படத்தின் பெயரே எதோ ஒரு கவிதை மாதிரி தான் இருக்கிறது. படமும் வித்தியாசமான முயற்சிதான். இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு தைரியம் உலகளவு இருந்திருக்க வேண்டும்! படத்தின் பலமே பார்த்திபனும் புதுமுக கதாநாயகி பாரதியும் தான்!! அதிகமான கதாபாத்திரங்கள் இல்லை. அதுவே சற்று வித்தியாசமாகதான் இருந்தது, ஒரு நாவல் படிப்பதுபோல் ஒரு உணர்வு.
காட்சிகள் அமைந்த விதம் ரொம்ப மென்மையாக இருந்தது. ஒளிப்பதிவாளருக்கு தான் அந்த பாராட்டு சேரவேண்டும். சரி கதை என்னவென்றால் ஒரு பெண் குழந்தை தனது தந்தையால் ஒரு விபச்சாரியிடம் விற்கப்படுகிறாள். அவள் அங்கே வளர்ந்து அங்கே வாழ்கிறாள். பார்த்திபன் ஒரு எழுத்தாளர். அவர் எழுதும் ஒரு கதைக்காக அங்கே செல்கிறார், பாரதி பிடித்திருந்ததால் அவளை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்குள் கொண்டு வருகிறான். ஒரு வில்லனால் அவன் படைப்புக்கு விருது கிடைக்காமல் போக, பாரதி அதற்காக என்ன செய்கிறாள்? என்பதை திரைக்கதையாக்கி நமக்கு ஒரு புதுமையான படத்தை தந்துள்ளது தமிழ் சினிமா.
இசையும் வசனமும் இப்படத்திற்கு இன்னொரு பலம். பார்த்திபன் அதிகம் பேசாமல் நடித்தது இன்னொரு பலம். ஒரு விபச்சார இடத்தை ரொம்பவே வித்தியாசமாக காட்டியிருப்பது அருமை! படம் பார்த்தால் தெரியும்... 'அருமை' என்று ஏன் சொல்கிறேன் என்பது புரியும். கல்யாணம் முடிந்து பார்த்திபன் படுக்கையறையை அலங்கரித்து கொண்டு இருப்பான். நாம் தமிழ் சினிமாவில் பார்த்ததுபோல் வழக்கமான(அநாவசியமான) முதலிரவு காட்சியை தான் காட்டபோகிறான் என்றால் அங்க ஒரு வித்தியாசம். பார்த்திபன் பாரதியிடன் சொல்வார் "நீ இன்னிக்கு நிம்மதியா தூங்க போற முதலிரவு. நிம்மதியா படு." என்று சொல்லிவிட்டு இந்த தனிமையான தூக்கத்தை அனுபவி என்று பார்த்திபன் சென்றுவிடுவது அற்புதமான ஒரு சிந்தனை.
இவ்வாறு பல வித்தியாசமான காட்சி இருந்தாலும், குறைகளும் அங்காங்கே உள்ளது. திரைக்கதையின் வேகம் சற்று மெதுவாகவே நகர்கிறது. பார்த்திபன் கதை எழுதுவது விருதுக்காகதான் என்று சொல்வது ஏற்று கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கிறது. இதுக்கு எல்லாம் மேலாக, இந்த படத்தை குழந்தைகள் கண்டிப்பா பார்க்கமுடியாது. குடும்பத்தோடு கண்டிப்பா பார்க்க இயலாது. எதோ ஒரு சஞ்சலம் ஏற்படுவதுபோல் இருக்கும்.... ஆக இப்படம் வெற்றிபடம் என்பதைவிட நல்ல கலைபடம் என்று கூறலாம்.
நம் சமூகம் இது போன்ற படங்களுக்கு எந்த அளவு ஆதரவு கொடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பா இப்படத்திற்கு பல வெளிநாடு படவிழாவில் விருது வாங்கும் வாய்ப்பு உள்ளது.
அம்முவாகிய நான் - தனியே படிக்க வேண்டிய டயரி!
No comments:
Post a Comment