஈவ்னிங் படிக்கனும். கிளப்பிங் போறதுனால மதியம் தூங்க வேண்டாம்...படிப்போம். இன்னிக்கு உள்ள ரிவிஷன் முடிச்சுட்டா...அப்பரம் என்ன கவலை....?" விஜி தூண்டில் போட்டாள் சுதாவிற்கு. சசி எதுவுமே பேசாமல் வாய் அடைத்து போய் இருந்தாள்.

தொடர்ந்தாள் கலா, "ஏய்..ஏய்...நம்ம அங்க தண்ணி அடிக்க போகல....தம் அடிக்க போகல...சும்மா எப்படி இருக்குன்னு பாத்துட்டு....கொஞ்ச டான்ஸ் ஆடிட்டு, atmosphereஎ நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வந்திடுவோம்....நம்ம யாருமே கிளப்பிங் போனது இல்ல... இந்த வாய்ப்ப விட்டா...அப்பரம் ரொம்ப கஷ்டம்...யோசிச்சு பாருங்க?"

பாம்பாட்டியின் மகுடிக்கு மயங்கும் பாம்புபோல் சுதா அவர்கள் பக்கம் சேர்ந்துகொண்டாள். சிறிது தயங்கத்துடன், "சரி டி...போவோம்!"சுதாவின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது. சசி மட்டும் எதுக்கும் அசையவில்லை.

"நோ!!! கிளப்பிங் போறது தப்பு! நான் வரல...."கத்தினாள். அடம்பிடித்தாள் சசி. கொஞ்சம்விட்டால் அழுது இருந்திருப்பாள்.

"எந்த மடையன் சொன்னா அப்படி. இங்க பாரு Miss sasi daughter of sundaralingam, கிளப்பிங் போற எல்லாருமே கெட்டவங்களும் கிடையாது, கோயிலுக்கு போற எல்லாருமே நல்லவங்களும் கிடையாது!" கலா சசியை பார்த்து முறைத்தாள்.

கலா சொன்ன பஞ் டயலாக் பிடித்தபோனவளாய் விஜி, "ஐய்ய்ய்யோ...எப்படி கலா பஞ் எல்லாம் சும்மா அள்ளிவிடுறே."

செய்தித்தாளில் இருந்த சிம்பு படத்தை தொட்டு கும்மிட்டு கலா சொன்னாள், "எல்லா என் தலைவன் சொல்லி கொடுத்தது."

"நீயும் உன் தலைவனும்! ச்சி...." சசி துப்பினாள்.

"ஓய்... மூஞ்சில கண்ணாடி போட்ட உனக்கே இம்புட்டுன்னா...கண்ணாடில மூஞ்சிய பாக்குற எங்களுக்கு எம்புட்டு இருக்கும்!" கலா குதித்தாள். பக்கத்தில் இருந்த சுதா கலாவிடம்

"boss, இந்த பஞ் ரொம்ப கேவலமா இருக்கு பாஸ்!"

"ஹாஹா...சாரி...கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுடேன்...." சமாதானமானாள் கலா. நால்வரும் ஒரு மணி நேரமாய் இதை பற்றியே விவாதம். மணி 2 ஆகிவிட்டது. விஜி சண்டையை முடிக்க ஒன்றே ஒன்று சொன்னாள்,

"சசி, லுக் இயர். இந்த உலகம் February 27th 2014ல அழிய போகுதுன்னு அன்னிக்கு நியூஸ் பேப்பர்ல படிச்சேன். அதுக்கு இன்னும் 5 வருஷம் தான் இருக்கு.... நம்மால எவ்வளவு எஞ்சாய் பண்ண முடியுமோ பண்ணிடலாம்! வருஷத்துக்கு ரெண்டு செம்மஸ்ட்டர் இருக்கு. ரெண்டு தடவ பரிட்சை வரும். ஆனா இந்த சான்ஸ்...ம்ஹூம்..ஒத்துக்கோ டார்லிங்" சசியின் கன்னத்தை தொட்டு கெஞ்சினாள் விஜி. விஜி சொன்ன திடிகிடும் தகவல் சசிக்கு மேலும் வருத்தத்தை கொடுத்தது.

"என்ன விஜி, கெஞ்சிகிட்டு இருக்கே? எங்க ஆத்தா ஆடு வளத்துச்சு, கோழி வளத்துச்சு..ஆனா வீட்ட பாத்துக்க நாய் வளக்கல...அதுக்கு பதிலா சசிய வளத்துச்சுன்னு சொல்லி போயிகிட்டே இருப்பேன்.... இவ வளரலையின்னா வீட்ட பாத்துப்பா?" எரிச்சல் பொங்க கூறினாள் கலா.

சசிக்கு வேறு வழி இல்லை. உலகம் அழிய போகிறது, வீட்டில் தனியாக இருக்க வேண்டும், இரவு நேரம்- ஆகிய சிந்தனைகள் சசிக்குள் ஓட ஒரு முடிவு எடுத்தாள்.

"ஒகே, நான் வரேன்!" சசி சொன்ன போது, கலாவிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. சசியை கட்டிபிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

"ச்சீ...அசிங்கம்" என்று சசி கன்னங்களை துடைத்தாள்.

மதியம் யாரும் தூங்கவில்லை. தீவிரமாய் படித்து கொண்டிருந்தனர். ஆனால், சசிக்கு பயமாக இருந்தது. அதே சமயம் உள்ளக்குள் சந்தோஷமாகவும் இருந்தது. பக்கத்து தெருவுக்கு போவதற்கே தம்பியை கூட அனுப்புவார்கள் அவள் வீட்டில். இன்று தோழிகளுடன் கிளப்பிங் செல்வது அவளுக்கு, "i am not a girl anymore, i am a WOMAN." என்ற கம்பீரத்தை கொடுத்தது. கொஞ்ச நேரம் சிந்தனைக்கு பிறகு சசி,

"girls... உள்ளே எப்படி இருக்கும்? ஆயத எழுத்து படப்பாட்டு யாக்கை திரி மாதிரி... அங்க சித்தார்த் மாதிரி ஆளுங்க வந்து நம்மள disturb பண்ணா என்ன செய்யுறது?" அப்பாவியாய் கேட்டாள் சசி.

மற்ற மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்தனர் ஒரு நொடி. மறுநொடி, விழுந்து விழுந்து சிரித்தனர். சுதா,

"அது எப்படி டி, ஒரே நேரத்துல ரெண்டு ஜோக் அடிக்குற?"

"என்ன ரெண்டு ஜோக்?" சசி குழம்பினாள்.

"ஆமாண்டி, நீ திரிஷா....முதல் ஜோக், உன்னைய disturb பண்ணுறவன் சித்தார்த்துன்னு சொன்னீயே...அது வந்து...ரெண்டாவது ஜோக்!" சிரிப்புக்கு நடுவே வார்த்தைகளை விட விஜிக்கு வயிறு வலியே வந்துவிட்டது.

"ச்சி பாவம் டி குழந்தை. தெரியாம தானே கேக்குறா? நீ கவலைப்படாத செல்லம், அங்க போனபிறகு நீயே கத்துப்ப?" கலா சொன்னாள்.

இரவு 8 மணியானது. "டேய், செலவுக்கு காசு?" விஜி ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுப்படுத்தினாள். சுதாவிற்கு சசிக்கும் திக் என்று இருந்தது. ஐயோ ஒரு வேளை காசு இல்லை என்றால் போக முடியாமல் போய்விடுமோ என்று சுதா வேதனை அடைந்தாள்.

"கலா இருக்க பயம் ஏன்?" என்று சொல்லிவிட்டு கலா ஒரு பெட்டியை எடுத்துவந்தாள். அந்த பெட்டிக்குள் இருந்த இன்னொரு சிறு பையை எடுத்து கீழே கொட்டினாள். பணநோட்டுகள் விழுந்தன.

"என்னடி இது?" சுதா கேட்டாள்.

"சின்ன வயசுலேந்து சேமிச்சு வந்தது." கலா சொன்னாள் ஒவ்வொவரு காசையும் எண்ணியவாறு.

"ஓ...அப்ப உனக்கு சின்ன வயசுலேந்தே கிளப்பிங் போனும்னு ஆசை இருந்துச்சா?" விஜி கேட்டாள்.

"ஐயே... மூஞ்சிய பாரு. அப்படிலாம் ஒன்னுமில்ல. எப்போதுமே சேமிப்பேன். ஆத்தர அவசரத்துக்கு உதவும்னு!" கலா விடை சொன்னாள்.

"கிளப்பிங் போறது உனக்கு ஆத்தர அவசரமா?" சசி கேட்டது கலாவிற்கு கோபம் வர,

"இல்ல மூ..மூ...." என்று பதில் அளிக்க வந்த கலாவின் வாயை மூடினாள் சுதா.

"நோ நோ...நோ bad words here!" சுதா சாந்தப்படுத்தினாள் கலாவை.

"அப்பரம் என்னடி இவ... cross examination பண்ணிக்கிட்டு இருக்கா?" கலா அமைதியானாள்.

சசி மீண்டும் தொடர்ந்தாள், " காசு இருக்கட்டும்! நம்ம எப்படி இப்படியே போறது. புதுசா dress போட்டுக்க வேண்டாமா?" மேதாவி கேள்வி கேட்டாள்.

கலா சசியை பார்த்து சிரித்து கொண்டே, "ஒரு கொசு நீயே இவ்வளவு யோசிக்கும்போது, ஒரு பாஸு நான்...இத யோசிச்சு இருக்கமாட்டேனே?"

தொடர்ந்தாள், "என் அலமாரில நிறைய டிரஸ் இருக்கு. அத போட்டுக்குங்கடி." ஒரு வரியில் பிரச்சனையை முடித்தாள்.

விஜி கேட்டாள், "ஆனா என்னோட சைஸ் கொஞ்சம் பெரிசு. எப்படி உன்னோடது பத்தும்?"

அதற்கும் ஒரு பதில் ரெடியாக வைத்திருந்தாள், "அக்காவோடத எடுத்து போட்டுக்கோ!"

சுதா கலாவின் காலில் விழுந்து, "தலிவா....நீ தான் எங்கள் தலைவி! எல்லாத்துக்கு ஒரு ஐடியா வச்சுருக்கீயா! நீ bsc maths எடுத்ததுக்கு பதிலா business management எடுத்து இருந்தேன்னா...ஒரு பெரிய தொழில் அதிபரா வந்து இருப்பீயே தலிவா!"

இரவு 9 மணி ஆனது. அனைவரும் ரெடியாகி நின்றனர். திரிஷா, ஸ்ரேயா, அசின், நயன் தாரா நால்வரையும் ஒரே நேரத்தில் பார்த்து இருக்கீங்களா? இல்லையா அப்ப கலா, விஜி, சுதா சசியை பாருங்க! இரண்டு குரூப்புக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல!

சமையலறையில் உள்ள நாள்காட்டியை புரட்டி கொண்டிருந்தாள் சசி. சுதா சசியை பார்த்து,

"என்னடி பண்ணுறே?"

சசி அதற்கு, "நல்ல நேரம் பாக்குறேன்?"

கலாவுக்கு சசி செய்யும் லூசுத்தனமான செயலை கண்டு சிரிப்பு வந்தது. "அடியே,first nightக்கா போறோம்? first time clubbing போறோம் டி. இதுக்குமா நல்ல நேரம் பார்ப்பே?"

அனைத்து அறை ஜன்னல்களை சாத்திவிட்டு வந்த கலா சசியின் முகத்தை பார்த்து, "என்னடி இது.குங்குமம் வச்சுருக்க...நம்ம என்ன மாரியாத்தா கோயிலுக்கு கூழ் ஊத்த போறோமா?"

சசி தயக்கத்துடன், "இல்ல கலா. முதன் முதலா ஒரு காரியத்துக்கு போறோம். அதான்...." அவள் இழுத்தாள்.

கலா மீண்டும், " அப்படியே போற வழில ரெண்டு மொழம் பூ வாங்கி வச்சுட்டு வாயேன்!"

சுதாவும் விஜியும் சிரித்தனர். ஜன்னல்களை சாத்திவிட்டோமே, அறை கதவுகளை சாத்திவிட்டோமே என்பதை பார்த்துவிட்டு கிளம்பினார்கள்.

'டிங் டொங், டிங் டொங்' வாசலில் மணி ஒலித்தது.

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் உரைந்தனர்.

(பகுதி 3)

daddy mummy வீட்டில் இல்ல(series 1) - பகுதி 1

கலாவின் அம்மா, அப்பா அக்கா ஆகியோர் சென்னையில் இருக்கும் சொந்தக்காரர் கல்யாணத்திற்கு கிளம்பினார்கள். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை. கலாவிற்கு தேர்வு என்பதால் அவள் அவர்கள்கூட போகவில்லை. group studiesக்காக கலாவின் தோழிகளான விஜி, சுதா, சசி வீட்டிற்கு வந்தனர். காலை 10 மணிக்கு விமானப்பயணம். அதனால், 8 மணிக்கே கிளம்பிவிட்டார்கள். போகும் நேரம் அம்மா,

"நல்லா படிங்க பசங்களா...டீவி அது இதுன்னு பாக்காம...ஒழுங்கா படிங்க." கண்டித்தார்.

"கவலைப்படாதீங்க...எல்லாம் நல்லா தான் படிப்போம், நீங்க சீக்கிரம் கிளம்புங்க." கலா அவர்களை விரட்டினாள்.

"ஏய், எதுக்கு ஆண்ட்டிய இப்படி விரட்டுற...பாவம் ஆண்ட்டி...உன்னைய விட்டு பிரிஞ்சு போறதுக்கு மனசே இல்லாம இருக்காங்க அவங்கள போய்..." விஜி கொஞ்சம் ஏற்றிவிட்டாள்.

அம்மா கலாவை விட்டு பிரிந்து இருந்தது இல்லை. அப்படி ஒரு நிலைமை இந்நாள் வரை அமைந்ததில்லை. இன்று முதன் முதலாக பிரிந்து 2 நாட்கள் இருக்கவேண்டும் என்பதை எண்ணி ரொம்பவே வேதனைப்பட்டார் அம்மா. கண்கள் கலங்கின அவருக்கு...........இப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா...அது...ஹாஹா....தப்பு!

"யாருக்கு இதவிட்டு பிரிய மனசு வரலைன்னு சொன்னா...நிம்மதியா ரெண்டு நாள் கிடைச்சுருக்குன்னு சந்தோஷமா இருக்கு எனக்கு...." அம்மா சிரித்தார். நல்ல நோஸ் கட் கலாவிற்கு!

"அப்பா இங்க பாருங்க...அம்மா என்னைய கிண்டல் பண்றாங்கப்பா..." கலா அப்பாவின் ஆதரவை தேடினாள். அவர் பெட்டிகளை எண்ணி கொண்டிருந்தார். அச்சமயம் கலா சொன்னது அவர் காதில் விழவில்லை.

"அங்கிள், மூனு பெட்டி தானே இருக்கு. அத எத்தன தடவ எண்ணுவீங்க?" சுதா நக்கலுடன் கேட்டாள். கலா, விஜி, சுதா ஆகியோர் மட்டும் அவர்களை வழி அனுப்பி வைக்க வாசலில் நின்றார்கள். ஆனால், சசி மட்டும் உள்ளே படித்து கொண்டிருந்தாள். கிளம்புவதற்காக நின்ற கலாவின் அக்கா,

"சசி தான் தப்பி தவறி உங்ககூட சேர்ந்துட்டா. எவ்வளவு நல்ல பொண்ணா... வந்ததுலேந்து படிச்சுகிட்டே இருக்கா...நீயும் இருக்கீயே...படிக்குற புள்ள மாதிரியா இருக்கே?"

கலா," ஏய் ஏய் ஹாலோ....ரொம்ப பேசாதே...கிளம்பு சீக்கிரம். அம்மா, சென்னையில இவளுக்கும் ஒரு மாப்பிள்ளைய பாத்து கல்யாணத்த முடிச்சு வச்சுட்டு வந்துருங்க. நிம்மதியா இருக்கும் எனக்கு." கிண்டல் அடித்தாள்.

இருவரும் சண்டை போடம இருக்குமாறு அப்பா சொன்னார். அக்கா பெட்டிகளை எடுத்துகொண்டு டெக்ஸியில் வைத்தாள். கலாவை பார்த்து, "சரி... நல்லா படி. வீட்ட பத்திரமா பாத்துக்கோ...வீட்ட வித்து தொலைச்சுடாதே!" அக்கா சிரித்தார்.

"அடியே, நீயே ஐடியா கொடுப்ப போல இருக்கே?" அம்மாவும் புன்னகையித்தார். அவர்கள் டெக்ஸியில் சென்றார்கள். கலா, விஜி, சுதா மூவரும் வீட்டிற்குள் வந்தனர். சசி 4வது chapterயை படித்துகொண்டிருந்தாள். இவ்வளவு சீக்கிரம் எவ்வாறு படித்துமுடித்தாள் என்பது ஆச்சிரியமாக இருந்தது கலா, விஜி, சுதாவிற்கு.

"ஏய், இவ்வளவு சீக்கிரமா...எப்படி டி?" சுதா சசி அருகே உட்கார்ந்தாள்.

"உண்மையா படிச்சியே... இல்ல சும்மா எங்கள வெறுபேத்தறதுக்காக....4வது chapter திறந்துவச்சிரிக்கீயா?" விஜி மேலும் சீண்டினாள் சசியை. சசி தனது மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு,

"ஏய் stupid fellows... நிஜமா படிச்சுருக்கேன். நீங்க வேணும்னா கேள்வி கேளுங்க..சரியா சொல்றேன்னா பாருங்க?"

"நிஜமா தான் சொல்றீயா?" என்று கலா, கற்றது தமிழ் பட ஹீரோயின் போல பாவனை செய்தாள். சிரிப்பு அலைகள் எதிரொலித்தன! தன்னை கிண்டல் செய்கிறார்கள் என்று கோபம் கொண்ட சசி,

"don't waste time. கொஞ்சம் படிக்குறீங்களா?"

ஒரு மணி நேரமா புத்தகத்தை புரட்டினாள் கலா. மண்டையில் ஒன்றும் ஏறவில்லை. விஜி ஓரளவுக்கு இரண்டாம் பக்கத்தை தாண்டினாள். சுதா ஒரு chapterயை முடித்தாள்.

சில குறிப்புகளை மனப்பாடம் செய்ய முயற்சித்தாள் கலா. "the assumptions of wilcoxon sign rank test are sample differences are randomly selected from...from....from..." அதற்குமேல் அவளுக்கு எதுவும் வரவில்லை. எரிச்சல் கொண்ட கலா, "ஐயோ... படிச்சா ஒன்னுமே புரியலையே." தலையை பிய்த்து கொண்டாள்.

"ஏய் கூல் கூல்... இதலாம் படிச்சவுடனே புரியாது. படிக்க படிக்க தான் புரியும்." விஜி படிக்காதவன் தனஷ் பாணியில் தோரணை செய்தாள்.

"எப்படி சசி, நீ மட்டும் இவ்வளவு வேகமா எல்லாத்தையும் படிச்சு முடிச்சுட்டே?" கலா சசியை பார்த்து கேட்டாள். ஒரு கையில் calculatorரையும் இன்னொரு கையில் பேனாவையும் வைத்து கொண்டு ஒரு கணக்கு கேள்விக்கு பதில் எழுதி கொண்டிருந்தாள் சசி. கலா கேட்ட கேள்விக்கு பதில் அளித்தாள் அந்த கணக்கு பதிலை எழுதி முடித்தவுடனே. அவள் எழுதிய பதில் சரிதானா என்பதை பார்த்துவிட்டு,

"yes...i got it correctly...ஓ கலா என்ன கேட்ட...எப்படி இப்படிலாமா? அதுக்கு மூளை நிறைய வேணும்?" தான் பெரிய ஜோக் அடித்ததுபோல் சிரித்தாள்.

"அதான்...ஆச்சிரியமா இருக்கு. அது இல்லாமலும் எப்படி இப்படின்னு?" கலா கலாய்த்தல் அம்பு ஒன்றை வீசினாள். சசியை கிண்டல் செய்தது கலாவிற்கு விஜிக்கும் உற்சாகம் ஏற்பட, இருவரும் 'high-five' என்று சொல்லி உள்ளங்கைகளால் அடித்து கொண்டனர்.

சசி ரொம்ப நல்ல பெண். அப்பாவிகூட. இந்த செட்ல அவ தான் நிறைய மதிப்பெண்கள் வாங்குவாள். கடவுள் பக்தி அதிகம். ஆனால், இவர்கள் அவளை கேலி செய்வதை சீரியஸாக எடுத்து கொள்வதில்லை. இது தான் சசியின் குணம். மற்ற மூவரும் இவளை சும்மா ஜாலிக்காக கிண்டல் அடிப்பார்கள் ஒழிய எந்த ஒரு உள்நோக்கமும் இருக்காது. இந்த புரிந்துணர்வு தான் இவர்கள் நால்வரையும் ஒன்றாக வைத்திருக்கிறது.

"ரொம்ப பசிக்குது எனக்கு...." சுதா வயிற்றில் கைவைத்து.

"வீட்டுல என்ன இருக்கு சாப்பிட?" சசி வினாவினாள்.

"ரெண்டு நாள் தானேன்னு...அம்மா தயிர் சாதம் சாப்பிட்டு adjust பண்ணிக்க சொன்னாங்க?" கலா படுக்கையில் படுத்துகொண்டு கால் ஆட்டியவாறு பதில் சொன்னாள்.

மற்ற மூவரும், "what!!!" ஆச்சிரியப்பட்டனர்.

"வெறு தயிர் சாதமா? no way man...படிக்குற புள்ளைங்க...நல்லா சாப்பிடனும். milo, complan, boost, horlicksன்னு குடிச்சு தெம்பா படிக்க வேண்டாமா!" சுதா கேட்டாள்.

தனது 'கீச்கீச்' குரலால் சசி, "horlicks குடிக்க நீ என்ன pregnantடாவா இருக்கே?" சத்தம் போட்டு சிரித்தாள். கலாவும் விஜியும் சேர்ந்து சிரித்தனர்.

"இல்ல டி... தயிர் சாதம் சாப்பிட்டுக்கோ..இல்லேன்னா நீயே எதாச்சு சமைச்சு சாப்பிடுன்னு சொன்னாங்க அம்மா." என்றாள் கலா.

"அப்ப சரி...எங்களுக்கு சமைச்சு போடு... எனக்கு சிக்கன் பிரியாணி வேணும். உனக்கு விஜி?" சுதா விஜியிடம் தனது பார்வையை திருப்பி.

"எனக்கு plain rice and mutton fry." விஜியின் பதில்.

"எனக்கு kadai fish fry, egg fried rice...அப்பரம்... ஒரு கப் sweet lassi without ice." சசியின் பதில்.

படுக்கையில் இருந்த தலையணைகளை விஜி, சுதா, சசியின் மீது வீசினாள் கலா. "அடிங்க..., என்னைய பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு. வாய்க்கு ருசியா வக்கனையா கேக்குறீங்க?"

"என்னப்பா...நாளைக்கு போற இடத்துல இதலாம் செய்ய தெரியலைன்னா நம்மள தானே நாலு பேரு கேப்பாங்க?" விஜி சிரிப்பை அடக்கி கொள்ள முடியாமல் கேட்டாள்.

"ஓய்..இது எங்க அம்மா டயலாக் ஆச்சே!" கலா சிரித்தாள்.

"ஏய் எல்லாரும் வீட்டுலையும் இதே டயலாக்க தான் எல்லா அம்மாவும் சொல்றாங்க...." சுதாவும் சேர்ந்து சிரித்தாள்.

"நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு சூப்பரான செட்டிநாட்டு restaurant வச்சுருக்கிறவனா பாத்து கல்யாணம் பண்ணிக்குவேன்...அப்ப நம்ம problem solved. என்ன சொல்ற?" மற்ற மூவரையும் பார்த்து சொன்னாள் கலா.

"அப்ப... ஏதோ ஒரு அண்ணாச்சிக்கு மருமகளா போறதுன்னு முடிவு பண்ணிட்டே?" சசி வினாவினாள்.

"ஐயோ....cut the crap girls. let's order pizza!" சுதா பசி தாங்காமல் கத்தினாள்.

"ஏய் உங்க அப்பாவீட்டு பணமா? பீஸ்சா ஆர்டர் பண்ணலாமான்னு கேக்குறே?" கலா படுத்துகொண்டே கேட்டாள்.

"இல்ல உங்க அப்பாவீட்டு பணம்..." என்று சொல்லிய சுதா, கலாவின் கைபையிலிருந்து பணத்தை எடுத்து காட்டினாள்.

"பணத்துக்கு கணக்கு என்ன காட்டுறது?" கலா கேட்டாள். "ஏய் பொய் சொல்லறதுல நீ ஜக கில்லாடி.... இதுக்கும் ஒரு பொய்ய சொல்லு...இதலாம் உனக்கு என்ன புதுசா?" சுதா சிரித்தாள்.

"சரி...ஒகே... donationக்கு ஆள் வந்தாங்க...அதுக்கு கொடுத்துட்டோம்ன்னு சொல்லிடுறேன். let's order pizza yea!!!" குதுகலமானாள் கலா.

பீஸ்சா சிறிது நேரத்தில் வந்தது. அதை முழுங்கிவிட்ட இந்த நான்கு அனகோண்டாக்கள் ஹாலில் உள்ள சோபாவில் விழுந்துகிடந்தனர்.

"வயிறு நிறைய சாப்பிட்டாச்சு...ரொம்ப ஓவரா enjoy பண்றோம்ல!" சசி கொஞ்ச குற்ற உணர்ச்சியால் தயங்கினாள்.

"யாரடி இவ வேற....இதலாம் ஒரு enjoymentஆ....பரிட்சை முடியட்டும்..அப்பரம் இருக்குது நமக்கு கொண்டாட்டம்." மேசையில் இருந்த கோக்கை முடித்தாள் விஜி.

ரொம்ப நேரம் அமைதியா இருந்த கலா ஏதோ ஒரு யோசனை வந்ததுபோல் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து மற்ற மூவரையும் பார்த்து, "girls, why not we go clubbing tonight?" திருட்டு சிரிப்பு சிரித்தாள்.

சசியின் வாயிலிருந்த பீஸ்சா கீழே விழ, சுதா மயக்கத்திலிருந்து எழு, விஜி குடித்து கொண்டிருந்த கோக்கை துப்ப, மூவரும், "what!!!!!!!" என்று கூச்சலிட்டனர்.

(பகுதி 2)

Apr 8, 2009

ஓட்டுபோட்ட எல்லாருக்கும் நன்றி!


கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நாங்க ஒரு வீடியோ போட்டில கலந்து கொண்டு உங்களிடம் ஓட்டு போட சொன்னோம்ல, அதுக்கு மூன்றாவது பரிசு கிடைச்சுருக்கு அக்காவுக்கு. ஒரு ipod. உங்களது பொன்னான வாக்குகளை செலுத்தி வெற்றி பெற செய்த அனைவருக்கும் கோடி நன்றிகள்!:) நீங்க போட்ட ஒவ்வொரு வாக்குகளும் இப்போ இசையா மாறியிருக்க. அத கேட்கபோறேன்னு நினைச்சா கண்ணு கலங்குது...(feelings of singapore, india, srilanka...வேற எங்கிருந்தோ ஓட்டு போட்டீங்களோ அந்த ஊரையலாம் சேர்த்துக்குங்க..அவ்வ்வ்)

இலவச டிவிடி பிளேயர், வேட்டி சட்டை, பட்டுபுடவை, 10 பவுன் தங்க சங்கிலி, ஒரு வைர மோதிரம்...இப்படி உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை தான். ஆனா...பட்ஜெட் இடிப்பதால், அடுத்த முறை செயல்படுத்த முயற்சிக்கிறோம்! :)

இதுல இன்னொரு காமெடி என்னென்னா.... இந்த ipodட்ட எப்படி ஆப்ரேஷன் செய்வது என்று..ச்சி..ஐ மின் எப்படி ஆப்ரேட் செய்வது என்று தெரியவில்லை. 'எடிசனின்' கடைசி பேத்தி என்ற முறையில் நான் தற்சமயம் இந்த 'ஆப்ரேஷனில்' தீவிரமாக உள்ளேன். பல முயற்சிகளை செய்துவருகிறேன்.

நேற்று பரிசளிப்பு விழா. எந்த ஒரு பரிசளிப்பு விழாவுக்கு போனாலும் எனக்கு இந்த மன்னன் படத்தில் வந்த ரஜினி-கவுண்டர் காமெடி நினைப்புக்கு வந்துவிடும். அவர்கள் தங்க சங்கிலியும், மோதிரமும் வாங்க போகும் காட்சி கண்முன்னே வந்துவிடும். அப்படி தான் நேற்றுக்கும் போய் உட்கார்ந்தவுடனே எனக்குள்ளே ஒரு சிரிப்பு! அந்த உரை, இவர் பேச்சு, அந்த பேச்சு... என்று கொலை அறுவை...உஷ்ஷ்ஷ.... எப்படா விடுவாங்கன்னு இருந்துச்சு.

ஏகப்பட்ட பேட்டி, புகைப்படம் எடுத்து கொள்வது என்று அக்காவை சுற்றி ஏராளமான மக்கள். நான் அக்காவின் பையை தூக்கி கொண்டு ஒரு ஓரத்தில் நின்றேன். இப்ப தான் தெரியுது.. ஏன் இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாகிறார்கள் என்று! ஹாஹாஹா....:)

பரிசளிப்பு விழா நடந்த இடம் raffles place. night lifeக்கு உகந்த ஒரு ஏரியா..... ஒரு உணவகத்தின் வெளியில drums வாசிச்சாங்க பாருங்க.... அங்கேயே கொஞ்ச நேரம் நின்று பார்த்துட்டு இருந்தேன். இந்த இடத்துக்கு எல்லாம் அடிக்கடி போக முடியாது என்பதால் நான் அக்காவிடம்

"அக்கா...கொஞ்ச நேரம் இங்கேயே சுத்திட்டு போலாமா?" என்றேன். அவரும் ஒகே என்றுவிட்டார்! நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். அந்த இடம், வெளிச்சம் குறைவாக இருந்தாலும், அதில் இருந்த அழகு, ஏகப்பட்ட நடவடிக்கைகள், சாப்பாட்டுகடைகள், நிறைய வெள்ளக்காரன்ஸ்...

எத பாக்குறது...எத விடுறதுன்னு தெரியாம முழிச்சேன்(ஐயோ....நான் சாப்பாட்டு கடைகள சொன்னேன்....முறைக்காதீங்க:) இடம் ரொம்ப பிடிச்சுபோச்சு.

இந்த பதிவை எழுதிகொண்டிருக்கும்போது, ipodட்ட எப்படி ஆப்ரேட் செய்வது என்று googleலில் கண்டுபிடித்துவிட்டேன். சரி நான் போய் இசையில் சங்கமம் ஆகிறேன். .....

Apr 6, 2009

டி ஆர் மற்றும் ரமேஷின் இங்கிலீசு- துரை என்னமா பேசுது!



யப்பா... ambulanceக்கு ஃபோன் பண்ணுங்க? என்னால முடியல....atleast ஒரு oxygen tankகாவது ஆர்டர் பண்ணுங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....



suppress and upress and depress!
compress
actress
aggress
distress
empress
hindu express
overdress
u media press
i going congress!!

Apr 5, 2009

அயன் படத்துக்கு அப்பரம் நடந்த கதை

நேற்று அயன் படத்தை பார்த்தேன். அதுக்கு விமர்சனம் போட்ட பிறகு, தமிழ்மணத்தில் 'சூடனா இடுகைகள்' பகுதியிலும் தமிலீஷ்.காமில் popular பதிவில் இந்த திரைவிமர்சன பதிவு வந்தது ரொம்ம ஆச்சிரியமா இருந்துச்சு. 4 வருஷமா எழுதுறேன், ஒரு தடவகூட எந்த பதிவும் இப்படி வந்தது இல்ல. ஆனா, நேத்திக்கு... ஹாஹா... நன்றி கே வி ஆனந்து சாரே!!

அயன் படம் பார்த்துவிட்டு நடந்த ஒரு சம்பவம். செம்ம காமெடியா போச்சு. படம் பார்த்து கொண்டிருந்தபோது, எங்கள் பக்கத்தில் ஒரு சீன பெண்மணி உட்கார்ந்து இருந்தார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னடா இவங்க, தியெட்டர் மாறி வந்துட்டாங்களான்னு நினைத்தோம். ஹிந்தி படங்களுக்கு மற்ற மொழி மக்கள் வருவார்கள், அப்படங்களுக்கு ஆங்கில subtitle இருக்கும். தமிழ் படங்களுக்கு அப்படி இருக்காது. ஆனா, ரொம்ப நேரம் கவனித்தோம் அவரை. அவரும் ரசித்து பார்த்து கொண்டிருந்தார். சில பாடல்களும் முடிந்தபிறகு, கைதட்டினார் வேற.

இடைவேளையின் போது,அவரிடம் கேட்டோம் உங்களுக்கு ஏதாச்சு புரியுதா. அவர் ஆங்கிலத்தில் சொன்னார், "எனக்கு இந்திய படங்களை பார்க்க புடிக்கும். சூர்யாவ பிடிக்கும். பின்னாடி ஒருத்தர் உட்கார்ந்து இருக்காரே,அவர் சூர்யாவா?"

நாங்கள் பின்னாடி திரும்பி பார்த்தோம், ஒருத்தர் உட்கார்ந்திருந்தார், வழக்கை தலை.. பார்ப்பதற்கு பொன்னம்பலம் மாதிரி இருந்தார். ஹாஹா... இவரை போய்... ஐயோ ஐயோ.. படம் முடிந்து அந்த சீன பெண்மணி தைரியமாக பின்னாடி திரும்பி 'பொன்னம்பலத்திடம்' கேட்டார், "நீங்க தானே படத்துல நடிச்சவங்க?"

எங்களுக்கு நெஞ்சு வெடிச்சுடுச்சு. 'பொன்னம்பலம்' பக்கத்தில் இருந்த அவரின் girlfriend/wife(யாருன்னு சரியா தெரியல்ல...) விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார். எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியல. கொஞ்ச நேரம் இருந்திருந்தால், அந்த சீன பெண்மணி என் அக்காவை பார்த்து,

"நீங்க தானே தமன்னா?" என்று கேட்டு இருப்பார். அக்கா(தமன்னாவின் தீவிர ரசிகர்)வும் ஆமா ஆமா என்று தலையாட்டி இருந்திருப்பார்!!!

நான்: ஆனா, அக்கா கொஞ்ச மாநிறமாச்சே....

என் தோழி: அக்கா சொல்லும் 'நான் வெள்ளையா தான் இருந்தேன்.. .சிங்கப்பூர் வெயில இப்படி மாறிட்டேன்னு' பீலா வுடும்!

ஹாஹாஹா.....

Apr 4, 2009

அயன் - கே வி ஆனந்து சாரே, கலக்கிட்டய்யா!

எனக்கு சூர்யாவும் பிடிக்காது(இப்படி உலகத்துல நான் மட்டும் தான் இருப்பேன்னு நினைக்குறேன்), தமன்னாவும் பிடிக்காது...அப்பரம் எதுக்கு நீ அயன் படம் பார்க்க போனேன்னு நீங்க முறைச்சுகிட்டு கேட்பது எனக்கு தெரியது. wait a minute for 5 mintues..அதுக்கு தானே வரேன்.

நான் இந்த படத்தை பார்க்க செல்ல மூன்று பேர் காரணம். இயக்குனர் கே வி ஆனந்த், எடிட்டர் ஆண்டனி, காமெடியன் ஜெகன். மூன்று பேரும் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளனர் என்றே சொல்லலாம்.

கே வி ஆனந்த சாரே, கலக்கிட்டீங்கய்யா! நிறைய யோசிச்சு இருக்கீங்க! அதன் வெளிபாடு நல்லா தெரியுது. இருந்தாலும் சில லாஜிக் இடித்தல்களை சரிசெய்து இருக்கலாம்!

ஆண்டனி- அண்ணா, வா அண்ணா, வா அண்ணா! உன்னைய அடிச்சுக்க ஆளே இல்ல. படத்தை இவ்வளவு விறுவிறுப்பாக போக காரணம் நீங்களும் தான். இருந்தாலும்,அனைத்து பாடல்களின் எடிட்டிங் ஒரே மாதிரி இருக்குப்பா... கொஞ்சம் வேற மாதிரி எடிட்டிங் செய்யுங்க அண்ணா! :)

ஜெகன் - oh my god, jagen, you simply rock i tell u! சமீப காலத்தில் காமெடி என்ற பெயரில் விவேக்கும், வடிவேலும் ரொம்ப டேமேஜ் செய்துவிட்டார்கள். சந்தானம் கொஞ்ச பரவாயில்லை என்ற ரகத்தில் இருக்கிறார். காமெடியில் கலக்க நான் வரேண்டா என்று நீங்கள் வந்து இருப்பது ரொம்ப அருமையாக உள்ளது. மச்சி, அசத்துறீங்க!

படத்தை பார்க்க, நான், என் அக்கா, என் தோழி மூவரும் சென்றோம். படம் ஆரம்பிக்கும் முன் அக்கா கேட்டார், இந்த படத்துல யாரு காமெடியன். நான் உடனே சொன்னேன் , "அநேகமா பிரபு தான்". இருவரும் சிரித்தனர். சீரியஸான சீன்களை தேவையில்லாமல் காமெடியாக்கிவிடுவார் என்று நினைத்தேன். என் கருத்தை தவறாக்கிவிட்டார். சும்மா சொல்லகூடாது, பிரபுவின் நடிப்பு செதுக்கி வைத்தது போல் அளவான நடிப்பு! படத்தின் ஒரு பலம் பிரபு!

romantic comedy thriller என்று வகைப்படுத்தப்பட்டாலும், romance ரொம்ம்பவே குறைவு. காமெடியும் திர்ல்லரும் அதிகம்!
வசனமும், நகைச்சுவையும் இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய ப்ளஸ். இந்த படம் ஏதோ ஒரு ஆங்கில நாவலை தழுவி வந்தது என்று கேள்விப்பட்டேன். கதை என்ன என்பதையெல்லாம் சொல்ல போவது இல்லை. நிறைய வலைபதிவர்கள் எழுதிவிட்டார்கள்.

படத்தில் எனக்கு பிடிக்காதது....

1)பாடல்களின் நடன அமைப்பு சொதப்பல்ஸ்.

2) அடிக்கடி சூர்யா சட்டையை கழட்டி தனது 6-pack உடலை காட்டுவது சலிப்பை தட்டுகிறது.இந்த கதையில் நாயகன் ஓடி கொண்டே இருக்கிறார். எங்க டைம் இருக்கு உடற்பயிற்சி செய்து 6-பேக் உடலை உருவாக்க நேரம் இருக்கு. ஏங்க, தமிழ் சினிமா திருந்தாதா?

3) அண்ணன் ஜெகன் இறந்த பிறகு, தங்கை தமன்னா, அவனது செல்போனில் இருக்கும் video galleryயை பார்ப்பது, யதார்த்தத்தை மீறிய செயலாக இருக்கு.

4)நெருப்பினால் காயம் ஏற்பட்ட பிறகும் நாயகன் டயலாக் பேசுவது! (ச்சே... ஆனந்து சாரு, நீங்களுமா?)

5) கிளைமெக்ஸ் காட்சி, வில்லனும் நாயகனும் ஒன் -டு- ஒன் சண்டை போடுவது.

6) வில்லனக்ளுக்கு ஒரு item song வைப்பது( எந்த வில்லன்களுக்கு கலைகள் மீது இவ்வளவு ஆர்வம் என்று தெரியவில்லை)

7) சூர்யா ஒரு கடத்தல்காரர் என்று தெரிந்தும், custom officers அவனைகூடவே வைத்து கொண்டு குற்றசெயல்களை கண்டுபிடிப்பது, பின்னர் கடைசியாக அவனுக்கு வேலை கொடுப்பது...கொஞ்சம் ஓவரா இருக்கு!

8) சூர்யாவின் அம்மா கடையில் தமன்னா 'whisper sanitary napkin' வாங்க வருவார். அதற்கு சூர்யா, "இது என்னது... அடிக்கடி டீவியில காம்பிக்கிறான்... இது என்ன breadஆ?" என்று கிண்டல் அடிப்பது. சகிக்க முடியாத ஜோக். it was a crude joke, an insulting statement. சென்சார் போர்ட் என்ன செய்து கொண்டிருக்கிறது???

ஐயோ... அப்பரம் இந்த படத்தில் நல்லதே இல்லையா? இருக்கு இருக்கு.... நான் சொன்னவை எல்லாம் படத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன இடங்களில் வந்தவை.தவிர்த்து இருக்கலாம்.

எனக்கு பிடித்தது....

1) title song

2) ஆப்பிரிக்காவை காட்டிய விதம்

3) விழி மூடிடும் பாடலில் வந்த காட்சிகள். குறும்பின் உச்சக்கட்டம்.

4) வில்லனின் hairstyle(ஹாஹா....)

5)ஆப்பிரிக்காவில் நடந்த stunt chase. stunt coordinator william wong கலக்கி இருக்காரு!

6) உங்களுக்கு அசின் பிடிக்குமா, சமீரா பிடிக்குமா? என்று கேள்விக்கு, "எனக்கு எப்போதும் ஜோ தான்" என்று சூர்யா சொல்வது, அசத்தல்! (கண்ணு, நல்லா பொழைக்க தெரிஞ்சவங்க நீங்க)

7) கதைக்களம்

8) சூர்யாவின் அம்மா கதாபாத்திரத்திற்கு ரேணுகாவை போட்டது. அந்த கதாபாத்திரத்தை அவரால் மட்டுமே செய்யமுடியும் என்ற அளவுக்கு நடித்துவிட்டார்!:)

9) பொன்வண்ணன் காமெடி

சூர்யாவுக்கு இது வெற்றி படமே! சன் பிக்சர்ஸ் முதன் முதலாக ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளது. பாராட்டுக்கள்!

அயன் - பார்க்கவேண்டிய interesting entertainer!

Apr 3, 2009

பார்வை ஒன்றே போதுமே

ஹாலில் அப்பா, அம்மாவுக்கு உதவியாய் காய்கறி வெட்டிகொடுத்து கொண்டிருந்தார். நான் சும்மா உட்கார்ந்து இருந்தேன். அப்போது,வீட்டின் நுழைவாயில் ஒரு சத்தம் கேட்டது. "ஹாலோ, யாராச்சு இருக்கீங்களா?"

அம்மா கதவு அருகே சென்றார். புதிதாக ஒரு பெண்மணி. "ஹாய், நாங்க எதிர்த்த வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம். பால் காய்ச்சினோம். அதான் கொஞ்சம் உங்களுக்கு கொடுத்துவிட்டு போகலாம்னு வந்தேன்..." அவர் புன்னகையித்தார். அம்மா உள்ளே அழைத்தார். இருந்தாலும் தனக்கு வேலைகள் இருப்பாதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.அவர்கள் கதவு அருகே பேசியதால், புதுசா வந்திருக்கிற ஆண்ட்டி முகத்த பார்க்க முடியவில்லை.

நாட்கள் செல்ல செல்ல, நிறைய விவரங்களை அறிந்து கொண்டேன். அவர்களது குடும்பம் சிறியது தான். அப்பா, அம்மா, ஒரே ஒரு பையன். பையனுக்குகூட வயது 24. ஐயோ... நானாக எதையுமே கேட்கவில்லை. செய்திகள் அதுவாகவே வந்து குவிந்தன. ஆனால், ஆண்ட்டியையும் அங்கிளையும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை... சரி சரி ஒத்துகிறேன்... அவனையும் பார்க்க வாய்ப்பு கிட்டவில்லை.

ஒரு நாள் மாலை நான் மொட்டை மாடியில் இருந்தேன். மாலை நேர பொழுது. வெயில் அதிகமாக இல்லை. வானத்தில் மேகங்கள் வாக்கிங் போய் கொண்டிருப்பதை ரசித்து கொண்டிருந்தேன்.இதமான தென்றல். ரம்மியமான சூழல். அப்போது தான் அவன் வீட்டு மொட்டை மாடியை கவனித்தேன்.அவன் அங்கு இருப்பதை பார்த்தேன். சும்மா சொல்லகூடாது. நல்லாவே இருந்தான். அவனும் என்னை பார்ப்பதை கவனித்தேன். "ஓ மை காட்...." என்று மனம் படபடத்தது. நான் பார்க்காததுபோல் இருந்தாலும் அவன் விடுவதாக இல்லை. அவன் பார்வை என்னைவிட்டு விலகவில்லை.

உள்ளூர சின்ன சந்தோஷம். இருந்தாலும் கொஞ்ச பயம், ஒருவித படபடப்பு! கொஞ்ச நேரம் கழித்து அவன் கை அசைத்தான் என்னை பார்த்து. நான் பறப்பதுபோல் உணர்ந்தேன். ஒன்றும் சொல்ல முடியவில்லை! என்னடா இது, இவனுக்கு ரொம்ப தைரியம் தான் என்று மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கியது.

வாக்கிங் சென்ற மேகங்கள் கால் தடுக்கி கீழே விழ, அவை அழ ஆரம்பிக்க, மழை பொழிய தொடங்கியது. அம்மா தங்கையிடம், "ஏய், மொட்டை மாடில காய போட்டுருக்கும் உன் அக்காவோட நீல கலர் சுடிதார எடுத்துட்டு வந்துடு"

ஓடி வந்த தங்கை, கொடியில் காய்ந்து கொண்டிருந்த என்னை 'வெடு'க்கென்று அள்ளி கையில் போட்டவாறு ஓடினாள். போகும்போது, எதிர்த்த வீட்டில் காய்ந்துகொண்டிருந்த வெள்ளை டீஷர்ட்டை ஆண்ட்டி எடுத்து போவதை பார்த்தேன்

Apr 1, 2009

முட்டாள்கள் தினம்- எங்களுக்கு தீபாவளி மாதிரில!

முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும்(அவ்வ்வ்வ்வ்வ்...) சென்ற ஆண்டு தொடங்கிய இந்த 'வியாதி' இந்த ஆண்டு வரை நீடிக்கிறது. சென்ற ஆண்டு ஒரே கதையை வைத்து 4 நண்பர்களை ஏமாற்றினேன். (இதலாம் ஒரு பொழப்பா அப்படின்னு நீங்க சொல்றது என் காதுல விழுந்தாலும்... விழாத மாதிரி இருந்துகிறேன்)


எத்தனையோ கதை எழுதுறோம்(ஓ... நீ எழுதுவதற்கு பெயர் கதையா.. சரி ரைட்டு), நமக்காக ஒரு கதைய அவிழ்த்துவிடுவோமே என்று ஆரம்பித்தேன். ஏப்ரல் 1ஆம் தேதி அன்று நிறைய பேர் உஷாராக இருப்பதால், ஒரு வாரத்திற்கு முன்பே என் வேட்டையை ஆரம்பித்துவிட்டேன். இப்போது எல்லாம் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று யாருமே ஃபோனைகூட எடுப்பதில்லை! ஹிஹி.... சரி நம்ம கதைக்கு வருவோம். இந்த வருடம் target அப்பாவி 5 நண்பர்கள்.


1) தோழனிடம் ஒரு வாரத்திற்கு முன் பேசி கொண்டிருந்தபோது, அவன் என்னை கிண்டல் செய்து பேசிய போது நான் சொன்னேன், " ஏய் இப்படி பேசாதே...என் bf கேட்டாருன்னா தப்பா நினைப்பார்." என்று பொய் சொன்னேன். அவன் அதிர்ச்சியாய், "என்னது bf? எப்போ இதலாம் நடந்துச்சு?" என்று ஆரம்பித்தவனிடம் ஒரு மெகா மகா பொய் கதையை கூறினேன். கொஞ்ச நாள்கள் கழித்து, bf என்னிடம் சண்டை போட்டதாகவும், நாங்க பிரிந்துவிட்டோம் என்பதாகவும் சொன்னேன். ஒரு வாரம் ஓடிய கதை, இன்று தான் உண்மையை போட்டு உடைத்து, இந்த உலகில் நீயும் ஒரு முட்டாள் தான் என்று மகுடம் சூடி பாராட்டினேன். :) பையன் கோபத்துல கொந்தளிச்சுகிட்டு இருக்கான்!!


2) வூட்டுல மாப்பிள்ள பாக்குறாங்கன்னு இன்னொரு கதை, இது சிட்னியில் படிக்கும் என் பள்ளி தோழிக்கு இமெயில் மூலம் அனுப்பினேன். பொண்ணு பயந்து, மிரண்டு போய், அட்வைஸ் மேல் அட்வைஸ் அனுப்பி அதன் பாச மழையை பொழிந்துவிட்டது. என்ன தான் சொல்லுங்க... நமக்கு ஒரு கஷ்டம் வந்தா... இந்த பாசக்கார புள்ளைங்க ரொம்ம்ப தவிச்சுடுறாங்கப்பா!! எப்படி ஓடியது என்பதை காண இங்க செல்லலாம்! இமெயில் கலாட்டா

பிறகு, அவளிடம் உண்மையை போட்டு உடைத்து, எனது இரண்டாவது சதத்தை அடித்தேன்.


3) இது மூன்றாவது பந்து, கண்டிப்பாக hatrick அடித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஆக, மேல் சொன்ன இரண்டாவது கதையை குறுந்தகவல் மூலம் அனுப்பினேன் ஒரு தோழியிடம்.அவளும் ஓரளவுக்கு ஏமாந்துவிட்டாள்.


4) குறந்தகவல், இமெயில்....ஒகே. யாரு யாரோ கண்டுபிடித்ததை பயன்படுத்தினாயே, ஏன் நான் கண்டுபிடித்ததை பயன்படுத்தவில்லை என்று alexander grahambell கேட்டுவிடகூடாது பாருங்க. ஆக, நேற்று என் கல்லூரி தோழியிடம் ஃபோன் செய்து , "என் ஆண்ட்டி ஒருத்தர் ஒரு film production company வச்சு இருக்காங்க. அவங்க ஒரு குறும்படம் எடுக்க போறாங்க. உன்னைய நியூ இயிர் பார்ட்டில பாத்தாங்க. உன் ஃபோட்டா காட்டுனாங்க. நான் சொன்னே இந்த பொண்ணு என் தோழி தானு. என்னைய உன்கிட்ட பேசி பாக்க சொன்னாங்க. அதுல உன்னைய நடிக்க கூப்பிடுறாங்க. அந்த படம் ஒரு இளையர பத்தி.' என்றேன். பொண்ணு ரொம்ப fitness conscious. ஒல்லியா இருப்பா. அதனால நான் சொன்னேன் ," இந்த படத்துக்காக நீ ஒரு 20 கிலோ வேட் போடனும்." என்றதும் ஆச்சிரியத்தின் உச்சிக்கு போய்விட்டாள்.

அதுக்கு அப்பரம் உண்மை தெரிந்தபிறகு, என்னை பாராட்டிய ஒரே ஜீவன் இவள் தான். சிரித்து கொண்டே அவள், "உனக்கு எப்படி இப்படிலாம் தோணுது. very innovative idea."

5) இன்னொரு கல்லூரி தோழியிடம் assignment due date நாளைக்கு என்றதும் பதறிவிட்டாள். அவள் எனக்கு பாராட்டு விழா எடுக்க போவதாக சொல்லியிருக்கிறாள். ஹிஹி...

ஆமா... எல்லாரையும் ஏமாற்றுகிறோமே. நம்மை ஏன் யாருமே ஏமாற்றுவதில்லை?? :)))