May 21, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-7

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்- upen patel.
அன்று 'namastey london' என்னும் ஹிந்தி படத்தை பார்த்தேன். அதில் இவர் நடித்தார். பார்த்தவுடனே, "wow...not bad!" என்றேன்.

பிறந்து வளர்ந்தது லண்டனில். நிறைய விளம்பரங்களில் வந்தவர். zee டிவியின் supermodel hunt பரிசை 2002ல் வென்றவர்.

attractive feature- smile.:)

இவருக்கு வயது 29! ஆனால், பார்த்தால் ஏதோ 21 வயது பையன் மாதிரி இருக்காரு!! ஹிஹிஹி...:)

May 19, 2009

கையில் மிதக்கும் கனவா நீ-3

பகுதி 1

பகுதி 2

குழந்தைகள் பெயர் பட்டியல் கொண்ட இணையத்தளத்தை பார்த்து கொண்டிருந்தாள். சில பெயர்கள் ரொம்ப புதுசா இருந்தாலும் சிரிப்பா இருந்தது. அதை பார்த்து சிரித்தேன்.

"ஏய் இப்ப எதுக்கு சிரிக்கிற?"

"உனக்கு ரொம்ப ஆர்வம் தான் போ. இப்ப தான் கல்யாணமே முடிஞ்சு ஒரு மாசம் ஆயிருக்கு. அதுக்குள்ள குழந்தைகளுக்கு பெயர் வைக்குற அளவுக்கு போயிட்டீயா..." அவள் தோளில் சாய்ந்து கொண்டேன்.

"இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள நமக்கு குழந்தை இருக்கும். அப்போ என்ன பெயர் வைக்கலாம்னு டென்ஷன் ஆக கூடாது பாரு. அதுக்கு தான்... இப்பவே... இங்க பாரு.. இந்த பெயர் நல்லா இருக்குல.." ஒரு பெயரை சுட்டி காட்டினாள்.

"பொண்ணு பொறந்தா..ஷாமினி....பையனா இருந்தா ஷாமன். பிடிச்சுருக்கா?" என்னிடம் கேட்டாள். புன்னகையை சம்மதமாய் அளித்தேன்.

"பொண்ணுங்க எப்ப ரொம்ப அழகா இருப்பாங்கன்னு தெரியுமா?" என்றேன். தெரியாது என்று தலையசைத்தாள்.

"அமெரிக்காவுல ஆராய்ச்சி செஞ்சு இருக்காங்களாம்."

"என்னென்னு?"

"பொண்ணுங்க pregnantஆ இருக்கும்போது தான் ரொம்ப அழகா தெரிவாங்கன்னு.."

"அதுக்கு?"

"உன்னைய ஒவ்வொரு வருஷமும் அழகா காட்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்."

"ச்சீ...." அனிதா என் நெஞ்சில் முகம் புதைத்து வெட்கப்பட்டாள். தொடர்ந்தாள்,

"அப்போ ரெண்டு பேரு போதாதே?"

இருவரும் சிரித்து மகிழ்ந்தோம்.

"சார்..." மருத்துவமனையில் தாதி என்னை அழைத்தார். இன்னொரு பேப்பரை நீட்டி,

"இதுல இன்னொரு கையெழுத்து போடுங்க" என்றாள்.

"எதுக்கு..." நான் கேட்பதற்குள் டாக்டர் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தார்.

"அனிதாவுக்கு கொஞ்சம் சீரியஸா இருக்கு. she is in a critical condition. குழந்தை இல்ல அனிதா... யாராச்சு ஒருத்தரை தான் காப்பாத்த முடியும்." என்றார் டாக்டர்.

எனக்கு யார் வேண்டும் என்பேன்? உருகி உருகி காதலித்த மனைவியா? இல்லை ஆண்டுகளாய் ஆசைப்பட்ட குழந்தையா? வேதனை என்னை கொஞ்சம் கொஞ்சமாய் திண்றது. மரணம்- இந்த வார்த்தை என் வாழ்க்கையில் கேட்க போகிறேன் இரண்டாவது முறையாக.

முதன் முறை....

"அண்ணா, எப்படி இருக்கீங்க? அமெரிக்காவுல இப்ப climate எப்படி இருக்கு?" என்றேன்.

"ஓ..it's good." என்றார் அவர்.

"அம்மா அப்பா எங்க?"

"......."

"அண்ணா, இருக்கீங்களா? ஹாலோ ஹாலோ.... அப்பா எங்க? அப்பாகிட்ட கொஞ்சம் கொடுங்க...பேசி ரொம்ப நாளாச்சு?"

"........."

"அண்ணா, அப்பா எங்க?"

"சாரி.... அப்பா இறந்து 2 மாசம் ஆச்சு."

"what!!!??!! ஏன்....என்கிட்ட......"

"அம்மா தான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க."

தலையில் கைவைத்து உட்கார்ந்து இருந்தேன். அண்ணாவிற்கு ஃபோன் செய்த சம்பவம், அப்பாவின் மரண செய்தி- இவை யாவும் மருத்தவர் அனிதாவின் நிலைமை பற்றி சொன்ன பிறகு என் மனதில் வந்துபோனது. ஆம், அப்பாவின் மரணத்திற்கு பிறகு, என் வாழ்க்கையில் இன்னொரு முறை ஒரு மரணம். இம்முறை மனைவியாக இருக்கலாம் அல்லது குழந்தையாக இருக்கலாம்.

ச்சே....எந்த ஆண்ணுக்கும் வரகூடாத நிலைமை.

என் மனதிற்குள்ளே, "அப்பா, நீங்க தான் இவங்கள காப்பாத்தனும். உங்க ஆசிர்வாதம் தேவைப்பா....ப்ளீஸ் பா.... ப்ளீஸ் பா.... எனக்கு ஒரு பையன் பொறக்கனும்.... நீங்க மறுபிறவி எடுத்து வரனும். இல்லேன்னா உங்க குணம் இருக்கிற ஒரு பொண்ணு பொறக்கனும். எப்படியாச்சு அனிதாவையும் காப்பாத்துங்க பா ப்ளீஸ் பா...." மனம் சிறுபிள்ளை போல் அழுதது.

உள்ளே ஒரு பயங்கரமான அலறல் சத்தம். அனிதாவின் குரல். அதற்குபிறகு எந்த சத்தமும் இல்லை. என் உயிர்நாடி நின்று போனதுபோல் உணர்ந்தேன். மருத்தவர்களும் தாதியர்களும் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தனர். எந்த செய்திக்கும் தயாராக இருந்தேன் நான். மருத்துவரின் முகத்தை பார்க்க தைரியம் இல்லை.

என் தோளை தொட்டு, "god is great. it is a miracle. அனிதாவும் குழந்தைகளும் நல்லபடியா இருக்காங்க. by the way...உங்களுக்கு twins பொறந்திருக்கு. " சிரித்து கொண்டே சொன்னார். உயிர் மீண்டும் வந்தது எனக்கு.

"தேங்கஸ் டாக்டர்...." என்னால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. நான் அனிதாவையும் குழந்தைகளை பார்க்க அறை கதவை திறந்தேன்.

மருத்துவர் அவர் அறைக்குள் சென்றபோது நிறைய trainee மருத்துவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்,

"டாக்டர், இது எப்படி சாத்தியமாச்சு? இப்படி உள்ள பொண்ணுங்களுக்கு pregnancy ரொம்ப complicationsஎ தராதா?"

அதற்கு டாக்டர், "ஆம்.. கொஞ்சம் complicated தான். அனிதா ஒரு physically disabled person. அவங்களுக்கு ஒரு கால் இல்லாம இருந்தாலும், அவங்க mentally ரொம்ப strong. நிறைய நம்பிக்கை இருந்துச்சு அவங்களுக்குள்ள... so she was able to cooperate with us better. " என்று சொல்லியவர் தன் கணினியில் உள்ள விளக்கப்படம் மூலம் மற்றவற்றை விளக்கினார்.

அனிதா மயக்கத்தில் இருந்தாள். அவள் பக்கத்தில் இரண்டு குழந்தைகள்- ஒரு பையன், ஒரு பொண்ணு. என் ஆள் காட்டி விரலால் அவர்களின் விரல்களை தொட்டேன். இருவரும் என் விரலை பிடித்து கொண்டு சிரித்தனர்.

என்னையும் அறியாமல் வாய்விட்டு அழுதேன்!

*முற்றும்*

May 18, 2009

கையில் மிதக்கும் கனவா நீ-2

பகுதி 1

அப்போது தான் அனிதாவை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்தவுடனே மனதில் ஒரு மின்னல். கண்களுக்கு மட்டும் அல்லாமல் மனதிற்கும் அழகாய் தெரிந்தாள். அவளிடம் சென்று

"ஹாலோ, நான் பக்கத்து ஆபிஸிலிருந்து...." என்று சொன்னவுடனே புரிந்து கொண்டாள்.

"ஓ யெஸ் யெஸ்.... பாஸ் சொல்லியிருந்தாங்க..." என்று கூறிகொண்டே ஒரு கோப்பை நீட்டி அதில் உள்ளதை விளக்கினாள். அவள் சொல்வது எதையுமே கவனிக்கவில்லை, ஆனால் நான் அவளை மட்டுமே கவனித்து கொண்டிருந்தேன். அவளின் குரல், அவள் பேசிய விதம், வேலைகளை சரிவர பார்த்த விதம்- இப்படி அனைத்தையுமே சேர்த்து ரசித்தேன். அன்று முதல் என் ஆபிஸிலிருந்து அவள் ஆபிஸுக்கு போக வேண்டிய கோப்புகளை அனைத்தையுமே நானே கொண்டு சென்றேன். அவளை பார்க்கும் வாய்ப்புகளை அதிகரித்து கொண்டேன்.

வேலை விஷயங்களையும் தாண்டி, ஒரு நல்ல நட்பு உருவானது. என் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஒரு நாள் மதியம், அவள் ஆபிஸுக்கு சென்றேன். மதிய உணவு நேரம். அவள் சாப்பிட்டு கொண்டிருந்தாள் அவள் தோழிகளுடன். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை எனக்கு பொறுமையில்லை.

"அனிதா..உன்கிட்ட கொஞ்ச தனியா பேசனும்..." என்றேன்.

"சார் தனியா பேசனும்னு...நடுகடல்ல நின்னு தான் பேசனும்.." என்றாள் அவளின் தோழி ஒருத்தி. அனைவரும் சிரித்தனர். என் நிலைமை புரியாமல் அனைவரும் ஜோக் அடித்து சிரித்தது எனக்கு எரிச்சலை உண்டாக்கியது.

"நான் வரேன்." என்று கோபத்துடன் கிளம்பினேன். என் கோபத்தை புரிந்து கொண்டவள் என் பின்னாடியே என் பெயரை கூவி கொண்டு வந்தாள்.

"ஏய்...நில்லுப்பா... ஏன் இவ்வளவு கோபம்? என்ன ஆச்சு? என்ன பேசனும்? any problem?" என்றாள்.

"ஆமா...ஒரு முக்கியமான விஷயம்..." வார்த்தைகளின் வேகம் குறைந்தது.

" அனிதா, எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது. எப்போ உன்னைய முத தடவ பாத்தேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்...நீ தான் என் மனைவின்னு. பாத்தவுடனே ஐ லவ் யூ சொன்னா...அது நல்லா இருந்திருக்காது... அதான் நல்லா பழகின பிறகு... உன்னைய கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்." என்றேன்.

நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு அதிர்ச்சியை தந்தது. எதையுமே பேசமால் ஆபிஸைவிட்டு வெளியேறினாள். இரண்டு நாட்கள் ஆபிஸுக்கு வரவில்லை. உடல் நலம் சரியில்லை என்று ஆபிஸில் கூறி இருந்தாள். எனக்கும் மட்டும் தான் தெரியும், சரியில்லாமல் கிடப்பது அவளது மனம் என்று.

அந்த இரண்டு நாட்கள் அவளுக்கு பல முறை ஃபோன் செய்து பார்த்தேன். அவள் எடுக்கவில்லை. பிடிவாதக்காரி! பல்லாயிரம் மேசேஜ்கள் அனுப்பினேன்! எதுக்குமே பதில் இல்லை. மூன்றாவது நாள் அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றேன். விடுதிக்கு வெளியே நின்று ஃபோன் செய்தேன். என் காதல் தோற்குமா என்ன? அவள் ஃபோன்னை எடுத்தாள்.

தழுதழுத்த குரலில் அவள், "ம்ம்ம்...சொல்லு?"

நான்,
" சாப்பிட்டீயா?" எதுவுமே நடக்காததுபோல் நான் பேசினேன்.

"இன்னும் இல்ல... " என்றாள்.

"எத்தன நாளா...சாப்பிடாம இருந்த?" என் குரலில் சற்று அதிகாரம் உயர்ந்தது. மறுமுனையிலிருந்து பதில் வரவில்லை.

"நான் உன்னைய உடனே பாக்கனும்.... உன் ஹாஸ்டல் பக்கத்துல தான் இருக்கேன்.. உள்ளே அழகான பசங்கள விடமாட்றாங்க...சோ..இங்க பக்கத்துல இருக்கிற சன்ஹன் பார்க்கிற்கு வா..." நான் சொன்னதை கேட்டு கண்டிப்பா புன்னகையித்து இருப்பாள்.

வரமாட்டாள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் வந்தது எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. என் கையில் இருந்த உணவு பொட்டலத்தை கொடுத்து அவளை சாப்பிட சொன்னேன். என் முகத்தை சரியாக பார்க்கவில்லை. பொட்டலத்தை வாங்கி வைத்து கொண்டாள். சாப்பிடவில்லை. இரண்டு நாட்களாக அவள் சரியாக தூங்கவில்லை. அவள் முகத்தில் தெரிந்தது சோர்வு.

அவள் கண்முன் விழுந்த முடியை எடுத்த அவள் காதுக்கு பின் சொரிகியபடி,
"நான் என்ன கேட்டேன்னு... நீ இப்படிலாம் பண்றே?" என்றேன்.

"இதலாம் சரியா வருமா?" என்றாள் கண்ணீருடன்.

அவள் சொன்ன விதத்தில் இருந்து நான் புரிந்து கொண்டேன்- அவளுக்கும் என்னை பிடித்து இருந்தது. கல்யாணம் வரை போகாமல் காதல் வெறும் காதலாக போய்விடுமோ என்ற அச்சம் தான் அவளுக்கு.

"ஓ... அப்போ உனக்கும் ஓகே தான்னு சொல்லு! ஐயோ.. நான் நினைச்சேன் நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி.. ஒரு ஃபிரண்டா தான் நினைச்சு பழகினேன்னு சொல்லுவே... நம்மளும் துரத்தி துரத்தி... லவ் பண்ணி அப்பரம் ஒகேன்னு சொல்ல வைக்கலாம்னு இருந்தேன்... இப்படி சப்புன்னு முடிச்சிட்டீயா..." என்று முகத்தை விளையாட்டுக்காக பாவமாய் வைத்திருந்தேன்.

நான் சொன்னதை கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள் கண்களை துடைத்தபடி.

நாட்கள் கடந்தன. நிறைய பேசினோம். நிறைய சிரித்தோம். அனிதாவுக்கு புத்தகங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு தெரிந்த எல்லாம் புக்-ஷாப்புக்கும் அழைத்து சென்றேன். நீண்ட நேரம் கடற்கரையில் உட்கார்ந்து பேசினோம். நிறைய சந்தோஷம், அவ்வபோது சின்ன சின்ன சண்டை. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு- in this world, you might be someone but to someone, you might be the world. இவ்வாறு அவளது உலகம் நானாகவும் என் உலகம் அவளாகவும் வாழ்ந்தோம்!

"சனியன் சனியன்...மூணாவதும் பொட்ட புள்ளையா பெத்துருக்கா உன் பொண்டாட்டி. சனியன் பிடிச்சவ..." என்று மருத்துவமனையில் கத்தி கூச்சல் போட்டாள் ஒருத்தி. ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்த நான் பக்கத்திலுள்ள நாற்காலியில் உட்கார்ந்தேன். அவளது மகனின் சட்டையை பிடித்து கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு கொண்டிருந்தாள்.

"இந்த எழவு பிடிச்சவள உனக்கு கட்டிவச்சது என் தப்பு தான்..." தலையில் அடித்து கொண்டாள். பிறந்த குழந்தையை கையில் வைத்துகொண்டிருந்தாள் தாதி. அக்குழந்தை கத்தியவளின் மூன்றாவது பேத்தி.

"அந்த சனியன் பிடிச்சவளுக்கு பொறந்த இந்த சனியன எடுத்துட்டு போயிடு!" மறுபடியும் கத்தினாள். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை- அது ஏன் எல்லா மாமியார்கள் தனது மருமகள்களை சனியன் என்று திட்டுகிறார்கள்?

என் அம்மாவும் அப்படி தான்!

"சனியன்... என்ன ஜாதியோ, என்ன மதமோ? அவள கட்டிக்க போறீயா? உனக்கு என்ன கேடு வந்துச்சு?" என் அம்மா ஒரு நாள் பூகம்பத்தை ஆரம்பித்துவிட்டார்.

நானும் அனிதாவும் பீச், புத்தககடைகளில் சுற்றியது அனைத்துமே என் பெற்றோர்களுக்கு தெரிந்துவிட்டது. நான் உறுதியாக நின்றேன். என் அப்பா என் பக்கம். ஆனால், அம்மாவை மீறி அப்பாவால் எதுவும் செய்ய முடியவில்லை.

"அவன் ஆசைப்படுறான்...அவன் விருப்பபடி நடக்கட்டுமே!" அப்பா முயன்றார்.

"என்ன ஆசைப்படுறான்? நீங்க எதும் பேசாதீங்க... அவனுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து வச்சுருக்கீங்க?" அம்மா பாய்ந்தார்.

"அம்மா, அனிதா ரொம்ப நல்ல பொண்ணு. அவ அனாதை இல்லத்துல வளர்ந்ததுனால கெட்ட பொண்ணுனு ஆயிடாது? அவங்க அம்மா அப்பா செஞ்ச தப்பு... அவ என்ன பண்ணுவா? ப்ளீஸ் மா... நீங்க ஒரே ஒரு தடவ அவகிட்ட பேசி பாருங்க..." காலில் விழாத குறையாய் அம்மாவிடம் கெஞ்சினேன். பிச்சை எடுத்தேன் என்றுகூட சொல்லலாம்.

அம்மா பிடிவாதத்தை விடவில்லை. அப்பா எடுத்து சொன்னார். ஆனால் கேட்கவில்லை.எத்தனை முறை போராடி பார்த்தேன். என் அம்மா சம்மதம் தரவில்லை.

"ஓடி போய் கல்யாணம் பண்றது, திருட்டு கல்யாணம் அப்படி இப்படின்னு ஏதாவது செஞ்சு வச்சே.... என்னை உயிரோட பாக்க முடியாது." அம்மா மிரட்டினார். எல்லா அம்மாக்களும் பயன்படுத்தும் emotional blackmail இது. அம்மாவின் பிடிவாதம் சில நாட்களில் சாந்தம் ஆகம் என்று நினைத்து அனிதாவும் நானும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டோம்.

அம்மாவுக்கு தெரியவந்தது. கோபத்தில் குதித்தார். அமெரிக்காவில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு அம்மாவும் அப்பாவும் கிளம்பி சென்றனர். என் முகத்தில் இனி முழிக்க மாட்டேன் என்று சபதம் போட்டார் என் அம்மா. ஆனால், அப்பா அமெரிக்கா கிளம்பும் முன் எங்களை வந்து பார்த்தார் எங்களது புது வீட்டில்.

"வீடு ரொம்ப நல்லா இருக்கு. கச்சிதமா இருக்கு...very good selection." அப்பா பாராட்டினார்.

"அனிதா தான் பா select பண்ணா."

"அதான் ரொம்ப extra ordinaryயா இருக்கு. வெரி குட் மா." மாமனார் மருமகளை பாராட்டுவதை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

"அத்தையும் வந்திருந்தா நல்லா இருக்கும். எங்க மேல உள்ள கோபத்துல நீங்க அங்க போறது எங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கு மாமா." என்றாள் அனிதா.

"நான் என்ன மா பண்ண முடியும். உங்க அத்தை அப்படி தான். காச்சுமூச்சுன்னு கத்துவா. அவ அப்படி தான். நாளைக்கே உங்களுக்கு குழந்தை பொறந்த செய்தி கேட்டா, உடனே ஓடி வந்திடுவா..."அப்பா சிரித்தார். அனிதா என்னை பார்த்து புன்னகையித்தாள். புன்னகை கலந்த வெட்கம் அது.

ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்தேன். நாற்காலியில் உட்கார்ந்து இருந்த நான் கடிகாரத்தை கவனித்தேன். மருத்துவமனைக்கு வந்து இரண்டு மணி நேரம் ஆனது. மருத்தவர்களிடமிருந்து எந்த செய்தியும் வந்தபாடு இல்லை. என் எதிரே இருந்த சுவரில் குழந்தைகள் சிரிப்பதுபோல் படம் ஒட்டியிருந்தது.

அனிதாவிற்கு குழந்தைகள் என்றால் ரொம்ப ஈஷ்டம்.

ஒரு நாள் மெத்தையில் உட்கார்ந்து மடிகணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். அறைக்குள் நுழைந்த நான் அவள் அருகே சென்று அவள் அனுமதியின்றி அவள் கழுத்தோரத்தில் இதழ் பதித்தேன்.

பிடிக்காதவளாய் அவள், "ஐயோ... என்னது..ச்சீ..." செல்ல கோபத்துடன் என்னை தள்ளினாள்.

"ஆமா நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கே?" நான் எனது பார்வையை அவள் மடிகணினி மீது செலுத்தினேன். அதை பார்த்தபிறகு சிரிப்பு வந்தது...

(பகுதி 3)

May 15, 2009

கையில் மிதக்கும் கனவா நீ-1

அனிதாவின் கதறல் சத்தம் எனக்கு வேதனையை தந்தது. வீட்டிலிருந்து மருத்துவமனை போகும் வரை அழுகை. வலி தாங்க முடியவில்லை. தல பிரசவம் அப்படி தான் இருக்குமாம். மருத்துவர்கள் அவளை அவசர சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். நேற்று வரைக்கும் தைரியமாக இருந்தவளின் முகத்தில் பயம் படர்ந்ததை கவனித்தேன்.

மருத்துவமனை வாசலில் ஒரு பிள்ளையார் சிலை. பார்த்தேன். கும்பிடவில்லை. கொஞ்ச காலம் வரை இருந்த கடவுள் நம்பிக்கை, ஒரு கால கட்டத்திற்கு பிறகு முற்றிலுமாக இல்லை. காரணம் உண்டு.

என் மனதில் சுத்தியலால் யாரோ அடித்தார்கள். இல்லை, அடித்தது மனசாட்சி.

என்னால் தானே இப்படி...
ஏதோ ஒரு 5 நிமிஷம் சுகத்திற்காக...
ஆனால் குழந்தைகள் தானே கல்யாண வாழ்க்கையை முழுமை பெற செய்கிறார்கள்...
அவளுக்கு ஒன்னும் நடக்காது...
ஒரு வேளை அவளுக்கு ஏதேனும்....
குழந்தைக்கு ஏதேனும்...

ச்சே...தேவையில்லாத சிந்தனைகள் என்னை வாட்டி வதைத்தது. மருத்தவர்கள் ஒரு பக்கம் பரபரப்புடன் சிகிச்சை அறைக்கு ஓடினர். தாதி ஒருத்தி வந்தாள்,

"formalities.....நீங்க தானே mrs anithaவோட கணவர்....இந்த form fill up பண்ணுங்க" ஒரு பேப்பரை நீட்டினாள்.

படித்து பார்க்க மனமில்லை. கையெழுத்து போட்டேன்.

"அனிதாவுக்கு...ஒன்னும்...." துக்கம் தொண்டையை அடைத்தது. கட்டுபடுத்தி கொண்டேன்.

"we are trying our level best." அவசரமாக சென்றாள்.

தமிழ் சினிமாவில் பிரசவம் காட்சி வந்தால் மழை வரும். அப்போது எல்லாம் கிண்டல் செய்து இருக்கிறேன். ஆனால், அன்று வெளியே பெய்த கொண்டிருந்த மழை என்னை சாந்தப்படுத்தியது. ஜன்னல் வழியே எட்டி பார்த்தேன். மழை, மின்னல்!

உள்ளே அனிதா கதறி கொண்டிருந்தாள். அவள் ஒவ்வொரு முறையும் துடித்து கத்தும்போது, மனதில் இடி.

ஜன்னல் வழியே காற்றும் சாரலும் என் நினைவுகளை 8 மாதங்களுக்கு பின் இழுத்து சென்றன.

"வந்துட்டீயா அனிதா...எப்படி போனுச்சு office day rehearsal. நாளைக்கு show success தான் சொல்லு." படுக்கையில் படுத்து இருந்தேன். தூக்க கலக்கத்தில் எழுந்தேன்.

அனிதா ஒரு ஆபிஸில் கிளார்க் வேலை பார்க்கிறாள். அப்போது தான் அனிதா வீடு திரும்பினாள். இரவு மணி 10.30.

"ஓகே பா...நல்லா போனுச்சு....hope it turns out to be a successful show."என்றாள். என் பக்கத்தில் அமர்ந்தாள். அவள் போட்டிருந்த மஞ்சள் சுடிதார் எனக்கு பிடிக்கவில்லை. காலையிலே சொன்னேன். ஆனால் அவள் கேட்கவில்லை. கைகளை மடக்கி என் தலைக்கு பின்னால் வைத்தவாறு,

"இந்த டிரஸ் உனக்கு suitஆ இல்ல. கழட்டி போட்டுடு. நான் வேணும்னு help பண்ணவா" என்று எழுந்தேன்.

"ச்சீ....ஜொள்ளா..." என்னை தள்ளினாள். புன்னகையித்தேன்.

"நீ சாப்பிட்டீயா?" என்றேன்.

"இன்னும் இல்ல...." என்றாள். அவள் இன்னும் சாப்பிடாமல் இருந்தது எனக்கு கோபத்தை உண்டாக்கியது.

"அனிதா, உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன்... சரியான நேரத்துக்கு சாப்பிடனும்னு...இவ்வளவு நேரம் ஆயிட்டு... இன்னும் நீ...."

"இல்லடா... rehearsal பாத்துகிட்டே இருந்துட்டோம்... நேரம் போனது தெரியல்ல..."

"ஆமா... எப்ப பாத்தலும் ஒரு பதில் வச்சிருப்ப...."

" சாரி சாரி...." கெஞ்சினாள். அவள் விரல்களால் என் நெற்றியில் கிடந்த முடியை விலகிவிட்டு முத்தமிட்டாள். சிரித்தாள். கோபம் பஞ்சாய் பறந்தது.

"சரி சாப்பாடு ரெடி பண்றேன்... எத்தன தோசை வேணும்?" என்றேன்.

"ஒன்னு போதும்"

அவள் குளித்து முடித்து வருவதற்குள் நான் இரண்டு தோசைகளுடன் அறைக்குள் சென்றேன்.

"டேய், நானே வந்து சாப்பிட்டுகிறேன்... நீ எதுக்கு ரூம் வரைக்கும்..." அவள் முடிப்பதற்குள், அவளை படுக்கையில் அமர வைத்தேன்.

"இந்தா..." தோசையை சிறியதாய் பிய்த்து ஊட்டிவிட்டேன்.

"ஐயோ நானே சாப்பிட்டுகிறேன்..." என் கையை தடுத்தாள்.

நான் தொடர்ந்து ஊட்டிவிட்டேன். அடம்பிடிக்காமல் உண்டாள்.

"நீ சாப்பிட்டீயா?" என் தொடையில் கைவைத்து கேட்டாள்.

"ம்.." ஒற்றை சொல்லில் பதில். ஆனால் உண்மையில் அன்று நான் சாப்பிடவில்லை. மனசு சரியில்லை. ஒரு மாதிரியா இருந்துச்சு.

போர்வையை போர்த்தியபடி படிப்பதற்கு புத்தகத்தை கையில் எடுத்தாள்."சாரி டா... தூங்கிட்டு இருந்த நீ... உன் தூக்கத்த கெடுத்துட்டேன்ல..."

"ம்ம்...ஆமா...எப்ப உன்னைய முதல் தடவ பாத்தேனோ அப்பவே."

"ஐயோ...ச்சே...நீ ரொம்ப மோசம்." சிரித்தாள். தூங்கும் முன் கொஞ்சம் நேரம் புத்தகம் படிக்கும் பழக்கம் அவளுக்கு. அவள் படித்து கொண்டிருந்தாள். நான் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். புத்தக்கத்தில் அடுத்த பக்கத்தை திருப்பினாள், என்னை பார்க்காமலேயே,

"ஏய் ஜொள்ளா...என்ன இங்கயே பாத்துகிட்டு இருக்கே?"

"உன் மடியில கொஞ்சம் நேரம் சாஞ்சிக்கவா?"

மனசு சரியில்லாதவர்கள் தண்ணி அடிக்க போகிறார்கள். அவர்களுக்கு பொண்டாட்டி இல்லையா? மனைவியின் மடியில் தலை வைத்துப்படுக்கும் இன்பம் தெரிந்தவன் எவனும் தண்ணி அடிக்க போகமாட்டான்.

"என்ன ஆச்சு?" என் தலைமுடியை கோதியபடி கேட்டாள்.

"நாளான்னிக்கு மெடிக்கில் செக்-கப்ல...positiveஆ தானே வரும்?..." அவள் வயிற்றில் கைவைத்தேன். வெட்கப்பட்டாள்.

நாங்கள் நினைத்தபடியே மருத்தவர், "வாழ்த்துகள்! அனிதா, you are pregnant."
எங்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"ஐயோ...அம்மா!" அனிதா அவசர சிகிச்சை அறையில் கத்தினாள். ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த நான் திடிக்கிட்டு போனேன். சுயநினைவுக்கு வந்தேன். பக்கத்தில் யாரோ ஒருவர் என் தோளை தட்டி,

"சார்... எனக்கு பையன் பிறந்து இருக்கான்....சுவீட் எடுத்துக்குங்கோ..." என்றார். நான் மறுத்தேன். அவர் வற்புறுத்தினார்.

சுவீட் கையில். என் வாழ்க்கை சுவீட் ஆனாதே அனிதா வந்தபிறகே.

ஐந்து வருடங்களுக்கு முன்னால்.....

அவள் வேலை செய்த ஆபிஸ் அருகே தான் என் ஆபிஸ். நான் அந்த ஆபிஸில் சேர்ந்து கொஞ்ச காலம் கழித்து தான் பக்கத்தில் ஆபிஸுக்கு ஒரு வேலை விஷயமாக போக நேரம் கிடைத்தது.

அப்போது தான் அனிதாவை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்தவுடனே மனதில் ஒரு மின்னல். கண்களுக்கு மட்டும் அல்லாமல் மனதிற்கும் அழகை தெரிந்தாள். அவளிடம் சென்று....

(பகுதி 2)