Jul 11, 2010

மனநிறைவு

எனக்கு மனநிறைவு கொடுக்குற விஷயங்கள் ரொம்ப குறைவு (சிக்கன் பிரியாணி, கரண் ஜோகர் படங்களை தவிர்த்து). எனக்கு இந்த தொண்டூழியம் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. நிறைய மக்களை சந்திக்க நல்ல வாய்ப்பு. அப்படி ஒரு மனநிறைவு நாளாக அமைந்தது சனிக்கிழமை.

காப்பக விடுதியில் 20 பசங்க இருக்காங்க. 7 வயது முதல் 18 வயது உடையவர்கள். இந்த விடுதி இவர்களின் அனைத்து தேவைகளையும் பார்த்து கொள்கிறது. சிலர் குடும்ப பிரச்சனை காரணமாக விடுதியில் இருக்கிறார்கள். சிலருக்கு பெற்றோர்கள் இல்லை. இப்படி ஒவ்வொரு பசங்களுக்கும் ஒரு பிரச்சனை. ஆனால் இந்த 20 பசங்க வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து இருந்தாலும், விடுதியில் அவர்கள் ஒரு குடும்பம் போல் இருப்பதை கண்டு வியந்தேன்.

அதில் ஒரு சின்ன பையன் இருக்கான். 7 வயது தான். பயங்கர சுட்டி! அவனுடைய சொந்த அண்ணன்களும் இந்த விடுதியில் தான் இருக்கிறார்கள். அந்த 7 வயது சுட்டி எப்போதுமே இன்னொரு பையன்கூட தான் இருப்பான். நான் நினைத்தேன் அவன் தான் அவனுடைய அண்ணன் என்று.

அவர்களிடம் பேசி பார்த்தபோது தான் தெரிந்தது, அவன் சொந்த அண்ணன் இல்லை என்று. 7 வயது சுட்டி தான் அங்க ரொம்ப சின்ன வயது பையன். ஆதலால் தன் சொந்த தம்பி போல் பார்த்து கொள்வதாக என்னிடம் சொன்னான். எனக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசம் காட்ட ஒரு மனசு வேணும். அந்த மனசு அவன்கிட்ட இருந்தது.

அவனிடம் தொடர்ந்து பேசினேன். அவனுக்கு வயது 14 தான். ஆனால் அவன் சுட்டியை பார்த்து கொண்ட விதம்..... சொல்ல வார்த்தை இல்லை! இவனுக்கு காற்பந்தாட்ட வீராக வர ஆசை. தேசிய அளவிலான குழுவில் சேர வாய்ப்பு கிடைத்தும் போக முடியவில்லை. காரணம்- படிப்பில் அவ்வளவு சிறப்பாக செய்யாததால்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை! ஒரு நல்ல திறமையான விளையாட்டாளரை இந்த நாடு இழந்துவிட்டது.

அவர்களிடம் பல நடவடிக்கைகளை நடத்தினோம். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது.....

1 comment:

Karthik said...

wow, great to read, haven't i always maintained you're in an awesome profession? hope there will be many more satisfactory moments..:)