Mar 31, 2009

அப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்!

காலை 7 மணிக்கெல்லாம் பையன் ரெடியாகி நின்று கொண்டிருந்தான் அவனது கிரிக்கெட் பையுடன். இன்று ஞாயிற்றுக்கிழமை, அவனுக்கு கிரிக்கெட் பயிற்சி வகுப்பு இருக்கிறது டாவ்ஷன் மைதானத்தில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அவனை பயிற்சிக்கு அழைத்து செல்வேன். அங்கேயே மூன்று மணி நேரம் இருந்து அவன் விளையாடும் அழகை ரசிப்பேன். 7 வயதாக இருந்தாலும், அவனுக்குள் இருக்கும் திறமையை கண்டு பெருமிதம் கொண்டள்ளேன் பல முறை.

"அப்பா...சீக்கிரம் வாங்க....டைம் ஆகுது." என்னை இழுத்தான் ரோஷன். நானும் அவனும் விளையாட்டு திடலை அடைந்தோம். இந்த பயிற்சி வகுப்பில் கிட்டதட்ட 20 பேருக்கு மேல் சிறுவர்கள் வந்து பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். பல பள்ளிபோட்டிகளிலும், மாவட்ட போட்டிகளிலும் ஆட நிறைய திறன்மிக்க விளையாட்டாளர்களை உருவாக்கியுள்ளது இப்பயிற்சி வகுப்பு. அங்கே 9 மணிக்கு இருந்தால் போதும். ஆனால் ரோஷன் 730 மணிக்கே என்னை அழைத்துபோக சொல்வான். அவனது ஆர்வத்திற்கு நான் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை.

இரண்டு மூன்று காக்கா குருவிகளின் சத்தம், சில நாய்கள் ஓடிகொண்டிருந்தன- என சுற்றுசூழல் அமைந்திருந்தது. பனி விலகும் நேரம். உடற்பயிற்சி செய்ய அருமையான தருணம். வீட்டிலிருந்து போட்டுவந்த காலணியை கழற்றிவைத்து விட்டு புதிதாக அவனது பயிற்சிவிப்பாளர் வாங்கி கொடுத்த ரீபோக் ஷூவை போட்டு கொண்டான். ரீபோக் ஷூ- ரொம்ப விலையாம், உயர்ந்த தரமிக்க ஷூவாம். ரோஷன் சொல்லி தான் எனக்கு தெரியும். ஆனா என்னால் வாங்கி கொடுக்க வசதி இல்லை.

"அப்பா.... நான் 3 ரவுண்டு ஓடிட்டு வரேன்." என்று சொல்லி முடிப்பதற்குள் கிளம்பிவிட்டான். விளையாட்டில் திறமை இருந்தாலும், உடற்பயிற்சி தேவை. அப்போது தான் உடல் வலிமை பெறும். கிரிக்கெட் போன்ற விளையாட்டு ரொம்ப நேரம் விளையாட வேண்டிய விளையாட்டு என்பதால் உடலில் தெம்பு ரொம்ப முக்கியம். அதை நன்கு அறிந்தவன் ரோஷன். ஓடி முடித்துவிட்டு, கால் தசைகளுக்கு, கைகளுக்கு உகந்த சிறு சிறு பயிற்சிமுறைகளை தானாகவே செய்தான்.

அவன் ஒவ்வொரு அசைவையும் கண்கொட்டாமல் ரசிப்பேன் ஒவ்வொரு வாரமும். 9 மணியை நெருங்க, மற்ற சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள், பயிற்சிவிப்பாளர், சில இணை பயிற்சிவிப்பாளர் என பலர் வர ஆரம்பித்தனர். ஒவ்வொரு வாரமும் சில பெற்றோர்கள் தவறாமல் வந்துவிடுவார்கள், அதில் தெரிந்தவர்கள் சிறு புன்னகையிடுவார்கள். சில அப்பாக்கள் என்னிடம் வந்து பேசுவார்கள். அதில் ஒருவர்தான் குமார்.

குமார், "என்ன சார், எப்படி இருக்கீங்க?....என்னங்க இது ipl போட்டிகள வேற இடத்துக்கு மாத்திட்டாங்க?" அவர் கையில் வைத்திருந்த பைகளையும் தண்ணீர் பாட்டில்களையும் கீழே வைத்துவிட்டு என் அருகே உட்கார்ந்தார்.

"எங்க இருந்தா என்ன? நம்ம... எப்படியும் டீவியில தான் பாக்க போறோம்." சிரித்து கொண்டே பதில் அளித்தேன்.

"அதுவும் சரி தான்" என்றவர் வேலைகளை பற்றியும், அவர் வீட்டு லோன் பிரச்சனைகளை பற்றியும் பேசி கொண்டிருந்தார். இந்த பிரச்சனைக்குரிய விஷயங்களை பற்றி பேசுவது எனக்கு பிடிக்காது. இருந்தாலும், கேட்க வேண்டிய சூழ்நிலையில் மாட்டி கொண்டேன். அவர் சொன்னதற்கு தலையாட்டினேன். ஆனால், எனது சிந்தனை, கவனம், பார்வை எல்லாம் ரோஷனின் பயிற்சியின் மீதே இருந்தது. பயிற்சிவிப்பாளர் சொன்னவற்றை சிறுவர்கள் பின்பற்றுவதும், விளையாடுவதும் எனக்கு எல்லையில்லா சந்தோஷத்தை கொடுத்தது. ஒவ்வொரு முறையும் பயிற்சிவிப்பாளர் அவனை பாராட்டும்போது, எட்டி உட்கார்ந்து பார்த்தாலும் உள்ளூர ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும்.

ரோஷன் ஒரு பேட்ஸ்மேன். பந்து எந்த வேகத்தில் வந்தாலும் அதை கச்சிதமாக அடிப்பதில் வல்லவன். ஒரு சின்ன கேம் விளையாடினார்கள் அன்று. 5 ஓவர்கள் கேம். 4 பந்துகளில் 17 ரன்களை எடுத்தான் ரோஷன். தண்ணீர் இடைவேளையின் போது என்னிடம் பெருமையாக கூறியதை ரசித்து கேட்டேன்.

"அப்பா.. இன்னிக்கு கேம்ல நான் தான் டாப். கவர் டிரைவ்ல ஒரு ஷாட். அப்பரம் லெக் சைட்ல pull பண்ணி இன்னொரு பவுண்டரி. மொத்தம் 2 பவுண்டரி. 1 சிக்ஸர். அப்பரம் கடைசி பந்துல 3 ரன் எடுத்தேன்." வேர்வை முகத்தில் வழிந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மூச்சுயிறைக்க பேசி முடித்தான்.

நாள் முழுக்க விளையாட சொன்னாலும் விளையாடுவான் ரோஷன். இவனின் ஆசை கனவு எல்லாம் கிரிக்கெட் தான். எனக்கும் இவன் ஒரு விளையாட்டு வீரராக வரவேண்டும் என்பதே ஆசை. கேம் முடிந்து 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்தார்கள். அந்நேரத்திலும்கூட பேட்டிங், பந்தை பிடிப்பது, பந்தை ஸ்டம்பை பார்த்து அடிப்பது போன்ற பயிற்சிகளை சில சிறுவர்கள் அவர்களின் அப்பாவின் உதவியோடு பயிற்சி செய்தார்கள்.

ரோஷன் குமாரோடு பயிற்சி எடுத்தான். அச்சமயம் பயிற்சிவிப்பாளர் என்னிடம் பேசினார்.

"சார்... ரோஷன்.. ரொம்ப திறமசாலி. ரொம்ப கெட்டிக்காரன். இப்படியே அவன் விளையாடினால், அடுத்த 13 வயதுக்கு உட்பட்டோர் தமிழ்நாட்டு அணியில தேர்ந்தெடுக்கப்படுவான்... நல்ல எதிர்காலம் இருக்கு ரோஷனுக்கு." என்று என் தோளில் தட்டியபடி சொன்னார்.

என் மகிழ்ச்சிகளை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை என்பதால் என் ஆனந்த கண்ணீர் வர்ணிக்க ஆரம்பித்தன. கண்ணீரை துடைத்து கொண்டேன்.

பயிற்சி எல்லாம் முடிய மதியம் 12 ஆனது. பைகளை எடுத்து கொண்டோம். வீட்டிற்கு செல்லும் வழியில் தோனியின் பெரிய கட் அவுட் ஒன்று கம்பீரமாக சாலையை அலங்கரித்தது. சிவப்பு சிக்னல் இருந்ததால், வண்டியை நிறுத்தினேன். அந்த கட் அவுட்டை அனாந்து பார்த்த ரோஷன் என் முதுகை தட்டி, "அப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்!" என்றான்.

பிறவியிலே கால் ஊனமுற்றவனாக பிறந்த நான், அவ்வினாடி என் மகன் கூறியதற்கு என்னால் சொல்லமுடிந்த பதில், "நீ நிச்சயம் தோனி மாதிரி வருவே!"

என் மூன்று சக்கர வண்டியில் பயணத்தை தொடர்ந்தேன்.

Mar 29, 2009

கருத்தமாக்கள் அழிவதில்லை

"அம்மா இவங்க வீட்டுக்குமெல்லாம் போய் தான் ஆகனுமா? இவங்களுக்கும் நமக்கும் ஆகாது தானே... அப்பரம் ஏன்?" சலித்து கொண்டு புறப்பட்டாள் நந்தினி. அதற்கு அவள் அம்மா,

" அந்த பொண்ணு நல்ல பொண்ணு. அதுக்கு குழந்தை பொறந்திருக்கு... போகலன்னா...தப்பா போயிடும். அவங்க அம்மா தான் கொஞ்ச அப்படி இப்படி இருப்பாங்க." என்று பதில் அளித்தார்.

குழந்தையை பார்ப்பதற்கு இருவரும் சென்றனர். ஏனோ நந்தினிக்கு இந்த குடும்பத்தை பார்த்தாலே வெறுப்பு. தூரத்து சொந்தக்காரர்கள் இவர்கள். இந்த வீட்டு பெரியவர், அதான் அந்த குழந்தையின் பாட்டிக்கு வாய் கொஞ்சம் அதிகம். புரம் பேசுவதில் நம்பர் ஒன் இவர் தான்.

குழந்தையின் அம்மா வாசலில் நின்று வரவேற்றாள், "வாங்க சித்தி, வா நந்தினி...எப்படி இருக்கீங்க?" என்று முகம் மலர சொன்னாள். வீட்டில் நடு ஹாலில் உட்கார்ந்து இருந்த பாட்டி நக்கலுடன், "வாடியம்மா... இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?" என்றார்.

நந்தினிக்கு அவரின் நக்கல் பாணி பிடிக்கவில்லை. குழந்தை பிறந்து 4 நாள் தான் ஆகுது. என்னமோ 40 வருஷம் கழிச்சு வந்து பாக்குற மாதிரி பேசுறாங்க என்று மனதில் முணுமுணுத்து கொண்டாள். கடமைக்காக நந்தினி, பாட்டியிடம் ஒரு சிரிப்பு சிரித்தார்.

"இவ தான் உன் இரண்டாவது பொண்ணா?" பாட்டி நந்தினியின் அம்மாவிடம் கேட்டார். அவர் நந்தினியைப் பார்க்கும்போது எல்லாம் கேட்கும் அதே கேள்வி. குழந்தை இன்னொரு அறையில் உறங்கி கொண்டிருக்க, அதை தூக்கி கொண்டு வந்தார் அதன் அம்மா. அவர் நந்தினியின் அம்மாவின் கையில் வைத்தார் குழந்தையை.

பாட்டி உடனே, "ஆமா... என்னமோ இவ பொண் குழந்தைகளே பார்க்காத மாதிரி வந்து கொடுக்குறே?" என்று நந்தினியின் அம்மாவுக்கு மூன்று பெண்கள் இருப்பதை குத்தி காட்டியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏன் இந்த பேச்சு? நந்தினியின் குடும்பத்தினர் இவர்களைவிட வசதி படைத்தவர்கள் என்ற பொறாமையோ? நந்தினிக்கு புரியவில்லை. அவர் சொன்ன வார்த்தைகள் நந்தினியின் கோபத்தை தூண்டியது.

நந்தினி உடனே, "உங்களுக்கு எத்தன ஆம்பள பசங்க?" தெரிந்து கொண்டே கேட்டாள்.

பாட்டி, "2 பசங்க."

நந்தினி தொடர்ந்தாள், "2 பசங்க இருந்தாலும்... நீங்க என்னத்த சாதிச்சீங்க? ஒன்னு குடிக்காரன்... இன்னொருத்தன் வீட்டு பக்கமே வரது இல்ல."

பாட்டிக்கு ஆத்திரம் போங்க நந்தினியின் அம்மாவிடம் "ஏய் உன் மவ என்ன இப்படி பேசுறா?"

நந்தினி யார் பேசுவதற்கும் இடம் கொடுக்காமல், "பசங்க இருந்தா தான் கொல்லி வைப்பாங்க... அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தீங்கன்னா... அதுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன். இப்பலாம் செத்தா கொல்லி வைக்குறது இல்ல. ஹாஸ்பிட்டலில் ஒரு electric trayல வச்சு, ஒரு switch தான். எரிஞ்சு சாம்பலா போயிடும்... அந்த switch பசங்க தட்டுனாலும் சரி பொண்ணுங்க தட்டுனாலும் சரி, ஏரியும்." என்று சொல்லிமுடித்து வீட்டின் வெளியே வந்துவிட்டாள்.

இன்னும் ஒரு வினாடிகூட அந்த வீட்டில் அவள் இருக்க விரும்பவில்லை. உடனே அவளை பின் தொடர்ந்து ஓடி வந்தாள் அவள் அம்மா.

"என்னடி இப்படி பண்ணிட்டே. இனிமேல அவங்ககிட்ட எப்படி முகம் காட்டுறது?"

நந்தினி, "இப்படிப்பட்ட சொந்தக்காரங்கலாம் நமக்கு தேவையில்ல."

முற்றும்**

Mar 26, 2009

நானும் இசையும்

indian classical keyboard கற்று கொண்டு 3 மாதங்கள் ஆகிவிட்டன(அதற்கு முன்னால் western கற்று கொண்டிருந்தேன்..) இந்த 3 மாதங்களில் ரொம்ப முன்னேற்றம் அடைந்துவிட்டேன் என்றே சொல்லவேண்டும். அதற்கு காரணம் சொல்லி கொடுக்கும் குரு. நன்றி குருவே!:)

இந்த மே மாதம் 1st grade பரிட்சை எழுதலாம் என்றார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 3 மாதங்களில் இப்படி ஒரு வாய்ப்பு! இன்று என்னொரு சந்தோஷமான செய்தியும் சொன்னார். ஆக்ஸ்ட் மாதம் எனக்கு கச்சேரியில் வாசிக்க வாய்ப்பு தரப்படும் என்றார். அதற்கு 'முகுந்தா முகுந்தா' பாடலை கற்று கொடுத்தார். வகுப்பில் அவர் சொல்லி கொடுப்பதை தவிர்த்து, நானே இணையத்தில் பாடல்களின் keyboard notesகளை தேடி, வாசித்து பார்ப்பேன். அப்படி வாசிக்க கற்று கொண்டதுதான்... வசீகரா பாடல்.



அப்பரம் 'நெஞ்சுக்குள் பெய்திடும்...' பாடலும் ஓரளவுக்கு முயற்சி செய்திருக்கிறேன்.

Mar 24, 2009

பொறுமை

காரில், தினமும் காலையில் அம்மாவை அவர் வேலை இடத்தில் விடுவேன். அதற்கு அப்பரம் தான் கல்லூரிக்கு செல்வேன். நேற்று வழக்கம்போல் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் எந்த ஒரு indicatorரையும் போடாமல் திடீரென்று என் கார் சென்று கொண்டிருந்த laneக்குள் நுழைந்தது. ஒரு நொடி கவனமாக இல்லை என்றால், இரு வண்டியும் சுக்குநூறாகி இருக்கும்.

வந்த கோபத்தில், 20 வினாடிகள் தொடர்ந்து 'horn' அடித்தேன். ஒரே சத்தம்! பக்கத்து தடத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்கள் எல்லாம் பயந்துவிட்டனர். பக்கத்தில் அமர்ந்திருந்த என் அம்மா, "பொறுமையா போ. ஹார்ன் அடிக்காதே."

நான்: நான் பொறுமையா போனுமா? முன்னாடி போறானே அவன்கிட்ட போய் சொல்லுங்க.

அம்மா: சரி விடு.... ஏதோ பழமொழி சொல்வாங்களே...என்ன அது...ஆஆ...நாய் குரைச்சா திருப்பி குரைக்ககூடாது....

நான்: நாய் குரைச்சா பரவாயில்ல? கடிச்சா? நம்மள கடிக்க வந்தா....?

அம்மாவிடமிருந்து பதில் இல்லை.

நான்: சொல்லுங்கம்மா....கடிக்க வந்தா என்ன பண்ணுவீங்க?

அம்மா: கம்ப எடுத்துகிட்டு போய் அடிக்க போவேன்.

நான்: ஹாஹா...அப்ப மட்டும் பொறுமை தேவையில்லையா?

அம்மா என்னை பார்த்து முறைத்தார். "இந்த புள்ளக்கிட்ட பேசி வெல்ல முடியாது!" என்பதே அவரின் முறைப்புக்கு அர்த்தம் :) ஹிஹிஹி....