Dec 24, 2006

போயிட்டு வறேன் மா

5 வயதில் முதன் முதலாக
பள்ளிக்கு போனபோது
இல்லாத பயம்
இப்போது வருகிறது
18 வயதில்
கல்லூரிக்கு போகும்போது...


விழிகள் 'திறக்க மாட்டேன்'
என்று அடம்பிடிக்கும்
காலை நேரம்,
நானும் அதுவும் போடும்
குட்டி சண்டை
ஜில்லென தண்ணீரில் குளியல்
அம்மா கொடுக்கும் காபியை
ருசித்து குடிக்க முடியாமல்
இரயிலுக்காக என்னை ஓடவைக்கிறது
என் கைகடிகாரம்!


கூட்டத்தில் முட்டி மோதினேன்
நிற்பதற்கே ஓர் இடம் பிடிக்க.
இரயில் பயணத்தின் முடிவில்
மீண்டும் பரபரப்பு
அடுத்த பேருந்து பயணத்திற்காக.
கூட்ட நேறிசலில் களைத்துபோனது
என் உடலும் மனமும்!


அவசர அவசரமாக
அறக்க பறக்க
அலை பாய்ந்தது நேரம்.
அலைந்தன எனது கால்கள்
ஒரு வகுப்பறையிலிருந்து
மற்றோன்றுக்கு!
காலச்சக்கரத்தில் சுழன்று
கொண்டிருக்கும் எனக்கு
சிரிக்கவும் நேரமில்லை
அழுகவும் நேரமில்லை.


சுமைகளை சுமந்து கொண்டு
இரவு வீடு திரும்பும்போது
என்னிடம் மிஞ்சி இருப்பதோ
கண்களில் சொக்கும் தூக்கம் மட்டும்தான்!
அடுத்த நாள் காலையில்
மீண்டும் அதே வாசகம்
"போயிட்டு வறேன் மா".


இரயில் பயணத்தில் ஆரம்பமானது
ஒரு வாழ்க்கை பயணம்...

No comments: