காலை 7 மணிக்கெல்லாம் பையன் ரெடியாகி நின்று கொண்டிருந்தான் அவனது கிரிக்கெட் பையுடன். இன்று ஞாயிற்றுக்கிழமை, அவனுக்கு கிரிக்கெட் பயிற்சி வகுப்பு இருக்கிறது டாவ்ஷன் மைதானத்தில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அவனை பயிற்சிக்கு அழைத்து செல்வேன். அங்கேயே மூன்று மணி நேரம் இருந்து அவன் விளையாடும் அழகை ரசிப்பேன். 7 வயதாக இருந்தாலும், அவனுக்குள் இருக்கும் திறமையை கண்டு பெருமிதம் கொண்டள்ளேன் பல முறை.
"அப்பா...சீக்கிரம் வாங்க....டைம் ஆகுது." என்னை இழுத்தான் ரோஷன். நானும் அவனும் விளையாட்டு திடலை அடைந்தோம். இந்த பயிற்சி வகுப்பில் கிட்டதட்ட 20 பேருக்கு மேல் சிறுவர்கள் வந்து பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். பல பள்ளிபோட்டிகளிலும், மாவட்ட போட்டிகளிலும் ஆட நிறைய திறன்மிக்க விளையாட்டாளர்களை உருவாக்கியுள்ளது இப்பயிற்சி வகுப்பு. அங்கே 9 மணிக்கு இருந்தால் போதும். ஆனால் ரோஷன் 730 மணிக்கே என்னை அழைத்துபோக சொல்வான். அவனது ஆர்வத்திற்கு நான் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை.
இரண்டு மூன்று காக்கா குருவிகளின் சத்தம், சில நாய்கள் ஓடிகொண்டிருந்தன- என சுற்றுசூழல் அமைந்திருந்தது. பனி விலகும் நேரம். உடற்பயிற்சி செய்ய அருமையான தருணம். வீட்டிலிருந்து போட்டுவந்த காலணியை கழற்றிவைத்து விட்டு புதிதாக அவனது பயிற்சிவிப்பாளர் வாங்கி கொடுத்த ரீபோக் ஷூவை போட்டு கொண்டான். ரீபோக் ஷூ- ரொம்ப விலையாம், உயர்ந்த தரமிக்க ஷூவாம். ரோஷன் சொல்லி தான் எனக்கு தெரியும். ஆனா என்னால் வாங்கி கொடுக்க வசதி இல்லை.
"அப்பா.... நான் 3 ரவுண்டு ஓடிட்டு வரேன்." என்று சொல்லி முடிப்பதற்குள் கிளம்பிவிட்டான். விளையாட்டில் திறமை இருந்தாலும், உடற்பயிற்சி தேவை. அப்போது தான் உடல் வலிமை பெறும். கிரிக்கெட் போன்ற விளையாட்டு ரொம்ப நேரம் விளையாட வேண்டிய விளையாட்டு என்பதால் உடலில் தெம்பு ரொம்ப முக்கியம். அதை நன்கு அறிந்தவன் ரோஷன். ஓடி முடித்துவிட்டு, கால் தசைகளுக்கு, கைகளுக்கு உகந்த சிறு சிறு பயிற்சிமுறைகளை தானாகவே செய்தான்.
அவன் ஒவ்வொரு அசைவையும் கண்கொட்டாமல் ரசிப்பேன் ஒவ்வொரு வாரமும். 9 மணியை நெருங்க, மற்ற சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள், பயிற்சிவிப்பாளர், சில இணை பயிற்சிவிப்பாளர் என பலர் வர ஆரம்பித்தனர். ஒவ்வொரு வாரமும் சில பெற்றோர்கள் தவறாமல் வந்துவிடுவார்கள், அதில் தெரிந்தவர்கள் சிறு புன்னகையிடுவார்கள். சில அப்பாக்கள் என்னிடம் வந்து பேசுவார்கள். அதில் ஒருவர்தான் குமார்.
குமார், "என்ன சார், எப்படி இருக்கீங்க?....என்னங்க இது ipl போட்டிகள வேற இடத்துக்கு மாத்திட்டாங்க?" அவர் கையில் வைத்திருந்த பைகளையும் தண்ணீர் பாட்டில்களையும் கீழே வைத்துவிட்டு என் அருகே உட்கார்ந்தார்.
"எங்க இருந்தா என்ன? நம்ம... எப்படியும் டீவியில தான் பாக்க போறோம்." சிரித்து கொண்டே பதில் அளித்தேன்.
"அதுவும் சரி தான்" என்றவர் வேலைகளை பற்றியும், அவர் வீட்டு லோன் பிரச்சனைகளை பற்றியும் பேசி கொண்டிருந்தார். இந்த பிரச்சனைக்குரிய விஷயங்களை பற்றி பேசுவது எனக்கு பிடிக்காது. இருந்தாலும், கேட்க வேண்டிய சூழ்நிலையில் மாட்டி கொண்டேன். அவர் சொன்னதற்கு தலையாட்டினேன். ஆனால், எனது சிந்தனை, கவனம், பார்வை எல்லாம் ரோஷனின் பயிற்சியின் மீதே இருந்தது. பயிற்சிவிப்பாளர் சொன்னவற்றை சிறுவர்கள் பின்பற்றுவதும், விளையாடுவதும் எனக்கு எல்லையில்லா சந்தோஷத்தை கொடுத்தது. ஒவ்வொரு முறையும் பயிற்சிவிப்பாளர் அவனை பாராட்டும்போது, எட்டி உட்கார்ந்து பார்த்தாலும் உள்ளூர ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும்.
ரோஷன் ஒரு பேட்ஸ்மேன். பந்து எந்த வேகத்தில் வந்தாலும் அதை கச்சிதமாக அடிப்பதில் வல்லவன். ஒரு சின்ன கேம் விளையாடினார்கள் அன்று. 5 ஓவர்கள் கேம். 4 பந்துகளில் 17 ரன்களை எடுத்தான் ரோஷன். தண்ணீர் இடைவேளையின் போது என்னிடம் பெருமையாக கூறியதை ரசித்து கேட்டேன்.
"அப்பா.. இன்னிக்கு கேம்ல நான் தான் டாப். கவர் டிரைவ்ல ஒரு ஷாட். அப்பரம் லெக் சைட்ல pull பண்ணி இன்னொரு பவுண்டரி. மொத்தம் 2 பவுண்டரி. 1 சிக்ஸர். அப்பரம் கடைசி பந்துல 3 ரன் எடுத்தேன்." வேர்வை முகத்தில் வழிந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மூச்சுயிறைக்க பேசி முடித்தான்.
நாள் முழுக்க விளையாட சொன்னாலும் விளையாடுவான் ரோஷன். இவனின் ஆசை கனவு எல்லாம் கிரிக்கெட் தான். எனக்கும் இவன் ஒரு விளையாட்டு வீரராக வரவேண்டும் என்பதே ஆசை. கேம் முடிந்து 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்தார்கள். அந்நேரத்திலும்கூட பேட்டிங், பந்தை பிடிப்பது, பந்தை ஸ்டம்பை பார்த்து அடிப்பது போன்ற பயிற்சிகளை சில சிறுவர்கள் அவர்களின் அப்பாவின் உதவியோடு பயிற்சி செய்தார்கள்.
ரோஷன் குமாரோடு பயிற்சி எடுத்தான். அச்சமயம் பயிற்சிவிப்பாளர் என்னிடம் பேசினார்.
"சார்... ரோஷன்.. ரொம்ப திறமசாலி. ரொம்ப கெட்டிக்காரன். இப்படியே அவன் விளையாடினால், அடுத்த 13 வயதுக்கு உட்பட்டோர் தமிழ்நாட்டு அணியில தேர்ந்தெடுக்கப்படுவான்... நல்ல எதிர்காலம் இருக்கு ரோஷனுக்கு." என்று என் தோளில் தட்டியபடி சொன்னார்.
என் மகிழ்ச்சிகளை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை என்பதால் என் ஆனந்த கண்ணீர் வர்ணிக்க ஆரம்பித்தன. கண்ணீரை துடைத்து கொண்டேன்.
பயிற்சி எல்லாம் முடிய மதியம் 12 ஆனது. பைகளை எடுத்து கொண்டோம். வீட்டிற்கு செல்லும் வழியில் தோனியின் பெரிய கட் அவுட் ஒன்று கம்பீரமாக சாலையை அலங்கரித்தது. சிவப்பு சிக்னல் இருந்ததால், வண்டியை நிறுத்தினேன். அந்த கட் அவுட்டை அனாந்து பார்த்த ரோஷன் என் முதுகை தட்டி, "அப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்!" என்றான்.
பிறவியிலே கால் ஊனமுற்றவனாக பிறந்த நான், அவ்வினாடி என் மகன் கூறியதற்கு என்னால் சொல்லமுடிந்த பதில், "நீ நிச்சயம் தோனி மாதிரி வருவே!"
என் மூன்று சக்கர வண்டியில் பயணத்தை தொடர்ந்தேன்.
15 comments:
வாழ்த்துக்கள்
அருமையான கதை
நெகிழ்வான முடிவு...
நன்றாக இருக்கு.
வாழ்த்துக்கள்.
@எட்வின், வடுவூர் குமார்,
வாழ்த்துகளுக்கு நன்றி:)
@புதியவன்
//நெகிழ்வான முடிவு//
உண்மைய சொல்ல போனால், முடிவு தான் எனக்கு முதலில் சிந்தனையில் தோன்றியது.. அதற்கு பிறகு தான் கதை உருவாக்கப்பட்டது:)
wow, really superb one!
u r going great guns sis. keep rocking. :)
@karthik
நன்றி:)
gal,you are rocking..!
@சந்தனமுல்லை
வாழ்த்துகளுக்கு நன்றிங்கோ:)
அழகான கதைம்மா
@ரீனா
//அழகான கதைம்மா//
நன்றிங்க:)
சிறுகதைப் புலியே!
வாழ்த்துகிறேன்!!
@thevanmayam
என்னது புலியா?
அப்ப...மொத்தத்தல மனிதன் இல்லேன்னு சொல்லிட்டீங்க...it'ok!:):)
Cool story la :)
ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. அருமை.
Post a Comment