Sep 24, 2007

என் கலா..-சிறுகதை

பொதுவாகவே ரயில் பயணம் என்றாலே சற்று களைப்பாகதான் இருக்கும். உட்கார இடம் கிடைக்காது, நிற்ககூட இடம் இல்லாமல் தள்ளாடி கொண்டு தான் இருக்க வேண்டும். இருந்தாலும் லதாவிற்கு ஏதோ ஒரு சுகம், ரயில் பயணம் என்றாலே! அன்று நடந்த சம்பவம் லதாவை பெரிதும் பாதித்து அவள் தனது டயரியில் நடந்ததை எழுத ஆரம்பித்தாள். இரவு மணி 11, தனது நினைவுகளை பின்னோக்கினாள்.... மதியம் 2 மணி...

-----------***---------------------------------
நான் எப்பொழுதும் அந்த பச்சை நிற இருக்கைகள் இருக்கும் இடத்தில் தான் நிற்பேன். இன்றைக்கும் அங்குதான் நுழைந்தேன். கூட்டம் அதிகம் இல்லாததால், இருக்கைகள் காலியாக இருந்தன. நான் நுழைவுகதவு ஓரமாக இருக்கும் இருக்கையில் அமர்ந்து கையில் வைத்திருந்த 'three-dimensional structure of proteins' நோட்ஸ்சை சும்மா பக்கம் பக்கமாய் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது, ஒரு சிறுமியின் கை என் முட்டியை தொட்டது. நோட்ஸ்சில் இருந்த என் பார்வை சற்று நிமிர்ந்து அச்சிறுமியின் முகத்தின்மேல் பட்டது. அவள் புன்னகையித்தாள். அவளுக்கு ஒரு ஆறு வயதுதான் இருக்கும். அவளின் தாயாரும் அங்கிருந்தார். சிறுமி சற்று சத்தமான குரலில் "நான் இங்க உட்காரனும்." என்றாள் அவள் ஆள்காட்டி விரலை என் இருக்கையின் மீது காட்டி. நானும் சரி குழந்தை தானே என்று நினைத்து அவளை என் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு எழுந்து நின்றேன். பக்கத்தில் உள்ள கம்பியை பிடித்துபடி சிறுமியை பார்த்து கொண்டே வந்தேன்.

அவள் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாகவும் விநோதமாகவும் இருந்தன. தனக்குதானே கைகொட்டி சிரித்தாள். அவள் தலை உருவமும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது. தன் சட்டையில் உள்ள பட்டன்களை இழுத்து அதை உடைத்து கொண்டிருந்தாள். நான் என் கைகளை நீட்டி அவளை தடுத்தேன். எதிர்பார்க்காத விதமா ஒரு கணம் என் விரல்களை இழுக்கமாக பிடித்து கொண்டு என்னை பார்த்து முறைத்தாள். நான் திடிக்கிட்டேன். மறுவினாடியே சிரித்தாள்! கள்ளகபடமற்ற சிரிப்பு! சிரிக்கையில் அவளுக்கு வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. அதைகூட அவள் கவனிக்காமல் தன்னை மறந்து சிரித்தாள். அவள் அம்மா வந்துதான் எச்சிலை துடைத்து "ஷுஷு...சத்தம் போடாதே" என்றார்.

எனக்கு தெரியவந்தது அச்சிறுமி மூளை வளர்ச்சி குன்றியவள் என்று. மனசு அக்கணமே சஞ்சலபட்டது. கண்கொட்டாமல் அவளையே பார்த்துகொண்டிருந்தேன். இரண்டு மூன்று ரயில் நிறுத்தங்கள் தாண்டி அவள் பக்கத்திலுள்ள இருக்கை காலியானது. அவள் என்னன பார்த்து கை அசைவால் பக்கத்தில் வந்து உட்காரும்படி கேட்டாள். நான் 'பரவாயில்லை' என்பதுபோல் தலை அசைத்தேன். அவள் மறுபடியும் முறைப்பதுபோல் கெஞ்சினாள். அவள் அம்மாவிடம் திரும்பி "ஆண்டி நீங்க உட்காருங்க.." என்றேன். அதற்கு அவர் "பரவாயில்ல.. அவ உன்னைய தான் கூப்பிடுறா." என்றார் புன்னகையுடன்.

அவள் பக்கத்தில் அமர்ந்துவுடன் அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்க்கவேண்டுமே- அப்படியே 1000 வாட்ஸ் விளக்குகள் ஒன்றாய் வெளிச்சம் காட்டியதுபோல் பிரகாசம்! அவள் காதருகே சென்று " உன் பேரு என்ன?" என்றேன். நான் அவளிடம் பேசியதை கண்டு குதுகலமாகிய அவள் "எ எ..பேரு..." என்று திக்கி திக்கி சொல்ல ஆரம்பித்தவுடன் அடடே பாவம் என்று மனம் வேதனைப்பட்டது. அவள் நிலை தெரியாமல் பேசவைத்து கஷ்டப்படுத்துகிறோமே என்று என் உள்மனம் என்னை லேசாக குத்தியது. ஏதோ ஒரு பேரு சொன்னாள். ஆனால், அவள் சரியாக உச்சரிக்காமல் சொன்னதால் என்னால் பெயரை கண்டுபிடிக்கமுடியவில்லை. அவள் சொன்னதை வைத்து 'கலா' என்று பெயர் போலதான் ஒலித்ததால்,

"கலா?" என்று அமைதியாய் அவள் கண்களை பார்த்து கேட்டேன். அது அவள் பெயர் இல்லை. நான் தவறாக சொன்னதால் என்னை மறுபடியும் ஒரு முறை கோபித்து கொண்டாள்.
பெயரை மறுபடியும் சொல்ல முற்பட்டாள். சொல்லிமுடித்தவுடன் என் முகத்தை பார்த்தாள், அவள் பெயரை நான் சொல்லவுடன் என்ற ஆவலுடன். மீண்டும் தவறாக சொல்லி அவளை காயப்படுத்தவேண்டாம் என்று எண்ணி "ஓ.. ரொம்ப அழகான பெயரு." என்று சொல்லி சமாளித்தேன். அப்போது நான் சொல்லியதை கேட்டு மீண்டும் அந்த முகமலர்ச்சி. இப்படி ஒரு குழந்தையை சந்தோஷபடுத்த முடிகிறதே என்று நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது.

அச்சிறுமி அவள் அம்மாவை காட்டி "ராணி!" என்று சத்தமாய் சொன்னாள். இம்முறை எனக்கு விளங்கியதால் நான் "ஓ.. அம்மா பெயரு ராணியா?" என்றுவுடன் என் இரு கைகளையும் அவள் மடியில் வைத்து தடவினாள். என்ன ஒரு ஸ்பரிசம்!! என்னுடலில் ஏதோ ஒன்று ஊடுறவது போல் உணர்வு!! எனக்கு அவளை ரொம்ப பிடித்துவிட்டது. அவளிடம் பேசி கொண்டே இருக்க வேண்டும் என்று என் மனம் பட்டாம்பூச்சிபோல் பறந்தது.

தன் கையில் ஒரு கசங்கியிருந்த tissue paperயை வைத்திருந்தாள். அவளிடம் பேச்சு கொடுக்க வேண்டும் என்பதால் tissue paperயை சுட்டிகாட்டி "அது என்ன?" என்று நான் வினாவினேன் அவளிடம். ரொம்ப நேரம் யோசித்துவிட்டு "என் photo." என்றாள் அதே திக்கு குரலில். நான் ஒரு நிமிடம் ஆடிபோய்விட்டேன். எதற்கு அவள் அப்படி சொல்லவேண்டும்? கசங்கிபோன tissue paper போல்தான் நானும் என்று சொல்லாமல் சொல்கிறாளா? தெரிந்து சொல்கிறாளா? தெரியாமல் சொல்கிறாளா? என்று மனம் புரியாமல் குழம்பியது.

அதற்கு அவள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. மெதுவாக் இருக்கையில் இருந்து இறங்கி அவள் அம்மா கையை பிடித்து கொண்டாள். என்னை பார்த்து சிரித்து கொண்டே "டாட்டா" காட்டினாள். அவள் போகையில் ஏதோ ஒன்று என்னைவிட்டு போவதுபோல் நான் உணர்ந்தேன். ரொம்ப தூரம் சென்றபிறகும் திரும்பி பார்த்து, கூட்டத்தை தன் கண்களால் விலக்கி பார்வையால் என்னன தேடி கண்டுபிடித்து கைகாட்டியபடியே சென்றாள்.

அவள் சென்றவுடன், என் கண்களில் நீர் முட்ட கண்கள் குளமாகி கண்ணீரால் ஈரமானது என் கன்னங்கள்!! நான் யாருக்காகவும் எதற்காகவும் இப்படி அழதது இல்லை. இன்று ஏன் அழுதேன்? எனக்கே புரியாத புதிராக...
ஏன் கடவுள் இப்படிப்பட்ட குழந்தைகளை படைக்கவேண்டும்? அவள் அம்மாவின் முகத்தில் காண முடிந்தது மறைந்தகிடந்த கவலை. இன்று பார்த்துகொள்ள அவள் அம்மா இருக்கிறாள்.எதிர்காலத்தில் அவளுக்கென யார் இருப்பார்? இப்படி லட்சக்கணக்கான கேள்விகளுடன் மனம் சுழந்தது.
-----------------****--------------------

இப்படி டயரியில் எழுதி கொண்டிருக்க லதா தன் கடைசி வாக்கியத்தை கண்ணீருடன் முடித்தாள்- "அவளுக்கு நான் வைத்த பெயர் கலா. என் கலா எப்போதுமே நல்லா இருக்கணும்!"

4 comments:

விழியன் said...

வாழ்த்துக்கள். நெகிழ்ச்சி.

Celestina said...

eh.....damn nice la...
exactly what i felt...
though i realise some r which you added yourself...
damn nice... :)
i din expect that... :)
thanks......

Thamizhmaagani said...

thanks celestina. yes i added some more stuff from ur own. thanks for the wishes.

Anonymous said...

Very nice story. But u didn't update about the real story ending.

Anyway....keep on write..

waiting for next one

Regards
Arasi