Apr 2, 2012

2- சிறுகதை

இரவு மணி 8.30 ஆனது. இருந்தாலும் அலுவலகத்தைவிட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றி கொண்டிருந்தேன் என்ன செய்வது என்று தெரியாமல். வெள்ளிக்கிழமை அன்று இவ்வளவு நேரமாகியும் வீட்டிற்கு போக மனமில்லை எனக்கு.

நண்பன், "என்ன டா விமல், இன்னும் இங்கேயே இருக்க?"

எனது கணினி முன் உட்கார்ந்து கொண்டு கிரிக்கெட் செய்திகளை படித்தவாறு நண்பனிடம், "இல்ல டா...." என இழுத்தேன்.

ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்ட நண்பன், "என்ன தல? இன்னிக்கு அனாதையா?"

புரியாமல் முழித்தேன் நான், "what?"

நண்பன், " அம்மா அப்பா இல்லாதவன் அனாதை கிடையாது. எவன் ஒருவன் அலுவலகத்திலும் இருக்க பிடிக்காமலும் வீட்டுக்கும் போக பிடிக்காமலும் இருக்கிறானோ அவன் தான் அனாதை!! நல்ல நாள்-லே உனக்கு ஆபிஸ்ல 6 மணிக்கு மேல இருக்க பிடிக்காது..... என்ன தல, வீட்டுல சண்டையா?"

நான், "எப்படி டா?" சிரித்தேன் சோகத்தை மறைத்து கொண்டு.

நண்பன், " 5 வருஷம் service தல!" கல்யாணமாகி 5 வருஷம் ஆனதை நசுக்காய் சொன்னான்.

நான், "ஆமா டா. எப்படி டா 5 வருஷத்த ஓட்டுன? அவன் அவன் 25 வருஷ விழா கொண்டாடுறான். government இவங்களுக்கு எல்லாம் எதாச்சு தியாகி பட்டம் கொடுக்கும் டா." அலுவலகம் மூடும் ஒலி எழுப்பியதால் இருவரும் அலுவலகத்தை விட்டு வெளியே சென்றோம். எனக்கு எங்கே போவது என்று தெரியாமல் முழித்தேன்.

"விமல்... என் வீட்டுக்கு வந்துட்டு போ." என அழைத்தவனிடம்,

"வேண்டாம் டா..ஹாஹாஹா....அப்பரம் நீ 'அனாதையா' ஆகிட போற?"

இரவு மணி 9.30 ஆனது. பொதுவாக இந்த சமயம் வீட்டுக்கு போகவில்லை என்றால் நிஷா உடனே கைபேசிக்கு அழைத்துவிடுவாள். ஆனால், அவள் அப்படி செய்யவில்லை அன்று. எனது கைபேசியை பலமுறை பார்த்தேன்.

"இவ ஃபோன் பண்ணாலும் மனசு பதறுது. பண்ணா இருந்தாலும் மனசு பதறுது." என முணுமுணுத்தேன். ஒருவழியாக இரவு 1015 மணி போல் வீட்டை அடைந்தேன். நிஷா ஒய்யாரமாக சோபாவில் படுத்து கொண்டு தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான். நேற்று போட்ட சண்டையின் மிச்ச மீதியை இன்னிக்கும் போடுவாள் என்று தயாராகி இருந்தேன். பைக் சாவியை சுவரில் இருந்த கம்பியில் மாட்டினேன். அவள் என்னை பார்த்தால் ஆனால் பேசவில்லை. கண்டு கொள்ளவில்லை. அவள் சோபா பக்கத்தில் காலியாக இருந்த சோபா சீட்-ல் உட்கார்ந்தேன்.

தொலைக்காட்சியில் மௌனம் பேசியதே பாடல் ஓடியது. அப்போது எங்களுக்குள் இருந்த மௌனம் பேசாமல், கொலவெறி ஆடியது. 15 நிமிடங்கள் ஆனது. இருவருமே பார்த்து கொள்ளவில்லை. பேசி கொள்ளவில்லை. அவள் 'சாரி' கேட்பாள் என காத்திருந்தேன். என்னிக்கு பொண்ணுங்க 'சாரி' முதல கேட்டு இருக்காங்க?

fridge-ல் ஏதேனும் இருக்கிறது என பார்க்க போனேன். எனக்குள் இருந்த பசியும் கொலவெறி ஆடியது. ஆனால் fridge காலியாக இருந்தது. அவளைத் தூரத்திலிருந்து கவனித்தேன். அவள் ஜாலியாக தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தாள். அந்த ரெட் நைட்டியில் அழகாய் வேற இருந்தாள். இருந்தாலும், கோபத்தையும் ஈகோவையும் வரவழைத்து கொண்டேன்.

பசி வயிற்றில் symphony வாசித்தது. "ச்சே...ஏதாச்சு சாப்புடுறீயானு கேட்குறாளா பாரு..." எரிச்சல் எரிச்சலாய் வந்தது அவள் மீது. எரிச்சலுடன் மேசை பக்கத்தில் உட்கார்ந்தேன். மேசை முழுவதும் நிஷாவின் அலுவலக பேப்பர்களும் மடிகணினியும் இருந்தன.

அப்போது தான் அதை பார்த்தேன். தூக்கி வாரி போட்டது எனக்கு. உலகம் இருண்டு விட்டதாய் தோன்றியது. அந்த கடிதத்தை மறுபடியும் எடுத்து படித்தேன். நிஷாவை பார்த்தேன். எனக்கு கத்தி அழுகனும் போல் இருந்தது.

"you will be joining our institute for training in bangalore for 6 months." என்ற வாக்கியம் என் மூச்சை நிறுத்தியது. என் நிஷா என்னைவிட்டு 6 மாதம் பிரிந்து இருக்க போகிறாளா? சண்டை அடிக்கடி போடுவேன். முக்கால்வாசி நேரம் என் தவறாக தான் இருக்கும். பல நாள் பேசாமல் இருந்திருப்போம். ஆனால், ஒரு நாளும் பிரிந்து இருக்க வேண்டும் என எண்ணியது இல்லை. நிஷா போக போகிறாள் என்று நினைக்கும்போதே எனக்கு தலை சுற்றியது. நெஞ்சு அடைத்தது.

கண்களை கட்டி காட்டில் விட்டது போல் ஆனது. அறைக்குள் சென்று மெத்தையில் உட்கார்ந்தேன். அலமாரி பக்கத்தில் அவள் துணிகளை அடிக்கி வைத்திருந்தாள். என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் இருக்கிறாளே என நினைத்து கோபம் ஒரு புரம், போகாதே போகாதே என மனம் அழுதது ஒரு புரம்.

அறைக்குள் வந்தாள் நிஷா.

"ஏன் என்கிட்ட சொல்லல?" என்று கேட்டேன். நிஷா முழித்தாள். கலைந்திருந்த மிச்ச துணிகளை மடிக்க ஆரம்பித்தாள்.

"ஏன் என்கிட்ட சொல்லல?" மறுபடியும் கேட்டேன்.

"எத பத்தி?" கண்டுகொள்ளாமல் அவள் வேலையை தொடர்ந்தாள். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வர அவள் கையை வெடுக்கென்று பிடித்து என் பக்கம் திருப்பி கொண்டேன்.

"என்னைய விட்டு போக போறீயா? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு உனக்கு தோனலயா?" என்றேன்.

"ஏய் புரியுற மாதிரி பேசுறீயா?" அவள் கத்தினாள்.

"training letter மேசைல பாத்தேன்."

"அத பாத்துட்டு தான் இந்த ஓவர் சீன் போடுறீயா?" சொல்லிகொண்டே என் கைபிடியிலிருந்து அவளது கையை எடுத்து கொண்டாள்.

"நீ எதையும் சரியா பண்ண மாட்டேனு தெரியும். அதுக்குனு இந்த அளவுக்கா?அது எனக்கு இல்ல. office colleague-க்கு. proof read பண்ண எடுத்துட்டு வந்தேன்" என்று சொல்லிகொண்டே துணிகளை அலமாரியில் எடுத்து வைத்தாள். முட்டாள் போல் அங்கேயே நின்றேன். என்னைப் பார்த்து நிஷா,

"ஏன்? 6 மாசம் நான் இல்லேனா, ஜாலியா இருக்கலாம்னு தோனிச்சா?" என்றாள்.

"இல்ல"

"அப்பரம்?"

"செத்துடலாம்னு தோனிச்சு." அமைதியாய் நான் கூற, நிஷாவுக்கு அதிர்ச்சி. அவளின் கையை பிடித்து மெத்தையில் உட்கார்ந்தேன். அவளது வலது கையை பிடித்தவாறு அவளின் கண்களை பார்த்து,

"சாரி மா. இனி சண்டைய போட மாட்டேன். really very sorry."

"இத நீ 47வது தடவ சொல்ற?"

புன்னகையித்தேன் நான்.

"சாரி..."

"உன் மேல நான் இன்னும் கோபத்துல தான் இருக்கேன். நீ போய் சாப்பிடு first-u. அப்பரம் பேசுறேன்....." என்றாள் நிஷா பாதி சிரிப்புடன்.

"என்ன சாப்டுறது?fridge காலியா இருக்கு."

"சார், நீங்க எதயும் சரியாவே பாக்க மாட்டீங்களா சார்? மேசையில் தான் உன் சாப்பாடு இருக்கு. குளிச்சுட்டு போய் சாப்பிடு." என்று கூறியபடி, எனது tie-யை அவிழ்த்தாள்.

"ஏன் பாக்குறது இல்ல....இந்த ரெட் நைட்டில.... முடியல டி.... செமயா இருக்கே" என்று கண் சிமிட்டினேன்.

"ச்சீ...இப்படி தான் ஒரு பொண்ணுகிட்ட indecentஆ பேசுவீயா?" என்று காரி துப்பாத குறையாய் சொன்னவள் எழுந்து போக முற்பட்டாள். அவளை இழுத்தேன். நான் மெத்தையில் விழ, அவள் என்மேல் விழுந்தாள்.

"டேய் அழுக்கு மூட்டை. ஆபிஸ் முடிஞ்சு வந்தீயே, சட்டைய கழுட்டுனீயா? குளிச்சீயா? நைட் 11 மணி ஆகுது டா. சாப்பிடாம இங்க சீன் போட்டுகிட்டு இருக்க?" என்று என் கன்னத்தில் செல்லமாய் அடித்தாள்.

"ஏன் டா, என்னைய எப்ப பாத்தாலும் திட்டிகிட்டு இருக்க. நான் பாவம் இல்ல?" முகத்தை பரிதாபமாய் வைத்து கொண்டு கேட்க,

கிண்டலாய் அவள், "யாரு? நீ பாவமா? நேத்திக்கு எப்படி கண்ட படி திட்டுன என்னைய? பாவி!"

அவள் பேசி கொண்டிருக்கும்போது, அவளை மெத்தையில் சாய்த்தேன். நெற்றியில் இதழ் பதித்து, காதோரமாய், "i love you."

"இதலாம் நல்லா தான் பேசுற. இந்த கோபம் மட்டும் தான்!" என்றவள் என் மூக்கோடு அவள் மூக்கை வைத்து உரசினாள்.

வாய்விட்டு சிரித்தேன், "நீ என்னைய மாத்திடுவேனு confidence இருக்கு."

நிஷா, "so இப்படியே நைட் முழுக்க பேசிகிட்டு இருக்கலாம்னு ஐடியாவா?"

நான், "வேற என்ன பண்ணலாம்ங்கற?" என அவளது நைட்டியில் இருக்கும் zip-க்கு கை போனது.

"அடி வாங்க போற!" என்று எழுந்து சென்றாள். கையில் துண்டை திணித்து போய், "போய் குளிடா அழுக்கா!" என்றாள். அவள் மீதி துணிகளை அலமாரியில் வைத்தாள். நான் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். நாங்க சந்தித்த முதல் நாள், பேசிய முதல் வார்த்தை, அவள் என்மேல் கோபப்படும் போது கண்களில் தெரியும் அவள் காதல், என்னையை நக்கலாய் பேசும் விதம், என்னை ஒருபோதும் மற்றவர்கள் முன்னிலையில் விட்டு கொடுக்காமல் பேசும் குணம்..... என்னமோ தெரியவில்லை, அனைத்து சிந்தனைகளும் அடிவயிற்றில் ஒரு சந்தோஷத்தை கொடுத்தன.

புன்னகையித்தபடி, மறுபடியும் அவளை பின்னாடியிலிருந்து கட்டிபிடித்து கழுத்தில் இதழ் பதித்து, "love you, ராட்சசி" என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் ஓடினேன்.

*முற்றும்*