Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Aug 23, 2016

சிங்கப்பூரின் தங்க மகன்- ஜோசப் ஸ்கூலிங்

13 ஆக்ஸ்ட் 2016.

காலை 9.05. ஒலிம்பிக்ஸ் நீச்சல் இறுதி போட்டி- 100மீட்டர் வண்ணத்துபூச்சி ஸ்டைல்.நேரடி ஒளிப்பரப்பு.

மடிக்கணினி முன்னால் நான். நகரவில்லை.
பயமும் பதற்றமும் மனசு முழுக்க நிரம்பி கிடக்க, என் தாய் நாட்டை சேர்ந்த ஜோசப் நீச்சல் குளம் அருகே வருகிறார். சிங்கப்பூருக்கு இருக்கும் ஒரு இரு வாய்ப்புகளில் இதுவும் ஒன்று.

வீசில் ஒலித்தது. அனைவரும் குதிக்க, மூச்சுவிடவதை நான் நிறுத்தியதுபோல் ஒரு உணர்வு. நான்காவது தடத்தில் ஜோசப் முதலில் சென்று கொண்டு இருக்கிறார். 50 மீட்டரை கடந்த நிலையிலும், ஜோசப் முன்னிலையில் இருக்கிறார். ஒருவர் நீந்துவதை பார்த்து, இதயம் என்றுமே இப்படி அடித்து கொண்டது இல்லை, இனியும் அது நடக்காது!

90 மீட்டரை கடந்துவிட்டார். வர்ணனையாளர் ஆங்கிலத்தில், "are we going to witness history today?" என்று கூறி முடிப்பதற்குள், ஜோசப் 100 மீட்டரை தொட்டுவிட்டார். வரலாறு படைத்துவிட்டார். சிங்கப்பூரின் முதல் தங்க பதக்கம்.



சத்தியமா சொல்றேன், வாய்விட்டு அழுதேன். (இதை எழுதும்போதுகூட கண்ணு லேசா கலங்குது!) இது தேச பற்றா? இல்ல, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கொண்டவருக்கு கிடைக்கும் வெற்றியை கண்டு மனம் மகிழும் தருணமா? கொஞ்சம் நேரம் அப்படியே மடிக்கணினியை பார்த்து கொண்டிருந்தேன். மறுபடியும் அவர் கடைசில் நீச்சல் தளத்தை தொடுவதை மட்டும் slow motionனில் காண்பிக்க, மறுபடியும், கண்கள் கலங்குது!



வெளியே அவ்வளவு ஆரவாரம்! அண்டைவீடுகளில் பலத்த கரகோஷம். ஏதோ நம்ம வீட்டுப்பிள்ளை வென்றது போல் அனைவரும் கட்டிபிடித்து மகிழ்ந்தனர். இந்த மாதிரி ஒரு உணர்ச்சிபூர்வமான நிகழ்வு இனிமேல் நடக்குமானு தெரில. ஆனால், என் வாழ்க்கையில் இப்படி ஒன்றை தந்த தங்க மகனுக்கு, நன்றி!

பரிசளிப்பு விழாவில், என் நாட்டுக் கொடி பறக்க, அறையில் தான் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன். இருந்தாலும், எழுந்து நின்று தேசியகீதத்தை பெருமையுடன் பாடினேன். சிங்கப்பூர் பள்ளிகளில் தினமும் தேசிய கீதம் பாட வேண்டும். இத்தன வருடங்களில் நான் இவ்வளவு பெருமிதத்தோடு பாடிய ஒரு நாள் எது என்றால், அது 13 ஆக்ஸ்ட் 2016 அன்று தான்!

எந்த விதத்தில் அவர் வெற்றிக்கு துணை போய் இருக்கோம்?
ஒரு விதத்திலும் கிடையாது!

இருந்தாலும், வெற்றி பெற்ற பிறகு, வெறும் 21 வயது நிரம்பிய ஜோசப் தம்பி சொல்லுது, "இது என் வெற்றி இல்லை. இது நம்ம வெற்றி!"


(ஜோசப் மற்றும் பெற்றோர்கள்)

ஜோசப்-பின் வெற்றிக்கு ஒரே காரணம்- அவரது பெற்றோர்கள். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து, 13 வயதில் நான் அமெரிக்காவுக்கு சென்று உலகின் பிரபலமான பொல்ஸ் நீச்சல் பள்ளியில் சேர வேண்டும் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவரின் பெற்றோர்கள் எடுத்த முடிவே சிங்கையின் சிங்கமாக திகழ்கிறான் இன்று. 

சிங்கப்பூர் பல விஷயங்களில் தலை சிறந்து விளங்கினாலும், விளையாட்டு என்று வந்தால், ரொம்பவே பின் தாங்கி இருக்கிறோம். ஆனால், பல கோடி செலவு செய்து சீனாவிலிருந்து மேசை பந்து விளையாட்டாளர்களை வரவழைத்து இரண்டு வருடங்களில் சிங்கப்பூர் குடிமகன் உரிமை கொடுத்து இவர்களும் நம் நாட்டை சேர்ந்தவர்கள் தான் என்று கூறி, அரசாங்கம் பல வருடங்களாக செய்லகண்டு வந்திருக்கிறது.

இது பெரிய சர்ச்சையையே கிளப்பி இருந்தது. இன்று வரையில், அவர்கள் ஜெயித்தாலும், அதில் பல சிங்கப்பூரர்களுக்கு பெருமையில்லை. அதனால் தான் ஜோசப் கொடுத்த வெற்றி அரசாங்கத்தின் திட்டத்திற்கு பெரிய பதிலடி என்று நினைக்கிறார்கள் பலர். அவரின் பெற்றோர்கள் கடந்த 8 ஆண்டுகளாக, 1.35மில்லியன் வரை செலவு செய்திருக்கிறார்கள். 4 மாதங்கள் அவரின் அம்மா அமெரிக்காவில் தங்கியிருந்து ஜோசப்-பை பார்த்து கொள்வார். அடுத்த 4 மாதங்கள் அவர் அப்பா போவாராம், பிறகு அம்மா சிங்கப்பூருக்கு வந்து இங்கு இருக்கும் வீட்டை கவனித்து கொள்வாராம். சிக்கனமாக இருந்தால் மட்டும் தான் சமாளிக்க முடியாது என்று கூறும் அவரது தாயார், கடந்த 30 ஆண்டுகளாய் புது பேண்ட் கூட எடுத்தது இல்லையாம்.

(சட்டசபை வெளியே அனைத்து அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சருடன் ஜோசப்)

அமைச்சர்கள் பாராட்ட, சட்டசபைக்கு சிறப்பு விருந்தினராக ஜோசப் போக, நாடே அவருக்கு உயர்ந்த வரவேற்பு கொடுக்க, சிங்கையில் படித்த பள்ளிக்கு மீண்டும் சென்று இருக்கிறார்- இப்படி மீண்டும் சிங்கப்பூருக்கு வந்த 3 நாட்களிலே அவருக்கு ஓய்வு சுத்தமா கிடையாது.

(open top bus parade- மத்திய வேளையில் திரளன வந்த மக்கள் கூட்டம்)

அப்படி இருந்தாலும், எல்லாரிடமும் காட்டும் அன்பும், அந்த புன்னகையும், சிறிது அளவும் தலைக்கணம் இல்லாத குணமும், ஜோசப் உண்மையாக அனைவருக்கும் ஒரு நட்சத்திரமாக திகழ்கிறார்!

majulah singapura!!

(எங்கள் தேசியகீதத்தில் வரும் ஒரு வரி. அர்த்தம்- ஒன்றுபட்டு முன்னேறுவோம்!!)

Jul 7, 2014

அழுதால், தப்பா மச்சி?




ஆட்டம் ஆரம்பிக்கும்போது, அழுகை
ஆட்டம் நடுவே, அழுகை.
ஆட்டம் முடிக்கும்போது, அழுகை.
தேசிய கீதம் பாடும்போது, அழுகை.

இப்படி அழுதால், எப்படி உலக கிண்ணத்தை ஜெயிக்க முடியும் என பெரிய கேள்வி அம்பு பிரேசில் நாட்டு ஆட்டக்காரர்களின் பாய்ந்து உள்ளது.

நிறத்தனும். எல்லாத்தையும் நிறுத்தனும்-னு சொல்ற மாதிரி இந்த அழுகையையும் நிறுத்த சொல்லுது இவ்வுலகம். எனக்கு என்னமோ இது பெரிய விஷயமா தெரியல.

நீங்களே யோசிச்சு பாருங்க! 22 வயசுல, மிகப் பெரிய பொறுப்பை உங்க தல மேல வச்சா எப்படி இருப்பீங்க? கொஞ்சம்  கூட்டநெரிசலில் நடந்து போனாவே, எனக்கெல்லாம் கை கால் நடுங்கும். அப்படி இருக்கும்போது, சின்ன பசங்கள உலக அரங்கில் இறக்கிவிட்டு, விளையாட சொன்னால், அது மிக பெரிய போராட்டம் தான்.

மன அழுத்தம் தாங்க முடியாமல், அறையில் ஒளிந்து கொண்டு நம்ம அழுதால் தப்பில்லை. ஆனா, எல்லாருக்கும் முன் அவங்க அழுதால் தப்பா, மச்சி?

அழுகை ஒன்னும் கோழைத்தனம் இல்லை.
அழுகை ஒரு வகையான வீரம் தான்!

 நேமார் மீது உள்ள கண்மூடித்தனமான காதலினால், இத சொல்லல. ஜெயிக்க வேண்டும் என பசியால் அழுபவனுக்கு, அந்த அழுகை வீரம் தான்! பிறக்கும்போது அழுகிறோம், இறக்கும்போது அழுகிறோம், இதுக்கு நடுவே கொஞ்சம் அழுகிறோம்- இத தப்பு-னு சொல்ற உலகத்த புரிஞ்சிக்க முடியல.

அழுகை இயற்கையான ஒரு விஷயம். கொஞ்சம் அழுதுட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு எழுந்து பாருங்க. எல்லாமே சரியா போன மாதிரி இருக்கும். அழுகைக்கு அப்படி ஒரு சக்தி உண்டு. அதனால, இந்த பசங்கள அழ வேண்டாம்-னு சொல்றது, முட்டாள்தனம்!

22 வயசுல உலகமே திரும்பி பார்க்குற அளவுக்கு அவங்க இருக்காங்க! 22 வயசுல, நம்ம எத கிழிச்சோம்-னு பார்த்தா, வூட்டுல உள்ள calendar தேதிய கூட கிழிச்சு இருக்க மாட்டோம்!

சமீபத்தில், பயிற்சியின் போது, பிரேசில் நாட்டை சேர்ந்த ஊனமுற்ற சிறுவன் ஒருவன் எழுதிய கடிதம், ஆட்டக்காரர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது!

மனித நேயம் இருக்கிறது என்பதற்கு ஒரே சாட்சி- கண்ணீர் தான்.

இந்த அழுகை, தப்பு என்றால்......

இருந்துட்டு போகட்டும்!

Aug 14, 2012

ஒலிம்பிக்கில் நான் ரசித்தவை

இந்த வருஷம் ஒலிம்பிக்ஸ் ரொம்ப ஸ்பெஷல். புதிய விளையாட்டுகளை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு, நிறைய அதிரடி ஆட்டங்கள், ரசிக்க வைத்த இறுதி போட்டி, சய்னா நேவால், மேரி கோம், மைக்கல் பெல்ப்ஸ் நீச்சல்....இப்படி எத்தனையோ!

 1) சய்னா நேவால்- இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். இந்த விளையாட்டுக்கே ஒரு புத்துணர்ச்சி தந்து இருக்கிறார். வெண்கல பதக்க போட்டியில், சீனா வீராங்கனை பாதியிலேயே போட்டியை விட்டு விலகியதால் சய்னாவுக்கு பதக்கம் கிடைத்திருந்தாலும், இந்த அளவுக்கு அவர் வந்து இருப்பது ஒரு இந்தியர் என்ற முறையில் எனக்கு பெருமை தான்!

 desktop wallpaper சய்னாவின் படம் தான்!! இவர் கொடுத்திருக்கும் அனைத்து பேட்டிகளையும் யூடியுப்பில் பார்த்தேன். ஒரு நாளுக்கு 8-9 மணி நேரம் பயிற்சியாம். 17 வயது வரைக்கும் வெளியே சென்று படம்கூட பார்த்தது இல்லையாம். தோழிகள் யாருமே இல்லை. காலை எழுந்து பயிற்சி, மதியம் பயிற்சி, மாலை பயிற்சி! வாழ்க்கையை விளையாட்டாய் எடுத்துக்க கூடாது என்பார்கள்....இவருக்கோ அந்து விளையாட்டு தான் வாழ்க்கை! இப்படிப்பட்ட வீராங்கனைகளை மீது பெரிய மரியாதை உண்டு.

 2) மேரி கோம்- இரண்டு குழந்தைகளுக்கு அம்மா. இந்தியர் என்றுகூட பலரால் ஏற்றுகொள்ளாதவராய் இருந்து, இன்று இந்தியாவுக்கு ஒரு ஒலிம்பிக் பதக்கத்தை தந்து இருக்கிறார். அரசாங்கம், ஜெயித்தால் தான் திரும்பி பார்க்கும். இன்று இவருக்கு பரிசு தொகை, வேலை, புதிதாய் பாக்ஸிங் பள்ளி தொடங்க இடம் ஒதுக்கீடு கொடுத்து இருக்கிறது அரசாங்கம். இதை முன்னாடியே செய்திருந்தால், இந்தியா பதக்கங்களை குவித்து இருக்கும்.

 (சித்தாப்பா பையனுக்கும் மச்சான் தம்பிக்கும் மட்டும் உதவி செய்தால், உலகிலேயேஅதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா, இப்படியே போய்விடும்)

 3) mexico Vs brazil- ஆண்கள் காற்பந்து இறுதி ஆட்டத்தை பார்த்தேன். brazil தான் ஜெயிக்கும் என்று உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் தனது முதல் கோலை போட்டது mexico அதுவும் 36 வினாடியில். சரியாக ஆடாததால் தோற்றனர் brazil என்பதைவிட, mexico அணியினர் நம்பிக்கையோடு விளையாடியதே அதன் வெற்றிக்கு காரணம் எனலாம். 

எனக்கு இப்ப பில்லா வசனம் தான் ஞாபகத்துக்கு வருது "இது ஆசை இல்ல. பசி!!" mexicoவின் பசி!

 4) USA Vs Japan- பெண்கள் காற்பந்து இறுதி ஆட்டம். ஜப்பான் பெண்கள் அணியின் அதிரடி முன்னேற்றம் இன்னும் சில வருடங்களில் விஸ்வரூபம் எடுக்கும். எனக்கு தெரிந்த உள்ளூர் காற்பந்து பயிற்சியாளர் ஜப்பான் சென்று வந்திருக்கிறார். அவர் சொன்னது, " ஜப்பானியர்களுக்கு இருக்கும் சுய ஒழுக்கம் வேறு எந்த நாட்டிலும் காண இயலாது"

 அதாவது பயிற்சி முடிந்து அவர்களே இடத்தை சுத்தம் செய்வார்களாம். சொல்வதை கேட்டு கொள்வார்களாம். எல்லாருக்கும் மரியாதை கொடுப்பார்களாம். அதனால் தான் இன்று சிறப்பாய் விளையாட முடிந்தது. அமெரிக்கா ஜெயித்தாலும், ஜப்பானிய பெண்களின் விடாமுயற்சியை பாராட்ட வேண்டும்.

 5) மைக்கெல் பெல்ப்ஸ்- நீச்சலில் பல சாதனைகள். இத்துடன் நீச்சல் விளையாட்டிலிருந்து விலகி கொண்டார். கிட்டதட்ட retirement மாதிரி. வயது 27 ஆகுது!!

  (*ம்ம்....நானும் வேலையிலிருந்து இப்படி retirement வாங்கிகலாமானு பாக்குறேன்!!)

 கிடந்த சில நாட்களாய் ரசித்த ஒலிம்பிக் ஒரு முடிவுக்கு வருகிறது என்று நினைத்தால் கொஞ்சம் வருத்தமா இருக்கிறது. தொடர்ந்துகிட்டே போக இது என்ன ஆபிஸ் மீட்டிங்கானு நீங்க கேட்குறது புரியது!! அடுத்த ஒலிம்பிக்-காக ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

 anyway, இந்த வார இறுதியில், ஓட்டம், காற்பந்து, நீச்சல், badminton ஆகியவற்றில் ஈடுபட்டேன். thanks to olympics!! 4 வருஷத்துக்கு ஒரு முறை, நானும் உடற்பயிற்சி செய்தேன் என்று வரலாறு சொல்லட்டும்!

Jul 29, 2008

அடுப்பூதும் பெண்களுக்கு கிரிக்கெட் எதுக்கு?


நான் கிரிக்கெட் விளையாடுறேனுங்கோ!!!!!!!!!!!!!!!!!


ஒரு மாதமா training போயிகிட்டு இருக்கேன். ரொம்ப நாளா ஒரு குழுவுல சேர்ந்து கிரிக்கெட் விளையாடனும்னு ஆசை! ஆறாவது படிக்கும்போதே, என் மாமா இந்த விளையாட்டை பத்தி என்கிட்ட சொன்னார். அன்று முதல் இந்த விளையாட்டின் மீது அவ்வளவு ஆசை! badminton/shuttle cock விளையாடும்போது, அதை வைத்து கிரிக்கெட் விளையாடி பார்ப்பேன் சரியான பேட் இல்லாமல்.

அதுக்கு அப்பரம் 9வது படிக்கும்போது, காற்பந்து விளையாட மோகம் ஏற்பட்டது. டேவிட் பெக்கம் மீது பயங்கர craze. அப்போது காற்பந்து உலக கோப்பை நடந்தது, bend it like beckham படம் வெளியானது. இப்படி போக, பள்ளியில் எங்க வகுப்பு மாணவிகள் அனைவரும் பள்ளி முடிந்து காற்பந்து விளையாட தொடங்கினோம். அப்போது
சிங்கை பெண்கள் காற்பந்து அணியில் சேர வாய்ப்பு கிடைக்க, என் வகுப்பு மாணவிகள் 5,6 பேர் கிளம்பினோம். கொஞ்ச நாள் தான் போக முடிந்தது. அதுக்கு மேல் தொடர வேண்டாம், படிப்பு கெட்டு போகும் என்று பெற்றோர்கள் நினைக்க, அதை விட்டுவிட்டேன்.

இப்போது, சிங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர்ந்து ஆடும் ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.கடந்த ஒரு மாதமா training போய்கிட்டு இருக்கேன்.ரொம்ம்ம்பபப சூப்பரா போகுது. அங்கு வந்து பாக்கனுமே, நம்ம இந்திய பெண்கள் எல்லாம் என்னமா அருமையா விளையாடுறாங்க.

முதல் நாள் அங்கு சென்று பிரமித்துபோனேன். பெண்களுக்குள் இப்படிப்பட்ட அற்புதமான திறமையா என்று நினைத்து பெருமைப்பட்டேன். off spinner நான். ஆக அதுக்கு ஏற்றாற்போல் சில பயிற்சிகளை பயிற்சிவிப்பாளர் சொல்லி கொடுத்தார். சக விளையாட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கு.


லட்சுமி என்று ஒருவர் இருக்கிறார். இங்கு சிங்கையில் கொஞ்ச காலமாக வேலை பார்த்துவருகிறார்.இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்தவராம். சூப்பர்ர்ர்ர் spin bowler. ரொம்ப நல்ல நுனக்கமான விஷயங்களை அறிந்தவர். எங்களுக்கு சொல்லி கொடுக்கும் விதமும் நல்லா இருக்கும். angela என்பவர் ஒருவர் இருக்கிறார். இவர் part time lecturer. இரண்டு குழந்தைகளுக்கு அம்மா! பார்த்தால் அப்படி தெரியாது. ஏதோ காலேஜ் இரண்டாம் ஆண்டு படிக்கும் பொண்ணு மாதிரி இருப்பாங்க. அப்பரம் 14 வயது பொண்ணு, தனம், ரொம்ம்ம்பப innocent. ஆனா fast bowling போடுவா பாருங்க... பயங்கர வேகத்தில் போடுவாள்!

கிரிக்கெட் விளையாடுவது ஒரு பக்கம் இருக்க, நிதானமாக விளையாடும் ஆற்றல் வேண்டும். அதைவிட கிட்டதட்ட 20 ஓவர்களுக்கு fielding செய்யும் உடல்வலிமை தேவை. அதற்கு fitness level அதிகமாக இருக்கவேண்டும். இப்படி பல விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன். நிறைய சர்வதேச அளவில் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் நடக்கின்றன (நிறைய பேருக்கு இது தெரிவது இல்ல)மலேசியாவில், தாய்லாந்தில், சீனாவில் என பல போட்டிகள் நடைபெறுகின்றன.

நானும் நாளைக்கே ஒரு போட்டியில கலந்துகிட்டு hatrick எடுத்து, woman of the match ஜெயிச்சு, டீவி, பேப்பர்ல நம்ம போட்டோ வந்து, 10 பேரு autograph வாங்கும் நிலை வரும். அப்பரம்.. என் பேரும் வரலாற்றுல இடம்பெற வேண்டாமா!

இருந்தாலும்,அம்மாவுக்கு இதுல அவ்வளவா உடன்பாடு இல்ல! training இரண்டு நாள். டைம வேஸ்ட் பண்ணுறே என்றார்கள். காலேஜ், படிப்பு கெட்டுபோயிடும் என்கிறார்கள். "நம்ம இந்திய பிள்ளைகளுக்கு படிப்பையும், விளையாட்டையும் balance பண்ண தெரியாது. விளையாட்டுன்னு போனா, படிப்புல கவனம் இல்லாம போயிடுங்க" என்றார். ம்ம்ம்ம்... என்னத்த சொல்ல,அடுப்பூதும் பெண்களுக்கு கிரிக்கெட் எதுக்கு? என்று நினைக்கிறார்கள் என்னவோ.

Apr 30, 2008

இந்த வீட்டை கொள்ளையடிக்க போறேன்!



























































































இந்த பெரிய வீட்டு(மாளிகை??)க்கு சொந்தக்காரர் நம்ம golf player tiger woods தான்!!

Mar 24, 2007

இந்தியா byebye to உலக கோப்பை 2007!

நேற்று நடந்த போட்டியில் 'அதிரடியாக' தோற்று வீடு கிளம்புகிறது நமது இந்திய சிங்கங்கள்!! ஸ்ரீலங்கா அணி பிரமதமாக ஆடி இந்தியாவை வீழ்த்தி விலாசியது. நான் என்னத்த சொல்ல.... கொஞ்சம் வயத்தெறிச்சலாகவும் கோபமாகவும் இருக்கிறது. இப்படி மோசமா விளையாடுவார்கள் என்று சற்றே நினைக்கவில்லை!

அந்த முதல் ஆட்டக்காரர் உத்தப்பா(இந்திய அணி) 21 வயசுதான் நினைக்கிறேன். அனுபவம் இல்லாதவர்! ரொம்ப அவசரப்பட்டு லாவகமாக பந்தை 'அழகாக' ஸ்ரீலங்கா பந்து வீச்சாளரிடம் கொடுத்து நமக்கு எல்லாம் 'அல்வா' கொடுத்தார். அப்பவே எனக்கு பயம் வந்துவிட்டது. நம்ம ஆளுங்க ஏதோ தப்பு பண்ண போதுங்கனு. தெரியாமல் செய்தால் தப்பு, தெரிந்து செய்தால் திமிரு! இதில் இவர்கள் எந்த வகை என்று தெரியவில்லை.

அப்பரம் கங்குலி, சிறப்பாக ஆரம்பித்தாலும், அவரும் அவசரப்பட்டுவிட்டார். ஸ்ரீலங்காவின் முரளிதரன் அற்புதமாய் பந்தை பிடிக்க கங்குலியும் போய்விட்டார். அப்போது பயம் உச்சிக்கு போய்விட்டது. அடுத்து ஷேவாக், இவர் வந்து சில சிக்ஸர்களையும் பவ்ண்டிரிகளையும் அடிக்க ஆரம்பித்தார். சற்று நம்பிக்கை வந்தது.

அதுக்கு அப்பரம் ஒன்னு நடந்தது பாருங்க. எனக்கு ரத்த கொதிப்பே வந்துட்டு. நம்ம சச்சின் வந்தார். ஆரம்பிக்க போவதற்குமுன் தரையை இரண்டு தட்டு தட்டுனாரு. பேட்டை சரி செஞ்சாரு. சுற்றும் முற்றிலும் பார்த்தாரு. பந்து வீசப்பட்டது. பந்து 'ஸ்டமை' அடிக்க, சச்சின் 'டக்' ஔட்டு ஆகி வெளியேற்றப்பட்டார். இதுக்கு அப்பரம் இருந்த நம்பிக்கை எல்லாம் சுக்குநூறாகி போய்விட்டது.

இதுங்க தேராதுங்கனு முடிவுக்கு வந்துவிட்டேன். ஒன்னு இல்ல... ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ரன் எடுத்து நிதானமாக விளையாடி இருந்தாலே போதும். இப்ப என்ன பண்ணுறது.மிஞ்சியது அவமானம் தான்!! எல்லாம் போட்டிகளிலும் வெல்வது என்பது கடினம்தான். மற்ற சாதாரண போட்டி என்றால் பரவாயில்ல. இது உலக கிண்ணம் போட்டி! இதுல கண்டிப்பா ஜெயித்தே இருக்கவேண்டும். இந்தியா அணியிடம் திறமை இருக்கு. எத்தனை திறமை இருந்தாலம் அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி இருக்கவேண்டும்.

பாருங்க, புதிதாக வந்த சில அணிகள் அப்படிதான் விளையாடுறாங்க. பார்ப்பதற்கு அவ்வளவு பெருமையா இருக்கு. நம்ம ஆளுங்க.. எல்லாத்தையும் தொலைத்து நிற்கிறார்கள். சொல்வது சுலபம், செய்வது கடினம். எனக்கும் தெரியும்! ஆனா இப்படிப்பட்ட போட்டிகளில் என்னதான் நடந்தாலும் விளையாட்டில் கவனம் வேண்டும்!!! உலகமே இப்போது இந்திய அணியை பார்த்து கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.

ஆமா நம்ம ஆளுங்க எங்க விளையாட்டு பயிற்சி செய்ய நேரம் இருக்கு. விளம்பர படங்களில் நடிக்கவே நேரம் சரியா இருக்கும் போல. காலையில் பயன்படுத்தும் பல்பொடி முதல் இரவு பயன்படுத்தும் கொசுவத்தி வரை எல்லா விளம்பரங்களில் நம்ம இந்திய அணி வீரர்கள்தான். விளையாடுவதில் விட இதில்தான் ஆர்வம் அதிகம் போல. 1983 ஆம் ஆண்டு நமக்கு பெருமை வந்தது போல இந்த தடவையும் பெருமை சேர்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனா, அவர்கள் சேர்த்துகொண்டதோ பல கோடி இந்தியர்களின் வயத்தெறிச்சலை மட்டும்தான்.

இனி இவர்களை பற்றி சொல்ல ஒன்னுமே இல்ல. தனக்காக விளையாடாமல் தன் நாட்டிற்காக விளையாடி இருந்திருந்தாலே போதும். வெற்றி பெற்றிருக்கலாம்! என்னொரு கவ்வாஸ்கர் வருவாரா? இன்னொரு கபில் தேவ் வருவாரா? பதிலாக்காக காத்திருக்க வேண்டும் 2011 ஆம் ஆண்டு அடுத்த உலக கோப்பை வரை.

இதுல ஒரே ஒரு ஆறுதல்... என்னதான் இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் சண்டை சச்சரவு இருந்தாலும். துன்பத்தில் இரண்டுமே ஒன்னு சேர்ந்துட்டாங்க!